“இது என் இருதயத்திலிருந்த வெறுமை உணர்வை நீக்கியது”
“யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற அருமையான பரிசுக்காக என் இருதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது என் இருதயத்திலிருந்த வெறுமை உணர்வை நீக்கியது; யெகோவா என்னை நேசிக்கிறார், போற்றுகிறார் என்பதை உணர வைத்து என் விருப்பத்தை பூர்த்தி செய்தது. இப்போது யெகோவாவிடமும் அவருடைய நேச குமாரனிடமும் அதிகமாய் நெருங்கி வந்திருப்பதாக உணருகிறேன். இந்தப் புத்தகத்திலுள்ள எல்லாவற்றையும் பற்றி சொல்லவும் என் பாசத்துக்குரிய அனைவருக்கும் இதன் ஒரு பிரதியைக் கொடுக்கவும் விரும்புகிறேன்.” 2002/03-ல் நடைபெற்ற “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாடுகளில் வெளியிடப்பட்ட 320 பக்க புதிய புத்தகத்தைக் குறித்து யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் இப்படித்தான் உணர்ந்தார். இந்தப் புத்தகத்தின் சில அம்சங்களையும் இது பிரசுரிக்கப்பட்டதன் நோக்கத்தையும் நாம் ஆராய்வோம்.
இந்தப் புதிய புத்தகத்தின் சில அம்சங்கள்
இந்தப் புதிய புத்தகத்தில் என்ன அடங்கியிருக்கிறது? இந்த இதழிலுள்ள இரண்டு படிப்புக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும், இன்னும் அதிகமும் அடங்கியுள்ளன! இந்தப் புத்தகத்தில் 31 அதிகாரங்கள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் சுமார் காவற்கோபுர படிப்பு கட்டுரையின் அளவுள்ளவை. முன்னுரைக்கும் முதல் மூன்று அதிகாரங்களுக்கும் பின்பு, இந்தப் புத்தகம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது; யெகோவாவின் முக்கிய பண்புகள் ஒவ்வொன்றையும் கலந்தாராய ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியின் ஆரம்பத்திலும் அந்தப் பண்பைப் பற்றி சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் அடுத்து வரும் சில அதிகாரங்கள், அந்தப் பண்பை யெகோவா வெளிக்காட்டும் விதத்தைக் கலந்தாராய்கின்றன. மேலும், ஒவ்வொரு பகுதியிலும் இயேசுவைப் பற்றி விவரிக்கும் ஒரு அதிகாரமும் உள்ளது. ஏன்? “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என இயேசு கூறினார். (யோவான் 14:9) யெகோவாவை பரிபூரணமாக பிரதிபலிப்பதன் மூலம் அவருடைய பண்புகளை வெளிக்காட்டுவதில் தத்ரூபமான உதாரணங்களை இயேசு நமக்கு அளிக்கிறார். கலந்தாராயப்படும் பண்பை வெளிக்காட்டுவதில் யெகோவாவை நாம் எப்படி பின்பற்றலாம் என கற்பிக்கும் ஓர் அதிகாரத்துடன் ஒவ்வொரு பகுதியும் முடிகிறது. யெகோவாவின் பண்புகளை கலந்தாராய்கையில், இந்தப் புத்தகம் பைபிளின் ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் குறிப்புகளை அளிக்கிறது.
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தில் சில விசேஷ அம்சங்களும் உள்ளன. இரண்டாம் அதிகாரம் தொடங்கி, ஒவ்வொரு அதிகாரத்திலும் “தியானிக்க சில கேள்விகள்” என்று தலைப்பிடப்பட்ட ஒரு பெட்டி உள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களும் கேள்விகளும் அந்த அதிகாரத்தை மறுபார்வை செய்வதற்காக கொடுக்கப்படவில்லை. மாறாக அந்தப் பொருளின் பேரில் ஆழ்ந்து தியானிக்க பைபிளை பயன்படுத்த உங்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள வசனங்கள் அனைத்தையும் கவனமாக வாசியுங்கள். பின்பு கேள்விகளை தியானியுங்கள்; தனிப்பட்ட வகையில் பொருத்துவதற்கு முயலுங்கள். அப்படிப்பட்ட தியானம் உங்கள் இருதயத்தைத் தூண்டுவித்து, யெகோவாவிடம் என்றென்றும் நெருங்கி வர உங்களுக்கு வழி செய்யும்.—சங்கீதம் 19:14.
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்திற்கான படங்கள், கற்பிக்கவும் உந்துவிக்கவும் உதவும் வகையில் அமைவதற்காக கவனமாக ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. பதினேழு அதிகாரங்களில் பைபிள் வர்ணனைகள் அழகிய படங்களாக முழுப் பக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஏன் பிரசுரிக்கப்பட்டது?
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகம் ஏன் பிரசுரிக்கப்பட்டது? யெகோவாவை இன்னும் நன்கு தெரிந்து கொண்டு, அவருடன் பலமான தனிப்பட்ட உறவை வளர்க்க நமக்கு உதவுவதே இந்தப் புதிய புத்தகத்தின் முக்கிய நோக்கமாகும்.
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்திலிருந்து வேறு யாரெல்லாம் பயனடைவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்? பைபிள் மாணாக்கருக்கு அல்லது செயலற்றுப் போன சகோதரருக்கோ சகோதரிக்கோ பயனுள்ளதாக இருக்குமா? உங்களுக்கு பயன்படுமா? இந்தப் புதிய புத்தகத்தை நீங்கள் வாசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? இல்லையென்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை வாசிக்க ஆரம்பிப்பதற்கு ஏன் நேரத்தை ஒதுக்கக்கூடாது? நீங்கள் வாசிப்பதை தியானிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவா தேவனிடம் நெருங்கி வரவும் அவருடைய ராஜ்ய நற்செய்தியை இன்னும் அதிக மகிழ்ச்சியுடனும் வைராக்கியத்துடனும் அறிவிக்கவும் இப்புதிய பிரசுரம் உங்களுக்கு உதவுவதாக!