“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”
அன்றும் இன்றும்—பைபிள் இவரை மாற்றிய விதம்
இசையே ரோல்ஃப்-மிக்காயலின் உயிர்மூச்சாக இருந்தது. அவர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்தார். ஜெர்மனியில் இளைஞனாக இருந்தபோதே பாட்டில் பாட்டிலாக மது குடித்தார்; அதோடு அளவே இல்லாமல் LSD, கொகெய்ன், ஹசீஷ், மனதை பாதிக்கும் மற்ற போதைமருந்துகள் ஆகியவற்றை உபயோகித்தார்.
ஒரு ஆப்பிரிக்க நாட்டிற்கு போதைப் பொருட்களை கடத்த முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார். 13 மாதங்கள் சிறையில் இருந்தார். வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க அது அவருக்கு சந்தர்ப்பம் தந்தது.
ரோல்ஃப்-மிக்காயலும் அவருடைய மனைவி உர்ஸுலாவும் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கினார்கள். சத்தியத்தைத் தேடி அலைந்தார்கள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட சர்ச் பிரிவினர் ஏமாற்றத்தையே தந்தபோதிலும், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள அவர்களுக்கு தீராத ஆவல் இருந்தது. அவர்கள் மனதில் பல கேள்விகள் இருந்தும் திருப்தியான பதிலோ எந்த மதப் பிரிவுகளிலும் கிடைக்கவில்லை. மேலும், அவர்களுடைய வாழ்க்கையை மாற்றியமைக்க அந்த மதப் பிரிவுகள் எந்த விதத்திலும் தூண்டுதல் அளிக்கவில்லை.
இறுதியில் ரோல்ஃப்-மிக்காயலும் உர்ஸுலாவும் யெகோவாவின் சாட்சிகளை சந்திக்க நேர்ந்தது. பைபிளை படிக்க ஆரம்பித்த பிறகு, “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்ற புத்திமதி ரோல்ஃப்-மிக்காயலின் மனதை ஆழமாக தொட்டது. (யாக்கோபு 4:8, NW) ‘முந்தின நடத்தையை மாற்றி, பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிட்டு, உண்மையான நீதியிலும் தூய்மையிலும் கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ள’ அவர் மனதில் உறுதிபூண்டார்.—எபேசியர் 4:22-24, பொது மொழிபெயர்ப்பு.
புதிய மனிதருக்குரிய இயல்பை ரோல்ஃப்-மிக்காயலால் எப்படி அணிய முடியும்? ‘திருத்தமான அறிவைப் பெறுவதன் மூலம்’ ஒருவரது இயல்பு ‘அதைப் படைத்தவரின் [அதாவது யெகோவா தேவனின்] சாயலுக்கு ஏற்றபடி புதிதாக்கப்பட’ முடியும் என பைபிளிலிருந்து அவருக்கு காட்டப்பட்டது.—கொலோசெயர் 3:9-11, NW.
ரோல்ஃப்-மிக்காயல் திருத்தமான அறிவைப் பெற்றபோது, கடவுளுடைய வார்த்தையின் நியமங்களுக்கு இசைவாக தன் வாழ்க்கையை மாற்றியமைக்க முயன்றார். (யோவான் 17:3) போதைப் பொருட்களை விட்டுவிடுவது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது; ஆனால் யெகோவாவிடம் ஜெபம் செய்து அவரது உதவியைப் பெறுவதன் மதிப்பை அவர் உணர்ந்தார். (1 யோவான் 5:14, 15) ஏற்கெனவே யெகோவாவின் சாட்சிகளாக இருந்தவர்களோடு—கடவுளின் சித்தத்தைச் செய்ய கடினமாக முயன்றவர்களோடு—நெருங்கிப் பழகியதாலும் உதவி கிடைத்தது.
இந்த உலகம் அழியப் போகிறது, கடவுளுடைய சித்தத்தை செய்பவர்களோ என்றென்றும் நிலைத்திருப்பார்கள் என்பதை அறிந்து கொண்டதும் ரோல்ஃப்-மிக்காயலுக்கு உதவியது. அது, தற்காலிகமான உலகத்தை நேசிக்காமல், அன்பான கடவுளாகிய யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்து நித்திய ஆசீர்வாதம் பெறுவதை தேர்ந்தெடுக்க அவருக்கு உதவியது. (1 யோவான் 2:15-17) “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என சொல்லும் நீதிமொழிகள் 27:11 அவருடைய இதயத்தை எட்டியது. “யெகோவாவின் அன்பின் ஆழத்தை இந்த வசனம் எடுத்துக்காட்டுகிறது; ஏனென்றால் தம் இதயத்தை மகிழ்விக்கும் வாய்ப்பை அவர் மனிதர்களுக்கு தருகிறார்” என அவர் நன்றிபொங்க சொல்கிறார்.
ரோல்ஃப்-மிக்காயல், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் போல ஆயிரக்கணக்கானவர்கள் பைபிள் நியமங்களை பின்பற்றுவதால் நன்மையடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் காணலாம். வருத்தகரமாக, குடும்பங்களைப் பிரிக்கும் ஒரு ஆபத்தான பிரிவினராக யெகோவாவின் சாட்சிகள் சில நாடுகளில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். இது உண்மையில் நேர்மாறானது என்பதை ரோல்ஃப்-மிக்காயலின் அனுபவம் காட்டுகிறது.—எபிரெயர் 4:12.
ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் தரும்படி உற்சாகப்படுத்தும் மத்தேயு 6:33 தனது குடும்பத்திற்கு சரியான பாதையைக் காட்டும் “திசைமானி” என ரோல்ஃப்-மிக்காயல் சொல்கிறார். அவரும் அவரது குடும்பத்தினரும், கிறிஸ்தவர்களாக சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பதற்காக யெகோவாவிற்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்”? என்று பாடிய சங்கீதக்காரனின் மனோபாவமே இவர்களுக்கும் உள்ளது.—சங்கீதம் 116:12.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
கடவுள் தம் இதயத்தை சந்தோஷப்படுத்தும் வாய்ப்பை மனிதர்களுக்கு தருகிறார்
[பக்கம் 9-ன் பெட்டி]
பைபிள் நியமங்களின் தாக்கம்
உயிருக்கு ஆபத்தான பழக்கங்களை விட்டுவிட அநேகரை தூண்டியிருக்கும் பைபிள் நியமங்களில் சில இதோ:
“கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.” (சங்கீதம் 97:10) உயிருக்கு ஆபத்தான பழக்கவழக்கங்கள் எவ்வளவு தீமையானவை என்பதை நன்கு புரிந்து, அவற்றை அடியோடு வெறுக்க ஆரம்பித்த பிறகு, கடவுளை பிரியப்படுத்தும் விதத்தில் வாழ்வது ஒருவருக்கு சுலபமாக இருக்கலாம்.
“ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) போதைப் பொருட்களையும் அடிமைப்படுத்தும் மற்ற பொருட்களையும் விட்டு விலகுவதற்கு ஒருவர் தன் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பழக்கங்களை விட்டுவிடுவதற்கான அவரது தீர்மானத்தை ஆதரிக்கும் கிறிஸ்தவர்களோடு நட்பு கொள்வது உண்மையிலேயே பலனளிக்கும்.
“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) மனதிற்கும் இதயத்திற்கும் கிடைக்கும் இப்படிப்பட்ட சமாதானத்தை வேறு எதுவும் தர முடியாது. மேலும் ஜெபத்தின் மூலம் கடவுளை சார்ந்திருப்பது போதைப் பொருட்களைப் பயன்படுத்தாமல் வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிக்க ஒருவருக்கு உதவுகிறது.