வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்கையில் கடவுளுடைய ஆவியின் மீது சார்ந்திருங்கள்
“உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.”—2 தீமோத்தேயு 2:15.
1. என்ன மாற்றங்கள் நமது ஆவிக்குரிய நலனுக்கு சவால்களாக இருக்கின்றன?
நம்மைச் சுற்றியுள்ள உலகம் சதா மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருபுறத்தில் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வியத்தகு வளர்ச்சியைக் காண முடிகிறது, மறுபுறத்திலோ தார்மீக மதிப்பீடுகள் தறிகெட்டுப் போகின்றன. முந்தைய கட்டுரையில் நாம் கவனித்தபடி, கடவுளுக்கு எதிரான இவ்வுலக ஆவியை கிறிஸ்தவர்கள் எதிர்க்க வேண்டும். ஆனால் உலகம் மாறுகையில், நாமும்கூட பல வழிகளில் மாறுகிறோம். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிப பருவத்தை அடைகிறோம். ஆரோக்கியத்தையும் அன்பானவர்களையும் செல்வத்தையும் நாம் பெறலாம் அல்லது இழக்கலாம். இத்தகைய மாற்றங்களில் பல, நம் கட்டுப்பாட்டை மீறித்தான் நடக்கின்றன; அவை நமது ஆவிக்குரிய நலனுக்கு புதிய சவால்களாக, பெரிய சவால்களாக இருக்கலாம்.
2. தாவீது தன் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை சந்தித்தார்?
2 ஈசாயின் குமாரனாகிய தாவீது அனுபவித்தளவுக்கு பெரும் மாற்றங்களை வெகு சிலரே வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள். ஆடுகள் மேய்க்கும் சாதாரண சிறுவனாக இருந்த தாவீது விரைவில் தேசிய புகழ்பெற்ற வீரராக மாறினார். பிற்பாடு நாடோடியாக அலைந்து திரிந்தார், பொறாமை கொண்ட ஓர் அரசனால் மிருகத்தைப் போல் வேட்டையாடப்பட்டார். அதற்குப்பின், அரசராகவும் வெற்றி வீரராகவும் ஆனார். மாபெரும் பாவத்தால் வந்த வேதனைமிக்க விளைவுகளை சகித்தார். தனது சொந்த குடும்பத்திற்குள்ளேயே சோகத்தையும் பிரிவினையையும் எதிர்ப்பட்டார். செல்வம் திரட்டினார், வயதானார், முதுமையால் வந்த பலவீனங்களை அனுபவித்தார். வாழ்க்கையில் இத்தனை மாற்றங்களை சந்தித்தபோதிலும், யெகோவா மீதும் அவருடைய ஆவியின் மீதும் தன் வாழ்க்கை பூராவும் நம்பிக்கையையும் பற்றுறுதியையும் காட்டினார். தன்னை “தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி” தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார், கடவுளும் அவரை ஆசீர்வதித்தார். (2 தீமோத்தேயு 2:15) நம்முடைய சூழ்நிலைமைகள் தாவீதின் சூழ்நிலைமைகளிலிருந்து வேறுபடுகிறபோதிலும், அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களை சமாளித்த முறையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம். வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்கையில் நாம் எவ்வாறு தொடர்ந்து கடவுளுடைய ஆவியின் உதவியைப் பெறலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய முன்மாதிரி நமக்கு உதவும்.
தாவீதின் மனத்தாழ்மை—ஒரு சிறந்த முன்மாதிரி
3, 4. ஆடு மேய்க்கும் சாதாரண சிறுவனாக இருந்த தாவீது எவ்வாறு தேசிய அளவில் புகழ்பெற்ற மனிதராக உயர்ந்தார்?
3 சிறுவனாக இருந்தபோது, தாவீது தன் சொந்தக் குடும்பத்திற்குள்ளும்கூட முதன்மை வாய்ந்தவராக இருக்கவில்லை. தீர்க்கதரிசியாகிய சாமுவேல் பெத்லகேமுக்கு வந்தபோது, தாவீதின் தகப்பனார் தனது எட்டு குமாரர்களில் ஏழு பேரை அவர் முன் நிறுத்தினார். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கடைசி குமாரனாகிய தாவீதோ அழைத்து வரப்படவில்லை. என்றாலும், தாவீதையே இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார். ஆகவே வயல் வெளியிலிருந்து வரும்படி தாவீது அழைக்கப்பட்டார். அடுத்தபடியாக, பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “சாமுவேல் தைலக்கொம்பை எடுத்து அவனை அவன் சகோதரர் எல்லாரும் பார்க்க அபிஷேகம் பண்ணினான். அந்நாள் முதல் யெகோவாவின் ஆவி தாவீதின்மேல் வல்லமையோடு வந்து இறங்கினது.” (1 சாமுவேல் 16:12, 13, திருத்திய மொழிபெயர்ப்பு) தாவீது தன் வாழ்நாள் முழுவதிலும் அந்த ஆவியின் மீது சார்ந்திருந்தார்.
4 மேய்ப்பனாக வலம்வந்த இச்சிறுவனாகிய தாவீது விரைவில் தேசிய அளவில் புகழ்பெற்ற மனிதராக பரிணமிக்கவிருந்தார். அரசருடனிருந்து அவரைக் கவனித்துக் கொள்ளவும் அவருக்காக இன்னிசை இசைக்கவும் அவர் அழைக்கப்பட்டார். அனுபவமிக்க இஸ்ரவேல் வீரர்களே எதிர்கொள்ள அஞ்சிய போர்வீரனாகிய இராட்சத கோலியாத்தை வீழ்த்தினார். அதன்பின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்; பெலிஸ்தரை தோற்கடித்தார். ஜனங்கள் அவரை நேசித்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடினார்கள். உதாரணத்திற்கு, சவுல் அரசனுக்கு ஆலோசகராக இருந்த ஒருவர் இளம் தாவீதை “தேர்ந்த சுரமண்டலக்காரன்,” “பராக்கிரமசாலி, யுத்தவீரன், பேச்சில் சமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்” என்றெல்லாம் வர்ணித்தார்.—1 சாமுவேல் 16:18, தி.மொ.; 17:23, 24, 45-51; 18:5-7.
5. தாவீதை எது செருக்கடையச் செய்திருக்கலாம், ஆனால் அவர் அப்படி ஆகவில்லை என நமக்கு எப்படித் தெரியும்?
5 புகழ், அழகு, இளமை, சொல்வன்மை, இசைத்திறன், வீரம், தெய்வ தயவு என யாவற்றையும் தாவீது பெற்றிருந்ததாக தோன்றியது. இவற்றில் ஏதாவதொன்று அவரை செருக்கடையச் செய்திருக்கலாம், ஆனால் அவற்றில் எதுவும் அவரை செருக்கடையச் செய்யவில்லை. சவுல் தன் மகளை தாவீதுக்கு மணமுடித்துக் கொடுக்க முன்வந்தபோது தாவீது உண்மையான மனத்தாழ்மையுடன் கூறிய பதிலைக் கவனியுங்கள்: “ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம்.” (1 சாமுவேல் 18:18) ஓர் அறிஞர் இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கையில் இவ்வாறு எழுதினார்: “சொந்த தகுதிகளின் நிமித்தமோ சமுதாய அந்தஸ்தின் நிமித்தமோ வம்சாவளி நிமித்தமோ அரசனின் மருமகனாகும் தகுதியை தான் பெற்றிருப்பதாக துளிகூட உரிமை பாராட்ட முடியாது என்பதையே தாவீது அர்த்தப்படுத்தினார்.”
6. நாம் ஏன் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
6 எல்லா வகையிலும் அபூரண மனிதரைவிட யெகோவா மிக மிக மேம்பட்டவர் என்ற அடிப்படை உண்மையை தாவீது உணர்ந்திருந்ததால் பணிவுடன் நடந்துகொண்டார். மனிதனை கடவுள் ஒரு பொருட்டாக எண்ணுவதைக் குறித்து தாவீது அதிசயித்தார். (சங்கீதம் 144:3) மேலும், தான் பெற்ற பேர் புகழுக்கெல்லாம் காரணம் யெகோவா மனத்தாழ்மையைக் காட்டி, தன்னை ஆதரித்து அரவணைப்பதற்கு தம்மை தாழ்த்தியதுதான் என்பதைக்கூட தாவீது அறிந்திருந்தார். (சங்கீதம் 18:35) நமக்கு எப்பேர்ப்பட்ட அருமையான ஒரு பாடம்! நமது திறமைகள், சாதனைகள், தேவராஜ்ய பொறுப்புகள் என எதுவும் நம்மை ஒருபோதும் செருக்கடையச் செய்துவிடக் கூடாது. “உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக் கொள்ளாதது யாது? நீ பெற்றுக் கொண்டவனானால் பெற்றுக் கொள்ளாதவன்போல் ஏன் மேன்மை பாராட்டுகிறாய்?” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 4:7) கடவுளுடைய பரிசுத்த ஆவியையும் அவருடைய அங்கீகாரத்தையும் பெற மனத்தாழ்மையை வளர்த்துக்கொண்டு அதை நாம் காத்துக்கொள்ள வேண்டும்.—யாக்கோபு 4:6.
“நீங்கள் பழிவாங்காமல்” இருங்கள்
7. அரசனாகிய சவுலை கொலை செய்ய தாவீதுக்கு எப்பேர்ப்பட்ட வாய்ப்பு கிடைத்தது?
7 தாவீதுக்கு கிடைத்த புகழ் அவரை செருக்கடைய செய்யவில்லை, ஆனால் கடவுளுடைய ஆவியை இழந்துவிட்டிருந்த அரசனாகிய சவுலின் இதயத்தில் அது கொலை வெறிமிக்க பொறாமையை தூண்டியது. தாவீது எந்த தவறும் செய்யாதபோதிலும், அவர் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட வேண்டியதாயிற்று, வனாந்தரத்தில் வாசம் பண்ணவும் வேண்டியதாயிற்று. ஒரு சந்தர்ப்பத்தில், தாவீதை ஈவிரக்கமின்றி தொடர்ந்தபோது அரசனாகிய சவுல் ஒரு குகையில் நுழைந்தார், ஆனால் தாவீதும் அவருடைய தோழர்களும் அங்கு ஒளிந்திருந்தது அவருக்குத் தெரியாது. கடவுள் அருளியது போல் தோன்றிய இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி சவுலை தீர்த்துக்கட்ட தாவீதின் ஆட்கள் அவரைத் தூண்டினார்கள். குகையில் இருட்டுக்குள் தாவீதின் காதில், “இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக் கொடுப்பேன். உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று யெகோவா உம்மிடம் சொல்லும் நாள் இதுவே” என அவர்கள் கிசுகிசுப்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.—1 சாமுவேல் 24:2-6, தி.மொ.
8. தாவீது ஏன் பழிவாங்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்?
8 சவுலுக்குத் தீங்கு செய்ய தாவீது மறுத்தார். விசுவாசத்தையும் பொறுமையையும் காண்பித்து, காரியங்களை யெகோவாவின் கைகளில் விட்டுவிடுவதில் திருப்தி அடைந்தார். குகையை விட்டு அரசர் வெளியேறிய பின்பு தாவீது அவரிடம் இவ்வாறு சத்தமாக சொன்னார்: “யெகோவா எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரிப்பார்; யெகோவாவே எனக்காக உம்மிடம் பழிவாங்குவார்; நானோ உமது மேல் கைபோடுவதில்லை.” (1 சாமுவேல் 24:11, 12, தி.மொ.) சவுல் தன்னை அநியாயமாக நடத்துவதை தாவீது அறிந்திருந்தபோதிலும், அவர் பழிவாங்கவுமில்லை, சவுலினிடமோ அல்லது அவரைப் பற்றி பிறரிடமோ தூஷணமாக பேசவுமில்லை. வேறு பல சந்தர்ப்பங்களிலும், காரியங்களைத் தானே சரிசெய்ய தாவீது முற்படாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். யெகோவாவின் கரங்களில் அவற்றை விட்டுவிட்டு அவர் மீது சார்ந்திருந்தார்.—1 சாமுவேல் 25:32-34; 26:10, 11.
9. எதிர்ப்போ துன்புறுத்தலோ வந்தால் நாம் ஏன் பழிக்குப் பழி வாங்கக் கூடாது?
9 தாவீதைப் போல், உங்களுக்கும் இக்கட்டான நிலைமைகள் வரலாம். ஒருவேளை பள்ளித் தோழர்களால், சக பணியாளர்களால், குடும்ப அங்கத்தினர்களால் அல்லது பிற மதத்தவர்களால் எதிர்க்கப்படலாம் அல்லது துன்புறுத்தப்படலாம். பழிக்குப் பழி வாங்காதீர்கள். உங்களுக்கு உதவ யெகோவா தமது பரிசுத்த ஆவியை அருளும்படி கேட்டு, அவருக்காக காத்திருங்கள். ஒருவேளை அந்த அவிசுவாசிகள் உங்களுடைய நன்னடத்தையைக் கண்டு மனம் கவரப்பட்டு விசுவாசிகளாக மாறக்கூடும். (1 பேதுரு 3:1) எப்படியிருந்தபோதிலும், உங்கள் நெருக்கடி நிலையை யெகோவா காண்கிறார், தமது உரிய நேரத்தில் அதற்கு ஏதாவது செய்வார் என உறுதியுடனிருங்கள். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோமர் 12:19.
‘சிட்சைக்குச் செவிசாயுங்கள்’
10. தாவீது எவ்வாறு பாவத்திற்குள் வீழ்ந்தார், அதை மூடி மறைக்க எவ்வாறு முயன்றார்?
10 ஆண்டுகள் உருண்டோடின. தாவீது பிரியத்திற்குரிய அரசராக புகழேணியின் உச்சாணியில் இடம் பிடித்தார். உண்மைத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அவருடைய வாழ்க்கையையும், யெகோவாவுக்குத் துதியுண்டாக அவர் எழுதிய அருமையான சங்கீதங்களையும் சிந்திக்கையில், ஒருபோதும் பெரும் பாவத்திற்குள் விழாத மனிதர் இவர் என்ற அபிப்பிராயமே ஏற்படும். என்றாலும், அவர் பெரும் பாவத்திற்குள் வீழ்ந்தார். ஓர் அழகிய பெண் குளித்துக் கொண்டிருந்ததை அரண்மனை உப்பரிகையின் மேலிருந்து ஒருநாள் இந்த அரசர் பார்த்தார். அவளைப் பற்றி விசாரித்தார். அவள் பத்சேபாள் என்றும், அவளுடைய கணவர் உரியா போருக்குச் சென்றிருந்தார் என்றும் அறிந்துகொண்டு, தாவீது அவளை அழைத்து வரச் செய்து அவளோடு உடலுறவு கொண்டார். பின்னால், அவள் கர்ப்பமாகியிருப்பதை அறிந்தார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் எப்பேர்ப்பட்ட தலைகுனிவு! மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, விபச்சாரம் கொலைக் குற்றமாக கருதப்பட்டது. இந்தப் பாவத்தை ஒருவேளை மூடி மறைத்துவிடலாம் என அரசர் நினைத்ததாக தெரிகிறது. ஆகவே, போர்க்களத்திற்குச் செய்தியனுப்பி, உரியாவை எருசலேமுக்குத் திரும்பி வரும்படி கட்டளையிட்டார். உரியா அந்த இரவில் பத்சேபாளுடன் படுப்பார் என தாவீது நம்பினார், ஆனால் அது நடக்கவில்லை. இப்போது செய்வதறியாத தாவீது, உரியாவை மீண்டும் போருக்கு அனுப்பினார்; சேனைத் தலைவராகிய யோவாபுக்கு ஒரு கடிதத்தை அவர் மூலம் கொடுத்து அனுப்பினார். போர்க்களத்தில் உரியாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் ஓர் இடத்தில் அவரை நிறுத்தும்படி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். யோவாப் அதற்குத் தலைவணங்கினார், உரியா கொல்லப்பட்டார். வழக்கப்படி பத்சேபாள் துக்கங்கொண்டாடி முடித்தபின், தாவீது அவளைத் தன் மனைவியாக சேர்த்துக்கொண்டார்.—2 சாமுவேல் 11:1-27.
11. தாவீதிடம் நாத்தான் என்னவொரு சூழ்நிலைமையைப் பற்றி விவரித்தார், அதற்கு அவர் எவ்வாறு பிரதிபலித்தார்?
11 அவர் போட்ட திட்டம் நிறைவேறியது போல் தோன்றியது, ஆனால் நடந்த இந்த எல்லா சங்கதிகளும் யெகோவாவுக்கு வெட்டவெளிச்சம் என்பதை தாவீது அறிந்திருக்க வேண்டும். (எபிரெயர் 4:13) மாதங்கள் உருண்டோடின, பிள்ளையும் பிறந்தது. பிறகு கடவுளுடைய கட்டளையின்படி, தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதை சந்திக்கச் சென்றார். அரசனிடம் இந்தத் தீர்க்கதரிசி ஒரு சூழ்நிலைமையை விவரித்தார்; மந்தை மந்தையாக ஆடுகள் வைத்திருந்த ஒரு செல்வச்சீமான், ஒன்றே ஒன்று என செல்லமாக ஓர் ஏழை வைத்திருந்த ஆட்டைப் பிடுங்கி உணவுக்காக வெட்டிக் கொன்றதை விவரித்தார். இந்தக் கதை தாவீதின் நீதியுணர்வை தட்டியெழுப்பியது, ஆனால் அதற்கு உட்கருத்து இருக்கும் என்பதை கொஞ்சமும் உணராமல் உடனடியாக அந்த செல்வச்சீமானை நியாயந்தீர்த்து விட்டார். “இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன்” என கோபாவேசத்துடன் நாத்தானிடம் உரைத்தார்.—2 சாமுவேல் 12:1-6.
12. தாவீதுக்கு யெகோவா வழங்கிய நியாயத்தீர்ப்பு என்ன?
12 “நீயே அந்த மனுஷன்” என்று அந்தத் தீர்க்கதரிசி கூறினார். தாவீது தன் வாயாலேயே தனக்குத் தீர்ப்பு அளித்திருந்தார். தாவீதின் கோபம் விரைவில் மிகுந்த வெட்கக்கேட்டையும் ஆழ்ந்த துக்கத்தையும் அவருக்கு ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. அதிர்ச்சியில் உறைந்தபடி, நாத்தான் எடுத்துரைத்த யெகோவாவின் கடும் நியாயத்தீர்ப்பை கேட்டார். அதில் ஆறுதலளிக்கும் வார்த்தைகளே இல்லை. கெட்ட காரியத்தை செய்ததன் மூலம் யெகோவாவின் வார்த்தையை தாவீது புறக்கணித்திருந்தார். சத்துருவின் வாளால் உரியா கொலை செய்யப்படுவதற்கு அவர் திட்டம் வகுத்தார் அல்லவா? அதனால் பட்டயம் என்றைக்கும் அவர் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். உரியாவின் மனைவியை தன் மனைவியாக இரகசியமாய் எடுத்துக் கொண்டார் அல்லவா? அதைப் போன்ற பொல்லாப்பு அவருக்கும் வரும், அதுவும் இரகசியமாக அல்லாமல் வெளிப்படையாக வரும்.—2 சாமுவேல் 12:7-12.
13. யெகோவாவின் சிட்சைக்கு தாவீது எவ்வாறு பிரதிபலித்தார்?
13 தான் செய்த குற்றத்தை மறுக்காமல் ஒப்புக்கொண்டதே தாவீது செய்த நல்ல காரியம். தீர்க்கதரிசியாகிய நாத்தானிடம் அவர் கோபத்தில் கொதித்தெழவில்லை. தான் செய்த தவறுக்கு மற்றவர்களைக் குற்றஞ்சாட்டவோ சாக்குப்போக்குகள் சொல்லவோ இல்லை. அவருடைய பாவங்கள் அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டபோது, “நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ் செய்தேன்” என்று சொல்லி, தவற்றுக்கான பொறுப்பை தாவீது ஏற்றுக்கொண்டார். (2 சாமுவேல் 12:13, தி.மொ.) குற்றவுணர்வால் அவர் வாதிக்கப்பட்டு, உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியதை சங்கீதம் 51 படம்பிடித்துக் காட்டுகிறது. “உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்” என்று அவர் யெகோவாவிடம் மன்றாடினார். பாவத்தினால் “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை” இரக்கமுள்ள யெகோவா புறக்கணிக்க மாட்டார் என்பதை அவர் நம்பினார். (சங்கீதம் 51:11, 17) தாவீது தொடர்ந்து கடவுளுடைய ஆவியின் மீது சார்ந்திருந்தார். பாவத்தின் கடும் விளைவுகளிலிருந்து தாவீதை யெகோவா பாதுகாக்காதபோதிலும், அவரை மன்னித்தார்.
14. யெகோவாவின் சிட்சைக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
14 நாம் எல்லாருமே அபூரணர், அதனால் நாம் அனைவரும் பாவம் செய்கிறோம். (ரோமர் 3:23) சில சமயங்களில் தாவீதைப் போல் நாம் பெரும் பாவத்திற்குள் வீழ்ந்துவிடக்கூடும். அன்புள்ள தகப்பன் தன் பிள்ளைகளைச் சிட்சிப்பது போல், யெகோவா தம்மைச் சேவிக்க நாடுவோரை சிட்சித்துத் திருத்துகிறார். சிட்சை நன்மை தருகிறபோதிலும், அதை ஏற்பது எளிதல்ல. சில சமயங்களில் அது ‘துக்கமாய்’ இருக்கலாம். (எபிரெயர் 12:6, 11) என்றாலும், நாம் “சிட்சைக்கு செவிசாய்த்தால்,” யெகோவாவுடன் ஒப்புரவாகலாம். (நீதிமொழிகள் 8:33, NW) யெகோவாவுடைய ஆவியின் ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து அனுபவிப்பதற்கு, சிட்சையை ஏற்றுக்கொண்டு அவரது அங்கீகாரத்தைப் பெற உழைக்க வேண்டும்.
நிலையற்ற செல்வத்தின் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்
15. (அ) என்ன வழிகளில் சில ஜனங்கள் தங்கள் செல்வத்தைப் பயன்படுத்துகிறார்கள்? (ஆ) தாவீது தன் செல்வத்தை எவ்வாறு பயன்படுத்த விரும்பினார்?
15 தாவீது சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்திலிருந்து வந்ததாகவோ அல்லது அவருடைய குடும்பம் செல்வச் செழிப்பாக இருந்ததாகவோ எந்த அறிகுறியும் இல்லை. என்றாலும், அவருடைய ஆட்சிக் காலத்தில் மிகுந்த செல்வத்தை தாவீது பெற்றார். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, இன்று பலர் செல்வத்தை திரட்டி வைக்கிறார்கள், அதை பேராசையுடன் அதிகரிக்க நாடுகிறார்கள், அல்லது தன்னலமாக செலவிடுகிறார்கள்; மற்றவர்களோ தங்களுக்கு புகழைத் தேடிக்கொள்ள பணத்தை செலவிடுகிறார்கள். (மத்தேயு 6:2) தாவீதோ அன்று தன் செல்வத்தை வேறு முறையில் பயன்படுத்தினார். அவர் யெகோவாவை கனம் பண்ணுவதற்கே ஏங்கினார். ஆகவே யெகோவாவுக்காக ஓர் ஆலயத்தைக் கட்டி, எருசலேமில் ‘திரைகளின் நடுவே வாசமாயிருந்த’ உடன்படிக்கைப் பெட்டியை அந்த ஆலயத்தில் வைக்க வேண்டுமென்ற தன் ஆவலை நாத்தானிடம் கூறினார். தாவீதின் ஆவலைக் குறித்து யெகோவா சந்தோஷப்பட்டார். ஆனால் தாவீதின் குமாரனாகிய சாலொமோனே அந்த ஆலயத்தைக் கட்டுவாரென்று நாத்தானின் வாயிலாக சொன்னார்.—2 சாமுவேல் 7:1, 2, 12, 13.
16. ஆலயம் கட்டுவதற்கு என்ன முன்னேற்பாடுகளை தாவீது செய்தார்?
16 இந்த மாபெரும் கட்டட திட்டத்திற்குத் தேவையான பொருட்களை தாவீது சேர்த்து வைத்தார். சாலொமோனிடம் தாவீது இவ்வாறு சொன்னார்: “இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.” அவர் தன்னுடைய சம்பத்திலிருந்து 3,000 தாலந்து பொன்னையும் 7,000 தாலந்து வெள்ளியையும் கொடுத்தார்.a (1 நாளாகமம் 22:14; 29:3, 4) தாவீது வெறும் வெளிப்பகட்டிற்காக இவ்வாறு தாராளமாக கொடுக்கவில்லை, ஆனால் யெகோவா தேவனின் மீதிருந்த விசுவாசத்தாலும் பயபக்தியாலுமே கொடுத்தார். தான் பெற்ற செல்வத்திற்கு யெகோவாவே மூலகாரணர் என்பதை உணர்ந்து, அவரிடம் இவ்வாறு சொன்னார்: “எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.” (1 நாளாகமம் 29:14) தாவீதின் தயாள இருதயம், தூய்மையான வணக்கத்தை முன்னேற்றுவிக்க தன்னால் இயன்றதையெல்லாம் செய்ய அவரை உந்துவித்தது.
17. செல்வந்தருக்கும் ஏழைக்கும் 1 தீமோத்தேயு 6:17-19-ல் உள்ள அறிவுரை எவ்வாறு பொருந்துகிறது?
17 இது போலவே, நாமும் நன்மை செய்ய நம்முடைய சொத்துக்களைப் பயன்படுத்துவோமாக. பொருளாசைமிக்க வாழ்க்கை முறையை நாடுவதற்குப் பதிலாக, கடவுளுடைய அங்கீகாரத்தை நாடுவது நல்லது—அதுவே மெய் ஞானத்திற்கும் சந்தோஷத்திற்குமுரிய வழி. பவுல் இவ்வாறு எழுதினார்: “இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும். அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கென்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்து வைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்.” (1 தீமோத்தேயு 6:17-19, பொது மொழிபெயர்ப்பு) நம்முடைய பொருளாதார நிலைமை எப்படியிருந்தாலும், கடவுளுடைய ஆவியின் மேல் நம்பிக்கை வைத்து, ‘தேவனிடத்தில் நம்மை ஐசுவரியவான்களாக்கும்’ வாழ்க்கை முறையை தொடருவோமாக. (லூக்கா 12:21) நமது அன்புள்ள பரம தகப்பனுடன் வைத்திருக்கும் அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையைவிட அதிக மதிப்புள்ளது வேறெதுவுமில்லை.
உங்களை தேவனுக்கு முன்பாக உத்தமராய் நிறுத்துங்கள்
18. எவ்வகையில் கிறிஸ்தவர்களுக்கு தாவீது சிறந்த முன்மாதிரி வைத்தார்?
18 தனது வாழ்நாள் பூராவும் தாவீது யெகோவாவின் அங்கீகாரத்தை நாடினார். ஒரு பாடலில் அவர் இவ்வாறு கதறினார்: “எனக்கு இரங்கும், கடவுளே, எனக்கு இரங்கும்; என் ஆத்துமா உம்மிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறது.” (சங்கீதம் 57:1, தி.மொ.) யெகோவா மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை. தாவீது வயது சென்றவராகி, ‘பூரண வயதுள்ளவரானார்.’ (1 நாளாகமம் 23:1) தாவீது மகா பெரிய தவறுகள் செய்தபோதிலும், சிறந்த விசுவாசத்தைக் காட்டிய கடவுளுடைய பல சாட்சிகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.—எபிரெயர் 11:32.
19. தேவனுக்கு முன்பாக நம்மை எவ்வாறு உத்தமராக நிறுத்த முடியும்?
19 வாழ்க்கையில் மாறிவரும் சூழ்நிலைமைகளை நீங்கள் எதிர்ப்படுகையில், தாவீதை யெகோவா எவ்வாறு ஆதரித்து, பலப்படுத்தி, திருத்தினாரோ அவ்வாறே உங்களுக்கும் செய்வார் என்பதை நினைவில் வையுங்கள். தாவீதைப் போல் அப்போஸ்தலன் பவுல் தனது வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்தித்தார். என்றாலும், கடவுளுடைய ஆவியில் நம்பிக்கை வைப்பதன் மூலம் அவரும் உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார். “என்னைப் பலப்படுத்துகிறவருக்குள் எல்லாவற்றையுஞ் செய்ய எனக்கு வல்லமையுண்டு” என அவர் எழுதினார். (பிலிப்பியர் 4:12, 13, தி.மொ.) நாம் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்போமானால், நாம் வெற்றி பெற அவர் நமக்கு உதவி செய்வார். நாம் வெற்றி பெறவே அவர் விரும்புகிறார். நாம் அவருக்குச் செவிகொடுத்து அவரிடம் நெருங்கி வருவோமாகில், தமது சித்தத்தைச் செய்வதற்குத் தேவையான பலத்தை நமக்கு அருளுவார். கடவுளுடைய ஆவியின் மீது நாம் தொடர்ந்து சார்ந்திருந்தால், இன்றும் என்றும் ‘தேவனுக்கு முன்பாக நம்மை உத்தமராக நிறுத்த’ முடியும்.—2 தீமோத்தேயு 2:15.
[அடிக்குறிப்பு]
a இன்றைய நிலவரப்படி, தாவீது கொடுத்த நன்கொடையின் மதிப்பு 5,600 கோடி ரூபாய்க்கும் அதிகம்.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• செருக்கடையாமல் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?
• நாம் ஏன் பழிவாங்கக் கூடாது?
• சிட்சையை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
• ஏன் செல்வத்தின் மீது அல்லாமல் கடவுளின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்?
[பக்கம் 16, 17-ன் படம்]
தாவீது கடவுளுடைய ஆவியின்மேல் நம்பிக்கை வைத்து அவருடைய அங்கீகாரத்தை நாடினார். நீங்களும் அவ்வாறே செய்கிறீர்களா?
[பக்கம் 18-ன் படம்]
“எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்”