யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
இரண்டு சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
யெகோவாவின் பேரரசுரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிவது அவசியமா? உத்தமமான ஒருவர் எப்போதும் கடவுளுக்கு முன்பாக சரியானதையே செய்வாரா? எப்படிப்பட்டவரை “தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற” நபராக மெய்க் கடவுள் காண்கிறார்? (1 சாமுவேல் 13:14) பைபிளிலுள்ள இரண்டு சாமுவேல் புத்தகம் இக்கேள்விகளுக்குத் திருப்தியான பதில்களைத் தருகிறது.
இரண்டு சாமுவேல் புத்தகம் காத், நாத்தான் என்ற இரு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது. இவர்கள் பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீதுடன் நெருங்கிப் பழகியவர்கள்.a இப்புத்தகம் சுமார் பொ.ச.மு. 1040-ல், தாவீதின் 40 ஆண்டுகால ஆட்சியின் முடிவில் எழுதி முடிக்கப்பட்டது. இது, முக்கியமாகத் தாவீதையும் யெகோவாவோடு அவருக்கிருந்த நெருக்கத்தையும் பற்றிச் சொல்கிறது. விறுவிறுப்பான இப்பதிவு, சண்டை சச்சரவுகளால் அல்லல்பட்டுக் கிடந்த ஒரு தேசம் எப்படி மாவீரரான ஒரு ராஜாவின்கீழ் ஒன்றுபட்ட, செழுமையான ஒரு ராஜ்யமாக மாறுகிறது என்பதை விவரிக்கிறது. மனதைக் கவரும் இப்பதிவு முழுவதிலும் மனித உணர்ச்சிகள் வலிமைமிக்க விதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தாவீது ‘நாளுக்கு நாள் விருத்தியடைகிறார்’
சவுலும் யோனத்தானும் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டதும் தாவீது பிரதிபலிக்கிற விதம், அவர்கள்மீதும் யெகோவாமீதும் அவருக்கிருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எப்ரோனில், யூதா கோத்திரத்தின் ராஜாவாக தாவீது நியமிக்கப்படுகிறார். மற்ற கோத்திரங்களின் ராஜாவாக சவுலின் மகன் இஸ்போசேத் நியமிக்கப்படுகிறார். தாவீது ‘நாளுக்கு நாள் விருத்தியடைகிறார்.’ சுமார் ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரவேலர் எல்லார்மீதும் அவர் ராஜாவாக நியமிக்கப்படுகிறார்.—2 சாமுவேல் 5:10.
தாவீது எருசலேமை எபூசியரிடமிருந்து கைப்பற்றி, அதைத் தன் ராஜ்யத்தின் தலைநகராக்குகிறார். உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவருவதற்காக அவர் முதன்முறை எடுக்கும் முயற்சி தோல்வியடைகிறது. என்றாலும், இரண்டாவது முறை எடுக்கும் முயற்சி வெற்றியடைகிறது, ஆகவே சந்தோஷத்தில் அவர் நடனமாடுகிறார். தாவீதோடு யெகோவா ராஜ்ய உடன்படிக்கையைச் செய்கிறார். அவருடைய கரம் தாவீதோடு எப்போதும் இருப்பதால் விரோதிகளை அவர் முறியடிக்கிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:18—யோவாபும் அவருடைய இரண்டு சகோதரர்களும், அவர்களுடைய அம்மாவின் பெயரில், அதாவது செருயாவின் மூன்று குமாரர்கள் என்று ஏன் அடையாளம் காட்டப்பட்டார்கள்? எபிரெய வேதாகமத்தில் பொதுவாக வம்சவரலாறுகள் அப்பாவின் பெயரிலேயே கொடுக்கப்பட்டன. செருயாவின் கணவர் ஒருவேளை அகால மரணம் அடைந்திருக்கலாம், அல்லது பரிசுத்த பதிவில் குறிப்பிடப்படுவதற்கு தகுதியற்றவராகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் செருயா, தாவீதின் உடன்பிறந்த சகோதரியாகவோ ஒன்றுவிட்ட சகோதரியாகவோ இருந்ததால் அவளுடைய பெயர் கொடுக்கப்பட்டு இருந்திருக்கலாம். (1 நாளாகமம் 2:15, 16) இந்த மூன்று சகோதரர்களுடைய அப்பாவைப் பற்றிய ஒரே குறிப்பு, பெத்லெகேமிலிருந்த அவருடைய கல்லறையைக் குறிப்பிடும் வசனத்தில் மட்டுமே காணப்படுகிறது.—2 சாமுவேல் 2:32.
3:29 (NW)—‘சுழல் தக்ளியைப் பிடிக்கிற ஆடவன்’ என்பதன் அர்த்தம் என்ன? துணி நெய்யும் வேலையை வழக்கமாக பெண்களே செய்தனர். அப்படியானால், இந்த வார்த்தைகள், போர் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட ஆண்கள் தகுதியில்லாமல் இருந்ததால் பெண்களின் வேலையை அவர்கள் செய்ததை அர்த்தப்படுத்தலாம்.
5:1, 2—இஸ்போசேத் கொலை செய்யப்பட்டு எத்தனை ஆண்டுகளுக்குப் பின் தாவீது இஸ்ரவேலர் எல்லார்மீதும் ராஜாவாக்கப்பட்டார்? சவுல் இறந்த உடனேயே இஸ்போசேத் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு வருடம் ஆட்சி செய்தார் என்ற முடிவுக்கு வருவது நியாயமாக இருக்கும்; ஏறக்குறைய அதே சமயத்தில்தான் எப்ரோனில் தாவீதும் தன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். எப்ரோனிலிருந்து யூதா கோத்திரத்தாரை ஏழரை ஆண்டுகளுக்கு தாவீது ஆண்டார். இஸ்ரவேலர் எல்லார்மீதும் தாவீது ராஜாவான உடனேயே அவர் தன் தலைநகரை எருசலேமுக்கு மாற்றினார். ஆகவே, இஸ்போசேத் இறந்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே இஸ்ரவேலர் எல்லார்மீதும் தாவீது ராஜாவாக ஆனார்.—2 சாமுவேல் 2:3, 4, 8-11; 5:4, 5.
8:2—இஸ்ரவேலர் தொடுத்த யுத்தத்தில் மோவாபியர் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? அவர்களின் தொகை எண்ணப்படுவதற்குப் பதிலாக அளக்கப்பட்டிருக்கலாம். தாவீது மோவாபியரைத் தரையில் வரிசையாக படுக்க வைத்ததாகத் தெரிகிறது. அடுத்து, அவர்களை ஒரு நூலால் அல்லது கயிறால் அளந்தார். அதன்படி, இரண்டு கயிறு அளவாயிருந்த, அதாவது மூன்றில் இரண்டு பங்காயிருந்த மோவாபியரைக் கொன்று போட்டார், ஒரு கயிறு அளவான, அதாவது மூன்றில் ஒரு பங்கான ஆட்களை கொல்லாமல் விட்டார்.
நமக்குப் பாடம்:
2:1; 5:19, 23. தாவீது எப்ரோனுக்குப் போய் தங்குவதற்கு முன்னும் விரோதிகளுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்வதற்கு முன்னும் யெகோவாவிடம் விசாரித்தார். நாமும்கூட, நம்முடைய ஆன்மீகத்தைப் பாதிக்கிற விஷயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு முன் யெகோவாவின் வழிநடத்துதலை நாட வேண்டும்.
3:26-30. பழிவாங்குதல் வருத்தகரமான விளைவுகளுக்கு வழிநடத்துகிறது.—ரோமர் 12:17-19.
3:31-34; 4:9-12. பழிவாங்கும் எண்ணமும் பகைக்கும் குணமும் தாவீதிற்கு இல்லாதிருந்தது பின்பற்றத்தக்கது.
5:12. யெகோவா தம்முடைய வழிகளை நமக்குப் போதித்து, தம்முடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வழிசெய்திருக்கிறார் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
6:1-7. தாவீது நல்லெண்ணத்துடன்தான் உடன்படிக்கை பெட்டியை வண்டியிலே எடுத்துவர முற்பட்டார் என்றாலும், அது கடவுளுடைய கட்டளையை மீறுவதாக இருந்தது, அதனால் தோல்வியடைந்தது. (யாத்திராகமம் 25:13, 14; எண்ணாகமம் 4:15, 19; 7:7-9) ஊசா நல்லெண்ணத்துடன் உடன்படிக்கை பெட்டியை பிடித்தது, அப்படிப்பட்ட நல்லெண்ணம் கடவுளுடைய தராதரங்களை ஒருபோதும் மாற்றுவதில்லை என்பதையே காட்டுகிறது.
6:8, 9. சோதனையான சூழ்நிலையில், தாவீது முதலில் கோபப்பட்டார், அதற்குப் பின் பயந்தார்; ஒருவேளை அந்தச் சூழ்நிலைக்கு அவர் யெகோவாமீது குற்றம் சுமத்தியிருக்கலாம். யெகோவாவின் கட்டளைகளை அசட்டை செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்மீது குற்றம் சுமத்தாதபடி கவனமாயிருப்பது அவசியம்.
7:18, 22, 23, 26. தாவீதின் மனத்தாழ்மை, யெகோவாவுக்கு அவர் காண்பித்த முழுமையான பக்தி, யெகோவாவின் பெயரைப் புகழ்வதில் அவருக்கிருந்த ஆர்வம் ஆகியவை நாம் பின்பற்றத்தக்க பண்புகளாகும்.
8:2. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறியது. (எண்ணாகமம் 24:17) யெகோவாவின் வார்த்தை எப்போதுமே நிறைவேறும்.
9:1, 6, 7. தாவீது தன் வாக்கைக் காப்பாற்றினார். நாமும்கூட நம்முடைய வாக்கைக் காப்பாற்ற முயல வேண்டும்.
யெகோவா, தாம் அபிஷேகம் செய்தவர்மீது பொல்லாப்பை எழும்பப் பண்ணுகிறார்
“இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப் பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்” என தாவீதிடம் யெகோவா சொல்கிறார். (2 சாமுவேல் 12:11) இவ்வாறு சொல்வதற்கு காரணமென்ன? பத்சேபாளிடத்தில் தாவீது செய்த பாவமே இதற்குக் காரணம். மனந்திரும்பிய தாவீதுக்கு மன்னிப்பு கிடைக்கிற போதிலும், செய்த பாவத்தின் விளைவுகளிலிருந்து அவர் தப்பித்துக்கொள்வதில்லை.
முதலில், பத்சேபாளுக்குப் பிறக்கிற குழந்தை இறந்துவிடுகிறது. பிறகு, தாவீதின் மணமாகாத மகள் தாமார், அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரனான அம்னோனால் கற்பழிக்கப்படுகிறாள். வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தில் அவளுடைய சொந்த சகோதரனான அப்சலோம், அம்னோனை கொலை செய்கிறான். அப்சலோம் தன் அப்பாவுக்கு எதிராகவே சதித்திட்டம் போடுகிறான், எப்ரோனில் தன்னை ராஜாவாக அறிவிக்கிறான். எருசலேமை விட்டு தாவீது ஓடிப்போக வேண்டிய நிலைக்குள்ளாகிறார். வீட்டை கவனிப்பதற்காக விட்டுச் செல்லப்பட்டிருந்த தாவீதின் பத்து மறுமனையாட்டிகளுடன் அப்சலோம் உடலுறவு கொள்கிறான். அப்சலோம் கொலை செய்யப்பட்ட பிறகே தாவீது மீண்டும் வந்து ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறார். பென்யமீன் கோத்திரத்தானாகிய சேபா உயிரிழந்ததும் கலகம் முடிவுறுகிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
14:7—“எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறி” என்பது எதை அடையாளப்படுத்துகிறது? மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் பொறி அல்லது தணல் உயிரோடிருக்கும் ஒரு வாரிசைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
19:29—மேவிபோசேத் கொடுத்த விளக்கத்திற்கு தாவீது ஏன் அவ்விதமாகப் பதிலளித்தார்? மேவிபோசேத் சொன்னதைக் கேட்ட தாவீது, சீபா சொன்னதை அப்படியே எடுத்துக்கொண்டது தவறு என உணர்ந்திருக்க வேண்டும். (2 சாமுவேல் 16:1-4; 19:24-28) இந்த எரிச்சலினால்தான் அந்த விஷயத்தைப் பற்றி வேறு எதையும் கேட்க விரும்பாமல் அவ்வாறு பதிலளித்திருப்பார்.
நமக்குப் பாடம்:
11:2-15. தாவீது செய்த தவறுகள் பைபிளில் ஒளிவுமறைவில்லாமல் குறிப்பிடப்பட்டிருப்பது, அது கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டதற்குச் சான்றளிக்கிறது.
11:16-27. நாம் ஒரு வினைமையான பாவத்தைச் செய்கையில், தாவீதைப் போல அதை மூடிமறைக்க முயலக் கூடாது. மாறாக, நம்முடைய பாவத்தை யெகோவாவிடம் அறிக்கையிட்டு, சபை மூப்பர்களின் உதவியை நாட வேண்டும்.—நீதிமொழிகள் 28:13; யாக்கோபு 5:13-16.
12:1-14. சபையில் நியமிக்கப்பட்டுள்ள மூப்பர்களுக்கு நாத்தான் சிறந்த முன்மாதிரி வைக்கிறார். பாவம் செய்பவர்கள் திருந்துவதற்கு உதவி செய்வது அவர்களுடைய பொறுப்பாகும். இந்தப் பொறுப்பை மூப்பர்கள் திறம்பட்ட முறையில் நிறைவேற்றுவது அவசியம்.
12:15-23. தனக்கு ஏற்பட்ட நிலையை தாவீது சரியான கண்ணோட்டத்தில் பார்த்தது, அதை சரியாக சமாளிக்க அவருக்கு உதவியது.
15:12; 16:15, 21, 23. பெருமைக்கும் புகழுக்கும் ஆசைப்பட்ட திறமைமிக்க ஆலோசனைக்காரனான அகித்தோப்பேல், அப்சலோம் ராஜாவாகி விடுவார் எனத் தெரிந்ததும் ஒரு துரோகியாக மாறினான். மனத்தாழ்மையையும் உண்மைத்தன்மையையும் பெற்றிராமல் அறிவுக்கூர்மையை மட்டும் பெற்றிருப்பது ஆபத்தாகிவிடலாம்.
19:24, 30. தாவீது காட்டிய அன்புள்ள தயவுக்கு மேவிபோசேத் உண்மையிலேயே போற்றுதல் காட்டினார். சீபாவைக் குறித்து ராஜா எடுத்தத் தீர்மானத்திற்கு அவர் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்தார். யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் நாம் காட்டும் போற்றுதல், கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருக்க நம்மைத் தூண்ட வேண்டும்.
20:21, 22. ஒரு மனிதனுடைய ஞானத்தினால் பலர் தீங்கிலிருந்து பாதுகாக்கப்படலாம்.—பிரசங்கி 9:14, 15.
நாம் ‘யெகோவாவின் கையிலே விழுவோமாக’
கிபியோனியரை சவுல் கொன்று போட்டதால் ஏற்பட்ட இரத்தப்பழியின் காரணமாக தேசத்தில் மூன்று ஆண்டுகள் பஞ்சம் நிலவுகிறது. (யோசுவா 9:15) இந்த இரத்தப்பழியைத் தீர்க்க, சவுலின் குமாரர்களில் ஏழு பேரைத் தாங்கள் கொன்றுபோடும்படி அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென கிபியோனியர் கேட்கிறார்கள். அப்படியே தாவீதும் அவர்களை கிபியோனியரிடம் ஒப்படைக்கிறார், பின்னர் தேசத்தில் மழை பெய்கிறது, பஞ்சம் நீங்குகிறது. நான்கு பெலிஸ்த இராட்சதர்கள் ‘தாவீதின் கையினாலும் அவருடைய சேவகரின் கையினாலும் மடிகிறார்கள்.’—2 சாமுவேல் 21:22.
கடவுளுடைய சட்டத்திற்கு விரோதமாக ஜனத்தொகையை கணக்கெடுக்க கட்டளையிடுவதன் மூலம் தாவீது ஒரு வினைமையான பாவத்தைச் செய்து விடுகிறார். பின்னர் அதற்காக அவர் மனம்வருந்தி, ‘யெகோவாவின் கையிலே விழுந்துவிட’ தீர்மானிக்கிறார். (2 சாமுவேல் 24:14) இதன் விளைவாக, 70,000 பேர் கொள்ளை நோயினால் மடிகிறார்கள். யெகோவாவின் கட்டளைப்படி தாவீது செய்கிறார், அத்துடன் வாதை நின்று விடுகிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
21:8—சவுலின் மகளான மீகாள் பிள்ளைகள் இல்லாமல் மரித்தாள் என 2 சாமுவேல் 6:23-ல் சொல்லப்பட்டிருக்க அவளுக்கு ஐந்து மகன்கள் இருந்ததாக இங்கு சொல்லப்படுவதேன்? பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒரு விளக்கத்தின்படி, இந்த மகன்கள் மீகாளுடைய சகோதரி மேரப்புக்கும், ஆதரியேலுக்கும் பிறந்த பிள்ளைகள் ஆவர். மேரப் இளவயதிலேயே இறந்துவிட்டதால் குழந்தையில்லாத மீகாள் அந்தப் பிள்ளைகளை வளர்த்திருக்கலாம்.
21:9, 10—ரிஸ்பாள், கிபியோனியரால் கொல்லப்பட்ட தன் இரண்டு மகன்களையும் சவுலின் ஐந்து பேரன்களையும் எவ்வளவு காலம் காவல் காத்தாள்? இந்த ஏழு பேரும் “அறுப்புக் காலத்தின் முந்தின நாட்களிலே,” அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலே தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களுடைய சடலங்கள் மலையின் மேல் விடப்பட்டன. யெகோவா பஞ்சத்தைப் போக்கி அதன் மூலம் தம்முடைய கோபம் தணிந்துவிட்டதைக் காண்பித்ததுவரை ரிஸ்பாள் அந்த ஏழு சடலங்களையும் இராப்பகலாகக் காவல் காத்தாள். அக்டோபர் மாதத்தில் அறுப்புக்காலம் முடிவதற்கு முன்பாகப் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பிருந்திருக்காது. ஆகவே, ரிஸ்பாள் ஐந்தாறு மாதங்களுக்கு விழிப்புடன் காவல் காத்திருந்திருக்கலாம். அதன் பிறகே, அவர்களுடைய எலும்புகளைப் புதைப்பதற்குத் தாவீது ஏற்பாடு செய்தார்.
24:1—ஜனத்தொகையை தாவீது கணக்கெடுத்தது ஏன் ஒரு வினைமையான பாவமாய் இருந்தது? கணக்கெடுப்பதை கடவுளுடைய சட்டம் தடை செய்யவில்லை. (எண்ணாகமம் 1:1-3; 26:1-4) தாவீது என்ன குறிக்கோளுடன் ஜனங்களைக் கணக்கெடுத்தார் என்பதைப் பற்றி பைபிள் குறிப்பிடுவதில்லை. என்றாலும், அவ்வாறு செய்வதற்கு அவரைத் தூண்டியது சாத்தான் என 1 நாளாகமம் 21:1 குறிப்பிடுகிறது. எப்படியானாலும், தாவீதின் இந்தத் தீர்மானம் தவறென்பதைப் படைத் தலைவனான யோவாப் அறிந்திருந்தார், ஆகவே அதை விட்டுவிடும்படி தாவீதுக்கு அவர் ஆலோசனையும் கொடுத்தார்.
நமக்குப் பாடம்:
22:2-51. யெகோவாவே மெய்க் கடவுள், அவரே நம் முழு நம்பிக்கைக்குரியவர் என்பதைத் தாவீதின் பாடல் எவ்வளவு அழகாகச் சித்தரிக்கிறது!
23:15-17. உயிரையும் இரத்தத்தையும் குறித்த கடவுளுடைய சட்டத்தின் பேரில் தாவீதுக்கு ஆழ்ந்த மதிப்பு இருந்தது. அதனால்தான் இந்தச் சந்தர்ப்பத்தில், அச்சட்டத்தை மீறுவதைப் போல் தோன்றிய ஒன்றைச் செய்வதற்குக்கூட அவர் மறுத்தார். கடவுளுடைய எல்லாக் கட்டளைகளின் பேரிலும் நாம் இத்தகைய மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
24:10. தாவீதின் மனசாட்சி, மனந்திரும்பும்படி அவரை உந்துவித்தது. அவ்விதமாக செயல்படும் அளவிற்கு நம் மனசாட்சியும் உணர்வுள்ளதாக இருக்கிறதா?
24:14. யெகோவா மனிதரைவிட பல மடங்கு இரக்கமுள்ளவர் என்ற நம்பிக்கை தாவீதுக்கு இருந்தது. அத்தகைய நம்பிக்கை நமக்கும் இருக்கிறதா?
24:17. தான் செய்த பாவத்தால் தேசம் முழுவதற்கும் துன்பம் நேர்ந்ததை நினைத்து தாவீது மனம் வருந்தினார். தவறு செய்த ஒருவர் மனந்திரும்புகையில், தனது செயலால் சபைக்கு ஏற்படும் அவப்பெயரை நினைத்து மனம் வருந்த வேண்டும்.
‘கடவுளுடைய இருதயத்திற்கு ஏற்றவராய்’ இருப்பது சாத்தியமே
இஸ்ரவேலின் இரண்டாம் ராஜாவான தாவீது ‘யெகோவாவின் இருதயத்திற்கு ஏற்றவராய்’ இருந்தார். (1 சாமுவேல் 13:14) யெகோவாவின் நீதியான தராதரங்களை அவர் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை; கடவுளிடமிருந்து விலகி தன்னிச்சையாக வாழவும் அவர் வழிதேடவில்லை. தவறு செய்த ஒவ்வொரு தடவையும், அவர் தன் பாவத்தை ஒத்துக்கொண்டு, தண்டனையை ஏற்றுக்கொண்டார், தன் வழிகளை மாற்றிக்கொண்டார். அவர் ஓர் உத்தமராக இருந்தார். நாமும்கூட அவரைப் போல, முக்கியமாகத் தவறிழைக்கையில் அவரைப் போல இருப்பது ஞானமல்லவா?
யெகோவாவின் பேரரசுரிமையை ஏற்றுக்கொள்வதென்பது, சரி எது தவறு எது என்பதைப் பற்றிய அவருடைய தராதரங்களை ஏற்றுக்கொள்வதையும் உத்தமத்தைக் காப்போராய் அவற்றைக் கைக்கொள்ள முயலுவதையும் குறிக்கிறது என்பதைத் தாவீதின் வாழ்க்கை சரிதை தத்ரூபமாக எடுத்துக் காட்டுகிறது. நம்மாலும் அதைச் செய்ய முடியும். இரண்டு சாமுவேல் புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு நாம் எந்தளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட இப்புத்தகத்திலுள்ள செய்தி உண்மையிலேயே ஜீவனும் வல்லமையும் உள்ளதாய் இருக்கிறது.—எபிரெயர் 4:12.
[அடிக்குறிப்பு]
a சாமுவேல் இப்புத்தகத்தை எழுதாவிட்டாலும், இது எபிரெய அதிகாரப்பூர்வ பட்டியலில் முதல் சாமுவேல் புத்தகத்துடன் சேர்ந்து ஒரே சுருளாக இருந்ததால் அவருடைய பெயரைப் பெற்றிருக்கிறது. முதல் சாமுவேல் புத்தகத்தின் பெரும்பகுதியை எழுதியவர் சாமுவேலே.
[பக்கம் 16-ன் படம்]
தன்னை ராஜாவாகத் திடப்படுத்தினவரை நினைவில் வைத்தது தாழ்மையோடிருக்க தாவீதுக்கு உதவியது
[பக்கம் 18-ன் படங்கள்]
‘இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப் பண்ணுகிறேன்’
பத்சேபாள்
தாமார்
அம்னோன்