உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள் என்பது என்ன, அது எதற்கு புகழ்பெற்றது?
அக்காலத்தில் எபிரெயு, கிரேக்கு, லத்தீன் ஆகிய மொழிகளில் மிகச் சிறந்த பதிவையும் அரமேயிக் மொழியில் சில பகுதிகளையும் ஒன்றுக்கொன்று இணையான பத்திகளாக கொண்ட பன்மொழி பைபிள் அது. மூல மொழிகளில் திருத்தமான பதிவை வெளியிடுவதற்கான முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கப்பட்ட பெரியதோர் அடியாக அது இருந்தது.—4/15, பக்கங்கள் 28-31.
• கடவுளுடைய இருதயத்தை மனிதர்கள் மகிழ்விப்பது எப்படி?
யெகோவா நிஜமான ஒரு நபராக இருப்பதால், அவருக்கு சிந்திக்கும் திறமையும் செயல்படும் திறமையும் இருக்கின்றன. உணர்ச்சிகளும் இருக்கின்றன. அவர் ‘நித்தியானந்த தேவன்.’ தமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் இன்பம் கொள்கிறார். (1 தீமோத்தேயு 1:11; சங்கீதம் 104:31) கடவுளுடைய உணர்ச்சிகளை நாம் எந்தளவுக்கு அறிந்திருக்கிறோமோ அந்தளவுக்கு அவரது இருதயத்தை மகிழ்விக்க நாம் என்ன செய்யலாம் என்றும் அறிந்திருப்போம்.—5/15, பக்கங்கள் 4-7.
• தன் மனைவியான மீகாள் ஒரு சுரூபத்தை வைத்திருக்க தாவீது ஏன் அனுமதித்தார்?
தாவீதை கொல்வதற்கு சவுல் ராஜா திட்டமிட்டபோது, ஒரு மனிதனுடைய அளவும் வடிவமும் கொண்ட சுரூபத்தை எடுத்து கட்டிலின் மேல் வைத்தாள் மீகாள், இதன் மூலம் தாவீது தப்பிப் போவதற்கு உதவி செய்தாள். அவளுடைய இருதயம் யெகோவாவுடன் முழுமையாக இசைந்திருக்கவில்லை போலும். அதனால்தான் அவள் அந்த சுரூபத்தை வைத்திருக்கலாம். இந்தச் சுரூபத்தை மீகாள் வைத்திருந்தது தாவீதுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது அவள் அரசனாகிய சவுலின் குமாரத்தியாக இருந்ததால் அதை அவர் அனுமதித்திருந்திருக்கலாம். (1 நாளாகமம் 16:25, 26)—6/1, பக்கம் 29.
• இரத்தத்தை பற்றிய கடவுளுடைய சட்டத்தில் என்ன அடிப்படை உண்மை அடங்கியிருந்தது?
ஜலப்பிரளயத்திற்குப் பிறகும், நியாயப்பிரமாணச் சட்டத்திலும், அப்போஸ்தலர் 15:28, 29-ல் உள்ள கட்டளையிலும் கடவுள் சொன்னவை, இயேசு சிந்திய இரத்தத்தை உட்படுத்தும் பலியை சுட்டிக்காட்டின. இயேசுவின் இரத்தத்தின் மூலமாக மட்டுமே நாம் கடவுளிடம் மன்னிப்பைப் பெற்று ஒப்புரவாக முடியும். (கொலோசெயர் 1:20)—6/15, பக்கங்கள் 14-19.
• இயேசு எத்தனை அற்புதங்களை செய்தார் என்று பைபிள் சொல்கிறது?
இயேசு நடப்பித்த 35 அற்புதங்களை சுவிசேஷ பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் பதிவு செய்யப்படாதவை உட்பட, அவர் செய்த அற்புதங்களின் மொத்த எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை. (மத்தேயு 14:14)—7/15, பக்கம் 5.