ராயல் பைபிள் புலமையில்—ஒரு மைல்கல்
ஒரு கப்பல், 16-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்பெயினைவிட்டு புறப்பட்டு இத்தாலிய தீபகற்பத்தை நோக்கி விரைந்தது. அது விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை சுமந்து சென்றது. அது என்ன? 1514 முதல் 1517 வரை அச்சடிக்கப்பட்ட கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள்களின் பெரும்பாலான பிரதிகளே அந்தப் பொக்கிஷம். திடீரென்று, பயங்கரமான புயல் காற்று வீசியது. கப்பலைக் காப்பாற்ற அதன் மாலுமிகள் கடினமாக போராடியும் பிரயோஜனம் இல்லாமல் போனது. கடைசியில், அந்தக் கப்பல் அதிலிருந்த ஒப்பற்ற பொக்கிஷங்களோடு சேர்ந்து கடலில் மூழ்கியது.
இந்தப் பேரழிவிலும் ஒரு நன்மை விளைந்தது. பன்மொழி பைபிளின் புதியதொரு பதிப்பிற்கான தேவை பிறந்தது. கடைசியில், தலைசிறந்த அச்சகரான கிரீஸ்டாஃப் பிளான்டன் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். இந்த இமாலய வேலைக்கு எக்கச்சக்கமான பணம் தேவைப்பட்டதால் ஸ்பெயின் நாட்டின் மன்னரான இரண்டாம் ஃபிலிப்பிடம் நிதியுதவி கேட்டார். மன்னர் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு பல்வேறு ஸ்பானிய அறிஞர்களிடம் கருத்து கேட்டார். அவர்களுள் பெனீடோ ஆர்யாஸ் மோன்டானோ என்ற புகழ்பெற்ற பைபிள் அறிஞரும் இருந்தார். அவர் ஃபிலிப் மன்னரிடம் கூறியதாவது: “இதன் மூலம் நீர் கடவுளுக்கும் சேவை செய்வீர், உலகளாவிய சர்ச்சுக்கும் நன்மை புரிவீர், பெருந்தகையின் அரச வம்சத்திற்கும் பெரும் புகழ் சேர்ப்பீர், உமது பெயருக்கும் அதிக மதிப்பு, மரியாதையை கூட்டிச் சேர்ப்பீர்.”
கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு கலாச்சார ரீதியில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாக இருக்கும் என்பதால் பிளான்டனின் திட்டத்தை முழு மனதோடு ஆதரிக்க ஃபிலிப் தீர்மானித்தார். அந்தப் பைபிளை திருத்தியமைக்கும் மிகப் பெரிய பணியை ஆர்யாஸ் மோன்டானோவிடம் ஒப்படைத்தார்; இதுவே பிற்காலத்தில், ராயல் பைபிள் அல்லது ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிள் என்று அழைக்கப்பட்டது.a
இந்தப் பன்மொழி பைபிள் உருவாவதில் ஃபிலிப் அதிக ஆர்வம் காட்டினார். அதனால், ஒவ்வொரு பக்கத்தின் நகலையும் அச்சடிப்பதற்கு முன்பு தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், நகல்கள் ஆன்ட்வர்ப்பிலிருந்து ஸ்பெயின் சென்று, அதை மன்னர் வாசித்து, திருத்தி மறுபடியும் அனுப்பி வைக்கும் வரை காத்திருக்க பிளான்டனுக்கு மனதில்லை. கடைசியில் நடந்தது என்னவென்றால், அச்சடிக்கப்பட்ட முதல் பக்கத்தையும் ஆரம்ப பக்கங்கள் சிலவற்றையும்தான் ஃபிலிப் பெற்றார். இதற்கிடையில், லூவான் நகரிலிருந்த மூன்று பேராசிரியர்களும், பிளான்டனின் டீனேஜ் மகளும் பெரிதும் உதவியதால் பிழைதிருத்தும் வேலையை மோன்டானோ மும்முரமாக செய்து வந்தார்.
கடவுளுடைய வார்த்தையை நேசித்தவர்
ஆன்ட்வர்ப்பின் அறிஞர்களோடு ஆர்யாஸ் மோன்டானோ மிகவும் சகஜமாக பழகிவிட்டார். அவருடைய பரந்த மனப்பான்மை காரணமாக பிளான்டனின் நேசத்திற்குரியவர் ஆனார். மரணம் வரை இருவரும் நல்ல நண்பர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருந்தனர். மோன்டானோவின் புலமை மட்டுமல்ல கடவுளுடைய வார்த்தையை அதிகமாய் நேசித்ததன் காரணமாகவும் அவர் தலைசிறந்து விளங்கினார்.b அவர் இளைஞனாக இருந்தபோது கல்லூரி படிப்பை எப்போது முடிப்போமென ஆவலாக இருந்தார். ஏனென்றால், வேதாகமத்தை ஆராய்வதற்கென்றே தன்னை முழுமையாக அர்ப்பணிக்க விரும்பினார்.
பைபிளை முடிந்தளவு சொல்லர்த்தமாக மொழிபெயர்க்க வேண்டும் என ஆர்யாஸ் மோன்டானோ கருதினார். மூல வாசகத்தில் எழுதியிருந்ததை அப்படியே மொழிபெயர்க்க முயன்றார்; இவ்வாறு, கடவுளுடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகளை வாசிக்கும் வாய்ப்பை வாசகருக்கு அளித்தார். இராஸ்மஸின் கொள்கையையே மோன்டானோவும் பின்பற்றினார்; ‘மூல மொழிகளிலிருந்தே கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்கும்படி’ அவர் வல்லுநர்களுக்கு அறிவுறுத்தினார். பைபிள் எழுதப்பட்ட மூல மொழிகளின் அர்த்தம் பல நூற்றாண்டுகளாக மக்களுக்கு அறியப்படாமலிருந்தது. ஏனெனில், லத்தீன் மொழிபெயர்ப்புகளை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இருந்தது.
பன்மொழி பைபிள் அச்சுக்கோர்க்கப்படுகிறது
கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளை அச்சடிப்பதற்காக தயாரித்து திருத்தப்பட்ட கையெழுத்து பிரதிகள் ஆல்ஃபான்சோ டெ ஸாமோரா என்பவரிடம் இருந்தன. அவற்றை எல்லாம் ஆர்யாஸ் மோன்டானோ வாங்கி ராயல் பைபிளை அச்சடிக்க உபயோகித்துக் கொண்டார்.c
கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளின் இரண்டாவது பதிப்பாக இருக்கும்படியே ராயல் பைபிள் முதலில் தயாரிக்கப்பட்டது; ஆனால், அது மறுபதிப்பாக மட்டுமே இருக்கவில்லை. செப்டுவஜின்டின் எபிரெய வாசகமும் கிரேக்க வாசகமும் கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளிலிருந்து எடுக்கப்பட்டன; அதோடு, மற்ற வாசகங்களும் விலாவாரியான பிற்சேர்க்கையும் சேர்க்கப்பட்டன. இந்தப் புதிய பன்மொழி பைபிள் கடைசியில் எட்டு தொகுதிகளாக இருந்தது. இது, 1568 முதல் 1572 வரை ஐந்து வருடங்களுக்குள் அச்சடித்து முடிக்கப்பட்டது; சிக்கலான வேலையாக இருந்தபோதிலும் ஐந்தே வருடங்களில் அச்சடிக்கப்பட்டதை சிந்தித்துப் பார்க்கையில் அது குறைவான காலமே. முடிவில், 1,213 பிரதிகள் அச்சிடப்பட்டன.
1517-ல் அச்சிடப்பட்ட கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள், ‘அச்சுக் கலைக்கு நினைவுச் சின்னமாக’ விளங்கியது; புதிய ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிளோ அதன் தொழில்நுட்பத்திலும், பொருளடக்கத்திலும் முந்தைய பைபிளை விஞ்சிவிட்டது. அது, அச்சுக் கலையின் சரித்திரத்தில் மற்றொரு மைல்கல்லாக இருந்தது; மிகவும் முக்கியமாக, மொழிபெயர்ப்புகளுக்கு ஆதாரமாக விளங்கும் பைபிளின் திருத்தமான வாசகங்களை தயாரிப்பதிலும் பெரும் உதவியாக இருந்தது.
கடவுளுடைய வார்த்தையின் எதிரிகள் தாக்குகிறார்கள்
எதிர்பார்த்தபடியே, நம்பகமான பைபிள் மொழிபெயர்ப்புக்கு எதிரிகள் விரைவில் தோன்ற ஆரம்பித்தார்கள். ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிளுக்கு போப் ஆதரவு அளித்திருந்தார், ஆர்யாஸ் மோன்டானோவும் பொருத்தமாகவே புகழ்பெற்ற வல்லுநராக நற்பெயர் பெற்றிருந்தார்; இருந்தபோதிலும், ஒடுக்குமுறை விசாரணை குழுவிற்கு முன்பாக எதிரிகள் அவர்மீது குற்றஞ்சாட்டினார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்க்கப்பட்ட வல்கேட்டைவிட, சான்டேஸ் பான்யீனோ என்பவரின் புதியதும், திருத்தப்பட்டதுமான லத்தீன் வாசகமே எபிரெயு, கிரேக்கு மூல மொழிகளின் அதிக திருத்தமான மொழிபெயர்ப்பு என அவருடைய பைபிள் காட்டுவதாக எதிரிகள் குறைகூறினார்கள். மேலும், பைபிளை துல்லியமாய் மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆசையில் மோன்டானோ மூல மொழிகளை எடுத்துப் பார்த்ததாகவும் குற்றஞ்சாட்டினார்கள்; அவர்களைப் பொருத்தவரை அது மத விரோத செயலாகும்.
“இந்தப் பைபிளுக்கு நிதியுதவி அளித்ததன் மூலம் மன்னரும் பெருமதிப்பை சம்பாதிக்கவில்லை” என்று ஒடுக்குமுறை விசாரணைக் குழு அடித்துக் கூறியது. மோன்டானோ, அதிகாரப்பூர்வ வல்கேட்டிற்கு போதுமான முக்கியத்துவம் தரவில்லை என்றும் அக்குழு குறைப்பட்டுக்கொண்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் மத்தியிலும், மோன்டானோவையோ அவருடைய பன்மொழி பைபிளையோ கண்டனம் செய்ய போதுமான அத்தாட்சி அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடைசியில், ராயல் பைபிள் மிகவும் பிரபலமடைந்தது, பல்வேறு பல்கலைக்கழகங்களில் அதிகாரப்பூர்வமான படைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பைபிள் மொழிபெயர்ப்பிற்கு உபயோகமானது
ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிள் பொது மக்களுக்காக தயாரிக்கப்படாவிடினும், சீக்கிரத்திலேயே பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உபயோகமான ஒன்றானது. அதன் முன்னோடியான கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளைப் போலவே அப்போதிருந்த வேதாகமத்தின் வாசகங்களைத் திருத்தியமைக்க இது உதவியது. மூலமொழிகளை இன்னும் நன்கு புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்கும் கைகொடுத்தது. ஐரோப்பாவின் முக்கிய மொழிகள் பலவற்றிலும் பைபிள் மொழிபெயர்க்கப்படுவதற்கு இது பயன்பட்டது. உதாரணமாக, 1611-ல் அச்சிடப்பட்ட புகழ்பெற்ற கிங் ஜேம்ஸ் வர்ஷன் அல்லது ஆத்தரைஸ்டு வர்ஷன் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பூர்வ மொழிகளிலிருந்து மொழிபெயர்க்க ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிள் பெரும் உதவியாய் இருந்ததாக கேம்பிரிட்ஜின் பைபிள் சரித்திரம் (ஆங்கிலம்) கூறுகிறது. 17-ம் நூற்றாண்டில் இரண்டு முக்கிய பன்மொழி பைபிள்கள் வெளியிடப்பட்டன; ராயல் பைபிள் அவற்றின் மீதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.—“பன்மொழி பைபிள்கள்” என்ற பெட்டியைக் காண்க.
ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிளால் அநேக நன்மைகள் விளைந்தன. அவற்றுள் ஒன்று, ஐரோப்பிய வல்லுநர்களுக்கு கிரேக்க வேதாகமத்தின் சிரியாக் மொழிபெயர்ப்பு முதன்முதலில் கிடைத்தது. அதில் அந்த சிரியாக் வாசகம் ஒரு பத்தியிலும் அதற்கு பக்கத்தில் சொல்லர்த்தமான லத்தீன் மொழிபெயர்ப்பும் இருந்தன. சிரியாக் மொழி சேர்க்கப்பட்டது மிகவும் பிரயோஜனமாக இருந்தது; ஏனெனில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மிகப் பழைய மொழிபெயர்ப்புகளுள் சிரியாக் மொழிபெயர்ப்பும் ஒன்று. இந்தச் சிரியாக் மொழிபெயர்ப்பு பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது; இது, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. “தகவலை ஆராய்வதற்கு [சிரியாக் மொழி] பஷீடா மிகவும் பிரயோஜனமானது என்பது நிதர்சனமான உண்மை. பூர்வகால மரபுகளைப் பற்றி தகவல் தரும் மிக பழமையான, மிக முக்கியமான ஊற்றுமூலங்களில் இது ஒன்று” என இன்டர்நேஷனல் ஸ்டான்டர்டு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.
கொந்தளித்த கடலாலும் சரி, ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணையின் தாக்குதல்களாலும் சரி, 1572-ல் ராயல் பைபிள் என்ற பெயரில் கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளின் மேம்பட்ட, அதிக விரிவான பதிப்பு வெளிவருவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. உண்மையுள்ள மனிதர்கள் கடவுளுடைய வார்த்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளுக்கு ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிளின் சரித்திரம் மற்றொரு அத்தாட்சியே.
அவர்கள் அறிந்திருந்தார்களோ இல்லையோ, தங்களையே அர்ப்பணித்த இந்த மனிதர்கள் தங்கள் சுயநலமற்ற உழைப்பால், ஏசாயா கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகளின் உண்மையை நிரூபித்தனர். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் இவ்வாறு எழுதினார்: “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.”—ஏசாயா 40:8.
[அடிக்குறிப்புகள்]
a ஃபிலிப் மன்னர் நிதியுதவி அளித்ததால் அது ராயல் பைபிள் என்று அழைக்கப்பட்டது. ஆன்ட்வர்ப் நகரில் அச்சடிக்கப்பட்டதால் ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிள் என்றும் அழைக்கப்பட்டது; அச்சமயத்தில், இந்நகரம் ஸ்பானிய சாம்ராஜ்யத்தின் பாகமாக இருந்தது.
b அவர் அரபிக், எபிரெயு, கிரேக்கு, சிரியாக், லத்தீன் ஆகிய மொழிகளில் புலமைமிக்கவராக இருந்தார்; பன்மொழி பைபிளில் உபயோகிக்கப்பட்ட ஐந்து முக்கிய மொழிகள் இவையே. அதோடு, தொல்பொருள், மருத்துவம், அறிவியல், இறையியல் ஆகிய துறைகளிலும் அவர் சிறந்து விளங்கினார்; அவை பிற்சேர்க்கையை தயாரிப்பதில் அவருக்குப் பெரிதும் கைகொடுத்தன.
c கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளின் முக்கியத்துவத்தை அறிய 2004, ஏப்ரல் 15 தேதியிட்ட காவற்கோபுர இதழைக் காண்க.
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
“நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்”
[பக்கம் 12-ன் பெட்டி/படங்கள்]
பன்மொழி பைபிள்கள்
ஸ்பானிய வல்லுநரான ஃபேடேரீகோ பேரேத் காஸ்ட்ரோ இவ்வாறு விளக்குகிறார்: “பல்வேறு மொழிகளில் வாசகத்தை உடைய பைபிளே பன்மொழி பைபிள் ஆகும். என்றாலும் பொதுவாக இந்த வார்த்தை, வேதவாக்கியத்தை மூல மொழிகளில் கொண்டிருக்கும் பைபிள்களை குறிக்கவே உபயோகிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால், பன்மொழி பைபிள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.”
1. கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள் (1514-17) கார்டினல் தீஸ்னாரோஸ் என்பவரின் முயற்சியால் ஸ்பெயினிலுள்ள ஆல்காலா தே ஏனாரேஸ் என்ற இடத்தில் அச்சிடப்பட்டது. அது ஆறு தொகுதிகளாக, அரமேயிக், எபிரெயு, கிரேக்கு, லத்தீன் ஆகிய நான்கு மொழி வாசகங்களுடன் இருந்தது. அது, 16-ம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பாளர்களுக்கு எபிரெய-அரமேய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ வாசகமாக அமைந்தது.
2. ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிள் (1568-72) பெனீடோ ஆர்யாஸ் மோன்டானோ என்பவரால் அச்சிடப்பட்டது. இதில், கோம்ப்லூடென்சியான் பைபிளின் வாசகத்தோடு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் சிரியாக் மொழி பஷீடா மொழிபெயர்ப்பும் யோனத்தானின் அரமேய மொழி டார்கம் மொழிபெயர்ப்பும் இருந்தன. உயிரெழுத்துக் குறிப்புகளும் உச்சரிப்பு குறிகளும் நிறைந்த எபிரெய வாசகம், ஜேக்கப் பென் ஹாயீம் என்பவரின் ஏற்றுக்கொள்ளப்பட்ட எபிரெய வாசகத்தின் அடிப்படையில் திருத்தப்பட்டது. இவ்வாறு அது பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு எபிரெய வேதாகமத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாசகமானது.
3. பாரிஸ் பன்மொழி பைபிள் (1629-45) பிரான்சு நாட்டு வக்கீலான கீ மீஷெல் லெ ஜெ என்பவரின் நிதியுதவியோடு அச்சிடப்பட்டது. அதில் சில சமாரிய வாசகங்களும் அரபிக் வாசகங்களும் இருந்தாலும், ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிளே இதை உருவாக்கத் தூண்டியது.
4. லண்டன் பன்மொழி பைபிள் (1655-57) பிரையன் வால்டன் என்பவரால் திருத்தப்பட்ட இந்த பைபிளுக்கும் ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிளே அடிப்படையாய் அமைந்தது. எத்தியோப்பிய மற்றும் பெர்சிய மொழிகளில் உள்ள பைபிளின் பழமையான மொழிபெயர்ப்புகளும் இந்தப் பன்மொழி பைபிளில் இடம்பெற்றன. என்றாலும், பைபிள் வாசகத்தைத் தெளிவாக புரிந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்புகள் அதிக உதவியாக இருக்கவில்லை.
[படங்களுக்கான நன்றி]
பானர் மற்றும் ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிள்கள்: (கீழே உள்ள இரண்டும்): Biblioteca Histórica. Universidad Complutense de Madrid; ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிள் (மேலே): By courtesy of Museum Plantin-Moretus/Stedelijk Prentenkabinet Antwerpen; லண்டன் பன்மொழி பைபிள்: From the book The Walton Polyglot Bible, Vol. III, 1655-1657
[பக்கம் 9-ன் படம்]
இரண்டாம் ஃபிலிப், ஸ்பெயின் நாட்டு மன்னர்
[படத்திற்கான நன்றி]
இரண்டாம் ஃபிலிப்: Biblioteca Nacional, Madrid
[பக்கம் 10-ன் படம்]
ஆர்யாஸ் மோன்டானோ
[படத்திற்கான நன்றி]
மோன்டானோ: Biblioteca Histórica. Universidad Complutense de Madrid
[பக்கம் 10-ன் படம்]
பெல்ஜியம், ஆன்ட்வர்ப்பிலுள்ள பூர்வீக அச்சு இயந்திரங்கள்
[படத்திற்கான நன்றி]
அச்சகம்: By courtesy of Museum Plantin-Moretus/Stedelijk Prentenkabinet Antwerpen
[பக்கம் 11-ன் படங்கள்]
இடது: கிரீஸ்டாஃப் பிளான்டனும் ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிளின் முதல் பக்கமும்
[படத்திற்கான நன்றி]
முதல் பக்கமும் பிளான்டனும்: By courtesy of Museum Plantin-Moretus/Stedelijk Prentenkabinet Antwerpen
[பக்கம் 11-ன் படம்]
மேலே: யாத்திராகமம் 15-ம் அதிகாரம் 4 பத்திகளில்
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
முதல் பக்கமும் பிளான்டனும்: By courtesy of Museum Plantin-Moretus/Stedelijk Prentenkabinet Antwerpen
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
Biblioteca Histórica. Universidad Complutense de Madrid