வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதுகையில், “பூரண அன்பு” என்று அவர் எதை அர்த்தப்படுத்தினார், அதனால் என்ன ‘பயம்’ புறம்பே தள்ளப்படுகிறது?
“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது; பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.—1 யோவான் 4:18.
வசனத்தின் சூழமைவு காட்டுகிறபடி, யோவான் பேச்சு சுயாதீனத்தைப் பற்றி—குறிப்பாக கடவுள் மீதுள்ள அன்பிற்கும் அவரோடுள்ள பேச்சு சுயாதீனத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றி—பேசிக்கொண்டிருந்தார். வசனம் 17-ஐ வாசிக்கையில் நாம் இதை கண்டுகொள்ள முடியும்: “நியாயத்தீர்ப்பு நாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக [“பேச்சு சுயாதீனம் உண்டாயிருக்கத்தக்கதாக,” NW] அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது.” ஒரு கிறிஸ்தவர் எந்தளவுக்கு கடவுளை நேசித்து, அவருடைய அன்பை உணர்கிறார் என்பதற்கும் ஜெபிக்கையில் அவர் எந்தளவுக்கு தைரியமாக கடவுளிடம் பேசுகிறார்—அல்லது பேச்சு சுயாதீனம் இல்லாமல் இருக்கிறார்—என்பதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
“பூரண அன்பு” என்ற வார்த்தைகள் அர்த்தமுடையவை. பைபிளில் காணப்படுகிற ‘பூரணம்’ என்ற வார்த்தை எல்லா சமயங்களிலும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதாவது எப்போதுமே முழு பூரணத்தை குறிப்பதில்லை, மாறாக அநேக சமயங்களில் சம்பந்தப்பட்ட கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்று மலைப்பிரசங்கத்தில் இயேசு கூறினார். ஆகவே, தங்களிடம் அன்பு காட்டுகிறவர்களை மட்டுமே நேசித்தால் அவர்களுடைய அன்பு முழுமையற்றது, குறைவுள்ளது, பழுதுள்ளது என்று இயேசு தம்மை பின்பற்றியவர்களிடம் சொன்னார். தங்கள் அன்பு பூரணப்படுவதற்கு அல்லது முழுமையடைவதற்கு அவர்கள் தங்களுடைய பகைவர்களையும் நேசிக்க வேண்டும் என அவர் அர்த்தப்படுத்தினார். அது போலவே, ‘பூரண அன்பைப்’ பற்றி யோவான் எழுதியபோது, கடவுள் மீதுள்ள அன்பு இருதயப்பூர்வமானதாக, முழு வளர்ச்சியடைந்ததாக, வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதையே அர்த்தப்படுத்தினார்.—மத்தேயு 5:46-48; 19:20, 21.
கடவுளை ஜெபத்தில் அணுகும்போது, ஒரு கிறிஸ்தவர் தான் ஒரு பாவி, அபூரண மனிதன் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். இருப்பினும், கடவுள் மீதுள்ள அன்பிலும், கடவுள் தன்மீது வைத்துள்ள அன்பை உணர்வதிலும் முழு வளர்ச்சி பெறுகையில், கண்டிக்கப்படுவோமோ அல்லது ஒதுக்கிவிடப்படுவோமோ என்ற பயம் அவருக்கு தடையாக இருப்பதில்லை. மாறாக, தன் இருதயத்தில் உள்ளதை தாராளமாக கொட்டுவதற்கும், இயேசு கிறிஸ்து மூலமாக கடவுள் செய்த அன்பான ஏற்பாடாகிய கிரய பலியின் அடிப்படையில் மன்னிப்பு கேட்பதற்கும் பேச்சு சுயாதீனத்தை பயன்படுத்துவார். தன்னுடைய வேண்டுதல்களை கடவுள் கேட்டார் என்ற உணர்வையும் பெறுவார்.
ஒருவர் எப்படி ‘அன்பில் பூரணப்பட்டு’ அதன் வாயிலாக கண்டிக்கப்படுவோமோ அல்லது ஒதுக்கிவிடப்படுவோமோ என்ற பயத்தை புறம்பே தள்ளிவிட முடியும்? “அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்” என்று அப்போஸ்தலன் யோவான் சொன்னார். (1 யோவான் 2:5) சற்று சிந்தியுங்கள்: நாம் பாவிகளாய் இருக்கையிலேயே தேவன் நம்மீது அன்பு வைத்தார் என்றால், நாம் உண்மையில் மனந்திரும்பி ‘அவருடைய வசனத்தைக் கைக்கொள்ள’ ஊக்கமாய் முயலுகையில் இன்னும் அதிகமாகவே நம்மீது அன்பு வைப்பார் அல்லவா? (ரோமர் 5:8; 1 யோவான் 4:10) நாம் அவருக்கு உண்மையோடு நிலைத்திருக்கும் வரையில், அப்போஸ்தலன் பவுலுக்கு இருந்த அதே நம்பிக்கை நமக்கும் இருக்கும். கடவுளைப் பற்றி அவர் சொல்கையில், “தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” என்றார்.—ரோமர் 8:32.