உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 11/1 பக். 3-4
  • தலைசிறந்த தலைவர்களைத் தேடி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தலைசிறந்த தலைவர்களைத் தேடி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “நாம்தான் அனுசரித்துப் போக வேண்டும்”​—⁠வேறு வழியே இல்லையா?
  • இன்று தலைசிறந்த தலைவர் யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • தலைசிறந்த தலைமை எங்கே கண்டடைவது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • நீங்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுப்பீர்கள்?—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • தலைசிறந்த தலைவரான கிறிஸ்துவைப் பின்பற்றுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 11/1 பக். 3-4

தலைசிறந்த தலைவர்களைத் தேடி

“போய்விடும். நீர் செய்ததெல்லாம் போதும். கடவுள் பெயரில் சொல்கிறேன், போய்விடும்!”​—⁠ஆலிவர் கிராம்வல் கூறியது; பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் லியபோல்ட் ஏமரி என்பவரால் மேற்கோள் காட்டப்பட்டது.

எட்டு மாதங்களாக இரண்டாம் உலகப் போர் பெரும் நாசம் விளைவித்துக் கொண்டிருந்தது. பிரிட்டனும் நேச நாடுகளும் தோல்வியைத் தழுவும் நிலையில் இருந்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அங்கம் வகித்த லியபோல்ட் ஏமரியும் பிற உறுப்பினர்களும் ஒரு புதிய தலைவர் தேவையென நினைத்தார்கள். ஆகவேதான், மே 7, 1940-⁠ல் பிரிட்டிஷ் மக்கள் சபையில் பிரதம மந்திரி நெவல் சேம்பர்லனிடம் மேற்குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை திரு. ஏமரி உதிர்த்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு திரு. சேம்பர்லன் பதவி விலகினார், வின்ஸ்டன் சர்ச்சில் பதவி ஏற்றார்.

மனிதகுலத்தை வழிநடத்த ஒரு தலைவர் தேவை​—⁠இது ஓர் அத்தியாவசிய தேவை. அதற்காக, தலைவர் என பெயருக்கு ஒருவர் இருந்தால் மட்டும் போதாது. குடும்பத்திலும்கூட, மனைவி மக்கள் மத்தியில் மகிழ்ச்சி பொங்க வேண்டுமென்றால், தலைமைதாங்கி நடத்துவதற்கு கணவன் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். அப்படியானால், ஒரு தேசிய தலைவரிடம் அல்லது உலகத் தலைவரிடம் மக்கள் எந்தளவு எதிர்பார்ப்பார்கள் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! தலைசிறந்த தலைவர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதில் ஆச்சரியமே இல்லை.

எனவேதான் எண்ணிறந்த முடிசூட்டு விழாக்களையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் திடீர் அரசியல் புரட்சிகளையும் மாற்றங்களையும் தேர்தல்களையும் பதவிப்பிரமாணங்களையும் படுகொலைகளையும் சரித்திரம் கண்டிருக்கிறது. ராஜாக்கள், பிரபுக்கள், பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள், தலைமைச் செயலர்கள், சர்வாதிகாரிகள் என பலரும் அரியணையில் ஏறி இறங்கியிருக்கிறார்கள். எதிர்பாரா மாற்றங்களால் செல்வாக்குமிக்க ஆட்சியாளர்களும்கூட நாற்காலிகளிலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள். (“திடீர் பதவி பறிப்பு” என்ற பெட்டியை பக்கம் 5-⁠ல் காண்க.) என்றாலும், திறமையாகவும் நிலையாகவும் ஆட்சி புரிவோரைக் காண்பது கடினமாகவே இருந்திருக்கிறது.

“நாம்தான் அனுசரித்துப் போக வேண்டும்”​—⁠வேறு வழியே இல்லையா?

ஆகவேதான், ஒரு நல்ல தலைவரை கண்டுபிடிக்கிற நம்பிக்கையே பலருக்கு அற்றுப்போய் விட்டது. சில நாடுகளில், முக்கியமாக தேர்தல் சமயங்களில், மக்களுடைய சலிப்பும் வெறுப்பும் அப்பட்டமாக தெரிய வருகிறது. ஆப்பிரிக்க இதழாசிரியர் ஜெஃப் ஹில் இவ்வாறு குறிப்பிட்டார்: “பொதுவாக மக்கள் தங்களுடைய துயரங்களை தீர்க்க முடியாமல் திண்டாடும்போது ஓட்டுப் போடுவதில் அக்கறை காட்டுவதில்லை அல்லது ஓட்டுப் போடுவதே இல்லை. . . . ஆப்பிரிக்காவிலுள்ள மக்கள் ஓட்டு போடாமல் இருப்பதால் அவர்கள் திருப்தியாக வாழ்கிறார்கள் என நினைத்துவிட முடியாது. தங்கள் மீது அக்கறை காட்ட ஒருவருமில்லை என்பதைத்தான் இப்படி சொல்லாமல் சொல்கிறார்கள்.” அதுபோலவே, அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகை எழுத்தாளர் ஒருவர் வரவிருந்த தேர்தலைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “நன்கு தகுதி படைத்த ஒருவர் வேட்பாளராக நின்றால் நலமாயிருக்கும். ஆனால் அப்படியொருவர் இன்றும் இல்லை, என்றும் இருந்ததில்லை. நாம்தான் அனுசரித்துப் போக வேண்டும்.”

குறைபாடுள்ள தலைவர்களை மனிதகுலம் ‘அனுசரித்துப் போவதைத்’ தவிர வேறு வழியே இல்லையா? மனித தலைவர்களால் மக்களின் தேவைகளை திருப்தி செய்ய முடியாமல் போயிருப்பதால், நல்ல தலைவரை நாம் எதிர்பார்க்கவே முடியாது என்று அர்த்தமா? இல்லவே இல்லை. தலைசிறந்த தலைவர் ஒருவர் இருக்கிறார். அவர் யார், அவருடைய ஆட்சி உங்களுக்கும் எல்லாருக்கும் எப்படி பயனளிக்கும் என்பதை அடுத்த கட்டுரையில் ஆராயலாம்.

[பக்கம் 3-ன் படங்கள்]

மேலே இடது: நெவல் சேம்பர்லன்

மேலே வலது: லியபோல்ட் ஏமரி

கீழே: வின்ஸ்டன் சர்ச்சில்

[படங்களுக்கான நன்றி]

சேம்பர்லன்: போட்டோ: Jimmy Sime/Central Press/Getty Images; ஏமரி: போட்டோ: Kurt Hutton/Picture Post/Getty Images; சர்ச்சில்: The Trustees of the Imperial War Museum (MH 26392)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்