பட்டமளிப்பு நாள்—ஓர் இனிய நாள்
“ஓர் இனிய நாளைக் காணும் ஆசீர்வாதத்தை இன்று நாம் பெற்றிருக்கிறோம். பிரகாசிக்கிற சூரியன். நீல வானம். பச்சை புல்வெளி. பாடும் பறவைகள். ஓர் இனிய நாளுக்குத் தேவையான அத்தனையும் ஒருங்கே அமைந்திருக்கிறது. நாம் ஏமாற்றமடையப் போவதில்லை. ஆம், யெகோவா தேவன் ஏமாற்றமளிக்கிற கடவுளல்ல. ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கும் கடவுள்.”
இந்த வார்த்தைகளோடு உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 117-ம் வகுப்பின் பட்டமளிப்பு நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது; யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினரான சகோதரர் சாமுவேல் ஹெர்ட் இதை துவங்கி வைத்தார். செப்டம்பர் 11, 2004-ல் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஊக்கமளிக்கும் பைபிள் ஆலோசனைகள், கிலியட் மாணாக்கருடைய உள்ளூர் அனுபவங்கள், மிஷனரிகளுடைய அனுபவங்கள் என இந்நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது. நியு யார்க், பாட்டர்ஸனில் உள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி ஆடியோ, வீடியோ மூலம் புரூக்ளினிலும் வால்கில்லிலும் உள்ள வளாகங்களோடு இணைக்கப்பட்டிருந்தது. ஆம், இங்கு கூடி வந்திருந்த 6,974 பேருக்கும் அது ஓர் இனிய நாளாகவே அமைந்தது.
மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகள்
அமெரிக்க கிளை அலுவலகக் குழு அங்கத்தினர் ஜான் கிகாட், “மிஷனரியாக உங்கள் சந்தோஷத்தைக் காத்துக் கொள்ளுங்கள்” என்ற பொருளில் உற்சாகமூட்டும் குறிப்புகளை வழங்கினார். கிலியட் மாணவர்கள் சந்தோஷத்திற்குப் பெயர்பெற்றவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார், பட்டமளிப்பு விழாவிலேயே அது தெளிவாக தெரிந்தது. பள்ளியில் கிடைத்த வேதப்பூர்வ ஆலோசனைகள் அவர்களுக்குச் சந்தோஷம் அளித்தன. இப்போது, மற்றவர்களும் இச்சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு உதவ தயாராக இருந்தார்கள். எப்படி? மிஷனரிகளாக அவர்களுடைய சேவையில் தங்களையே அர்ப்பணிப்பதன் மூலமே. ‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலே அதிக சந்தோஷம்’ என இயேசு கூறினார். (அப்போஸ்தலர் 20:35) அனைவருக்கும் சத்தியத்தைக் கிடைக்கச் செய்கிற கொடை வள்ளலும் ‘நித்தியானந்த தேவனுமான’ யெகோவாவைப் பின்பற்றுகையில் இந்தப் புதிய மிஷனரிகளால் தொடர்ந்து சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள முடியும்.—1 தீமோத்தேயு 1:11.
“உங்களால் ஒத்துப்போக முடியுமா?” இதுவே ஆளும் குழுவின் மற்றொரு அங்கத்தினர் டேவிட் ஸ்ப்ளேன் என்பவருடைய பேச்சின் தலைப்பாக இருந்தது. ஒருமித்து வாசம் பண்ணுவது ‘எல்லாருக்கும் எல்லாமாவதை’ தேவைப்படுத்துகிறது, இருப்பினும் அது நன்மையும் இன்பமுமானது, இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (1 கொரிந்தியர் 9:22; சங்கீதம் 133:1) தங்கள் பிராந்தியத்திலுள்ள மக்கள், சக மிஷனரிகள், புதிய சபையிலுள்ள சகோதர சகோதரிகள், பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் வேலையை வழிநடத்தும் கிளை அலுவலகச் சகோதரர்கள் என பல்வேறு ஆட்களுடன் மிஷனரிகள் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும் என சகோதரர் ஸ்ப்ளேன் குறிப்பிட்டார். மற்றவர்களுடன் நாம் இனிமையாக பழக உதவும் சில நடைமுறை ஆலோசனைகளை அவர் அளித்தார். உதாரணத்திற்கு, உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்வது, உள்ளூர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது, சக மிஷனரிகளுடைய தனிமைக்கு மதிப்பு கொடுப்பது, முன்நின்று நடத்துபவர்களுக்குக் கீழ்ப்படிவது போன்றவற்றைப் பற்றி ஆலோசனை வழங்கினார்.—எபிரெயர் 13:17.
அடுத்து, கிலியட் போதனையாளர் லாரன்ஸ் போவென் இவ்வாறு கேட்டார்: “நீங்கள் எப்படிப்பட்ட சிந்தையுள்ளவர்கள்?” ‘தோற்றத்தின்படி தீர்ப்பு செய்தவர்கள்’ இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மாணவர்களுக்கு அவர் நினைப்பூட்டினார். (யோவான் 7:24) அபூரண மனிதர்களாகிய நாம் ‘தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்க’ வேண்டுமே தவிர ‘மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கக்’ கூடாது. (மத்தேயு 16:22, 23) ஆன்மீக சிந்தையுள்ளவர்கள்கூட தங்கள் சிந்தனையைத் தொடர்ந்து சரிசெய்து கொள்வது அவசியம். கடலிலுள்ள கப்பலைப் போல, இப்போது சரிப்படுத்துதல்களைச் செய்வது இலக்கை அடைய உதவலாம், இல்லையென்றால் ஆன்மீக கப்பற்சேதம் நேரிடலாம். வேதவசனங்களின் சூழமைவை மனதிற்கொண்டு அவற்றைப் படித்து வருவது ‘தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்க’ உதவும்.
வாலஸ் லிவரன்ஸ் என்ற மற்றொரு கிலியட் போதனையாளர் நிகழ்ச்சியின் இப்பகுதியை நிறைவு செய்தார். ஏசாயா 55:1-ஐ அடிப்படையாகக் கொண்ட அவருடைய பேச்சின் கருப்பொருள் “நீங்கள் எதை வாங்குவீர்கள்?” என்பதே. நம் நாளுக்கான கடவுளுடைய தீர்க்கதரிசன செய்தியிலிருந்து கிடைக்கும் புத்துணர்ச்சி, சந்தோஷம், பலம் ஆகியவற்றை ‘வாங்கும்படி’ மாணவர்களை உற்சாகப்படுத்தினார். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் கடவுளுடைய வார்த்தையைத் தண்ணீர், திராட்சரசம், பால் ஆகியவற்றோடு ஒப்பிடுகிறது. அதை எப்படிப் “பணமுமின்றி விலையுமின்றி” வாங்க முடியும்? பைபிள் தீர்க்கதரிசனத்திற்குக் கவனம் செலுத்தி, மாம்சப்பிரகாரமான எண்ணங்களையும் வழிகளையும் கொடுத்துவிட்டு கடவுளுடைய எண்ணங்களையும் வழிகளையும் வாங்குவதன் மூலமே என சகோதரர் லிவரன்ஸ் விளக்கினார். (ஏசாயா 55:2, 3, 6, 7) இதைச் செய்யும்போது, புதிய மிஷனரிகளால் வெளிநாட்டு சேவையில் நிலைத்திருக்க முடியும். பொருளாதார வளங்களைப் பெருக்கிக் கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது என அபூரண மனிதர்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள். “அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள்” என பேச்சாளர் வலியுறுத்தினார். “அப்படிப்பட்ட கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையை அர்த்தமுள்ள விதத்தில் படிக்க கட்டாயம் நேரம் ஒதுக்குங்கள். அது உங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டி, உங்களைப் பலப்படுத்தி, உங்கள் மிஷனரி சேவையில் சந்தோஷத்தைக் காண உதவும்.”
மாணவர்களின் மகிழ்ச்சிகரமான அனுபவங்களும் பேட்டிகளும்
பிரசங்க வேலையில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொண்டார்கள். மற்றொரு கிலியட் போதனையாளர் மார்க் நியூமரின் மேற்பார்வையில், “சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படேன்” என்ற பொருளை சிறப்பித்துக் காட்டிய அனுபவங்களைச் சில மாணவர்கள் நடித்துக் காட்டினார்கள். (ரோமர் 1:16) இந்த அனுபவமிக்க ஊழியர்கள் வீடு வீடாகவும், தெருக்களிலும், வியாபார வளாகங்களிலும் சாட்சி கொடுத்த விதத்தை அங்கே கூடிவந்தவர்கள் ரசித்துக் கேட்டார்கள். வேறு மொழிகள் தெரிந்த மாணவர்கள் தங்களுடைய சபை பிராந்தியத்தில் இருந்த அம்மொழியினரைச் சந்திக்க முயற்சி செய்தார்கள். மற்றவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் பிரசுரங்களை மறுசந்திப்பிலும், பைபிள் படிப்பை ஆரம்பிக்கையிலும் நல்ல முறையில் பயன்படுத்தினார்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர்கள் ‘வெட்கப்படவில்லை.’
பர்கினா பாஸோ, லாட்வியா, ரஷ்யா போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த அனுபவமிக்க மிஷனரிகளை ஊழிய இலாக்காவில் சேவை செய்யும் சகோதரர் வில்லியம் நான்கிஸ் பேட்டி கண்டார். பேட்டியின்போது, “யெகோவா உண்மையுள்ளோருக்கு அன்பாக பலனளிக்கிறார்” என்ற அந்தப் பேச்சுப் பொருளுக்குத் தகுந்த நடைமுறை ஆலோசனைகளை மிஷனரிகள் வழங்கினார்கள். அவர்களில் ஒரு சகோதரர், 300 வீரர்களைக் கொண்ட கிதியோனின் படையை நினைத்துப் பார்க்கும்படி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். ஒவ்வொரு வீரனுக்கும் ஒவ்வொரு நியமிப்பு இருந்தது; அவை ஒவ்வொன்றும் கிதியோனுடைய போர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பங்களித்தது. (நியாயாதிபதிகள் 7:19-21) அதைப் போலவே, தங்களுடைய நியமிப்புகளில் நிலைத்திருக்கும் மிஷனரிகளும் பலன் பெறுவார்கள்.
“எல்லாருக்கும் எல்லாமாதல்” என்ற பொருள் பாட்டர்ஸனில் போதனையாளராக இருக்கும் சாமுவேல் ராபர்சன் நடத்திய பேட்டிகளில் சிறப்பித்துக் காட்டப்பட்டது. செனிகல், குவாம், லைபீரியா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த நான்கு கிளை அலுவலகக் குழு அங்கத்தினர்களை அவர் பேட்டி கண்டார். இந்நாடுகளில் மொத்தம் 170 மிஷனரிகள் சேவை செய்கிறார்கள். புதிய மிஷனரிகள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்துக்கொள்ள கிளை அலுவலகக் குழு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பட்டம் பெறுகிற மாணவர்கள் பேட்டி கொடுத்தவர்களின் குறிப்புகளிலிருந்து தெரிந்து கொண்டார்கள். அப்படி மாற்றியமைத்துக் கொள்வது மேற்கத்திய வழக்கத்திற்கு மாறான பழக்கங்களைக் கற்றுக்கொள்வதைப் பெரும்பாலும் அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, சில நாடுகளில், ஆண்கள் நட்பு தோரணையில் கைகோர்த்து நடப்பதைச் சகஜமாக பார்க்கலாம், கிறிஸ்தவ சபையிலுள்ள ஆண்களும்கூட அவ்வாறு செய்யலாம். அடுத்து, குவாம் கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் உள்ள சில இடங்களில் விநோதமான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அநேக மிஷனரிகள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள், எனவே புதிய மிஷனரிகளாலும் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
ஆளும் குழு அங்கத்தினர் கை பியர்ஸ், “‘நம் கர்த்தருடைய ராஜ்யத்திற்கு’ உண்மையோடு நிலைத்திருங்கள்” என்ற பொருளில் பேசினார். “யெகோவா ஒரு நோக்கத்தோடுதான் படைத்தார். தமது படைப்புகளுக்கென்று அவர் ஒரு நோக்கத்தை வைத்திருந்தார். இந்தப் பூமிக்கான அவருடைய நோக்கம் எவ்விதத்திலும் மாறவில்லை. அந்த நோக்கம் வெகு விரைவில் நிறைவேறப் போகிறது. எதுவுமே அதைத் தடுத்து நிறுத்த முடியாது” என கூடிவந்திருந்தோருக்கு அவர் நினைப்பூட்டினார். (ஆதியாகமம் 1:28) முதல் மனிதன் ஆதாம் செய்த பாவத்தால் ஏற்பட்ட எல்லா கஷ்டங்களின் மத்தியிலும் கடவுளுடைய பேரரசுரிமைக்கு உண்மையுடன் கீழ்ப்படியும்படி சகோதரர் பியர்ஸ் எல்லாரையும் உற்சாகப்படுத்தினார். “நாம் நியாயத்தீர்ப்பு வேளையில் வாழ்ந்து வருகிறோம். நல்மனமுள்ள ஆட்களுக்குச் சத்தியத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல கொஞ்ச காலமே மீந்திருக்கிறது. ராஜ்ய நற்செய்தியை மக்களுக்குச் சொல்வதற்கு இருக்கும் காலத்தை நல்ல விதத்தில் பயன்படுத்துங்கள்” என சகோதரர் பியர்ஸ் வலியுறுத்தினார். கடவுளுடைய ராஜ்யத்தை உண்மையோடு ஆதரிக்கிறவர்கள் கடவுளுடைய ஆதரவைக் குறித்து உறுதியோடு இருக்கலாம்.—சங்கீதம் 18:25.
இறுதிப் பகுதியில், உலகெங்குமுள்ள கிளை அலுவலகங்களிலிருந்து வந்திருந்த வாழ்த்து மடல்களை சேர்மன் வாசித்தார். பிறகு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார். தாங்கள் பெற்ற பயிற்சிக்கு ஆழ்ந்த போற்றுதலைத் தெரிவிக்கும் வகையில் வகுப்பின் சார்பாக பட்டதாரி ஒருவர் நன்றி மடல் ஒன்றை வாசித்தார். கூடிவந்திருந்த அனைவருடைய நினைவிலும் பசுமையாக நிற்கப்போகும் இந்த மிக மிக இனிய நாளுக்குப் பொருத்தமான முடிவுரையாகவே அது அமைந்தது.
[பக்கம் 23-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
[பக்கம் 23-ன் படக்குறிப்பு]
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 11
அனுப்பப்பட்ட நாடுகள்: 22
மாணவர்களின் எண்ணிக்கை: 48
சராசரி வயது: 34.8
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 18.3
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13.4
[பக்கம் 24-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 117-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) தாம்ஸன், இ.; நார்வல், ஜி.; பவல், டி.; கோஸா, எம்.; மாக்கன்டைர், டி. (2) ரைலி, ஏ.; க்ளேட்டன், சி.; ஆலன், ஜெ.; ப்ளாங்கோ, ஏ.; மூன்யோஸ், எல்.; ரூஸ்டாட், என். (3) கரரோ, செட்; கார்சியா, கே.; மெக்கர்லி, டி.; இஷிகாவா, டி.; ப்ளாங்கோ, ஜி. (4) மாக்கன்டைர், எஸ்.; க்ரூஸ், இ.; கரரோ, ஜே.; ரிச்சி, ஓ.; ஆபேயானேதா, எல்.; கார்சியா, ஆர். (5) பவல், ஜி.; ஃபிஸ்கா, ஹெச்.; மூன்யோஸ், வி.; பௌமான், டி.; ஷா, எஸ்.; ப்ரௌன், கே.; ப்ரௌன், எல். (6) ஷா, சி.; ரைலி, ஏ.; பெலோக்வின், சி.; ம்யூயென்க், என்.; மெக்கர்லி, டி.; இஷிகாவா, கே. (7) ம்யூயென்க், எம்.; பெலோக்வின், ஜெ.; கோஸா, டி.; ஆபேயானேதா, எம்.; ஆலன், கே.; ரிச்சி, இ.; நார்வல், டி. (8) க்ரூஸ், ஜெ.; பௌமான், ஹெச்.; க்ளேட்டன், செட்.; ஃபிஸ்கா, இ.; தாம்ஸன், எம்.; ரூஸ்டாட், ஜே.