“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது”
‘இயேசுவைக் குறித்து நாங்கள் பேசாமலிருக்கக் கூடாதே’
வருடம்: பொ.ச. 33. இடம்: எருசலேமிலுள்ள யூதர்களின் பிரமிப்பூட்டும் தேசிய நீதிமன்றம், அதாவது ஆலோசனைச் சங்கம். அதன் உறுப்பினர்கள், இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்களையும் நீதி விசாரணை செய்ய இருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் இயேசுவைக் குறித்து பிரசங்கித்து வந்தார்கள். அப்போஸ்தலர்களில் பேதுருவும் யோவானும் இரண்டாவது முறையாக இந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மற்ற அப்போஸ்தலர்களோ முதன்முறையாக விசாரணைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
முன்பு நடந்த விசாரணையின்போது நீதிமன்றம் விதித்த கட்டளையைப் பற்றி பிரதான ஆசாரியன் அந்த 12 அப்போஸ்தலர்களிடம் பேசுகிறார். இயேசுவைப் பற்றி போதிக்கக் கூடாது என்பதே அந்தக் கட்டளை. அதற்கு அப்போஸ்தலர்களான பேதுருவும் யோவானும் இவ்வாறு பதில் அளித்திருந்தார்கள்: “தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப் பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே.” பின்னர், தைரியத்தைத் தரும்படி கடவுளிடம் ஜெபித்துவிட்டு இயேசுவின் சீஷர்கள் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.—அப்போஸ்தலர் 4:18-31.
தன்னுடைய உருட்டல் மிரட்டல்களெல்லாம் அவர்களிடம் பலிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்ட பிரதான ஆசாரியன் இந்த இரண்டாவது விசாரணையின்போது இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் அந்த நாமத்தைக் குறித்துப் போதகம் பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்த வேண்டுமென்றிருக்கிறீர்கள்.”—அப்போஸ்தலர் 5:28.
அசைக்க முடியாத தீர்மானம்
அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று தைரியமாகச் சொல்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:29) ஆம், சாதாரண மனிதர்களின் கட்டளைகள் யெகோவாவின் கட்டளைகளுக்கு விரோதமாக இருந்தால், யெகோவாவுக்கே நாம் கீழ்ப்படிய வேண்டும், மனிதர்களுக்கு அல்ல.a
கடவுள்மீது அந்தளவுக்கு விசுவாசம் இருந்ததை அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகள் உறுதிப்படுத்தியதால் ஆலோசனைச் சங்க உறுப்பினர்கள் நெகிழ்ந்து போயிருக்க வேண்டும். யூத சமுதாயத்தின் தலைவர்களான இவர்களிடம் கடவுளுக்குக் கீழ்ப்படிவதைப் பற்றி கேட்டிருந்தால் ஏககுரலில் “கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள்” என சொல்லியிருந்திருப்பார்கள். உண்மையில் கடவுளே சர்வலோகப் பேரரசர் என்பதை அவர்களும் நம்புகிறார்கள், அல்லவா?
ஊழியத்தைப் பொறுத்ததில் தாங்கள் மனிதருக்கு அல்ல, கடவுளுக்கே கீழ்ப்படிவதாக அப்போஸ்தலர்கள் அனைவரின் சார்பாக பேதுரு சொல்கிறார். இவ்வாறு, அவர்களது கட்டளைக்கு அப்போஸ்தலர்கள் கீழ்ப்படியவில்லை என்ற குற்றச்சாட்டைச் செல்லாததாக ஆக்குகிறார். சில சந்தர்ப்பங்களில் மனிதரைப் பார்க்கிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியம் என்பதை இந்த ஆலோசனைச் சங்க உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஜனத்தாரின் சரித்திரத்திலிருந்து அறிந்திருக்கிறார்கள். எகிப்திலிருந்த இரண்டு மருத்துவச்சிகள், பார்வோனுக்குப் பயப்படாமல் கடவுளுக்குப் பயப்பட்டதால், எபிரெய பெண்கள் பிரசவித்த ஆண் குழந்தைகளைக் கொன்றுபோடாமல் உயிரோடே காப்பாற்றினார்கள். (யாத்திராகமம் 1:15-17) சரணடையும்படி சனகெரிப் ராஜா வற்புறுத்தியபோது, எசேக்கியா ராஜா அவருக்குக் கீழ்ப்படியாமல் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார். (2 இராஜாக்கள் 19:14-37) ஆலோசனைச் சங்க உறுப்பினர்கள் நன்கு அறிந்திருந்த எபிரெய வேதவாக்கியங்கள், தம் ஜனங்கள் தமக்குக் கீழ்ப்படியும்படியே யெகோவா எதிர்பார்க்கிறார் என்பதை வலியுறுத்திக் காட்டுகின்றன.—1 சாமுவேல் 15:22, 23.
கீழ்ப்படிந்தால் கோடி நன்மை
“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்ற வார்த்தைகள் இந்த ஆலோசனைச் சங்கத்திலிருந்த ஒருவருடைய நெஞ்சத்தையாவது தொடுகின்றன. அவர்தான் கமாலியேல். அவர் அச்சங்கத்தாரால் பெரிதும் மதிக்கப்பட்ட நியாயசாஸ்திரி ஆவார். அவர் அப்போஸ்தலர்களை வெளியே கொண்டுபோகச் சொல்லிவிட்டு, தன் ஞானமான ஆலோசனையை அச்சங்கத்தார் சற்று காதுகொடுத்துக் கேட்கும்படி செய்கிறார். கடந்த கால உதாரணங்களைக் குறிப்பிட்டு, அப்போஸ்தலர்களுடைய வேலையில் குறுக்கிடுவது ஞானமற்ற செயல் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இறுதியில் இவ்வாறு சொல்லி முடிக்கிறார்: “இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். . . . தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்.”—அப்போஸ்தலர் 5:34-39.
கமாலியேலின் ஞானமான வார்த்தைகளில் நியாயம் இருந்ததால் ஆலோசனைச் சங்கத்தார் அப்போஸ்தலர்களை அடித்து, விடுதலை செய்துவிடுகிறார்கள். அந்த அடிக்கெல்லாம் அப்போஸ்தலர்கள் பயந்துவிடவில்லை. மாறாக, “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 5:42.
கடவுளுடைய அதிகாரமே உன்னத அதிகாரம் என்பதை அப்போஸ்தலர்கள் உறுதியாய் நம்பியதால் எவ்வளவாய் நன்மை அடைந்தார்கள்! இன்று உண்மை கிறிஸ்தவர்களாகிய யெகோவாவின் சாட்சிகளும் அதே மனநிலையை வெளிக்காட்டுகிறார்கள். இவர்கள் எப்போதும் யெகோவாவையே உன்னதப் பேரரசராய் நம்பியிருக்கிறார்கள். கடவுளுடைய கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படும்படி உத்தரவிடப்பட்டால், அப்போஸ்தலர்களைப் போலவே, “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று இவர்கள் பதில் அளிப்பார்கள்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2006-ல், செப்டம்பர்/அக்டோபர் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஆலோசனைச் சங்கத்திலிருந்து அப்போஸ்தலர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு கமாலியேல் பேசிய விஷயம் சுவிசேஷ எழுத்தாளரான லூக்காவுக்கு எப்படித் தெரிய வந்தது? ஒருவேளை கடவுள் அவருக்கு வெளிப்படுத்தி இருக்கலாம். அல்லது கமாலியேலின் முன்னாள் மாணவரான பவுல், நடந்த விஷயத்தைச் சுருக்கமாக லூக்காவுக்கு ஒருவேளை தெரிவித்திருக்கலாம். அல்லது அந்த உறுப்பினரில் அப்போஸ்தலர்களின் கருத்தை ஆமோதித்த ஒருவரிடமிருந்து லூக்காவே விசாரித்து தெரிந்திருக்கலாம்.