கமாலியேல்—அவர் தர்சுபட்டணத்து சவுலுக்கு போதித்தார்
ஜனக்கூட்டத்தார் மிகவும் அமைதலாய் நின்றுகொண்டிருந்தனர். சில விநாடிகளுக்கு முன்பு, அவர்கள் அப்போஸ்தலனாகிய பவுலை ஏறக்குறைய கொலையே செய்துவிடுமளவிற்கிருந்தனர். தர்சுபட்டணத்து சவுல் என்றும்கூட அழைக்கப்பட்டிருந்த அவர் ரோம சேனைகளால் மீட்கப்பட்டிருந்தார், இப்போது எருசலேமிலிருந்த ஆலயத்துக்கு அருகே படிக்கட்டுகளிலிருந்து ஜனங்களை எதிர்ப்பட்டார்.
அமைதலாயிருக்கும்படி தன் கைகளை அசைத்து, பவுல் எபிரெயு மொழியிலே பேச ஆரம்பித்து இவ்வாறு சொன்னார்: “சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக . . . நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.”—அப்போஸ்தலர் 22:1-3.
தன் உயிர் ஆபத்தில் இருக்கையில், தான் கமாலியேலால் கல்வி புகட்டப்பட்டிருக்கிறார் என்று சொல்வதன் மூலம் ஏன் பவுல் தன் வழக்கை ஆரம்பித்தார்? கமாலியேல் என்பவர் யார், அவரால் போதிக்கப்படுவதில் என்ன உட்பட்டிருந்தது? கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுலாக ஆன பிறகும் இந்தப் பயிற்றுவிப்பு சவுல் மீது செல்வாக்கு செலுத்தியதா?
கமாலியேல் என்பவர் யார்?
கமாலியேல் என்பவர் பலரும் அறிந்த பரிசேயனாக இருந்தார். பரிசேய யூத மதத்துக்குள் இரண்டு முக்கிய பொதுவான கோட்பாடுகளில் ஒன்றை நிறுவியிருந்த மூத்த ஹில்லெல் என்பவருக்கு பேரனாக இருந்தார்.a ஹில்லெலின் போதனாமுறை, அவருடைய எதிராளியான ஷம்மியைவிட அதிக சகிப்புத்தன்மையுள்ளதாய் இருந்ததாக கருதப்பட்டது. பொ.ச. 70-ல் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்ட பிறகு, பெட் ஷம்மியைக் காட்டிலும் (ஷம்மி சபை) பெட் ஹில்லெல் (ஹில்லெல் சபை) மிகவும் அதிகமாக விரும்பப்பட்டது. ஹில்லெல் சபை யூதமதத்தின் அதிகாரம் பெற்ற சபையாக இருந்தது, ஏனென்றால் யூதமதத்தின் மற்ற உட்பிரிவுகள் எல்லாம் ஆலயம் அழிந்தவுடன் மறைந்துபோயின. மிஷ்னாவில் உள்ள யூத நியாயப்பிரமாணத்துக்கு பெட் ஹில்லெலின் தீர்மானங்கள் பெரும்பாலும் அடிப்படையாய் இருக்கிறது, அது டால்முடுக்கு அஸ்திபாரமாக ஆனது, கமாலியேலின் செல்வாக்கு அது மேலோங்கியிருந்ததற்கான முக்கிய காரணமாக இருந்தது.
கமாலியேல் அவ்வளவு உயர்வாக மதிக்கப்பட்டதால், ரபான் என்று அவரே முதலாவதாக அழைக்கப்பட்டார், அது ரபீயைக் காட்டிலும் உயர்வான பட்டப்பெயராக இருந்தது. காலப்போக்கில், கமாலியேல் மிகவும் உயர்வாய் மதிக்கப்பட்ட நபராக ஆனபடியால், அவரைக் குறித்து மிஷ்னா இவ்வாறு சொல்கிறது: “மூத்த ரபான் கமாலியேல் இறந்தபோது, டோராவின் மகிமை முடிவுக்கு வந்தது, தூய்மையும் புனிதத்தன்மையும் அழிந்துபோனது.”—சோட்டா 9:15.
கமாலியேலால் போதிக்கப்படுதல்—எவ்வாறு?
‘கமாலியேலின் பாதத்தருகே போதிக்கப்பட்டேன்’ என்று எருசலேமிலிருந்த ஜனக்கூட்டத்தாரிடம் அப்போஸ்தலனாகிய பவுல் கூறியபோது, அவர் எதை அர்த்தப்படுத்தினார்? கமாலியேலைப் போன்ற ஒரு போதனையாளருக்கு சீஷராயிருப்பதில் என்ன அடங்கியிருந்தது?
அமெரிக்காவின் யூத இறைமை நூல் கல்விக்கூடத்தின் பேராசிரியர் டோவ் ஸ்லாட்நிக் என்பவர் அப்படிப்பட்ட பயிற்றுவிப்பைக் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்: “வாய்மொழியான சட்டத்தின் திருத்தமானத்தன்மை, அதன் காரணமாக அதன் நம்பத்தக்கத்தன்மை, ஏறக்குறைய முழுவதுமாக ஆசான்-சீஷன் உறவிலேயே சார்ந்துள்ளது: சட்டத்தை போதிப்பதில் ஆசான் எடுத்துக்கொள்ளும் கவனம், அதை கற்றுக்கொள்வதில் சீஷருக்கு இருக்கும் மனமார்ந்த அக்கறை. . . . ஆகையால், சீஷர்கள் கல்விமான்களின் பாதத்தின் அருகே உட்கார்ந்து . . . ‘அவர்களுடைய வார்த்தைகளை தாகத்தோடு பருகும்படி,’ ஊக்கப்படுத்தப்பட்டனர்.”—ஏவாட் 1:4, தி மிஷ்னா.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூத ஜனங்களின் சரித்திரம் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் ஏமல் ஷூரர் என்பவர் முதல் நூற்றாண்டு ரபீனிய போதனையாளர்களின் முறைகளைக் குறித்து விளக்குகிறார். அவர் எழுதுகிறார்: “மிகவும் பிரபலமாயிருந்த ரபீக்கள், போதனைப் பெற்றுக்கொள்ள விரும்பிய பெரும் எண்ணிக்கையில் இருந்த இளம் ஆண்களை ஒன்றுகூட்டி வைத்திருந்தனர், ‘வாய்மொழியான சட்டத்தின்’ பல்வகைப்பட்ட மற்றும் சொல்வளமிக்க விஷயங்களை முழுவதுமாக அந்த இளைஞர்கள் அறிந்துகொள்ளும் நோக்கத்துக்காக. . . . ஒழுங்காக திரும்பத்திரும்ப தொடர்ந்து விடாமுயற்சியுடன் ஞாபகசக்தியைப் பயன்படுத்துவது போதனையில் அடங்கியிருந்தது. . . . மாணவர் தீர்மானம் எடுப்பதற்காக போதனையாளர் சட்டத்தை அடிப்படையாகக்கொண்ட அநேக கேள்விகளை கேட்டார், அவற்றுக்கு மாணவர் பதிலளிக்கும்படி அனுமதித்தார் அல்லது தானே பதிலளித்தார். மாணவரும்கூட ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.”
ரபீக்களின் நோக்குநிலையிலிருந்து, மாணவர் வெறுமனே பாஸ் மார்க்குகளைக் காட்டிலும் கூடுதலாக பெறுவதுதானே இடையூறாக இருந்தது. அப்படிப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தவர்கள் பின்வருமாறு எச்சரிக்கப்பட்டனர்: “தான் கற்றுக்கொண்ட காரியங்களிலிருந்து எவராவது ஒரு விஷயத்தை மறந்துவிட்டாலும்கூட—வேதாகமத்தின்படி, அது ஜீவன் அல்லது மரணம் போன்ற விஷயம்.” (ஏவாட் 3:8) “ஒரு சொட்டு தண்ணீரையும்கூட இழந்துவிடாமலிருக்கும் பூசப்பட்ட கிணற்றைப்” போன்று இருக்கும் மாணவன் பெரிதும் புகழப்பட்டான். (ஏவாட் 2:8) அப்போது தர்சுபட்டணத்து சவுல் என்ற எபிரெய பெயரால் அறியப்பட்டிருந்த பவுல் அவ்வகையான பயிற்றுவிப்பை கமாலியேலிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
கமாலியேலுடைய போதனைகளின் உள்நோக்கம்
பரிசேயர்களின் போதனைகளுக்கேற்ப, கமாலியேல் வாய்மொழியான சட்டத்தின்மீது நம்பிக்கையை முன்னேற்றுவித்தார். இவ்வாறு அவர் ஏவப்பட்டெழுதப்பட்ட வேதாகமத்தின் மீதல்லாமல் ரபீக்களின் பாரம்பரியங்களுக்கு மிகுதியான முக்கியத்துவம் கொடுத்தார். (மத்தேயு 15:3-9) கமாலியேல் இவ்வாறு சொல்வதாக மிஷ்னா குறிப்பிடுகிறது: “நீங்கள் ஒரு போதனையாளரை [ஒரு ரபீயை] உங்களுக்காக ஏற்படுத்திக்கொள்ளுங்கள், அப்போது உங்களுக்கு சந்தேகங்கள் இருக்காது, ஏனென்றால் ஊகித்தலின் விளைவாக நீங்கள் அளவுக்குமீறி காணிக்கை கொடுக்கக்கூடாது.” (ஏவாட் 1:16) என்ன செய்வது என்பதை பற்றி எபிரெய வேதாகமம் தெளிவாக சொல்லவில்லையென்றால், ஒரு நபர் தன் சொந்த பகுத்தறிவை பயன்படுத்தவோ அல்லது ஒரு தீர்மானம் எடுப்பதற்கு தன் மனச்சாட்சியை பின்பற்றவோ கூடாது. மாறாக, அவருக்காக தீர்மானத்தை எடுப்பதற்கு அவர் தகுதியுள்ள ஒரு ரபீயை கண்டுபிடிக்க வேண்டும். கமாலியேலின்படி, இந்தவிதத்தில் மட்டுமே ஒரு நபர் பாவம் செய்வதை தவிர்ப்பார்.—ஒப்பிடுக: ரோமர் 14:1-12.
என்றபோதிலும், கமாலியேல் தன் மதசம்பந்தப்பட்ட சட்டப்பிரகாரமான தீர்வுகளில் மிகவும் பரந்த மனப்பான்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பொதுவாக அறியப்பட்டிருந்தார். உதாரணமாக, “[தன் கணவனின் மரணத்துக்கு] சாட்சியாக ஒரு நபர் மட்டுமே இருந்தாலும், அந்த மனைவி மறுபடியும் திருமணம் செய்துகொள்வதற்கு அனுமதிக்கப்படலாம்” என்ற கட்டளை விதித்தபோது அவர் பெண்களுக்கு கரிசனை காண்பித்தார். (யெவமோட் 16:7, தி மிஷ்னா) கூடுதலாக, மணவிலக்குக்கு ஆளான ஒருவரை பாதுகாப்பதற்கு, மணவிலக்கு செய்வதற்கான கடிதத்தில் ஏராளமான தடைகளைப் பிரஸ்தாபித்தார்.
ஆரம்பகாலத்தில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களோடு கமாலியேல் கொண்டிருந்த தொடர்புகளிலும்கூட இந்த மனப்பான்மை காணப்படுகிறது. இயேசுவின் அப்போஸ்தலர் பிரசங்கம் செய்ததற்காக அவர்களை கைது செய்து மற்ற யூத மதத்தலைவர்கள் கொலை செய்வதற்காக வகைதேடினபோது அப்போஸ்தலர் புத்தகம் இவ்வாறு கூறுகிறது, “அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் . . . இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். . . . தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.” கமாலியேலின் புத்திமதி ஏற்றுக்கொள்ளப்பட்டது, அப்போஸ்தலர் விடுதலை செய்யப்பட்டனர்.—அப்போஸ்தலர் 5:34-40.
அது பவுலுக்கு எதை அர்த்தப்படுத்தியது?
பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பெரிய ரபீனிய போதனையாளர்களில் ஒருவரால் பவுல் பயிற்றுவிக்கப்பட்டு கல்வி புகட்டப்பட்டிருந்தார். கமாலியேலைப் பற்றி அப்போஸ்தலன் குறிப்பிட்டது, எருசலேமிலிருந்த ஜனக்கூட்டத்தார் அவருடைய பேச்சுக்கு விசேஷ கவனம் செலுத்தும்படி செய்வித்தது. ஆனால் கமாலியேலைக் காட்டிலும் அவர் உயர்மதிப்பு வாய்ந்த போதனையாளர் ஒருவரை, மேசியாவாகிய இயேசுவைக் குறித்து அவர்களிடம் பேசினார். இப்போது கமாலியேலின் சீஷராக அல்லாமல் இயேசுவின் சீஷராக பவுல் ஜனக்கூட்டத்தாரிடம் பேசினார்.—அப்போஸ்தலர் 22:4-21.
ஒரு கிறிஸ்தவராக பவுலின் போதகத்தின்மீது கமாலியேல் அளித்த பயிற்சி செல்வாக்கு செலுத்தியதா? வேதாகமத்திலும் யூத நியாயப்பிரமாணத்திலும் பெற்றுக்கொண்ட தவறுதல் இல்லாத திருத்தமான போதனை, ஒரு கிறிஸ்தவ போதனையாளராக இருப்பதில் பவுலுக்கு பயனுள்ளதாக இருந்தது. இருப்பினும், கமாலியேலின் பரிசேய நம்பிக்கைகளையுடைய அடிப்படை போதனைகளை அவர் நிராகரித்தார் என்று பைபிளில் காணப்படும் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்ட பவுலின் கடிதங்கள் தெளிவாக காண்பிக்கின்றன. பவுல் தன் உடன் யூதர்களையும் மற்ற எல்லாரையும் யூதமத ரபீக்களிடமோ அல்லது மனிதன் ஏற்படுத்திய பாரம்பரியங்களிடமோ அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவிடமாக வழிநடத்தினார்.—ரோமர் 10:1-4.
கமாலியேலின் சீஷனாக பவுல் தொடர்ந்து இருந்திருந்தால், அவர் பெரும் செல்வாக்கை அனுபவித்திருக்கலாம். கமாலியேலின் குழுவில் இருந்த மற்றவர்கள் யூத மதத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உதவி செய்தனர். உதாரணமாக, கமாலியேலின் குமாரனாகிய சிமியோன், ஒருவேளை பவுலின் உடன் மாணவனாக இருந்திருக்கலாம், அவன் ரோமாபுரிக்கு எதிரான யூதருடைய கலகத்தில் பெரும் பங்கை வகித்தான். ஆலயம் அழிக்கப்பட்ட பிறகு, இரண்டாம் கமாலியேலின் பேரன் நியாயசங்கத்தின் அதிகாரத்தை மீட்டளித்து ஜாப்னே என்ற இடத்துக்கு மாற்றினான். இரண்டாம் கமாலியேலின் பேரன், ஜூடா ஹெநெஸ், மிஷ்னாவை தொகுத்தார், அது நம் நாள் வரையாக யூத கோட்பாட்டுக்கு அஸ்திபாரமாக ஆகியிருக்கிறது.
கமாலியேலின் மாணவராக, தர்சுபட்டணத்து சவுல் யூத மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபராக ஆகியிருக்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து பவுல் எழுதினார்: “ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.”—பிலிப்பியர் 3:7, 8.
ஒரு பரிசேயனாக தன் வாழ்க்கைத் தொழிலை நிராகரித்துவிட்டு இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவராக ஆவதன் மூலம், “தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்” என்று தன் முன்னாள் போதனையாளர் அளித்த புத்திமதியை பவுல் நடைமுறையான விதத்தில் பொருத்திக்கொண்டிருந்தார். இயேசுவின் சீஷர்களை துன்புறுத்துவதை நிறுத்துவதன் மூலம், பவுல் கடவுளுக்கு விரோதமாய் போர்செய்வதை நிறுத்திவிட்டார். மாறாக, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவராக ஆவதன் மூலம், அவர் ‘தேவனுடைய உடன்வேலையாட்களில்’ ஒருவராக ஆனார்.—1 கொரிந்தியர் 3:9.
நம் நாளில் மெய்க் கிறிஸ்தவத்தின் செய்தி, யெகோவாவின் வைராக்கியமுள்ள சாட்சிகளால் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. பவுலைப் போன்று இவர்களில் அநேகர் தங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். உண்மையிலேயே ‘தேவனிடமிருந்து வரும்’ இந்த ராஜ்ய-பிரசங்கிப்பு வேலையில் பெரும் பங்கைக் கொண்டிருப்பதற்கு சிலர் நல்ல எதிர்காலமுடைய வாழ்க்கைத் தொழிலையும்கூட விட்டு வந்திருக்கின்றனர். (அப்போஸ்தலர் 5:39) அவர்கள் பவுலின் முன்னாள் போதனையாளராகிய கமாலியேலுக்குப் பதிலாக பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றியதற்காக எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள்!
[அடிக்குறிப்பு]
a கமாலியேல் ஹில்லெலின் மகன் என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த விஷயத்தில் டால்முட் தெளிவாக இல்லை.
[பக்கம் 28-ன் படம்]
தர்சுபட்டணத்து சவுல், அப்போஸ்தலனாகிய பவுலாக எல்லா தேசத்து ஜனங்களுக்கும் நற்செய்தியை அறிவித்தார்