பூர்வத்தில் நகலெடுத்தவர்களும் கடவுளுடைய வார்த்தையும்
எபிரெய வேதாகமம், பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதி முடிக்கப்பட்டது. அதற்குப் பின்வந்த நூற்றாண்டுகளில், புலமை பெற்ற யூதர்கள், அது திருத்தமாய் இருக்கும்படி கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டார்கள்; முக்கியமாக சோஃபெரிம்களும், அவர்களுக்குப் பின்னர் மசோரெட்டுகளும் அவ்வாறு பார்த்துக்கொண்டார்கள். எனினும், பைபிளின் மிகப் பழமையான புத்தகங்கள் சோஃபெரிம்களின் காலத்திற்கு ஓராயிரம் ஆண்டுகள் முன்பு, மோசேயும் யோசுவாவும் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகங்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் அழிந்துபோகும் தன்மையுள்ளவையாய் இருந்தன; எனவே, அந்தச் சுருள்கள் அநேக முறை நகலெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பூர்வ காலத்தில் நகலெடுத்தவர்களின் வேலை சம்பந்தமாக என்னென்ன தெரிந்திருக்கிறது? நகலெடுப்பதில் திறமை வாய்ந்தவர்கள் பூர்வ இஸ்ரவேலில் இருந்தார்களா?
சவக்கடல் சுருள்களில் சில இன்று காணப்படும் மிகப் பழமையான பைபிள் கையெழுத்துப் பிரதிகளாகும்; அவை பொ.ச.மு. மூன்றாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. “பைபிள் புத்தகங்களில் இதற்கு முன்பு எழுதப்பட்ட எந்தப் பிரதிகளும் கிடைப்பதில்லை” என விளக்குகிறார் பேராசிரியர் ஆலன் ஆர். மிலர்டு; இவர், கிழக்கத்திய மொழிகள் மற்றும் தொல்லியலில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் அவர் இவ்வாறு சொல்கிறார்: “அண்டை நாடுகளின் கலாச்சாரங்களை வைத்து பூர்வ காலத்தில் எவ்வாறு நகலெடுத்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது; மேலும், அதையெல்லாம் அறிந்திருப்பது எபிரெய வேதாகமத்தையும் அதன் சரித்திரத்தையும் கணிப்பதற்கும், அதன் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் காண்பதற்கும் உதவுகிறது.”
பூர்வத்தில் நகலெடுக்கும் பணி
சரித்திரம், மதம், சட்டம், கல்வி, இலக்கியம் ஆகியவை சார்ந்த உரைகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெசொப்பொத்தாமியாவில் எழுதப்பட்டன. வேதபாரகருக்கான பள்ளிகள் அக்காலத்தில் தழைத்தோங்கின; அங்கு, உரைகளை அச்சுப்பிசகாமல் அப்படியே எழுதுவது எப்படி என்பது மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட ஒரு பாடமாகும். ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகள் மீண்டும் மீண்டும் நகலெடுக்கப்பட்ட பாபிலோனிய உரைகளில் அற்பசொற்ப மாற்றங்களை மட்டுமே இன்றைய கல்விமான்கள் காண்கிறார்கள்.
இப்படி நகலெடுக்கும் பணி மெசொப்பொத்தாமியாவில் மட்டுமே நடைபெறவில்லை. தி ஆக்ஸ்ஃபோர்டு என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஆர்க்கியாலஜி இன் த நியர் ஈஸ்ட் என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பொ.ச.மு. இரண்டாம் ஆயிர ஆண்டுகளின் மத்திபத்தில் பாபிலோனில் நகலெடுத்தவர், மெசொப்பொத்தாமியா, சிரியா, கானான் ஆகியவற்றிலும் எகிப்திலும்கூட இருந்த நகலெடுக்கும் மையங்களில் பயன்படுத்தப்பட்ட முறைகளை அத்துப்படியாக அறிந்திருந்தார் என்றே தெரிகிறது.”a
எகிப்தில் மோசேயின் காலத்தில் நகலெடுப்பது கௌரவமிக்க உன்னதப் பணியாகக் கருதப்பட்டது. நகலெடுப்பவர்கள் இலக்கியப் படைப்புகளைப் பார்த்து சதா எழுதிக்கொண்டிருந்தார்கள். இக்காட்சி நான்காயிரத்திற்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட எகிப்திய கல்லறை அலங்காரங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் வாழ்ந்த வேதபாரகரைப்பற்றி மேற்குறிப்பிடப்பட்ட என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “பொ.ச.மு. இரண்டாம் ஆயிர ஆண்டுகளுக்குள், எண்ணற்ற புத்தகங்களை அவர்கள் நகலெடுத்து, சேகரித்து வைத்திருந்தார்கள்; அவை மெசொப்பொத்தாமியாவிலும் எகிப்திலும் நிலவிய மேம்பட்ட நாகரிகங்களை விவரித்தன; அதோடு, முழுக்க முழுக்க நகலெடுக்கும் பணியை ஏற்றிருப்பவர்களுக்கான வழிகாட்டுக் குறிப்புகளையும் சட்டங்களையும் உள்ளடக்கியிருந்தன.”
இந்த ‘வழிகாட்டுக் குறிப்புகளும் சட்டங்களும்’ அடங்கிய உரையின் முடிவில் வெளியீட்டாளரின் விவரக் குறிப்பு சேர்க்கப்பட்டிருந்தது. வெளியீட்டாளரின் விவரக் குறிப்பில், நகலெடுத்தவரின் பெயர், அந்தக் கற்பலகை அல்லது களிமண் பலகையின் உரிமையாளரது பெயர், தேதி, இந்தப் பலகையை நகலெடுக்க எந்த மூல உரை பயன்படுத்தப்பட்டது, எத்தனை வரிகள் உள்ளன போன்றவையும் இன்னும் பல விவரங்களும் காணப்பட்டன. பெரும்பாலும் நகலெடுப்பவர் பின்வரும் வாக்கியத்தைச் சேர்த்துக்கொள்வார்: “இது ஆதாரப்பிரதியின்படி எழுதப்பட்டு, சரிபார்க்கப்பட்டது.” பூர்வத்தில் நகலெடுத்தவர்கள் திருத்தமான பதிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததை இந்த விவரங்கள் காட்டுகின்றன.
முன்னர் குறிப்பிடப்பட்ட பேராசிரியர் மிலர்டு இவ்வாறு சொல்கிறார்: “நகலெடுக்கையில் சரிபார்த்து, திருத்தங்கள் செய்யும் ஒரு பிரத்தியேக முறை பின்பற்றப்பட்டது; இதில், பிழைகளைத் தவிர்ப்பதற்கு நிலையான வழிமுறைகள் கையாளப்பட்டன. குறிப்பாக, வரிகளையோ வார்த்தைகளையோ எண்ணுவது போன்ற சில வழிமுறைகள் இடைக்கால ஆரம்பத்தில் மசோரெட்டுகள் பின்பற்றிய முறைகளிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.” எனவே, மத்திய கிழக்கில், மோசேயும் யோசுவாவும் வாழ்ந்த காலத்தில், உரைகளைப் பார்த்து கவனமாகவும் திருத்தமாகவும் எழுதுவதில் அக்கறை காட்டும் பழக்கம் ஏற்கெனவே இருந்தது.
இஸ்ரவேலரிலும் நகலெடுப்பதில் புலமை பெற்றவர்கள் இருந்தார்களா? பைபிளில் காணப்படும் தகவல் என்ன காட்டுகிறது?
பூர்வ இஸ்ரவேலில் நகலெடுத்தவர்கள்
மோசே, பார்வோனுடைய குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார். (யாத்திராகமம் 2:10; அப்போஸ்தலர் 7:21, 22) பூர்வ எகிப்தைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்களின்படி, மோசேயின் கல்வியைப் பொறுத்தவரை அவர் எகிப்திய உரைகளை எழுதுவதிலும் படிப்பதிலும் கரைகண்டவராய் விளங்கியிருந்திருப்பார், நகலெடுப்பவர்களின் திறமைகளில் சிலவற்றையாவது அவர் அறிந்து வைத்திருந்திருப்பார். எகிப்தில் இஸ்ரவேலர் என்ற ஆங்கில புத்தகத்தில் பேராசிரியர் ஜேம்ஸ் கே. ஹாஃப்மையர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சம்பவங்களை எழுதிவைப்பது, பயண விவரங்களைத் தொகுப்பது போன்றவற்றையும் நகலெடுப்பவர்களின் வேறு பல பணிகளையும் செய்கிற திறமை மோசேக்கு இருந்ததாக பைபிள் குறிப்பிடுவதை நம்புவதற்கு காரணம் இருக்கிறது.”b
பூர்வ இஸ்ரவேலில் இன்னும் சிலர் நகலெடுப்பதில் சிறந்து விளங்கியதாக பைபிள் குறிப்பிடுகிறது. “தீர்மானங்களை எழுதி வைப்பதற்கும், பல்வேறு படிநிலைகளில் மக்களை ஒழுங்கமைத்து, அதுபற்றிய திருத்தமான தகவலை எழுதி வைப்பதற்கும் . . . படிப்பறிவுள்ள அதிகாரிகளை [மோசே] நியமித்தார்” என்று த கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆஃப் த பைபிள் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. உபாகமம் 1:15-ன் அடிப்படையில் இது முடிவு செய்யப்படுகிறது; அது இவ்வாறு சொல்கிறது: “ஆகையால் நான் [மோசே] . . . உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப் பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தி வைத்தேன்.” இந்த அதிகாரிகள் யார்?
பைபிளில், மோசேயும் யோசுவாவும் வாழ்ந்த காலத்தில் ‘அதிகாரிகள்’ என்பதற்குரிய எபிரெய வார்த்தை பல தடவை காணப்படுகிறது. இந்த வார்த்தை, “எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு செயலரை,” “‘எழுதுகிற’ அல்லது ‘பதிவு செய்கிற’ ஒருவரை,” “நியாயாதிபதிக்குச் செயலராகப் பணியாற்றிய ஓர் அலுவலரை” குறிப்பதாகப் பல்வேறு கல்விமான்கள் விளக்குகிறார்கள். இந்த எபிரெய வார்த்தை பல முறை பயன்படுத்தப்பட்டிருப்பது, இப்படிச் செயலர்களாகப் பணியாற்றிய அநேகர் இஸ்ரவேலில் இருந்தார்கள் என்பதையும் பூர்வத்தில் தேசத்தை நிர்வகிப்பதில் பல்வேறு முக்கிய பொறுப்புகளைக் கையாண்டார்கள் என்பதையும் அர்த்தப்படுத்துகிறது.
மூன்றாவது உதாரணமாக, இஸ்ரவேலிலிருந்த ஆசாரியர்களை எடுத்துக்கொள்வோம். என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா குறிப்பிடுகிறபடி, ஆசாரியர்கள் “மத சம்பந்தமான காரியங்களையும் பிற காரியங்களையும் செய்வதற்குப் படிப்பறிவுள்ளவர்களாய் இருக்க வேண்டியிருந்தது.” உதாரணத்திற்கு, லேவியின் புத்திரர்களுக்கு மோசே இவ்வாறு கட்டளையிட்டார்: ‘ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே . . . இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கும் . . . முன்பாக வாசிக்கக்கடவாய்.’ அதிகாரப்பூர்வ நியாயப்பிரமாண நூலைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றவர்களாய் ஆசாரியர்கள் இருந்தார்கள். அதிலிருந்து நகலெடுப்பதற்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள், அப்படி நகலெடுக்கும்போது மேற்பார்வை செய்தார்கள்.—உபாகமம் 17:18-20; 31:10, 11.
நியாயப்பிரமாணத்தின் முதல் பிரதி எவ்வாறு எழுதப்பட்டது என்பதைக் கவனியுங்கள். தான் மரிக்கவிருந்த அந்த மாதத்தில் இஸ்ரவேலரிடம் மோசே இவ்வாறு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்துபூசி . . . இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.” (உபாகமம் 27:1-4) எரிகோ, ஆயி ஆகிய பட்டணங்கள் அழிக்கப்பட்ட பிறகு, ஏபால் மலை அருகே இஸ்ரவேலர் கூடிவந்தார்கள்; இந்த மலை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மையத்தில் இருந்தது. அங்கு யோசுவா ஒரு பலிபீடத்தின் கற்களில் “மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை” பொறித்தார். (யோசுவா 8:30-32) இப்படி எழுத்துகளைப் பொறிக்க வேண்டுமென்றால், அவற்றை எழுதவும் வாசிக்கவும் தெரிந்த ஆட்கள் தேவை. இது, மொழி அறிவும் தங்கள் பரிசுத்த உரைகளைத் திருத்தமாகப் பாதுகாப்பதற்கான திறமையும் பூர்வத்திலிருந்த இஸ்ரவேலரிடம் இருந்ததைக் காட்டுகிறது.
வேதவாக்கியங்களின் திருத்தமான தன்மை
மோசேயும் யோசுவாவும் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு, எபிரெய வேதாகமச் சுருள்கள் பல தயாராயின, அவை கைப்பட எழுதப்பட்டு அவற்றின் பிரதிகளும் எடுக்கப்பட்டன. அப்பிரதிகள் நைந்துபோனபோது அல்லது அவை ஈரப்பதத்தாலோ பூஞ்சணத்தாலோ பாதிக்கப்பட்டபோது அவற்றுக்குப் பதிலாக வேறு பிரதிகளை எழுதி வைக்க வேண்டியிருந்தது. இவ்வாறு பல நூற்றாண்டுகளுக்கு நகலெடுக்கும் பணி தொடர்ந்தது.
பைபிளை நகலெடுப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் அறியாமல் சில பிழைகள் நேர்ந்தன. அப்படியென்றால், நகலெடுப்பவர்கள் செய்த பிழைகள் பைபிள் உரையைப் பெருமளவு மாற்றிவிட்டனவா? இல்லை. மொத்தத்தில், பிழைகள் அற்பசொற்பமானவையே; பைபிளின் திருத்தமான தன்மையை எவ்விதத்திலும் அவை பாதிப்பதில்லை; இது, பூர்வ கால கையெழுத்துப் பிரதிகளை வெகு கவனமாய் ஆராய்ந்தபோது தெரியவந்தது.
பூர்வ கால பைபிள் புத்தகங்களை இயேசு கிறிஸ்து கருதிய விதம், பரிசுத்த வேதாகமத்தின் உரை திருத்தமானது என்பதை கிறிஸ்தவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. “மோசேயின் ஆகமத்தில் . . . நீங்கள் வாசிக்கவில்லையா?” “மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா?” போன்ற சொற்றொடர்கள், இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த கையெழுத்துப் பிரதிகளை நம்பகமானவையாக அவர் கருதினார் என்பதைக் காட்டுகின்றன. (மாற்கு 12:26; யோவான் 7:19) மேலும், எபிரெய வேதாகமம் முழுவதுமே திருத்தமானது என்பதை பின்வருமாறு அவர் சொன்னபோது உறுதிப்படுத்தினார்: ‘மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியவை.’—லூக்கா 24:44.
எனவே, பூர்வத்திலிருந்தே பரிசுத்த வேதாகமம் திருத்தமாக நகலெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவதற்கு நமக்குக் காரணம் இருக்கிறது. இது ஏசாயா தீர்க்கதரிசி ஆவியின் வழிநடத்துதலால் பின்வருமாறு சொன்னதற்கு ஒப்பாயிருக்கிறது: “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.”—ஏசாயா 40:8.
[அடிக்குறிப்புகள்]
a பொ.ச.மு. இரண்டாம் ஆயிர ஆண்டுகளின் மத்திபத்தில் வாழ்ந்த யோசுவா, கானானிலிருந்த கீரியாத்செப்பேர் என்ற நகரத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார்; கீரியாத்செப்பேர் என்பதற்கு “புத்தகங்களின் நகரம்” அல்லது “நகலெடுப்பவர்களின் நகரம்” என்று அர்த்தம்.—யோசுவா 15:15, 16.
b சட்டம் சம்பந்தமான விஷயங்களை மோசே எழுதினார் என்பதற்கான குறிப்புகளை யாத்திராகமம் 24:4, 7; 34:27, 28-லும் உபாகமம் 31:24-26-லும் காணலாம். அவர் எழுதிய பாடலைப் பற்றிய குறிப்பு உபாகமம் 31:22-லும் வனாந்தரப் பயணத்தைப் பற்றிய குறிப்பு எண்ணாகமம் 33:2-லும் உள்ளன.
[பக்கம் 18-ன் படம்]
நகலெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிற எகிப்தியர்
[பக்கம் 19-ன் படம்]
பைபிளிலுள்ள மிகப் பழமையான புத்தகங்கள் மோசேயின் காலத்தில் எழுதப்பட்டவை