ஈவிரக்கமற்ற உலகில் இரக்க உள்ளங்கள்
பு ருண்டியில், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அவரை அழைத்துச் செல்ல அங்கு ஒரு காரும் இருக்கவில்லை. அவருடைய நெருங்கிய நண்பர்களில் இருவர் அவருக்கு உதவிசெய்ய முன்வந்தார்கள். அவரைத் தங்களுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கரடுமுரடான மலை பாதை வழியாக ஐந்து மணிநேரம் படுசிரமப்பட்டு இழுத்துச் சென்றார்கள். பிறகு, அவரை ஒரு பஸ்ஸில் ஏற்றி அருகிலிருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். சில நாட்களுக்குப் பிறகு அவருடைய உடல்நிலை நன்றாகத் தேறியது.
உலகத்தின் மறுமுனையில் கேட்ரீனா சூறாவளி ஐக்கிய மாகாணங்களின் வளைகுடா பகுதியைப் பதம் பார்த்தது. ஆகஸ்ட் 2005-ல் வந்த இந்தச் சூறாவளி பெருமளவு சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது. அந்தச் சமயம், சாய்ந்துவிட்ட மரங்களுக்கு அடியில் நொறுங்கி கிடந்த ஒரு வீடு, தன்னார்வ தொண்டர்களின் கண்ணில்பட்டது. அந்த வீட்டின் சொந்தக்காரரை இவர்களுக்கு முன்பின் தெரியாது. இருந்தாலும், ஒரு நாள் முழுவதும் கடுமையாகப் பாடுபட்டு அந்த வீட்டின்மேல் விழுந்துகிடந்த மரங்களை சங்கிலி ரம்பங்களால் வெட்டி எடுத்து, அங்கிருந்த இடிபாடுகளை எல்லாம் அப்புறப்படுத்தினார்கள். இவர்களைக் குறித்து அந்த வீட்டின் சொந்தக்காரர் இப்படிக் கூறினார்: “[இவர்கள்] எனக்கு செய்த உதவிக்காக நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.”
மீடியாக்கள், அநியாயங்களையும் அட்டூழியங்களையும் மிகைப்படுத்தி கூறி மக்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பிவிட முயற்சி செய்கின்றன. இப்படிப்பட்ட செய்திகளே அதிகமாக வெளிவருவதால், இரக்கமும், பரிவும் காட்டுபவர்களின் செயல்கள் பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விடுகின்றன. இருந்தாலும், உலகெங்கிலுமுள்ள மக்கள் அன்புக்காகவும், பாசத்துக்காகவும், பரிவுக்காகவும் தவியாய் தவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நம்மீது மற்றவர்கள் இரக்கம் காட்டவேண்டுமென்றே நாம் ஏங்குகிறோம்! பொதுவாக கிறிஸ்மஸ் சமயத்தில்தான் இதுபோன்ற உணர்ச்சிகள் மேலோங்குகின்றன. அந்தச் சமயத்தில் அநேகர், “பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லுவார்கள் அல்லது பாடுவார்கள்.—லூக்கா 2:14.
உணர்ச்சிகளற்ற ஓர் உலகில், கல்நெஞ்சம் படைத்த மக்கள் மத்தியில் இரக்கம் காட்டுவது சுலபமான விஷயமல்ல. மற்றவர்களுடைய உணர்ச்சிகளைக் கொஞ்சங்கூட பொருட்படுத்தாமல் கருணையின்றி நடந்துகொண்டால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்று மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள். இரக்கம் காட்டுவதைவிட கொடூரமாக நடந்துகொள்வதே உத்தமம் என்ற கருத்தின்படியே இன்று அநேகர் வாழ்வதுபோல் தெரிகிறது. இதுபோக, பேராசையும் தற்பெருமையும்கூட இரக்கம் காட்டுவதற்குத் தடைக்கற்களாய் இருக்கின்றன.
இதன் விளைவாக அநேகர், மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் விருப்பங்களையும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை, தங்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். “ஆண்மையின் லட்சணம் உடையவர்களாக” (வலிமை மிகுந்தவர்களாக) அறிமுகப்படுத்தப்படுகிற விளையாட்டு வீரர்களும், சினிமா கதாநாயகர்களும் பெரும்பாலும் மென்மையின் வாசமறியாதவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். சில அரசியல்வாதிகளும் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்.
ஆகவே, பின்வரும் கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்வது பொருத்தமாக இருக்கும்: நாம் ஏன் பரிவுள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டும்? இரக்கம் காட்டுவதில் பலன் உண்டா? இரக்கம் காட்ட நமக்கு எது உதவும்? அடுத்துவரும் கட்டுரை இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.
[பக்கம் 3-ன் பெட்டி]
●இரக்கம் காட்டுவது பலவீனமா?
●இரக்கம் காட்டுவதில் பலன் உண்டா?
●என்ன நடைமுறையான விதங்களில் நீங்கள் பரிவு காட்டலாம்?