தாமதமின்றி உடனே திரும்ப உதவுங்கள்
“யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.”—யோவா. 6:68.
1. அநேக சீஷர்கள் இயேசுவைவிட்டு விலகிப்போன சமயத்தில் பேதுரு என்ன சொன்னார்?
ஒரு சமயம், இயேசு கிறிஸ்து போதித்த ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த அநேக சீஷர்கள் அவரைவிட்டு விலகிப்போனார்கள். அப்பொழுது அவர் தம் அப்போஸ்தலரைப் பார்த்து, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ”? என்று கேட்டார். அதற்கு பேதுரு, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்றார். (யோவா. 6:51–69) ஆம், அவர்கள் போவதற்கு வேறு இடமே இருக்கவில்லை. ஏனென்றால், யூத மதத்தில் “நித்தியஜீவ வசனங்கள்” இருக்கவில்லை; இன்று பொய்மத உலகப் பேரரசாக இருக்கிற மகா பாபிலோனிலும் அந்த வசனங்கள் நிச்சயமாகவே இல்லை. யெகோவாவின் மந்தையைவிட்டுப் பிரிந்துபோய், இப்போது அவருக்குப் பிரியமாய் நடக்க விரும்புகிறவர்கள், ‘நித்திரையைவிட்டு எழுந்து’ மந்தைக்குள் திரும்பிவருவதற்கு ஏற்கெனவே ‘வேளையாயிற்று.’—ரோ. 13:11.
2. நியாய விசாரணைக்குரிய அல்லது இரகசியமாய் வைக்க வேண்டிய விஷயங்கள் சம்பந்தமாக எதை நினைவில் வைக்க வேண்டும்?
2 இஸ்ரவேலரில் காணாமற்போன ஆடுகளாக இருந்தவர்கள்மீது யெகோவா அக்கறை காட்டினார். (எசேக்கியேல் 34:15, 16-ஐ வாசியுங்கள்.) அவ்வாறே, மந்தையைவிட்டு விலகிப்போன ஆடுகளைப் போன்றோருக்கு உதவ கிறிஸ்தவ மூப்பர்களுக்கு விருப்பம் இருக்கிறது, கடமையும் இருக்கிறது. உதவிபெற விரும்பும் செயலற்ற ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்த மூப்பர்கள் ஒரு பிரஸ்தாபியைக் கேட்டுக்கொள்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்; செயலற்ற அந்த நபர், மோசமான ஒரு பாவம் செய்திருக்கிறார் என்று படிப்பு நடத்துபவருக்குத் தெரியவந்தால் என்ன செய்ய வேண்டும்? நியாய விசாரணைக்குரிய அல்லது இரகசியமாய் வைக்க வேண்டிய விஷயங்கள் சம்பந்தமாக அவராகவே ஆலோசனை கொடுப்பதற்குப் பதிலாக அதை மூப்பர்களிடம் தெரிவிக்கும்படி சொல்ல வேண்டும்; அவர் அதைச் சொல்லவில்லை என்றால் பிரஸ்தாபியே அதைச் சொல்லிவிட வேண்டும்.—லேவி. 5:1; கலா. 6:1.
3. நூறு ஆடுகளை வைத்திருந்த ஒருவர், காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்தபோது எப்படி உணர்ந்தார்?
3 முந்தின கட்டுரையில், இயேசு சொன்ன ஓர் உவமையைச் சிந்தித்தோம். 100 ஆடுகளை வைத்திருந்த ஒருவர், அவற்றில் ஒன்று காணாமற்போனபோது 99 ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமற்போன ஆட்டைத் தேடிச் சென்றார். அதைக் கண்டுபிடித்தபோது அவர் எவ்வளவாய்ச் சந்தோஷப்பட்டார்! (லூக். 15:4–7) கடவுளுடைய மந்தையிலிருந்து காணாமல் போய்விட்ட ஓர் ஆடு திரும்பி வருகையில் நாமும் அவ்வாறே சந்தோஷப்படுகிறோம். செயலற்றவர் மீதுள்ள அன்பின் காரணமாக மூப்பர்களும் சபையிலுள்ள மற்றவர்களும் அவரைப் போய்ப் பார்த்திருக்கலாம். அவர் மந்தைக்குத் திரும்பி வந்து கடவுளுடைய ஆதரவையும் பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டுமென்று அவர்களும் ஆசையாய் இருப்பார்கள். (உபா. 33:27; சங். 91:14; நீதி. 10:22) அவர்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமென்றால், என்ன செய்யலாம்?
4. கலாத்தியர் 6:2, 5-ல் உள்ள குறிப்பு என்ன?
4 யெகோவா தம் ஆடுகள்மீது அன்பு வைத்திருக்கிறார் என்றும், நம்மால் செய்ய முடிந்த காரியங்களை மட்டுமே நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்றும் அவருக்கு அன்போடு எடுத்துச்சொல்லி சபைக்குத் திரும்புவதற்கு அவரை உற்சாகப்படுத்தலாம். பைபிளைப் படிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது, நற்செய்தியைப் பிரசங்கிப்பது ஆகியவை யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிற சில காரியங்கள் எனச் சொல்லலாம். கலாத்தியர் 6:2, 5-ஐ வாசித்துக் காட்டுவது பொருத்தமாயிருக்கும். கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமக்க உதவலாமென்றாலும், ஆன்மீக பொறுப்புகள் என்று வருகையில் ‘அவரவர் பாரத்தை அவரவர்தான் சுமக்க’ வேண்டும் என்பதைக் குறிப்பிடுங்கள். ஏனெனில், நமக்காக வேறொருவர் கடவுளுக்கு உண்மையுள்ளவராய் இருக்க முடியாது.
‘லவுகீக கவலைகள்’ காரணமா?
5, 6. (அ) செயலற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பது ஏன் அவசியம்? (ஆ) சபைக்கு வராமலிருந்தது கெடுதலைத்தான் விளைவித்திருக்கிறது என்பதைச் செயலற்றவர்களுக்கு நீங்கள் எப்படிப் புரிய வைக்கலாம்?
5 செயலற்றவர்களுக்கு எப்படிப்பட்ட உதவி தேவை என்பதை மூப்பர்களும் முதிர்ச்சியுள்ள மற்ற பிரஸ்தாபிகளும் பகுத்துணர வேண்டும்; இதற்கு, செயலற்றவர்கள் மனந்திறந்து பேசுகையில் காதுகொடுத்துக் கேட்பது அவசியம். ‘லவுகீக கவலைகள்’ காரணமாகச் சபைக்கு வராமலிருக்கிற தம்பதியரைச் சந்திக்கப்போகிற ஒரு மூப்பரா நீங்கள்? (லூக். 21:34) அப்படியென்றால், பணப் பிரச்சினைகள் காரணமாகவோ அதிகப்படியான குடும்பப் பொறுப்புகள் காரணமாகவோ அந்தத் தம்பதியர் ஆன்மீக ரீதியில் செயலற்றுப் போயிருக்கலாம் என்பதை மனதில் வையுங்கள். தங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டுமென அவர்கள் நினைக்கலாம்; ஆனால், சபையிலிருந்து பிரிந்திருப்பது அதற்கு உதவப்போவதில்லை என்பதை நீங்கள் அவர்களுக்குப் புரிய வைக்கலாம். (நீதிமொழிகள் 18:1-ஐ வாசியுங்கள்.) அவர்களிடம் இவ்வாறு பக்குவமாகக் கேட்கலாம்: “கூட்டங்களுக்கு வருவதை நிறுத்தியதால் முன்பைவிட சந்தோஷமாக இருக்கிறீர்களா? உங்களுடைய குடும்ப வாழ்க்கை முன்பைவிட நன்றாக இருக்கிறதா? யெகோவாமீது நம்பிக்கை வைப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை நீங்கள் இப்போதும் அனுபவிக்கிறீர்களா?”—நெ. 8:10.
6 இக்கேள்விகளைச் செயலற்றவர்கள் சிந்தித்துப் பார்க்கையில், சபைக்குப் போகாமல் இருப்பதால் தங்கள் ஆன்மீக உணர்வு மழுங்கிவிட்டதோடு சந்தோஷமும் குறைந்துவிட்டதைப் புரிந்துகொள்ளலாம். (மத். 5:3, NW; எபி. 10:24, 25) நற்செய்தியைப் பிரசங்கிக்காமல் இருந்துவிட்டதாலும் தங்கள் சந்தோஷம் பறிபோனதைப் புரிந்துகொள்ளலாம். (மத். 28:19, 20) அப்படியானால், அவர்கள் என்ன செய்வது ஞானமானது?
7. என்ன செய்யும்படி செயலற்றவர்களை நாம் ஊக்கப்படுத்தலாம்?
7 இயேசு இவ்வாறு சொன்னார்: ‘உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்புவதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.’ (லூக். 21:34–36) ஆகவே, ஒரு காலத்தில் அனுபவித்த சந்தோஷத்தை மீண்டும் பெற விரும்பும் செயலற்றவர்களை, கடவுளுடைய சக்திக்காகவும் அவருடைய உதவிக்காகவும் ஜெபிக்குமாறு சொல்வதோடு, அதற்கிசையச் செயல்படுமாறும் ஊக்கப்படுத்தலாம்.—லூக். 11:13.
இடறல் காரணமா?
8, 9. இடறல் அடைந்தவரிடம் ஒரு மூப்பர் எப்படி நியாயத்தை எடுத்துச் சொல்லலாம்?
8 மனித அபூரணத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் ஒத்துப்போவது கடினமாய் இருக்கலாம்; அதனால் ஒரு கிறிஸ்தவர் இடறல் அடையலாம். சபையில் மதிப்புக்குரிய ஒருவர் பைபிள் நியமங்களுக்கு முரணாக நடந்துகொண்டதைப் பார்த்துச் சிலர் இடறல் அடைந்திருக்கிறார்கள். இவ்வாறு இடறல் அடைந்ததால் செயலற்றவராகிவிட்ட ஒருவரை மூப்பர் சந்திக்கும்போது, இதை அவருக்கு உணர்த்தலாம்: யெகோவா யாரையும் இடறல் அடையச் செய்வதில்லை. ஆகவே, அவரோடும் அவருடைய மக்களோடும் வைத்துள்ள பந்தத்தை ஏன் துண்டித்துக்கொள்ள வேண்டும்? அதற்குப் பதிலாக, நடந்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிற “சர்வலோக நியாயாதிபதி” தகுந்த விதத்தில் காரியங்களைச் சரிசெய்வார் என்ற நம்பிக்கையோடு கடவுளைச் சேவிக்க வேண்டும், அல்லவா? (ஆதி. 18:25; கொலோ. 3:23–25) ஒருவர் நிஜமாகவே இடறி விழுந்துவிட்டால், எழும்புவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் அப்படியே இருந்துவிட மாட்டார், அல்லவா?
9 சிலர், தாங்கள் இடறியதற்குக் காரணமான விஷயம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதைப் பிற்பாடு உணர்ந்துகொள்கிறார்கள் எனச் செயலற்றவர்களிடம் மூப்பர் சொல்வது உதவியாய் இருக்கும். சொல்லப்போனால், அவர்களை இடறச் செய்த சூழ்நிலையே இப்போது மாறிப்போயிருக்கலாம் என்றும் சொல்லலாம். ஒருவருக்குச் சிட்சை அளிக்கப்பட்டதன் காரணமாக இடறல் அடைந்திருந்தால், அதைக் குறித்து ஜெபம் செய்வதோடு ஆழ்ந்து சிந்திப்பது, தன் பக்கமும் ஓரளவு தவறு இருக்கிறது என்பதையும், தான் அந்தச் சிட்சையால் இடறல் அடைந்திருக்கக் கூடாது என்பதையும் உணரச் செய்யலாம்.—சங். 119:165; எபி. 12:5–13.
ஏதாவது ஒரு போதனை காரணமா?
10, 11. ஏதாவது ஒரு பைபிள் போதனையை ஏற்றுக்கொள்ள மறுத்தவருக்கு உதவும்போது என்ன நியாயத்தை எடுத்துச் சொல்வது உதவியாய் இருக்கும்?
10 ஏதாவது ஒரு பைபிள் போதனையை ஏற்றுக்கொள்ள முடியாததால் சிலர் கடவுளுடைய மந்தையைவிட்டு விலகிச் சென்றிருக்கலாம். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர், தங்களுக்காகக் கடவுள் செய்த “கிரியைகளை மறந்தார்கள்”; அதோடு, ‘அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை.’ (சங். 106:13) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் அளித்துவருகிற ஆன்மீக உணவு மிகச் சிறந்தது என்பதைச் செயலற்றவருக்கு நினைப்பூட்டுவது உதவியாய் இருக்கலாம். (மத். 24:45, NW) அதன் மூலமாகவே அவரும் முதன்முதலில் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார் என்றும் நினைப்பூட்டலாம். அப்படியானால், அவர் அந்தச் சத்தியத்தில் மீண்டும் நடக்க ஏன் தீர்மானமாய் இருக்கக் கூடாது?—2 யோ. 4.
11 கடவுளுடைய மந்தையைவிட்டுப் பிரிந்துபோனவர்களுக்கு மூப்பர் உதவுகையில், இயேசுவின் போதனைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ளாமல் அவரைவிட்டு விலகிப்போன சீஷர்களைப் பற்றி அவர்களுக்குச் சொல்லலாம். (யோவா. 6:53, 66) கிறிஸ்துவோடும் அவரை உண்மையுடன் பின்பற்றியவர்களோடும் வைத்திருந்த சகவாசத்தை அவர்கள் துண்டித்துக்கொண்டதால், ஆன்மீக உணர்வை இழந்ததோடு சந்தோஷத்தையும் பறிகொடுத்தார்கள். கிறிஸ்தவ சபைக்கு வருவதை நிறுத்திக்கொண்டவர்கள், வேறு எங்காவது மிகச் சிறந்த ஆன்மீக உணவைப் பெற்றிருக்கிறார்களா? இல்லை, ஏனென்றால் இப்படிப்பட்ட உணவு வேறெங்கும் கிடைக்காது!
மோசமான பாவம் காரணமா?
12, 13. மந்தையைவிட்டுப் பிரிந்துபோன ஒருவர், மோசமான பாவம் செய்திருப்பதை ஒப்புக்கொண்டால் அவருக்கு எப்படி உதவலாம்?
12 சிலர் மோசமான பாவம் செய்ததன் காரணமாக, கூட்டங்களுக்குப் போவதை நிறுத்திவிடுகிறார்கள், ஊழியம் செய்வதையும் விட்டுவிடுகிறார்கள். தாங்கள் செய்த குற்றத்தை மூப்பர்களிடம் சொல்லிவிட்டால் தங்களைச் சபை நீக்கம் செய்துவிடுவார்களோ என்று அவர்கள் பயப்படலாம். ஆனால், அவர்கள் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பி, அந்தப் பாவத்தில் தொடர்ந்து ஈடுபடாமல் இருந்தால் சபை நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். (2 கொ. 7:10, 11) மாறாக, அன்போடு வரவேற்கப்படுவார்கள்; அதோடு, மூப்பர்கள் அவர்களுக்குத் தேவையான ஆன்மீக உதவியைக் கொடுப்பார்கள்.
13 நீங்கள், செயலற்ற ஒருவருக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிற முதிர்ச்சியுள்ள ஒரு பிரஸ்தாபியாக இருக்கலாம்; அப்படியென்றால், தான் மோசமான பாவத்தைச் செய்திருப்பதாக அவர் உங்களிடம் சொல்லும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, நீங்களாகவே அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலுவதற்குப் பதிலாக, மூப்பர்களிடம் அதைத் தெரிவிக்கும்படி சொல்லலாம். அதைத் தெரிவிக்க அவருக்கு விருப்பமில்லை என்றால், இந்த விஷயம் சம்பந்தமாகக் கடவுள் கொடுத்திருக்கிற அறிவுரைக்கு இசைய நீங்கள் செயல்பட வேண்டும்; அப்படிச் செய்வது, யெகோவாவுடைய பெயரிலும் சபையின் நலனிலும் உங்களுக்கு அக்கறை இருப்பதைக் காட்டும். (லேவியராகமம் 5:1-ஐ வாசியுங்கள்.) சபைக்குத் திரும்பி வந்து கடவுளுடைய சித்தத்திற்கு இணங்க வாழ விரும்புகிற ஒருவருக்கு எப்படி உதவுவது என்பதை மூப்பர்கள் அறிந்திருக்கிறார்கள். அவருக்கு அன்போடு சிட்சை கொடுக்க வேண்டியிருக்கலாம். (எபி. 12:7–11) கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டால், அதோடு உண்மையிலேயே மனந்திரும்பி அந்தப் பாவத்தைத் தொடர்ந்து செய்யாதிருந்தால், மூப்பர்கள் அவருக்கு உதவுவார்கள்; அவரும் யெகோவாவின் மன்னிப்பைப் பெறுவார்.—ஏசா. 1:18; 55:7; யாக். 5:13–16.
மகன் திரும்பியதால் மகிழ்ச்சி
14. ஊதாரி மகனைப் பற்றி இயேசு சொன்ன உவமையை உங்களுடைய சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.
14 சபையிலிருந்து பிரிந்துபோன ஒருவருக்கு உதவ நியமிக்கப்பட்டவர், லூக்கா 15:11-24-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள உவமையை அவருக்குச் சுட்டிக்காட்டலாம். இயேசு சொன்ன அந்த உவமையில், ஓர் இளைஞன் ஊதாரியாய் வாழ்ந்து தன் சொத்துகளையெல்லாம் அழித்துவிடுகிறான். கடைசியில், அவனது ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைமீது அவனுக்கே வெறுப்பு வந்துவிடுகிறது. பசி மயக்கமும் வீட்டு ஞாபகமும் வாட்டிவதைக்க, அவன் வீட்டிற்கே திரும்பிவிட முடிவு செய்கிறான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய அப்பா பார்த்துவிடுகிறார்; ஓடிப்போய், அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, பாசத்தோடு முத்தமிடுகிறார்; சந்தோஷத்தில் பூரித்துப்போகிறார். இந்த உவமையைச் சிந்தித்துப் பார்ப்பது, மந்தைக்குள் திரும்பி வருவதற்குச் செயலற்றவரைத் தூண்டலாம். இந்தப் பொல்லாத உலகம் சீக்கிரத்தில் அழியவிருப்பதால், அவர் தாமதமின்றி உடனே ‘வீட்டிற்குத் திரும்ப’ வேண்டும்.
15. சிலர் ஏன் சபையைவிட்டு விலகிப்போகிறார்கள்?
15 சபையிலிருந்து பிரிந்துபோகிற எல்லாருடைய விஷயமும் ஊதாரி மகனுடையதைப்போல் இருப்பதில்லை. சிலர், கரையைவிட்டு மெதுமெதுவாய் நகர்ந்து செல்கிற ஒரு படகைப் போன்று கொஞ்சம் கொஞ்சமாக சபையைவிட்டு விலகிப்போகிறார்கள். இன்னும் சிலரோ, பல கவலைகளில் மூழ்கிப்போவதால் ஆன்மீகக் காரியங்களை அசட்டை செய்கிறார்கள். மற்றவர்களோ, சபையிலுள்ள ஒருவரால் இடறல் அடைவதன் காரணமாக, அல்லது பைபிள் போதனைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியாததன் காரணமாகச் சபையைவிட்டு விலகிப்போகிறார்கள். ஒருசிலர், கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிடுகிறார்கள். இந்தக் காரணங்களாலோ வேறு காரணங்களாலோ சபையைவிட்டுப் பிரிந்துபோனவர்கள் காலம் கடந்துபோவதற்குமுன் திரும்பிவர உதவுவதற்கு, இதுவரை நாம் சிந்தித்த குறிப்புகள் உங்களுக்குக் கைகொடுக்கலாம்.
“மகனே, நீ வந்துவிட்டது ரொம்ப சந்தோஷம்!”
16-18. (அ) பல வருடங்களாகச் செயலற்றவராய் இருந்த சகோதரருக்கு ஒரு மூப்பர் எப்படி உதவினார்? (ஆ) அந்தச் சகோதரர் ஏன் செயலற்றவராய் ஆகியிருந்தார், அவருக்கு எப்படி உதவி அளிக்கப்பட்டது, சபையில் அவருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது?
16 ஒரு மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் சபையிலுள்ள மூப்பர்கள் செயலற்றவர்களைப் போய்ச் சந்திப்பதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். நான் பைபிள் படிப்பு நடத்தி சத்தியத்திற்கு வந்திருந்த ஒரு சகோதரருக்கு உதவ நினைத்தேன். அவர் சுமார் 25 வருடங்களாகச் செயலற்றவராய் இருந்தார். அவர் பயங்கரமான பிரச்சினையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்; ஆகவே, பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது அவருக்கு எப்படி உதவும் என்பதை விளக்கிச் சொன்னேன். சீக்கிரத்திலேயே, அவர் ராஜ்ய மன்றத்திற்கு வர ஆரம்பித்தார்; மீண்டும் மந்தைக்குள் வருவதற்கு உறுதியான தீர்மானம் எடுப்பதற்காக பைபிள் படிப்புக்குச் சம்மதித்தார்.”
17 அந்தச் சகோதரர் ஏன் செயலற்றவராய் ஆனார்? அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் ஆன்மீகக் காரியங்களைவிட உலகக் காரியங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு, பைபிள் படிப்பதையும் ஊழியத்திற்குப் போவதையும் கூட்டங்களுக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டேன். பிற்பாடு, என்னை அறியாமலேயே சபையைவிட்டு விலகிப்போயிருந்தேன். ஆனால், அந்த மூப்பர் என்மேல் தனிப்பட்ட விதமாகவும் உள்ளப்பூர்வமாகவும் அக்கறை எடுத்து, நான் மீண்டும் சபைக்கு வர உதவினார்.” அவர் பைபிள் படிப்புக்குச் சம்மதம் தெரிவித்த பிறகு, அவருடைய பிரச்சினைகள் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. அவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவிடமிருந்தும் அவருடைய அமைப்பிடமிருந்தும் கிடைக்கிற அன்பையும் அறிவுரையையும் இழந்துபோயிருந்ததை உணர்ந்தேன்.”
18 சபையில் அவருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது? அவர் சொல்வதாவது: “இயேசு கிறிஸ்து சொன்ன கதையில் வந்த ஊதாரி மகனைப் போலவே நான் உணருகிறேன். அந்தச் சபையில் 30 வருடங்களுக்கு முன்பிருந்தே யெகோவாவை உண்மையோடு சேவித்து வருகிற ஒரு வயதான சகோதரி, ‘மகனே, நீ வந்துவிட்டது ரொம்ப சந்தோஷம்!’ என்று சொன்னது என் இருதயத்தைத் தொட்டுவிட்டது; நான் உண்மையிலேயே வீடு திரும்பியதுபோல உணர்ந்தேன். அந்த மூப்பரும் சபையிலுள்ள எல்லாரும் என்னிடம் காட்டிய அன்புக்கும் கனிவுக்கும் பொறுமைக்கும் அக்கறைக்கும் உள்ளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். யெகோவாமீதும் பிறர்மீதும் அவர்களுக்கு இருந்த அன்புதான் மந்தைக்குள் திரும்பிவர எனக்கு உதவியது.”
உடனடியாகச் செயல்படுமாறு அறிவுறுத்துங்கள்
19, 20. தாமதமின்றி உடனே மந்தைக்குத் திரும்பிவர செயலற்றவர்களை நீங்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம், கடவுள் நம்மிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதில்லை என்பதை அவர்களுக்கு எப்படிக் காட்டலாம்?
19 நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறோம்; இந்தப் பொல்லாத உலகம் சீக்கிரத்தில் முடிவடையப்போகிறது. ஆகவே, கூட்டங்களுக்கு வரும்படி செயலற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள். உடனடியாக வர ஆரம்பிக்கும்படி அறிவுறுத்துங்கள். கடவுளோடு அவர்கள் வைத்திருக்கும் பந்தத்தை முறித்துப்போடவும், உண்மை வணக்கத்தை விட்டுவிட்டால் கவலைகளிலிருந்து விடுபடலாமென்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தவும் சாத்தான் முயலுவதை அவர்களுக்கு நினைப்பூட்டுங்கள். இயேசுவை உண்மையோடு பின்பற்றுகிறவர்களாய் இருந்தால் மட்டுமே நிஜமான புத்துணர்ச்சியைப் பெற முடியும் என்பதை அவர்களுடைய மனதில் பதிய வையுங்கள்.—மத்தேயு 11:28–30-ஐ வாசியுங்கள்.
20 நம்மால் செய்ய முடிந்த காரியங்களையே செய்யும்படி கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதைச் செயலற்றவர்களுக்கு நினைப்பூட்டுங்கள். இயேசு மரிப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு, லாசருவின் சகோதரியான மரியாள் அவருடைய தலையில் விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை ஊற்றியபோது சிலர் அதைக் குறித்து விமர்சித்தார்கள்; அப்போது இயேசு, ‘அவளை விட்டுவிடுங்கள்; . . . அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்’ என்று சொன்னார். (மாற். 14:6–8) ஆலயத்தில் மிகக் குறைந்த மதிப்புடைய காசுகளைக் காணிக்கையாகப் போட்ட விதவையை இயேசு பாராட்டிப் பேசினார்; அந்த விதவையும்கூட தன்னால் இயன்றதைச் செய்தாள். (லூக். 21:1–4) நம்மில் பெரும்பாலோருக்கு, கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஊழியத்தில் ஈடுபடவும் முடியும். தற்போது செயலற்றவர்களாய் இருப்போரில் அநேகராலும் இதே காரியங்களை யெகோவாவின் உதவியோடு செய்ய முடியும்.
21, 22. யெகோவாவிடம் திரும்பி வருவோருக்கு என்ன உறுதியை அளிக்கலாம்?
21 மந்தையைவிட்டு விலகிப்போன ஒருவர் மீண்டும் தன் சகோதரர்களின் முகத்தில் எப்படி விழிப்பது எனத் தயங்கினால், ஊதாரி மகன் திரும்பி வந்தபோது உண்டான பெருமகிழ்ச்சியைப் பற்றி அவருக்கு ஞாபகப்படுத்தலாம். செயலற்றவர்கள் சபைக்குத் திரும்பி வரும்போதும் அதுபோலவே பெருமகிழ்ச்சி உண்டாகிறது. எனவே, பிசாசுக்கு எதிர்த்து நின்று கடவுளிடம் நெருங்கி வருவதற்கு இப்போதே செயல்படும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.—யாக். 4:7, 8.
22 யெகோவாவிடம் திரும்பி வருவோருக்குச் சந்தோஷமான வரவேற்பு காத்திருக்கிறது. (புல. 3:40) முன்பு கடவுளுடைய சேவையில் அவர்கள் அளவில்லா சந்தோஷத்தை அனுபவித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், தாமதமின்றி மந்தைக்குள் திரும்பி வந்தால் அவர்களுக்கு எதிர்காலத்திலும் எண்ணிலடங்கா ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன!
என்ன பதில் சொல்வீர்கள்?
• இடறல் அடைந்ததால் செயலற்றவராகிவிட்ட ஒரு கிறிஸ்தவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
• ஏதாவது ஒரு பைபிள் போதனையை ஏற்றுக்கொள்ள முடியாததால் கடவுளுடைய மந்தையைவிட்டு விலகிப்போன ஒருவருக்கு எப்படி நியாயத்தை எடுத்துச் சொல்லலாம்?
• சபைக்குத் திரும்பிவரத் தயங்குகிற ஒருவருக்கு எப்படி உதவலாம்?
[பக்கம் 13-ன் படம்]
செயலற்ற ஒருவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்
[பக்கம் 15-ன் படம்]
ஊதாரி மகனைப் பற்றி இயேசு சொன்ன உவமையைச் சிந்தித்துப் பார்ப்பது மந்தைக்குள் திரும்பிவர சிலரைத் தூண்டலாம்