இயேசுவைப் போலவே அன்புடன் கற்பியுங்கள்
“அந்த மனிதர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை.”—யோவா. 7:46.
1. இயேசு கற்பித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் எப்படி உணர்ந்தார்கள்?
இயேசு கற்பிப்பதைக் காதாரக் கேட்பது எவ்வளவு பரவசமாயிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! அவர் கற்பிப்பதைக் கேட்ட மக்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதற்கு பைபிளிலிருந்து இதோ சில உதாரணங்கள்: இயேசுவின் ஊர்க்காரர்கள் ‘அவர் பேசிய மனங்கவரும் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்’ எனச் சுவிசேஷ எழுத்தாளர் லூக்கா சொல்கிறார். இயேசுவின் மலைப்பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் “அவர் கற்பித்த விதத்தைக் கண்டு மலைத்துப்போனார்கள்” என மத்தேயு விவரிக்கிறார். இயேசுவைக் கைதுசெய்வதற்காக அனுப்பப்பட்ட அதிகாரிகள் அவரைப் பிடித்து வராமல், “அந்த மனிதர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்று சொன்னதாக யோவான் தெரிவிக்கிறார்.—லூக். 4:22; மத். 7:28; யோவா. 7:46.
2. இயேசு எவ்விதங்களில் கற்பித்தார்?
2 அந்த அதிகாரிகள் சொன்னது நூற்றுக்குநூறு உண்மை. இதுவரை வாழ்ந்தவர்களில் மிகச் சிறந்த போதகர் இயேசுதான். அவர் தெளிவாக, எளிமையாகக் கற்பித்தார்; எவரும் மறுக்க முடியாத விதத்தில் நியாயங்காட்டிப் பேசினார். உவமைகளையும் கேள்விகளையும் திறம்பட பயன்படுத்தினார். பதவியில் இருந்தவர்களிடமும் சரி பாமர மக்களிடமும் சரி, அவரவருக்கு ஏற்ற விதத்தில் கற்பித்தார். அவர் கற்பித்த விஷயங்கள் புரிந்துகொள்வதற்கு எளிதாய் இருந்தன, ஆனால் கருத்தாழமிக்கவையாய் இருந்தன. என்றபோதிலும், அவர் மிகச் சிறந்த போதகராக விளங்கியதற்கு இவை மட்டுமே காரணங்கள் அல்ல.
அன்பு—முக்கியப் பண்பு
3. ஒரு போதகராக, இயேசு எவ்வாறு அக்காலத்து மதத் தலைவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவராக இருந்தார்?
3 அக்காலத்து வேத அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் மத்தியில் புத்திக்கூர்மையுள்ள பலர் இருந்திருப்பார்கள்; அவர்கள் படித்த மேதைகளாக, மக்களுக்குக் கற்பிப்பதில் திறமைசாலிகளாக இருந்திருப்பார்கள். ஆனால், இயேசு கற்பித்த விதம், அவர்கள் கற்பித்த விதத்திலிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டது. எப்படி? அந்த மதத் தலைவர்கள், பாமர மக்கள்மீது துளியும் அன்பு காட்டவில்லை; மாறாக, அவர்களை இகழ்ந்து, “சபிக்கப்பட்டவர்கள்” என்று தரக்குறைவாகப் பேசினார்கள். (யோவா. 7:49) ஆனால், இயேசு என்ன செய்தார்? ‘மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்ததால்’ அவர்களைக் கண்டு மனதுருகி அவர்களுக்கு உதவினார். (மத். 9:36) அவர்கள்மீது கனிவும் கரிசனையும் கருணையும் காட்டினார். அந்த மதத் தலைவர்கள் கடவுள்மீது உண்மையான அன்பு காட்டவில்லை. (யோவா. 5:42) ஆனால், இயேசு தம் தகப்பன்மீது அன்பு காட்டினார், அவருடைய சித்தத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு செய்தார். அந்த மதத் தலைவர்கள் தங்களுடைய வசதிக்கேற்ப கடவுளுடைய வார்த்தையைத் திரித்துப் பேசினார்கள். ஆனால், இயேசு “கடவுளுடைய வார்த்தையை” நேசித்தார், கற்பித்தார், விளக்கிக் கூறினார், ஆதரித்துப் பேசினார், அதன்படி வாழ்ந்தும் காட்டினார். (லூக். 11:28) ஆம், கிறிஸ்துவின் குணாம்சத்தில் அன்பு மேலோங்கியிருந்தது. மக்களுக்கு அவர் கற்பித்த விஷயங்களிலும் சரி, அவர்களோடு பழகிய விதத்திலும் சரி, அவர்களுக்கு அறிவுரைகள் கொடுத்த விதத்திலும் சரி, அன்பே மேலோங்கியிருந்தது.
4, 5. (அ) நாம் அன்புடன் கற்பிப்பது ஏன் முக்கியம்? (ஆ) கற்பிக்கும்போது அறிவும் திறமையும் ஏன் முக்கியம்?
4 நம்மைப் பற்றி என்ன? கிறிஸ்தவர்களான நாம், ஊழியத்திலும் வாழ்க்கையிலும் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறோம். (1 பே. 2:21) பைபிள் விஷயங்களைக் கற்பிப்பது மட்டுமே நம்முடைய குறிக்கோள் அல்ல, யெகோவாவின் பண்புகளை, முக்கியமாக அவருடைய அன்பை, வெளிக்காட்டுவதும் நம்முடைய குறிக்கோளாக இருக்கிறது. நமக்கு அறிவு நிறைய இருந்தாலும் சரி ஓரளவு இருந்தாலும் சரி, கற்பிக்கும் திறமை அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி, நாம் மக்களிடம் அன்பு காட்டுவதே முக்கியம்; அப்படிச் செய்வது, சத்தியம் அவர்களுடைய இருதயத்தைத் தொடுவதற்குப் பெரிதும் கைகொடுக்கும். ஆகவே, சீடராக்கும் வேலையில் அதிக திறம்பட்டவர்களாய் ஆவதற்கு, நாம் இயேசுவைப் போலவே அன்புடன் கற்பிக்க வேண்டும்.
5 உண்மைதான், நாம் சிறந்த போதகர்களாக இருப்பதற்கு, கற்பிக்கிற விஷயத்தைப் பற்றிய அறிவும், அந்த அறிவைப் புகட்டுவதற்கான திறமையும் நமக்கு இருக்க வேண்டும். அறிவையும் திறமையையும் பெற்றுக்கொள்ள அன்று இயேசு தம் சீடர்களுக்கு உதவினார்; நாம் அவற்றைப் பெற்றுக்கொள்ள யெகோவா தம் அமைப்பின் மூலம் இன்று நமக்கு உதவுகிறார். (ஏசாயா 54:13-ஐயும், லூக்கா 12:42-ஐயும் வாசியுங்கள்.) ஆனால், அறிவு நிறைந்த மனதிலிருந்து மட்டும் கற்பிப்பது போதாது, அன்பு நிறைந்த இருதயத்திலிருந்தும் கற்பிக்க வேண்டும். இப்படி அறிவோடும் திறமையோடும் அன்பு சேரும்போது, கைமேல் பலன் கிடைப்பது உறுதி. அப்படியானால், நாம் என்னென்ன விதங்களில் அன்புடன் கற்பிக்கலாம்? இயேசுவும் அவருடைய சீடர்களும் எவ்வாறு அன்புடன் கற்பித்தார்கள்? இப்போது பார்க்கலாம்.
யெகோவாமீது நாம் அன்பு காட்ட வேண்டும்
6. நாம் நேசிக்கிற ஒரு நபரைப் பற்றி எப்படியெல்லாம் பேசுவோம்?
6 பொதுவாக, நாம் நேசிக்கிற விஷயங்களைப் பற்றி ஆசை ஆசையாகப் பேசுவோம். அப்போது நமக்குள் உற்சாகம் கொப்பளிக்கும், உணர்ச்சிகள் பொங்கும்; நம் வாய் மட்டுமல்ல, நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் உயிர்த்துடிப்போடு பேசும். அதிலும், நாம் நேசிக்கிற ஒரு நபரைப் பற்றிப் பேசும்போது சொல்லவே வேண்டாம்! அந்த நபரின் அருமை பெருமைகளையெல்லாம் சொல்லத் துடிப்போம். அவரைப் புகழ்ந்து பாராட்டுவோம், அவருக்கு ஆதரவாகப் பேசுவோம். எதற்காக இப்படியெல்லாம் செய்கிறோம்? மற்றவர்களுக்கும் அந்த நபரைப் பிடித்துப்போக வேண்டும் என்பதற்காகத்தான்!
7. கடவுள்மீது இயேசுவுக்கு இருந்த அன்பு என்னவெல்லாம் செய்ய அவரைத் தூண்டியது?
7 யெகோவாவை நேசிக்க மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்குமுன் முதலாவது நாம் அவரைப் பற்றி அறிந்துகொண்டு அவர்மீது அன்பு காட்ட வேண்டும். சொல்லப்போனால், கடவுள்மீது அன்பு காட்டுவதுதான் உண்மை வணக்கத்தின் சாராம்சம். (மத். 22:36-38) இதற்கு இயேசு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு மூச்சோடும், முழு பலத்தோடும் யெகோவாமீது அவர் அன்பு காட்டினார். பரலோகத்தில் கோடானுகோடி வருடங்கள் தம் தகப்பனோடு இருந்ததால், அவரைப் பற்றி இயேசு மிக நன்றாக அறிந்திருந்தார். அதனால்தான், “தகப்பன்மீது நான் அன்பு வைத்திருக்கிறேன்” என்றார். (யோவா. 14:31) இயேசுவின் சொல் செயல் எல்லாவற்றிலும் இந்த அன்பு பளிச்சிட்டது. கடவுளுக்குப் பிரியமான காரியங்களை எப்போதும் செய்துவர இந்த அன்பே அவரைத் தூண்டியது. (யோவா. 8:29) கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிவந்த மதத் தலைவர்களைக் கண்டனம் செய்ய இந்த அன்பே அவரை உந்துவித்தது. யெகோவாவைப் பற்றிப் பேசுவதற்கும், மற்றவர்கள் அவரை அறிந்துகொண்டு, அவர்மீது அன்பு காட்ட உதவுவதற்கும் இந்த அன்பே அவரைத் தூண்டியது.
8. கடவுள்மீது இயேசுவின் சீடர்களுக்கு இருந்த அன்பு என்ன செய்ய அவர்களைத் தூண்டியது?
8 இயேசுவைப் போலவே, முதல் நூற்றாண்டு சீடர்களும் யெகோவாமீது அன்பு வைத்திருந்தார்கள்; இந்த அன்புதான் நற்செய்தியைத் தைரியத்தோடும் பக்திவைராக்கியத்தோடும் அறிவிக்க அவர்களுக்கு ஊக்கமளித்தது. அதிகாரமிக்க மதத் தலைவர்கள் தங்களை எதிர்த்தபோதிலும், எருசலேம் முழுவதையும் தங்களுடைய போதனைகளால் நிரப்பினார்கள். தாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசாமல் அவர்களால் இருக்கவே முடியவில்லை. (அப். 4:20; 5:28) யெகோவா தங்களுக்குப் பக்கபலமாக இருப்பாரென்றும், தங்களை ஆசீர்வதிப்பாரென்றும் அவர்கள் நம்பினார்கள்; அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை, ஆம், அவர்களை யெகோவா ஆசீர்வதித்தார்! இயேசு இறந்து 30 வருடங்கள்கூட ஆகவில்லை, அதற்குள்ளாகவே “நற்செய்தி வானத்தின் கீழிருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது” என்று அப்போஸ்தலன் பவுலால் எழுத முடிந்தது.—கொலோ. 1:23.
9. கடவுளிடமுள்ள நம் அன்பான பந்தத்தை எவ்வாறு பலப்படுத்தலாம்?
9 கற்பிப்பதில் அதிக திறம்பட்டவர்களாய் ஆவதற்கு, நாமும்கூட கடவுளோடுள்ள அன்பான பந்தத்தைப் பலப்படுத்த வேண்டும். அதை எவ்வாறு செய்யலாம்? ஜெபத்தில் கடவுளோடு அடிக்கடி பேசுவதன் மூலம் அவ்வாறு செய்யலாம். அதோடு, அவருடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பது, பைபிள் பிரசுரங்களை வாசிப்பது, சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது ஆகியவற்றின் மூலமும் அவ்வாறு செய்யலாம். கடவுளைப் பற்றி மேன்மேலும் அறிந்துகொள்ளும்போது, அவர்மீதுள்ள அன்பு நம் இருதயத்தில் பொங்கும். அந்த அன்பை நம் சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்டும்போது, மற்றவர்கள் அதைக் கவனித்து, யெகோவாவிடம் நெருங்கி வரத் தூண்டப்படலாம்.—சங்கீதம் 104:33, 34-ஐ வாசியுங்கள்.
கற்பிக்கும் விஷயங்களை நாம் நேசிக்க வேண்டும்
10. சிறந்த போதகருக்கே உரிய அடையாளம் என்ன?
10 சிறந்த போதகருக்கே உரிய அடையாளம் என்ன? கற்பிக்கும் விஷயங்களை அவர் நேசிக்க வேண்டும். அவ்விஷயங்கள் உண்மை என்றும், முக்கியம் என்றும், மதிப்பு வாய்ந்தவை என்றும் அவர் நம்ப வேண்டும். கற்பிக்கும் விஷயத்தின் மீது அவருக்கு ஆர்வம் இருந்தால், அவர் உற்சாகத்தோடு கற்றுத்தருவார்; மாணாக்கர்களும் அவர் கற்பிப்பதைக் கடைப்பிடிக்கத் தூண்டப்படுவார்கள். மறுபட்சத்தில், கற்பிக்கும் விஷயங்களை ஒரு போதகர் நெஞ்சார நேசிக்காவிட்டால், அந்த விஷயங்களை மாணாக்கர்கள் மதிப்பார்களென அவர் எதிர்பார்க்க முடியுமா? ஆகவே, போதகராக உங்களுடைய முன்மாதிரி மிகமிக முக்கியம். இயேசு இவ்வாறு கூறினார்: “நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவனும் தன் ஆசிரியரைப் போலவே இருப்பான்.”—லூக். 6:40, த நியூ பார்க்லே வர்ஷன் இன் மாடர்ன் இங்லிஷ்.
11. தாம் கற்பித்த விஷயங்களை இயேசு ஏன் நேசித்தார்?
11 இயேசு, தாம் கற்பித்த விஷயங்களை நேசித்தார். தம்மிடமுள்ள அரும்பெரும் பொக்கிஷங்களைக் கொடுக்க விரும்பினார்; அதாவது, பரலோகத் தகப்பனைப் பற்றிய சத்தியங்களையும், ‘கடவுளுடைய வார்த்தைகளையும்,’ ‘முடிவில்லா வாழ்வைத் தரும் வார்த்தைகளையும்’ மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்பினார். (யோவா. 3:34; 6:68) இயேசு கற்பித்த சத்தியங்கள் தீயவற்றை அம்பலப்படுத்தின, நல்லவற்றைச் சிறப்பித்துக் காட்டின. அதோடு, போலி மதத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு, பிசாசின் கொடுமைக்கு ஆளாகியிருந்தவர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தன. (அப். 10:38) அந்தச் சத்தியங்களை இயேசு நேசித்தார் என்பது அவருடைய போதனைகளில் மட்டுமல்ல அவருடைய ஒவ்வொரு செயலிலும் பளிச்சிட்டது.
12. நற்செய்தியை அறிவிப்பது பற்றி அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு உணர்ந்தார்?
12 இயேசு சத்தியத்தை நேசித்ததைப் போலவே அவருடைய சீடர்கள், யெகோவாவையும் கிறிஸ்துவையும் பற்றிய சத்தியங்களை நெஞ்சார நேசித்தார்கள், பொக்கிஷமாய்ப் போற்றினார்கள்; அதனால்தான் எதிரிகளின் அச்சுறுத்தலுக்குக்கூட அஞ்சாமல் அவற்றை அறிவித்து வந்தார்கள். ரோமிலிருந்த சக கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “நற்செய்தியை அறிவிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நற்செய்தியை அறிவிப்பதற்கு நான் வெட்கப்படுவதில்லை; ஏனென்றால், அது கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது; . . . விசுவாசிக்கிற அனைவரையுமே அது மீட்புக்கு வழிநடத்துகிறது.” (ரோ. 1:15, 16) சத்தியத்தை அறிவிக்கும் வேலையை பவுல் கௌரவமாகக் கருதினார். “கிறிஸ்துவிடமிருந்து வரும் எல்லையில்லா ஆசீர்வாதங்களைப் பற்றிய நற்செய்தியைப் புறதேசத்தாரிடம் அறிவிப்பதற்கு . . . கடவுள் தமது அளவற்ற கருணையை எனக்கு அளித்தார்” என அவர் எழுதினார். (எபே. 3:8, 9) யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி பவுல் கற்பித்தபோது அவருக்குள் எந்தளவு உற்சாகம் பீறிட்டிருக்கும் என்பதை நம்மால் நன்றாகவே கற்பனை செய்துபார்க்க முடிகிறது.
13. நற்செய்தியை நேசிக்க என்ன காரணங்கள் இருக்கின்றன?
13 படைப்பாளரைக் குறித்து நன்கு அறிந்துகொள்ள பைபிளில் காணப்படும் நற்செய்தி நமக்கு உதவுகிறது; அவரோடு ஓர் அன்பான பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கும் உதவுகிறது. வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்களை அளிக்கிறது; நம் வாழ்க்கையை மாற்றியமைக்க உதவுகிறது; நம் உள்ளத்தில் நம்பிக்கையை வேரூன்றச் செய்கிறது; துன்பத்தில் துவண்டுவிடாமல் நம்மைப் பாதுகாக்கிறது. அதோடு, என்றென்றைக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. ஆம், நற்செய்திக்கு நிகர் நற்செய்திதான்; வேறு எந்தக் கல்வியறிவும் அதற்கு ஈடாகாது. ஆனந்தத்தை அள்ளித்தரும் இந்த நற்செய்தி நமக்குக் கிடைத்திருக்கிற அரும்பெரும் பரிசு என்றால் அது மிகையாகாது. அப்பேர்ப்பட்ட ஒரு பரிசை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்!—அப். 20:35.
14. கற்பிக்கும் விஷயங்களை நாம் எப்படி இன்னும் அதிகமாய் நேசிக்கலாம்?
14 நற்செய்தியை இன்னும் அதிகமாய் நேசிக்க நீங்கள் என்ன செய்யலாம்? கடவுளுடைய வார்த்தையை வாசிக்கையில், அவ்வப்போது நிறுத்தி, வாசித்த விஷயங்களை யோசித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு, இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது நீங்களும் அவர் கூடவே இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள்; அல்லது அப்போஸ்தலன் பவுலோடு சேர்ந்து பயணிப்பதுபோல் கற்பனை செய்து பாருங்கள். புதிய உலகத்தில் இருப்பதுபோன்ற காட்சியை உங்கள் மனத்திரையில் ஓடவிடுங்கள்; அந்த வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாய் இருக்கும் என்ற சிந்தனையில் லயித்துவிடுங்கள். நற்செய்திக்கு நீங்கள் கீழ்ப்படிந்ததால் கிடைத்திருக்கும் ஆசீர்வாதங்களையெல்லாம் யோசித்துப் பாருங்கள். நற்செய்தியை இப்படி அதிகமதிகமாய் நேசித்தீர்களென்றால், உங்கள் மாணாக்கர்கள் அதை எளிதில் கண்டுகொள்வார்கள். அதனால்தான், கற்றுக்கொண்டவற்றைக் குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், கற்பிக்கும் விஷயங்களுக்கு எப்போதும் கவனம் செலுத்த வேண்டும்.—1 தீமோத்தேயு 4:15, 16-ஐ வாசியுங்கள்.
மக்கள்மீது அன்பு காட்ட வேண்டும்
15. போதகர் ஏன் தன் மாணாக்கர்கள்மீது அன்பு காட்ட வேண்டும்?
15 சிறந்த போதகர் ஒருவர் தன் மாணாக்கர்களிடம் சகஜமாகப் பழகுவார்; அப்போதுதான் அவர்கள் அவரிடம் ஆர்வமாகக் கற்றுக்கொள்வார்கள், பாடத்தில் ஒன்றிவிடுவார்கள், மனதில் இருப்பதைத் தயங்காமல் சொல்வார்கள். அன்பான ஒரு போதகர் தன் மாணாக்கர்களுக்கு அறிவைப் புகட்டுகிறார்; ஏனென்றால், அவர்கள்மீது அவர் உண்மையிலேயே அக்கறை வைத்திருக்கிறார். அவர்களுடைய தேவைகளுக்கும் புரிந்துகொள்ளும் தன்மைக்கும் ஏற்றாற்போல் கற்பிக்கிறார். அவர்களுடைய திறமைகளையும் சூழ்நிலைகளையும் மனதில் வைத்துக் கற்பிக்கிறார். போதகர்கள் அப்படிப்பட்ட அன்பைக் காட்டும்போது மாணாக்கர்கள் அதைத் தெளிவாக உணர்ந்துகொள்வார்கள் என்பதால் கற்பிப்பதும் சரி கற்றுக்கொள்வதும் சரி, இரண்டுமே சுவாரஸ்யமாக இருக்கும்.
16. எந்தெந்த வழிகளில் மக்கள்மீது இயேசு அன்பு காட்டினார்?
16 அப்படிப்பட்ட அன்பைத்தான் இயேசு காட்டினார். தமது உன்னத அன்புக்கு அத்தாட்சியாகத் தம்முடைய பரிபூரண உயிரையே கொடுத்து மக்களை மீட்டார். (யோவா. 15:13) அவர்களுடைய சரீர மற்றும் ஆன்மீகத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் அவர் சளைக்கவே இல்லை. மக்கள் தம்மைத் தேடிவர வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்காமல் அவரே நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்துபோய் அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். (மத். 4:23-25; லூக். 8:1) அவர் பொறுமைசாலியாக இருந்தார், மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டார். தம்முடைய சீடர்களைத் திருத்த வேண்டிய சமயத்தில் அன்போடு திருத்தினார். (மாற். 9:33-37) நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் அவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்று நம்பிக்கையூட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார். இயேசுவுக்கு இணையாக ஓர் அன்பான போதகர் இதுவரை பிறந்ததில்லை. சீடர்கள்மீது அவர் அன்பு காட்டியதால் அவர்களும் அவர்மீது அன்பு காட்டத் தூண்டப்பட்டார்கள், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் தூண்டப்பட்டார்கள்.—யோவான் 14:15-ஐ வாசியுங்கள்.
17. இயேசுவின் சீடர்கள் எவ்வாறு மற்றவர்கள்மீது அன்பு காட்டினார்கள்?
17 இயேசுவைப் போலவே அவருடைய சீடர்களும், நற்செய்தியைக் கேட்ட ஆட்கள்மீது அன்பையும் பாசத்தையும் அளவில்லாமல் பொழிந்தார்கள். துன்புறுத்தலைச் சகித்து, உயிரையே பணயம் வைத்து மற்றவர்களுக்குச் சேவை செய்தார்கள்; இவ்வாறு நற்செய்தியை வெற்றிகரமாகப் பிரசங்கித்தார்கள். அந்த நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள்மீது அவர்களுக்கு எந்தளவுக்குப் பாசம் இருந்தது! இதை அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்கிறோம்: “பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளை நெஞ்சார நேசிப்பதுபோல் உங்களை நேசித்து உங்களிடம் மென்மையாக நடந்துகொண்டோம்; இவ்வாறு, உங்கள் மீதுள்ள கனிவான பாசத்தினால், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமல்ல, எங்கள் உயிரையே உங்களுக்காகக் கொடுப்பதற்கு மிகுந்த ஆவலோடு இருந்தோம்; அந்தளவுக்கு நீங்கள் எங்களுடைய அன்புக்குரியவர்களாக ஆகியிருந்தீர்கள்.” (1 தெ. 2:7, 8) மனதைத் தொடும் எப்பேர்ப்பட்ட அருமையான வார்த்தைகள்!
18, 19. (அ) பிரசங்க வேலைக்காக நாம் ஏன் மனமுவந்து தியாகங்களைச் செய்கிறோம்? (ஆ) நாம் காட்டுகிற அன்பைப் பலரும் கவனிக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.
18 இன்றும்கூட யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் மக்கள்மீது அன்பு காட்டுகிறோம்; கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவருக்குச் சேவை செய்யவும் ஏங்குகிற ஆட்களைக் கண்டுபிடிப்பதற்காக உலகின் மூலை முடுக்கெல்லாம் தேடிவருகிறோம். சொல்லப்போனால், கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்தாற்போல் ஒவ்வொரு வருடமும் நூறு கோடிக்கும் அதிகமான மணிநேரத்தை ஊழியத்தில் செலவிட்டிருக்கிறோம். இந்த வேலையை இன்னமும் செய்துவருகிறோம். இதற்காக நம்முடைய நேரம், உடல்பலம், பொருள்வளம் ஆகியவற்றைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் அதை நாம் மனமுவந்து செய்கிறோம். இயேசு அறிந்திருந்ததைப் போல், முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்துகிற திருத்தமான அறிவை மக்கள் பெற வேண்டுமென்பதே அன்பான நம் கடவுளுடைய சித்தமென அறிந்திருக்கிறோம். (யோவா. 17:3; 1 தீ. 2:3, 4) நல்மனமுள்ளவர்களும் நம்மைப் போலவே யெகோவாவைப் பற்றி அறிந்துகொண்டு அவருக்குச் சேவைசெய்யும்படி உதவ அன்பே நம்மைத் தூண்டுகிறது.
19 நாம் காட்டுகிற அன்பைப் பலரும் கவனிக்கிறார்கள். உதாரணத்திற்கு, அமெரிக்காவிலுள்ள பயனியர் சகோதரி ஒருவரின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; தங்கள் அன்புக்குரியவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்களுக்கு ஆறுதல் கடிதம் எழுதுவது அவருடைய வழக்கம். அவர் எழுதிய கடிதத்திற்கு ஒருவர் இவ்வாறு பதில் எழுதியிருந்தார்: “இந்தக் கடிதத்தைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பின் அறிமுகமில்லாத ஒருவருக்கு, அதுவும் சோகத்தில் மூழ்கியிருக்கிற ஒருவருக்கு ஆறுதல் சொல்லிக் கடிதம் எழுதுகிறவர்கள்கூட இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது. சகமனிதர் மீதும் அவர்களுக்கு வழிகாட்டுகிற கடவுள் மீதும் நிச்சயமாகவே உங்களுக்கு அன்பு இருக்கிறதென்று சொல்வேன்.”
20. அன்புடன் கற்பிப்பது எந்தளவுக்கு முக்கியம்?
20 அன்பும் திறமையும் ஒன்றுசேரும்போது அதி அற்புதமான பலன் கிடைக்கும் என ஒருவர் கூறினார். நம் ஊழியத்திலும் இதுவே உண்மை என்று சொல்லலாம்; கற்பிக்கும்போது, மாணாக்கர்களுடைய மனதை யெகோவாவைப் பற்றிய அறிவாலும், அவர்களுடைய இருதயத்தை அவர் மீதுள்ள அன்பாலும் நிரப்பவே நாம் முயற்சியெடுக்கிறோம். ஆம், கற்பிப்பதில் அதிக திறம்பட்டவர்களாய் ஆக வேண்டுமென்றால், நமக்குக் கடவுள்மீது அன்பு இருக்க வேண்டும், சத்தியத்தின்மீது அன்பு இருக்க வேண்டும், மக்கள்மீதும் அன்பு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பை நாம் வளர்த்துக்கொண்டு அதை ஊழியத்தில் காட்டும்போது, கொடுப்பதால் கிடைக்கிற சந்தோஷத்தைப் பெறுவோம், அதோடு இயேசுவைப் போலவே யெகோவாவைப் பிரியப்படுத்துகிறோம் என்ற மனத்திருப்தியையும் பெறுவோம்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• மற்றவர்களுக்குக் கற்பிக்கிற நாம் ஏன் . . .
கடவுள்மீது அன்பு காட்ட வேண்டும்?
கற்பிக்கிற விஷயங்களை நேசிக்க வேண்டும்?
மாணாக்கர்மீது அன்பு காட்ட வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
இயேசு கற்பித்த விதம் அக்காலத்து வேத அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களிடமிருந்து எப்படி வித்தியாசமானதாக இருந்தது?
[பக்கம் 18-ன் படம்]
கற்பிப்பதில் சிறந்து விளங்க அறிவும் திறமையும் அவசியம், அன்பு அத்தியாவசியம்