உங்கள் ஜெபங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன?
“ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.”—சங். 65:2.
1, 2. யெகோவாவின் ஊழியர்கள் அவரிடம் ஏன் நம்பிக்கையோடு ஜெபம் செய்யலாம்?
யெகோவா தமது உண்மையுள்ள ஊழியர்கள் செய்கிற ஜெபங்களை ஒருபோதும் அசட்டை செய்வதில்லை. அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்பதில் நாம் உறுதியோடு இருக்கலாம். லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் ஒரே நேரத்தில் அவரிடம் ஜெபம் செய்தாலும், அவர்கள் ஒவ்வொருவருடைய ஜெபத்தையும் அவரால் கேட்க முடியும்.
2 தனது வேண்டுதல்களுக்கெல்லாம் கடவுள் செவிகொடுத்தார் எனச் சங்கீதக்காரனாகிய தாவீது உறுதியாக நம்பினார்; அதனால்தான், “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்” என்று பாடினார். (சங். 65:2) யெகோவாவின் உண்மையுள்ள ஊழியராக இருந்ததால்தான் அவருடைய ஜெபங்கள் கேட்கப்பட்டன. ஆகையால், நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் செய்கிற ஜெபங்கள், யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருப்பதையும், உண்மை வணக்கம்தான் எனக்கு முக்கியம் என்பதையும் காட்டுகின்றனவா? என் ஜெபங்கள் என்னைப் பற்றி என்ன சொல்கின்றன?’
மனத்தாழ்மையோடு ஜெபம் செய்யுங்கள்
3, 4. (அ) ஜெபம் செய்யும்போது நாம் என்ன மனநிலையைக் காட்ட வேண்டும்? (ஆ) வினைமையான பாவம் செய்ததன் காரணமாக ‘மன சஞ்சலங்கள்’ நம்மை வாட்டி வதைத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
3 கடவுள் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க வேண்டுமானால், நாம் மனத்தாழ்மையோடு ஜெபிக்க வேண்டும். (சங். 138:6) தன்னை ஆராய்ந்து பார்க்கும்படி யெகோவாவிடம் தாவீது கேட்டார்; “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை [“மன சஞ்சலங்களை,” NW] அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” என்று அவர் ஜெபம் செய்தார். ஜெபம் செய்யும்போது நாமும் இதே மனநிலையைக் காட்ட வேண்டும். (சங். 139:23, 24) இப்படி ஜெபம் செய்வதோடு அவர் நம்மை ஆராய்ந்து பார்க்க அனுமதிக்கவும் வேண்டும்; அதுமட்டுமல்ல, அவருடைய வார்த்தையிலுள்ள ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். அப்படிச் செய்யும்போது யெகோவா நம்மை “நித்திய வழியிலே” நடத்துவார், முடிவில்லா வாழ்வுக்கான வழியில் நடக்க நமக்கு உதவுவார்.
4 ஏதோவொரு வினைமையான பாவம் செய்ததன் காரணமாக ‘மன சஞ்சலங்கள்’ நம்மை வாட்டி வதைத்தால் என்ன செய்வது? (சங்கீதம் 32:1-5-ஐ வாசியுங்கள்.) குறுகுறுக்கும் மனசாட்சியை அடக்க முயலுவது நம்முடைய சக்தியையே உறிஞ்சிவிடும்; ஆம், கோடை காலத்து வெயில் ஒரு மரத்தின் ஈரப்பதத்தை எப்படி உறிஞ்சிவிடுமோ அப்படியே உறிஞ்சிவிடும். தாவீது, தான் செய்த பாவத்தின் காரணமாகத் தன் சந்தோஷத்தைத் தொலைத்தார், இதனால் ஒருவேளை அவரது உடல்நிலைகூடப் பாதிக்கப்பட்டிருக்கும். தன் பாவத்தைக் குறித்துக் கடவுளிடம் அறிக்கையிட்ட பிறகே அவர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருப்பார். யெகோவா ‘தன் மீறுதலை மன்னித்துவிட்டார்’ என்பதை அறிந்தபோது அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் எனக் கற்பனை செய்துபாருங்கள். அவரைப் போலவே, கடவுளிடம் பாவ அறிக்கை செய்வது தவறுசெய்த ஒருவருக்கு மனநிம்மதியை அளிக்கும்; என்றாலும், அவர் மீண்டும் ஆன்மீக ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு மூப்பர்களின் உதவியையும் நாட வேண்டும்.—நீதி. 28:13; யாக். 5:13-16.
மன்றாடுங்கள், நன்றி சொல்லுங்கள்
5. யெகோவாவிடம் மன்றாடுவது எதை அர்த்தப்படுத்துகிறது?
5 ஏதோவொன்றை நினைத்து நாம் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், பவுலின் பின்வரும் ஆலோசனையைக் கடைப்பிடிக்க வேண்டும்: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலி. 4:6) மன்றாடுதல் என்பது “மனத்தாழ்மையோடு கெஞ்சிக் கேட்பதை” அர்த்தப்படுத்துகிறது. அப்படியானால், ஏதோவொரு ஆபத்தை அல்லது துன்புறுத்தலைச் சந்திக்கும்போது யெகோவாவுடைய உதவியையும் வழிநடத்துதலையும் கேட்டு நாம் மன்றாட வேண்டும்.
6, 7. நம்முடைய ஜெபங்களில் நாம் என்னென்ன காரணங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்?
6 ஆனாலும், ஏதோவொன்று தேவைப்படும்போது மட்டுமே ஜெபம் செய்தோமென்றால், நம் உள்நோக்கம் சரியல்ல என்றே அர்த்தம். நம்முடைய விண்ணப்பங்களை “நன்றியுடன்கூடிய” ஜெபத்தில் ஏறெடுக்க வேண்டுமென பவுல் சொன்னார். தாவீதைப் போலவே யெகோவாவுக்கு நன்றி சொல்ல நமக்கும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன; தாவீது இவ்வாறு நன்றி சொன்னார்: ‘யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவை; வானத்திலும் பூமியிலும் உள்ளவையெல்லாம் உம்முடையவை; யெகோவாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். . . . எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.’—1 நா. 29:11-13.
7 உணவுக்காக இயேசு கடவுளுக்கு நன்றி சொன்னார்; அதோடு, தம் கடைசி இரவு விருந்தன்று ரொட்டிக்காகவும் திராட்சமதுவுக்காகவும் நன்றி சொன்னார். (மத். 15:36; மாற். 14:22, 23) நாமும்கூட அவ்வாறு நன்றி சொல்ல வேண்டும்; அதுமட்டுமல்ல, ‘மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களுக்காகவும்,’ ‘அவரது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காகவும்,’ அவருடைய வார்த்தையாகிய பைபிளுக்காகவும் “நன்றி சொல்ல” வேண்டும்.—சங். 107:16; NW; 119:62, 105; NW.
மற்றவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்
8, 9. சக கிறிஸ்தவர்களுக்காக நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?
8 நாம் நமக்காக ஜெபம் செய்வோம் என்பது உண்மைதான், ஆனால் மற்றவர்களுக்காகவும்—முன்பின் தெரியாத கிறிஸ்தவர்களுக்காகவும்கூட—நாம் கட்டாயம் ஜெபம் செய்ய வேண்டும். அப்போஸ்தலன் பவுல் கொலோசெயிலிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரையும் தனித்தனியாக அறிந்திருக்காவிட்டாலும் இவ்வாறு எழுதினார்: “உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம் நம் எஜமானரான இயேசு கிறிஸ்துவின் தகப்பனாகிய கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்; ஏனென்றால், கிறிஸ்து இயேசுமீது நீங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் அனைவர்மீதும் நீங்கள் காட்டுகிற அன்பையும் பற்றிக் கேள்விப்பட்டோம்.” (கொலோ. 1:3, 4) தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களுக்காகவும் பவுல் ஜெபம் செய்தார். (2 தெ. 1:11, 12) நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்வதன் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறோம்; அவர்களைப் பற்றிய நம் மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறோம்.
9 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்காகவும், அவர்களது தோழர்களான ‘வேறே ஆடுகளுக்காகவும்’ நாம் ஜெபம் செய்வது, கடவுளுடைய அமைப்பின்மீது நமக்குள்ள அக்கறைக்கு அத்தாட்சி அளிக்கிறது. (யோவா. 10:16) ‘நற்செய்தியின் பரிசுத்த ரகசியத்தைத் தெரியப்படுத்த கடவுள் தனக்குப் பேச்சாற்றல் தர வேண்டுமென்று’ ஜெபம் செய்யும்படி பவுல் தன் சக விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார். (எபே. 6:17-20) நாமும் சக கிறிஸ்தவர்களுக்காக அவ்விதமாகவே ஜெபம் செய்கிறோமா?
10. மற்றவர்களுக்காக ஜெபம் செய்வது நம்முடைய மனநிலையை எப்படி மாற்றலாம்?
10 மற்றவர்களுக்காக ஜெபம் செய்யும்போது, அவர்களைப் பற்றிய நம் மனப்பான்மையே மாறிவிடலாம். குறிப்பிட்ட ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம், அவருக்காக நாம் ஜெபம் செய்யும்போது, அவரிடம் அன்பற்ற விதத்தில் நடந்துகொள்ளவே மாட்டோம். (1 யோ. 4:20, 21) அப்படி ஜெபம் செய்வது ஆன்மீக ரீதியில் நம்மைப் பலப்படுத்தும், சகோதரரிடையே ஒற்றுமையை வளர்க்கவும் உதவும். அதோடு, நமக்குக் கிறிஸ்துவைப் போலவே அன்பு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும். (யோவா. 13:34, 35) இந்த அன்பு கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களில் ஒன்றாகும். கடவுளுடைய சக்தியைக் கேட்டு நாம் ஒவ்வொருவரும் ஜெபம் செய்கிறோமா? அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு என அது பிறப்பிக்கிற எல்லாக் குணங்களையும் வெளிக்காட்டுவதற்கு உதவி கேட்டு ஜெபம் செய்கிறோமா? (லூக். 11:13; கலா. 5:22, 23) அப்படிச் செய்தோமானால், அந்தச் சக்தி வழிநடத்துகிறபடியே நடக்கிறோம் என்பதை நமது சொல்லிலும் செயலிலும் காட்டுவோம்.—கலாத்தியர் 5:16, 25-ஐ வாசியுங்கள்.
11. நமக்காக ஜெபம் செய்யும்படி மற்றவர்களிடம் கேட்டுக்கொள்வது சரியானதென நீங்கள் ஏன் சொல்லலாம்?
11 பள்ளிப் பரீட்சையில் ‘காப்பி அடிப்பதற்கான’ சபலம் நம் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறதெனத் தெரியவந்தால், நாம் அவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்; அதோடு, பைபிளிலிருந்து ஆலோசனைகளை அளிக்க வேண்டும்; அப்போதுதான், அவர்கள் நேர்மையாய் நடப்பார்கள், தவறு செய்ய மாட்டார்கள். “நீங்கள் எந்தத் தவறும் செய்யாதிருக்க வேண்டுமெனக் கடவுளிடம் ஜெபம் செய்கிறோம்” என்று கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்னார். (2 கொ. 13:7) இப்படி நாம் மனத்தாழ்மையோடு ஜெபம் செய்வது யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது; அதோடு, நாம் நல்லவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 15:8-ஐ வாசியுங்கள்.) ஆகையால், அப்போஸ்தலன் பவுல் கேட்டுக்கொண்டதைப் போலவே நாமும் நமக்காக ஜெபம் செய்யும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொள்ளலாம்: “எங்களுக்காக ஜெபம் செய்துகொண்டிருங்கள்; ஏனென்றால், எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே நாங்கள் விரும்புகிறோம்; எங்களுக்குச் சுத்தமான மனசாட்சி இருக்கிறதென்று உறுதியாய் நம்புகிறோம்.”—எபி. 13:18.
நம் ஜெபங்கள் நம்மைப் பற்றி இன்னும் அதிகத்தைச் சொல்கின்றன
12. நம்முடைய ஜெபங்களில் இடம்பெற வேண்டிய முக்கிய விஷயங்கள் யாவை?
12 நம்முடைய ஜெபங்கள் நாம் யெகோவாவுக்குச் சந்தோஷமாகவும், பக்திவைராக்கியமாகவும் சேவை செய்கிறோம் என்பதை வெளிக்காட்டுகின்றனவா? நம்முடைய மன்றாட்டுகள் யெகோவாவுடைய சித்தத்தை மையமாகக் கொண்டிருக்கின்றனவா? அவரது அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பது, அவருடைய பேரரசாட்சி நியாயநிரூபணம் செய்யப்படுவது, அவருடைய பெயர் பரிசுத்தமாக்கப்படுவது ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கின்றனவா? இந்த விஷயங்கள் நம் ஜெபங்களில் முக்கியமாக இடம்பெற வேண்டும். பின்வருமாறு இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி ஜெபத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்கிறோம்: “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்.”—மத். 6:9, 10.
13, 14. நம்முடைய ஜெபங்கள் நம்மைப் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன?
13 நம்முடைய உள்நோக்கங்கள், விருப்பங்கள், ஆசைகள் ஆகியவற்றை நம்முடைய ஜெபங்கள் வெளிப்படுத்துகின்றன. நாம் எப்படிப்பட்டவர்கள் என யெகோவா நன்றாகவே அறிந்திருக்கிறார். இதைக் குறித்து நீதிமொழிகள் 17:3 இவ்வாறு சொல்கிறது: ‘வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும், இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.’ நம் இருதயத்தில் என்ன இருக்கிறதென்று கடவுள் பார்க்கிறார். (1 சா. 16:7) நம்முடைய சபைக் கூட்டங்களையும் ஊழியத்தையும் ஆன்மீகச் சகோதர சகோதரிகளையும் பற்றி நாம் எப்படி உணருகிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். கிறிஸ்துவின் ‘சகோதரர்களை’ பற்றி என்ன நினைக்கிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். (மத். 25:40) ஒரு காரியத்தைக் குறித்து யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது உள்ளப்பூர்வமான ஆசையினால் அதைச் சொல்கிறோமா, அல்லது உதட்டளவில் சொன்ன வார்த்தைகளையே திரும்பத்திரும்பச் சொல்கிறோமா என்பது அவருக்குத் தெரியும். இதைப் பற்றி இயேசு இவ்வாறு அறிவுரை அளித்தார்: “ஜெபம் செய்யும்போது உலகத்தாரைப் போல் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்; அநேக வார்த்தைகளைச் சொல்வதால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படும் என்று அவர்கள் [தவறாக] நினைத்துக்கொள்கிறார்கள்.”—மத். 6:7.
14 கடவுள்மீது எந்தளவு சார்ந்திருக்கிறோம் என்பதையும் ஜெபத்தில் நாம் பயன்படுத்துகிற வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. “நீர் [யெகோவா] எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர். நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” என தாவீது நம்பிக்கையோடு சொன்னார். (சங். 61:3, 4) கடவுள் அடையாளப்பூர்வமாக ‘நம்மீது தம்முடைய கூடாரத்தை விரித்து’ நம்மைக் காக்கும்போது, நாம் பாதுகாப்பாக உணருவோம். (வெளி. 7:15, அடிக்குறிப்பு) நம்முடைய விசுவாசத்திற்குச் சவாலாயிருக்கிற எந்தவொரு சோதனையின் மத்தியிலும், யெகோவா ‘நம் பக்கத்தில்’ இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு அவரிடம் ஜெபம் செய்வது எப்பேர்ப்பட்ட ஆறுதலை அளிக்கிறது!—சங்கீதம் 118:5-9-ஐ வாசியுங்கள்.
15, 16. சபைப் பொறுப்புகளைப் பெற விரும்புகிற விஷயத்தில், நம் உள்நோக்கம் எப்படிப்பட்டதெனப் பகுத்துணர ஜெபம் எவ்வாறு உதவலாம்?
15 நம்முடைய உள்நோக்கங்களைக் குறித்து ஒளிவுமறைவில்லாமல் யெகோவாவிடம் சொல்லும்போதுதான் அவை சரியானவையா தவறானவையா என்று நம்மால் பகுத்துணர முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் கண்காணியாக வேண்டுமென விரும்புவது, மற்றவர்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும், பிரசங்க வேலையிலும் சபை வேலையிலும் முடிந்தளவு அதிகமாய் ஈடுபட வேண்டும் என்ற பணிவான ஆசையினாலா? அல்லது, “சபையில் முதலிடம்” பெற வேண்டும், மற்றவர்களை ‘அடக்கி ஆள’ வேண்டும் என்ற ஆசையினாலா? யெகோவாவின் மக்களிடையே இத்தகைய உள்நோக்கம் இருக்கக் கூடாது. (3 யோவான் 9, 10; லூக்கா 22:24-27-ஐ வாசியுங்கள்.) நமக்குத் தவறான ஆசைகள் இருந்தால், யெகோவாவிடம் அதைப் பற்றி ஒளிவுமறைவில்லாமல் ஜெபத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்வது அவற்றை நமக்கு வெளிப்படுத்தும்; அதோடு, அவை நமக்குள் வேர்பிடிப்பதற்கு முன்னரே அவற்றைக் களைந்தெறிய நமக்கு உதவும்.
16 தங்களுடைய கணவர்கள் உதவி ஊழியர்களாகவோ, பிற்பாடு மூப்பர்களாகவோ சேவை செய்ய வேண்டுமெனக் கிறிஸ்தவ மனைவிகள் உண்மையிலேயே ஆசைப்படலாம். அந்த ஆசையைத் தங்கள் தனிப்பட்ட ஜெபத்தில் தெரியப்படுத்தி, அதற்கிசைவாக முன்மாதிரியாய் நடந்துகொள்ளக் கடின முயற்சியெடுக்கலாம். இது மிக முக்கியம், ஏனென்றால், ஒரு சகோதரருடைய குடும்பத்தாரின் பேச்சும் நடத்தையும் சபையில் அவருக்கு இருக்கிற பெயரைப் பாதித்துவிடலாம்.
பிறர் சார்பாகச் செய்யப்படுகிற பொது ஜெபங்கள்
17. தனிமையில் ஜெபம் செய்வது ஏன் நல்லது?
17 இயேசு தம்முடைய தகப்பனிடம் ஜெபம் செய்வதற்காக அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்றார். (மத். 14:13; லூக். 5:16; 6:12) நமக்கும்கூடத் தனிமையான சூழல் தேவைப்படுகிறது. அமைதியான இடத்தில் ஜெபம் செய்யும்போது, பெரும்பாலும் யெகோவாவுக்குப் பிடித்தமான தீர்மானங்களை நாம் எடுப்போம், அதோடு ஆன்மீக ரீதியில் வேரூன்றப்பட்டவர்களாக இருப்போம். என்றாலும், இயேசு பிறருடைய முன்னிலையிலும் ஜெபம் செய்தார். இதை நாம் எப்படிச் சரியான விதத்தில் செய்யலாம் என்பதைச் சிந்திப்பது நல்லது.
18. சபையார் முன்னிலையில் ஜெபம் செய்யும்போது சகோதரர்கள் என்ன விஷயங்களை மனதில் வைக்க வேண்டும்?
18 கடவுளிடம் பற்றுமாறாமல் இருக்கிற ஆண்கள், நம்முடைய கூட்டங்களின்போது சபையாரின் சார்பாக ஜெபம் செய்கிறார்கள். (1 தீ. 2:8) அத்தகைய ஜெபத்தின் முடிவில் சபையார் “ஆமென்” என்று, அதாவது “அப்படியே ஆகட்டும்” என்று, சொல்ல வேண்டுமானால் அந்த ஜெபத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் அவர்கள் ஒப்புக்கொள்கிற விதத்தில் இருக்க வேண்டும். இயேசுவின் மாதிரி ஜெபத்தில் எந்த விஷயமும் அதிர்ச்சியூட்டுவதாகவோ புண்படுத்துவதாகவோ இல்லை. (லூக். 11:2-4) அதோடு, கூடியிருந்த ஒவ்வொருவருடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் பற்றி அதில் விலாவாரியாக அவர் குறிப்பிடவில்லை. அத்தகைய விஷயங்கள் தனிப்பட்ட ஜெபங்களில் சொல்லப்பட வேண்டியவை, பொது ஜெபங்களில் அல்ல. பலருடைய சார்பில் ஜெபம் செய்யும்போது, ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விஷயங்களை நாம் குறிப்பிடக் கூடாது.
19. பொது ஜெபங்களின்போது, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
19 இத்தகைய பொது ஜெபங்களின்போது, நாம் ‘கடவுளுக்குப் பயந்தவர்கள்’ என்பதை வெளிக்காட்ட வேண்டும். (1 பே. 2:17) மற்ற இடங்களில் செய்யத் தகுந்த சில காரியங்கள் கிறிஸ்தவக் கூட்டங்களின்போது செய்யத் தகாததாய் இருக்கலாம். (பிர. 3:1) உதாரணத்திற்கு, ஜெபம் செய்யப்படுகிற நேரத்தில் சங்கிலித் தொடர்போல் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொள்ளும்படி யாராவது சொல்லலாம். ஆனால், அப்படிச் செய்வது அங்குள்ள சகோதரர்கள் சிலரை, அல்லது அங்கு வந்திருக்கும் வெளியாட்கள் சிலரை முகம்சுளிக்க வைக்கலாம், அல்லது அவர்களுடைய கவனத்தைச் சிதறடிக்கலாம். தம்பதியர் விருப்பப்பட்டால் பிறருடைய கவனத்தை ஈர்க்காத விதத்தில் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொள்ளலாம்; ஆனால், அவர்கள் ஒருவரையொருவர் அரவணைத்தபடி இருந்தால், அதைப் பார்ப்பவர்கள் ஒருவேளை இடறல் அடைந்துவிடலாம். அந்தத் தம்பதியர் யெகோவாமீது தங்களுக்குள்ள பயபக்தியை வெளிக்காட்டுவதற்குப் பதிலாக, ஒருவர்மீது ஒருவருக்குள்ள காதல் உணர்வை வெளிக்காட்டுகிறார்கள் என்ற அபிப்பிராயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடலாம். ஆகையால், யெகோவா மீதுள்ள ஆழ்ந்த மரியாதையின் காரணமாக ‘எல்லாக் காரியங்களையும் அவருடைய மகிமைக்கென்றே செய்வோமாக.’ அதோடு, மற்றவர்களுக்குக் கவனச்சிதறலாக இருக்கிற, அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிற, அவர்களுடைய விசுவாசத்திற்கு இடையூறாக இருக்கிற நடத்தையைத் தவிர்ப்போமாக.—1 கொ. 10:31, 32; 2 கொ. 6:3.
என்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம்?
20. ரோமர் 8:26, 27-ஐ எப்படி விளக்குவீர்கள்?
20 நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களில் என்ன சொல்வதென்றே சில சமயம் நமக்குத் தெரியாதிருக்கலாம். பவுல் இவ்வாறு எழுதினார்: ‘ஜெபம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் என்ன ஜெபிப்பதென்று நமக்குத் தெரியாதபோது, வார்த்தைகளில் சொல்லப்படாத நம் உள்ளக் குமுறல்களைக் குறித்து கடவுளுடைய சக்தி நமக்காகப் பரிந்து பேசுகிறது. இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிற கடவுள், அந்தச் சக்தியின் நோக்கம் என்னவென்று அறிந்திருக்கிறார்.’ (ரோ. 8:26, 27) பைபிளில் ஏராளமான ஜெபங்களைத் தமது சக்தியின் தூண்டுதலால் பதிவுசெய்யப்படும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். அதிலுள்ள விண்ணப்பங்களை நம்முடைய விண்ணப்பங்களாகவே கருதி, அவற்றுக்குப் பதிலளிக்கிறார். நம்மைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும், பைபிள் எழுத்தாளர்கள் பதிவுசெய்த ஜெபங்கள் எந்த நோக்கத்தோடு ஏறெடுக்கப்பட்டன என்றும் அவருக்குத் தெரியும். அவருடைய சக்தி நமக்காக ‘பரிந்து பேசும்போது’ நாம் ஏறெடுக்கும் மன்றாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கிறார். கடவுளுடைய வார்த்தையை நாம் அதிகமதிகமாய்த் தெரிந்துகொள்ளும்போது என்னென்ன விஷயங்களைக் குறித்து ஜெபம் செய்ய வேண்டுமென்பது சட்டென நம் மனதிற்கு வந்துவிடும்.
21. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றி ஆராய்வோம்?
21 நாம் இதுவரை பார்த்தபடி, நம்முடைய ஜெபங்கள் நம்மைப் பற்றி அதிகத்தைச் சொல்கின்றன. உதாரணத்திற்கு, யெகோவாவிடம் நாம் எந்தளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதையும், அவருடைய வார்த்தையை எந்தளவு அறிந்திருக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. (யாக். 4:8) பைபிளிலுள்ள சில ஜெபங்களையும், ஜெபத்தில் உட்பட்டுள்ள சொற்றொடர்களையும் அடுத்த கட்டுரையில் ஆராய்வோம். ஆனால், அப்படி ஆராய்வது நம்முடைய ஜெபத்திற்கு மெருகூட்ட எப்படி உதவும்?
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது நம்முடைய மனநிலை எப்படி இருக்க வேண்டும்?
• சக விசுவாசிகளுக்காக நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?
• நம்முடைய ஜெபங்கள் நம்மைப் பற்றியும், நமது உள்நோக்கங்களைப் பற்றியும் என்ன சொல்கின்றன?
• பொது ஜெபங்களின்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
[பக்கம் 4-ன் படம்]
யெகோவாவைத் தவறாமல் புகழ்கிறீர்களா, அவருக்கு நன்றி சொல்கிறீர்களா?
[பக்கம் 6-ன் படம்]
பொது ஜெபங்களின்போது நம்முடைய நடத்தை எப்போதும் யெகோவாவுக்கு மதிப்புக் கொடுப்பதாக இருக்க வேண்டும்