சபையில் நம் ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுதல்
1 கிறிஸ்தவ சபையின் தலைவரான இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா ஓர் “உண்மையுள்ள ஊழியனுக்கு” அல்லது வீட்டு நிர்வாகிக்கு உத்தரவாதத்தை ஒப்படைத்திருக்கிறார். (லூக்கா 12:42, 43) ‘தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை’ அச்சடிக்கப்பட்ட வழிநடத்துதலாக நாம் பெற்றுக்கொள்வதை இந்த ஏற்பாடு கூடிய காரியமாக்கியிருக்கிறது. (1 தீமோத்தேயு 3:15) என்ன பிரசுரிக்கப்பட்டிருக்கிறதோ அதைக் கண்டுபிடிப்பதற்கு நம்முடைய முக்கிய கருவி காவற்கோபுரம் பிரசுர இன்டெக்ஸ் ஆகும். அது உங்களுக்கு எவ்வாறு உதவும்?
2 நீங்கள் ஒரு மூப்பரா? உங்கள் உத்தரவாதங்களோடு தொடர்புள்ள இரண்டு பொது தலைப்புகள் இருக்கின்றன. அவை: “மூப்பர்கள்” மற்றும் “கண்காணிகள்.” “மூப்பர்கள்” என்ற பகுதி பெரும்பான்மையான சுட்டுக்குறியீடுகளை உடையதாயிருக்கிறது. இவை சபையிலிருக்கும் பல்வேறு நபர்களுக்கு உதவி செய்தல், புத்திமதி எவ்வாறு கொடுப்பது, மூப்பர் குழுவுக்குள் இருக்கும் உறவுகள், மூப்பர்களின் உத்தரவாதங்கள் ஆகியவற்றின் பேரில் தகவலுக்கு வழிநடத்துகின்றன. தகுதிகளைப் பற்றிய சுட்டுக்குறியீடுகள் “கண்காணிகள்” என்பதன் கீழ் காணப்படுகின்றன. ஏனென்றால் இவைகளை கலந்தாலோசிக்கையில் அந்தப் பதத்தையே பைபிள் உபயோகிக்கிறது. “கண்காணிகள்” என்பதன் கீழ், “நடத்தும் கண்காணி,” “ஊழிய கண்காணி,” “காரியதரிசி” போன்ற அலுவல் நியமிப்புகள் இருக்கின்றன. முக்கிய தலைப்பாகிய “சபைகள்” என்பதும் உதவியளிக்கும் தகவலை அளிக்கும்.
3 உதவி ஊழியர்களாக இருக்கும் நீங்களும் சபையில் ஒரு முக்கிய பங்கை நிறைவேற்றுகிறீர்கள். “உதவி ஊழியர்கள்” என்ற தலைப்பு உங்களுடைய தகுதிகள் மற்றும் உத்தரவாதங்களைப் பற்றிய தகவலை வரிசைப்படுத்துகிறது. உங்களுக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஊழிய சிலாக்கியங்களைப் பற்றிய முக்கியத்துவத்தையும், மேலும் எவ்வாறு இன்னுமதிகமான உத்தரவாதத்தை எட்டுவது என்பதைப் பற்றிய விஷயங்களுக்கான சுட்டுக்குறியீடுகளையும் நீங்கள் காண்பீர்கள்.
4 சபையின் கூட்டங்கள் சம்பந்தப்பட்டதில் மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் சிலாக்கியங்கள் இருக்கின்றன. “கூட்டங்கள்” என்ற தலைப்பு “ஆஜராவதற்கு முயற்சிகள்” என்பதன் கீழ் கிளர்ச்சியூட்டும் உதாரணங்கள் உட்பட, இப்பொருளின் ஒவ்வொரு அம்சத்துக்கும் சுட்டுக் குறியீடுகளை அளிக்கிறது. கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் முக்கிய தலைப்புகளும்கூட இருக்கின்றன.
5 சங்கீதம் 68:11 சொல்கிறது: “நற்செய்தியை அறிவிக்கும் பெண்களின் கூட்டம் மிகுதி.” சபையின் ஆண் அங்கத்தினர்களைப் போன்று, சகோதரிகளும் கடவுளுடைய வீட்டிலே அவர்களுக்கான சரியான நடத்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சகோதரி எப்பொழுது தலை முக்காட்டை அணிந்து கொள்ளவேண்டும் அல்லது கூட்டத்தை நடத்துவதற்கு அல்லது சபையை ஜெபத்தில் பிரதிநிதித்துவம் செய்வதற்கு தகுதிவாய்ந்த சகோதரர்களே ஆஜராக இல்லாவிடில் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விஷயங்களின் பேரில் சில சமயங்களில் கேள்விகள் எழும்புகின்றன. “பெண்கள்” என்ற தலைப்பு இப்பேர்ப்பட்ட பொருட்களின் பேரிலான தகவலுக்கு உங்களை வழிநடத்தும். “சகோதரிகள்,” “தலை முக்காடிடுதல்,” “ஜெபம்,” போன்ற தலைப்புகளும் உதவியளிக்கக்கூடியவை.
6 1 தீமோத்தேயு 3:15-ன் முடிவு பாகம், கிறிஸ்தவ சபையை “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது” என்று குறிப்பிடுகிறது. சபைக்குள் நம் ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றி, கடவுளுடைய வீட்டில் சரியாக நடந்து கொள்பவர்களாக சத்தியத்தை ஆதரிப்பது நம் சிலாக்கியமாகும்.