நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பிரசுரங்களை ஞானமாக உபயோகிப்பதன் மூலம்
1 1991 ஊழிய வருட விசேஷ அசெம்ளி தின நிகழ்ச்சி நிரல் “நம்முடைய ஊழியம்—சாதாரணமானது அல்ல, ஆனால் பரிசுத்தமானது” என்ற கலந்தாலோசிப்பை கொண்டிருந்தது. நம்முடைய வேலை பரிசுத்தமானது என்றும் கவலையீனத்துடன் கையாளப்படக் கூடாதது என்றும் அது அழுத்திக் காட்டியது. அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களின் உபயோகம் நம்முடைய ஊழியத்தில் இன்றியமையாத பாகத்தை வகிப்பதால், இவையும்கூட மரியாதையோடு கையாளப்பட வேண்டும். நம்முடைய பிரசுரங்களை ஞானமாக உபயோகிப்பதன் மூலம் நமக்கிருக்கும் ஆழ்ந்த மரியாதையை நம்மில் ஒவ்வொருவரும் வெளிக்காட்டலாம்.
2 1990-ம் ஊழிய ஆண்டின் போது, 6,780 லட்சம் பத்திரிகைகளையும், 510 லட்சத்துக்கும் அதிகமான பைபிள்கள், பவுண்டு புத்தகங்கள் ஆகியவற்றை உலக முழுவதிலுமுள்ள பிராந்தியத்தில் உபயோகிப்பதற்கு சங்கம் உற்பத்தி செய்தது. இது ஒப்புக்கொடுக்கப்பட்ட நேரம், சக்தி, பணம் ஆகிய ஆதாரங்களை மிகப் பெரிய அளவில் செலவழிப்பதை பிரதிநிதித்துவம் செய்கிறது. மனமுவந்து வேலை செய்யும் அநேகருடைய ஒன்றுசேர்ந்த முயற்சிகள் தனிப்பட்ட உபயோகத்துக்கும் வெளி ஊழியத்தில் விநியோகிப்பதற்கும் தேவையான தரமான பிரசுரங்கள் உற்பத்தி செய்வதில் விளைவடைந்திருக்கின்றன. நேர்மை இருதயமுள்ள நபர்களுக்கு ராஜ்ய செய்தியை அறிவிக்கையில் நம்முடைய பிரசுரங்களுக்கான இருதயப்பூர்வமான போற்றுதலை நாம் பிரதிபலிக்க சில வழிகள் யாவை?
3 தனிப்பட்ட மற்றும் குடும்பப் படிப்பு: ரோமர் 2:21-ல் அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு சொல்கிறார்: “இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தாமே போதியாமலிருக்கலாமா?” பைபிளை அடிப்படையாகக் கொண்ட நம்முடைய பிரசுரங்களை வாசித்து, படித்து ஜெபசிந்தையுடன் தியானிப்பதற்கு நாம் நேரம் எடுத்துக் கொள்வதன் மூலம், யெகோவா தம்முடைய அடிமை வகுப்பார் மூலம் கொடுக்கும் நேரத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவை நாம் எவ்வளவு உயர்வாக மதிக்கிறோம் என்பதை தனிப்பட்ட விதமாக வெளிக்காட்டுகிறோம். (லூக். 12:42) வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சத்தியங்களுக்கு இணையாக தனிப்பட்ட படிப்பின் மூலமாகவோ அல்லது குடும்ப படிப்பின் மூலமாகவோ முன்னேறுவது நம்முடைய கவனிப்புக்கு யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கும் எல்லாவற்றுக்குமான உயர்ந்த மதிப்பை வளர்க்க நமக்கு உதவி செய்கிறது. பிள்ளைகளும்கூட கவனமில்லாமல் தங்கள் பிரசுரங்களில் கிறுக்கி அல்லது அதன் தோற்றத்தைக் கெடுக்காமல், கவனத்தோடு அவற்றிற்கு தங்கள் போற்றுதலைக் காண்பிப்பதற்கு அவர்களை சரியாக பயிற்றுவிக்க வேண்டும். கூடுதலாக, நம்முடைய பிரசுரங்களை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வெளி ஊழியத்தில் உபயோகிப்பதற்கு அவைகளை சரியாக ஒழுங்கான இடத்தில் வைக்க வேண்டும்.
4 வீணாக்குவதை தவிருங்கள்: உண்மையாகவே பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், நம்முடைய பிரசுரங்கள் சத்தியத்தை தேடிக் கொண்டிருப்பவர்களை அடைய வேண்டும், அதாவது, நம்முடைய செய்தியிலும் வேலையிலும் உண்மையாகவே அக்கறையுள்ளவர்களிடம். (மத். 10:11) ஆகையால் நாம் பிரசுரங்களை, சில அசாதாரணமான சூழ்நிலைமைகளைத் தவிர, இலவசமாக விநியோகித்துக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். பத்திரிகைகள், புத்தகங்கள் அல்லது மற்ற பிரசுரங்கள் வீட்டில் தேங்க அனுமதித்தாலும்கூட வீணாகப் போகும்.
5 பத்திரிகைகள் தேதியிடப்பட்டிருப்பதால், அவைகளை தற்போதைய இதழ்களாக அளிப்பதற்கு நமக்கு குறுகிய காலப்பகுதி மட்டுமே இருக்கிறது. ஆகையால் ஊழியத்துக்குச் சென்று அக்கறையுள்ள நபர்களுக்கு இவைகளை கொடுப்பதற்கு நம்முடைய பங்கில் ஒருமுகமான முயற்சி தேவைப்படுகிறது. அப்படி செய்தும் நம்முடைய பத்திரிகைகள் தேங்க ஆரம்பித்தால், பத்திரிகை ஊழியத்தில் கூடுதலான நேரம் செலவழிப்பதற்கு நம்முடைய அட்டவணையை மாற்றிக்கொள்வது நல்லது. அல்லது இதை செய்ய முடியவில்லையென்றால் நம்முடைய ஆர்டரை நாம் சரிசெய்ய வேண்டும். இந்த ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம், கடவுளுடைய தகுதியற்ற தயவை நிர்வகிக்கும் உண்மையுள்ள உக்கிராணக்காரராக நாம் நம்மை காண்பிப்போம்.—1 கொரி. 4:2; 1 பேதுரு 4:10, 11; லூக். 16:1, 10-ஐ ஒப்பிடுக.
6 யெகோவாவின் உண்மையுள்ள “உக்கிராணக்காரனின்” அதிகாரத்தில் ஒப்படைக்கப்பட்ட “ஆஸ்திகள்” உட்பட வெகு கனத்த உத்தரவாதத்தையும் வேலையையும் யெகோவா தம்முடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட ஜனங்களிடம் நம்பிக்கையோடு ஒப்புவித்திருக்கிறார். (2 தீமோ. 1:12; லூக். 12:42–44, 48பி, 1 தீமோ. 6:20) கடவுளின் சேவையில் நமக்குள்ள சிலாக்கியங்களுக்கு ஆழ்ந்த மதித்துணர்வுடன் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நம்முடைய பிரசுரங்களை தொடர்ந்து நாம் ஞானத்துடன் பயன்படுத்திக் கொள்வோமாக.