சந்தர்ப்ப சாட்சிகொடுத்தலில் நீங்கள்பங்குகொள்வீர்களா?
1 நம்முடைய வாழ்க்கையின் வழக்கமான நடைமுறையொழுங்கு யெகோவாவைப்பற்றி குறிப்பிட்ட சமயங்களில் ஆட்களோடு பேசுவதை உட்படுத்துகிறது. வீட்டுக்குவீடு முறையாக சாட்சிகொடுப்பதற்கும் மறுசந்திப்புகள் செய்வதற்கும் வேதப்படிப்புகள் நடத்துவதற்கும் நாம் நேரத்தை ஒதுக்கிவைக்கிறோம். ஆனாலும் ஆட்களிடம் முறைப்படி அமையாத சாட்சி கொடுப்பதற்கு அநேக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, அப்போது சத்தியத்தை குறித்து ஆட்களிடம் நாம் பேசலாம். நாம் இந்த வகைப் பிரசங்கித்தலை சந்தர்ப்பசாட்சி கொடுத்தல் எனக் குறிப்பிடுகிறோம்.
2 இந்த வகை ஊழியத்தில் பங்குகொள்ள சில பிரஸ்தாபிகள் அநேக வாய்ப்புகள் இருப்பதைக் காண்கிறார்கள். மாநாடுகளுக்கு போகும்போதும் வரும்போதும், விடுமுறை எடுக்கும்போது, உறவினர்களைச் சந்திக்கும்போது போன்ற சந்தர்ப்பங்களுக்கு நாம் அனைவரும் விழிப்புடனிருக்க பெருமுயற்சிசெய்யவேண்டும். சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் அனுகூலப்படுத்திக்கொள்வீர்களா?
3 முன்கூட்டியே திட்டங்களிடுங்கள்: தயாரிப்பும் முன்னறிவும் சந்தர்ப்பசாட்சிகொடுத்தலை பயனுள்ளமுறையில் செய்ய நமக்கு உதவும். இதை நிறைவேற்ற நமக்கு உதவிசெய்யக்கூடிய சிறந்த முன்னேற்பாடுகளை, பல வித்தியாசப்பட்ட வெளியீடுகளை இதன் சம்பந்தமாக கொண்டிருக்கிறோம். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! உடன்கூட அக்கறையை உண்டுபண்ணும் சிந்தனையைத்தூண்டும் தலைப்புகளையுடைய அநேக துண்டுப்பிரதிகளை நாம் கொண்டிருக்கிறோம். வித்தியாசப்பட்ட பின்னணிகளையும் மதங்களையும் உடைய ஆட்களுக்கு கவர்ச்சியூட்டும்விதமாக புரோஷுர்கள் இருக்கின்றன. தற்கால அக்கறைகளை உள்ளடக்கும் பொருள்களையுடைய பாக்கெட் அளவு புத்தகங்களையும் கொண்டிருக்கிறோம். எந்த வெளியீடுகளை உபயோகிக்க நீங்கள் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? குடும்பமாக இதற்கு கவனம்செலுத்துங்கள். பின்பு பொருத்தமான சந்தர்ப்பங்கள் வரும்போது நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை பழகிக்கொள்ளுங்கள்.
4 விடுமுறையில் இருக்கும்போது: சந்தர்ப்பசாட்சி கொடுப்பதற்கு மிகச்சிறந்த சமயம் விடுமுறையில் இருக்கும்போதே ஆகும். நீங்கள் உங்கள் பிரயாணத்தை விமானத்தில், புகைவண்டியில், அல்லது பேருந்தில் மேற்கொள்ள திட்டமிடுகிறீர்களா? அப்படியென்றால் பைபிளையும் மேற்குறிப்பிட்ட வெளியீடுகளில் ஒன்றையும் உடன்கொண்டுசெல்லுங்கள். அப்படிப்பட்ட வெளியீடுகளை பொது போக்குவரத்துகளில் வாசிப்பது அடிக்கடி சம்பாஷணையைத் தூண்டியிருக்கிறது. நீங்கள் மோட்டார்வண்டியில் பயணம் செய்கிறீர்களென்றால் எரிபொருள் நிரப்பும்நிலையத்தில் நிறுத்தும்போது அல்லது உணவகம் அல்லது தங்கும்விடுதியில் தங்கும்போது நீங்கள் என்ன பேசலாம் என்பதை சிந்தியுங்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நீங்கள் குறைந்த அளவு துண்டுப்பிரதிகளை அக்கறைகாட்டும் ஆட்களுக்குக் கொடுக்கும்படி வசதியான இடத்தில் வைக்கக்கூடும். கருத்தைக் கவர்கிற பின்புற காட்சியைக் கொண்ட ஒரு நெடுஞ்சாலையில் இளைப்பாற நீங்கள் நிறுத்துகிறீர்களென்றால் ஒருவேளை பின்வருமாறு கேட்பதன் மூலம் யாரேனுமொருவரிடம் சாட்சிகொடுக்க ஆரம்பிக்கக்கூடும்: “பூமி முழுவதும் இதுபோல் காட்சியளித்தால் அழகாக இருக்காதா?” நீங்கள் ஓர் அழகான கடற்கரையில் அல்லது பூங்காவில் இருக்கும்போது இதுபோன்ற அறிமுகத்தை உபயோகிக்கலாம்.
5 மாவட்ட மாநாட்டில்: மாவட்ட மாநாட்டில்கூட நாம் சந்தர்ப்பசாட்சி கொடுப்பதற்கான சந்தர்ப்பங்களைக் காணக்கூடும். தங்கும்விடுதி மற்றும் உணவகத்தில் வேலைசெய்பவர்களிடம் பேசுவதன்மூலம் அல்லது தெருவில் அல்லது பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்களிடம் பேசுவதன்மூலம் அநேகர் வெற்றிகண்டிருக்கின்றனர். மாநாட்டின் போது அடையாள அட்டையை அணிந்துகொள்ள நிச்சயமாயிருங்கள். உள்ளூர் உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு செல்லும்போது ஆட்கள் உங்கள் அடையாள அட்டை எதைக் குறிக்கிறது என்று ஒருவேளை கேட்பார்கள். இது நீங்கள் ஒரு சிறந்த சாட்சி கொடுக்கும்படி உங்களை வழிநடத்தலாம்.
6 வரும் மாதங்கள் புத்துணர்ச்சியையும் ஓய்வையும் நமக்களிக்கலாம், ஆனால் சந்தர்ப்பசாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை நாம் புறக்கணிக்காதிருப்போமாக. இந்த வகை பிரசங்கித்தல் பலனளிக்கிறது மற்றும் யெகோவாவின் ஊழியர்கள் இதில் பங்குகொள்ளவேண்டும். இயேசுவிற்கிருந்தது போன்றே உடன் மனிதர்களுக்கான நம்முடைய அன்பு பொருத்தமான எல்லா சமயங்களிலும் பேச நம்மைத் தூண்டுவதாக!—மத். 5:14-16.