பலன்தரும் மறுசந்திப்புகளைச் செய்வதன் மூலம்அக்கறையைக் கட்டியெழுப்புங்கள்
1 நன்கு தயாரிக்கப்பட்ட எந்தப் பேச்சிலும், ஓர் அக்கறை தூண்டும் அறிமுகம், தகவல்நிறைந்த உடற்பகுதி, ஓர் உந்துவிக்கும் முடிவுரை இருக்கும். அறிமுகம் சபையாருடைய கவனத்தை ஈர்க்கிறது, ஆனாலும் பேச்சிற்கு உடற்பகுதியும் முடிவுரையும் இல்லையென்றால், அந்தப் பேச்சு முற்றுப்பெற்றதாக இருக்காது. அதே நியமம் நம்முடைய ஊழியத்திற்கும் பொருந்துகிறது. முதல் சந்திப்பில் வீட்டுக்காரருடைய அக்கறையைத் தூண்டியெழுப்புவது நல்லதுதான். ஆனால் பலன்தரும் மறுசந்திப்புகளைச் செய்வதன் மூலம் அந்த முதல் சந்திப்பில் இருந்த அக்கறையைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கவேண்டும்.
2 கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? சிந்தனைத் தூண்டும் கேள்வி! இன்று அநேகருடைய மனங்களில் இவ்விஷயம் இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா? ஆகையால்தான் மேலே உள்ள கட்டுரையில், மறுசந்திப்பிற்குச் செல்லும்போது நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்படி முதல் சந்திப்பின் முடிவில் இதை கேட்குமாறு ஆலோசனைக் கொடுக்கப்பட்டது.
3 நீங்கள் இதைச் சொல்லலாம்:
◼ “ஹலோ. நாம் சென்றமுறை பேசியபோது, கடவுள் துன்பத்தை அனுமதிப்பதைக் குறித்த பேச்சு வந்தது, நான் உங்களோடு அதன்பேரில் சில விஷயங்களை அடுத்த முறை வந்து சந்தித்துப் பேசுவதாக சொன்னேன். கடவுள் உண்மையிலேயே நம்மீது அக்கறையுடையவராயிருந்தால், அவர் துன்பத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார் என்று அநேகர் யோசிக்கின்றனர். ஒருவேளை நீங்களும் அவ்வாறே நினைத்திருக்கக்கூடும். [வீட்டுக்காரர் பதில் சொல்ல அனுமதியுங்கள்.] கடவுள் உண்மையிலேயே நம்மீது அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்று பைபிள் நமக்கு உறுதியாகக் கூறுகிறது. [1 யோவான் 4:8 வாசியுங்கள்.] இன்று வரையாக கடவுள் துன்பத்தை அனுமதிப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்களின் ஒன்று 2 பேதுரு 3:9-ல் விளக்கமாய் சொல்லப்பட்டிருக்கிறது. [வாசியுங்கள்.] மற்ற காரணங்கள் இந்தப் புரோஷுரில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.” நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற புரோஷுரில் பக்கங்கள் 10-12-ற்குத் திருப்பி கவனத்தைக் கவரும் ஒரு குறிப்பைக் கலந்து பேசுங்கள்.
4 சில வீட்டுக்காரர்கள் இன்னும் அதிகமான முழுநிறைவான விளக்கத்தை அறிந்துகொள்ள விருப்பமாயிருக்கலாம். அந்தக் கேள்விக்கு முற்றிலும் திருப்திகரமான பதிலை அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பல மறுசந்திப்புகளைச் செய்வது அவசியமாயிருக்கும். ஜனவரி மாதத்தின்போது அளிக்கவிருக்கும் சங்கத்தின் பழைய 192-பக்க புத்தகங்களில் பெரும்பாலானவற்றில் அதைப் பற்றிய ஓர் அதிகாரம் இருக்கிறது, இந்தப் பொருளின்பேரில் மேலும் சிந்திப்பதற்கு அதை ஓர் அடிப்படையாக பயன்படுத்தலாம்.
5 சம்பாஷணையை முடிவுக்குக் கொண்டுவரும்போது, மற்றொரு கேள்வியை எழுப்பிவிட்டு திரும்ப வரும்போது அக்கறையூட்டும் சில காரியங்களைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் பிரியப்படுகிறீர்கள் என்பதை வீட்டுக்காரரிடம் சொல்லுங்கள். அநேகர் மரித்தப் பின் ஒரு நபருக்கு என்ன நேரிடுகிறது என்று அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். செளகரியமான நேரத்தில் ஏன் அந்தப் பொருளின்மீது பேச ஏற்பாடு செய்யக்கூடாது?
6 மூன்று அடிப்படை நியமங்களை மனதில் வைப்பது உங்களுக்கு உதவக்கூடும். வளைந்துகொடுக்கும் தன்மையுடையவர்களாயிருங்கள். வீட்டுக்காரர் பைபிள் கலந்தாலோசிப்புக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவைக்காமலிருக்கலாம். சுருக்கமாக பேசுங்கள். முதலிலேயே அதிக நேரமெடுத்து அநேக குறிப்புகளைப் பேசவேண்டாம். அநேகருடைய விஷயத்தில், குறுகிய நேரத்தில் ஒருசில குறிப்புகளைப் பற்றி பேசினால் ஒரு சாதகமான பிரதிபலிப்பு இருக்கும். அனலோடும் சிநேகப்பான்மையோடும் இருங்கள். ஒரு நபராக அவர்மீது நீங்கள் தனிப்பட்ட விதமாக அக்கறையுள்ளவராயிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்.
7 வீட்டுக்காரரை வேதப்பூர்வமான சம்பாஷணையில் ஈடுபடுத்துவதே உடனடியாக நாம் கொண்டிருக்கும் இலக்காகும். பின்னர் என்றும் வாழலாம் புத்தகம் போன்ற பொருத்தமான பிரசுரத்தில் ஒரு பலன்தரும் வீட்டு பைபிள் படிப்பை ஆரம்பிக்க நாம் விரும்புகிறோம். நீங்கள் பலன்தரும் மறுசந்திப்புகளைச் செய்வதன் மூலம் பொறுமையோடு முதலில் கொண்டிருக்கிற அக்கறையைக் கட்டியெழுப்பும்போது அந்தச் சந்தோஷம் உங்களுடையதாயிருக்கும்.