எளிமையான, பலன்தரும் பிரசங்கங்கள்
1 இயேசு கடவுளுடைய ராஜ்யத்தை எளிமையாக, ஒளிவுமறைவில்லாத முறையில் பிரசங்கித்தார். சத்தியத்தைக் கேள்விப்படும்போது செம்மறியாட்டைப் போன்ற ஆட்கள் சாதகமாகப் பிரதிபலிப்பார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். மக்கள் தங்களுடைய சிந்தனையிலும் அக்கறைகளிலும் பகுத்தறியும் திறமையிலும் வேறுபடுகின்றனர் என்பதையுங்கூட அவர் அறிந்திருந்தார். அவற்றிற்கேற்ப, தம்மைச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுடைய கவனத்தை ஈர்த்து அவர்களுடைய இருதயங்களைத் தொடும்படியாக அவர் வெவ்வேறுபட்ட சிக்கலற்ற அறிமுகங்களையும் கேள்விகளையும் உவமைகளையும் உபயோகித்தார். அவருடைய மாதிரியை நாம் பின்பற்றி எளிமையான, பலன்தரும் பிரசங்கங்களை நல்ல முறையில் பயன்படுத்தலாம்.
2 நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பலன்தரும் முறையில் உபயோகியுங்கள்: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் 11-வது பக்கத்தில், “வேலை/வீட்டுவசதி” என்ற தலைப்பின்கீழிருக்கிற முதல் அறிமுகம் சமயோசிதமாகவும் பிரசங்கிப்பதற்கு எளிதாகவும் இருக்கிறது.
நீங்கள் இப்படிச் சொல்லலாம்:
◼ “எல்லாருக்கும் வேலையும் வீட்டுவசதியும் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள என்ன செய்யலாம் என்பதைப்பற்றி நாங்கள் உங்கள் அயலகத்தாருடன் பேசிவருகிறோம். மனித அரசாங்கங்கள் இதை நிறைவேற்றுமென்று எதிர்பார்ப்பது பொருத்தமாயிருக்கிறதென நீங்கள் நம்புகிறீர்களா? . . . ஆனால் இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பது எவ்வாறென ஒருவர் அறிந்திருக்கிறார்; அவரே மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகர்.” ஏசாயா 65:21-23 வாசித்துக் காட்டுங்கள். பின்னர் அவருக்கு அது எவ்வாறு தோன்றுகிறது என்று வீட்டுக்காரரைக் கேளுங்கள்.
3 பக்கம் 12-ல் “அநீதி/துன்பம்” என்ற தலைப்பின்கீழுள்ள அறிமுகம் இன்று அநேகரைக் கவருவதாயிருக்கும்.
நீங்கள் இப்படிக் கேட்கலாம்:
◼ “நீங்கள் எப்போதாவது இவ்வாறு யோசித்ததுண்டா: மனிதர் அனுபவிக்கும் அநீதியையும் துன்பத்தையும் பற்றி கடவுள் உண்மையில் கவலைகொள்கிறாரா?” வீட்டுக்காரரைப் பதிலளிக்க அனுமதித்தப் பிறகு பிரசங்கி 4:1, சங்கீதம் 72:12-14 வாசித்துக் காட்டுங்கள். அதற்குப் பின்னர் என்றும் வாழலாம் புத்தகத்தில் 150-3 பக்கங்களிலுள்ள படங்களைத் திருப்பிக் காட்டி இன்றுள்ள உலக நிலைமைகள் எவ்வாறு பைபிள் தீர்க்கதரிசனத்தின் ஒரு நிறைவேற்றமாக இருக்கின்றன என்பதைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுங்கள். பிறகு 161-2 பக்கங்களுக்குத் திருப்பி மனிதன் சந்தோஷமாயிருப்பதற்குக் கடவுள் மேலும் எதை முன்னுரைத்திருக்கிறார் என்பதைக் காட்டுங்கள். எந்த அம்சம் அவருடைய கவனத்தை மிகவும் கவருவதாயிருக்கிறது என்று வீட்டுக்காரரைக் கேளுங்கள்.
4 வீட்டுக்காரரிடம் கொஞ்சம் நேரம் பேசிய பிறகு, என்றும் வாழலாம் புத்தகத்தைக் காட்டிலும், ஒரு பத்திரிகையிலுள்ள ஒரு கட்டுரையிடமோ சிற்றேட்டினிடமோ துண்டுப்பிரதியினிடமோ அவருடைய கவனத்தைத் திருப்புவது மிகவும் பொருத்தமாயிருக்கும் என்று நீங்கள் ஒருவேளைத் தீர்மானிக்கலாம்.
உதாரணமாக, இந்தக் கட்டுரையில் 2-ம் பத்தியிலுள்ள அறிமுகத்தை உபயோகித்தப் பிறகு நீங்கள் இப்படிச் சொல்லலாம்:
◼ “நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற இந்தச் சிற்றேடு தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்ப்படக்கூடிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கடவுள் எதைச் செய்ய வாக்களித்திருக்கிறார் என்பதைத் தெளிவாக விளக்கிக் காட்டுவதோடு நாம் எவ்வாறு நன்மையடையலாம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.” பின்னர் இந்தச் சிற்றேட்டில் 18, 19 பக்கங்களைத் திருப்பிக் காட்டி, யெகோவா செய்திருக்கும் மகத்தான வாக்குகளிடமாக கவனத்தைத் திருப்புங்கள்.
5 அல்லது 3-ம் பத்தியிலுள்ள அறிமுகத்தை உபயோகித்தப் பிறகு, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியைச் சிறப்பித்துக் காட்டலாம்.
நீங்கள் இப்படிச் சொல்லலாம்:
◼ “இன்று உலகில் பெரும் துன்பங்களும் பிரச்னைகளும் இருக்கின்றன. இந்தத் துண்டுப்பிரதி, கடவுள் மனிதவர்க்கத்துக்கு ஒரு மகத்தான மாற்றத்தைக் கொண்டுவர வாக்குக்கொடுத்திருக்கிறார் என்பதையும் போர், உணவு பற்றாக்குறைகள், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வெகு சீக்கிரத்தில் கடந்த கால காரியங்களாகிவிடும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.” இந்தத் துண்டுப்பிரதியின் 3-ம் பக்கத்திலுள்ள இரண்டாம் பத்தியை வாசித்துக் காட்டுங்கள்.
6 இருதயத்தைத் தொடக்கூடிய எளிமையான, பலன்தரும் பிரசங்கத்தோடு மக்கள்மீது நாம் கொண்டிருக்கும் உண்மையான அக்கறை, செம்மறியாட்டைப் போன்ற ஆட்களை நிச்சயமாகவே கவர்ந்திழுக்கக்கூடியதாயிருக்கும்.—யோவான் 10:16.