“நாம் யெகோவாவுடைய வீட்டுக்குச் செல்வோம்”
1 தாவீது “நாம் யெகோவாவுடைய வீட்டுக்குச் செல்வோம்” என்ற அழைப்புக்கு மிகவும் ஆர்வத்தோடு பிரதிபலித்தான். (சங். 122:1, NW) யெகோவாவுடைய “வீடு,” அவருடைய ஆலயத்தினால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது, மெய்க் கடவுளை வணங்க விரும்பும் ஆட்கள் கூடும் இடமாக இருந்தது. அது பாதுகாப்புக்கும் சமாதானத்துக்குமான ஒரு புகலிடமாக இருந்தது. இன்று உலகளாவிய கிறிஸ்தவ சபை கடவுளுடைய “வீடு,” “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமு”மாயிருக்கிறது. (1 தீ. 3:15) இரட்சிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் இந்த வழியின் மூலமாய்க் கிடைக்கப்பெறுகிறது. இதன் காரணமாகவே, கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் வாக்குச் செய்திருக்கிற ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ அவர்கள் விரும்புவார்களானால் “எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.”—ஏசா. 2:2.
2 இந்த “வீடு” 229 நாடுகளில் 69,000-க்கும் மேற்பட்ட சபைகளை உள்ளடக்குகிறது. உலகமுழுவதும் உள்ள ராஜ்ய மன்றங்களின் கதவுகள் திறந்திருக்கின்றன, இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வைராக்கியமுள்ள ஊழியர்கள் இந்த அழைப்பை விடுக்கிறார்கள்: ‘வாருங்கள்! . . . விருப்பமுள்ளவர்கள் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவர்கள்.’ (வெளி. 22:17) அநேகர் இந்தச் செய்தியைக் கேட்டுப் போற்றுதலோடு பிரதிபலித்திருக்கிறார்கள். மற்றவர்கள் இதனால் கவரப்பட்டிருக்கிறார்கள் ஆனால் கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவுகொள்வதன் மூலம் யெகோவாவின் வீட்டிற்கு இன்னும் வரவில்லை. அத்தகைய ஆட்களுக்கு இருக்கிற “ஆவிக்குரிய தேவை”யைச் சபையில் காணப்படுகிற ஏற்பாடுகளினால் மட்டுமே நிறைவு செய்யமுடியும். (மத். 5:3, NW) நாம் இக்கட்டான காலங்களில் வாழ்ந்து வருகிறோம், இந்த ஒழுங்குமுறையின் முடிவு கிட்டி நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. ஓர் அசட்டையான அல்லது வேண்டா வெறுப்பான மனநிலை ஆபத்திற்குள்ளான தாமதத்தில் விளைவடையும். மக்கள் அவருடைய அமைப்பிடத்தில் நெருங்க வருவதன் மூலம் “தேவனிடத்தில் சேர” நாடுவது மிகவும் அவசரமாயிருக்கிறது. (யாக். 4:8) அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
3 அமைப்பிடம் அக்கறையைத் திருப்புங்கள்: அக்கறையுள்ள ஆட்களைச் சந்தித்தது முதல், நாம் அமைப்பிடமாக அவர்களுடைய கவனத்தைத் திருப்பவேண்டும். ஒருவேளை நாம் தனிப்பட்ட ஆட்களாக வேதவசனங்களைக் கண்டுபிடித்து அடிப்படையான போதகங்களை விளக்கிக் காட்டினாலும் அந்த அறிவுக்கு மூலம் நாம் அல்ல. ‘ஏற்றவேளையில் போஜனம்’ அளிக்கும் அடிமை வகுப்பின் மூலம் வருகிற அந்த அமைப்பிலிருந்துதான் நாம் எல்லாவற்றையும் கற்றிருக்கிறோம். (மத். 24:45-47) துவக்கத்திலிருந்தே, மெய் வணக்கம் நம்மையோ உள்ளூர் சபையையோ மாத்திரமல்லாமல் அதிகத்தை உட்படுத்துகிறது; யெகோவாவின் வழிநடத்துதலின்கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட, தேவராஜ்ய, உலகளாவிய சங்கம் ஒன்று இருந்துவருகிறது போன்றவற்றைப் புதியவர்கள் உணரவேண்டியது அவசியம்.
4 நமக்குக் கிடைக்கும் வழிநடத்துதல் யெகோவாவிடமிருந்து வருகிறது, அவரே நமக்கு வழிகாட்டவும் நம்மைப் போதிக்கவும் வாக்களித்திருக்கிறார். (சங். 32:8; ஏசா. 54:13) இந்த அறிவுரை முக்கியமாய் நம்முடைய பிரசுரங்களின் மூலமாக யாவரறியும்படி செய்யப்படுகிறது. அக்கறையுள்ள ஆட்கள் பிரசுரங்களுக்கு ஓர் உயர் மதிப்பை வளர்த்து அதை உயிர்காக்கும் போதனையின் மூலமாக அறிந்துகொள்வார்களேயானால் அவர்கள் அதை வேண்டாம் என்று ஒதுக்குவதற்கு மாறாக பெரும்பாலும் அதிலுள்ள செய்தியைப் படித்து, பொருத்திப் பிரயோகிப்பார்கள். நாம் இந்தப் பிரசுரங்களை அளிக்கும் விதமும் பயன்படுத்தும் விதமும் அதற்கு மரியாதையை வளர்ப்பதாக இருக்கவேண்டும். இது புதியவர்கள் அமைப்பிற்குப் போற்றுதல் தெரிவிக்கவும் அதன் ஏற்பாடுகளின்பேரில் நம்பிக்கை கொண்டிருக்கும்படியாகவும் கற்பிக்கவேண்டும்.
5 ஒழுங்காகப் போதனை அளிக்கப்படுவதற்கு உள்ளூரில் கூடிவருவதற்கான மையம் ஒன்று இருக்கிறது என்பதை அக்கறையுள்ள ஆட்கள் அறிந்திருக்கவேண்டும். அவர்களுக்கு ராஜ்ய மன்ற முகவரியையும் கூட்டம் நடக்கும் நேரங்களையும் கொடுங்கள். நம்முடைய கூட்டங்களுக்கும் அவர்கள் முந்தி ஆஜரான மதக் கூட்டங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கிக் காட்டுங்கள். எல்லாரும் அழைக்கப்படுகிறார்கள்; பணம் திரட்டுவதோ தனிப்பட்ட ரீதியில் நிதிகளை வேண்டிக் கேட்பதோ கிடையாது. நிகழ்ச்சிகளை நியமிக்கப்பட்ட ஊழியர்கள் நடத்தினாலும், குறிப்புகளைச் சொல்வதன் மூலமும் நிகழ்ச்சிகளின் நியமிப்புகளில் பகிர்ந்துகொள்வதன் மூலமும் எல்லாருக்கும் பங்குகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. குடும்பங்கள் வரலாம்; நம்முடைய பைபிள் கலந்தாலோசிப்புகளில் பிள்ளைகளும் சேர்ந்துகொள்ளலாம். நம்முடைய ஊழியர்கள் விசேஷ நாடாக்களையோ ஆடைகளையோ அணிவது கிடையாது. மெழுகுவர்த்திகளையோ சிலைகளையோ விக்கிரகங்களையோ கொண்டில்லாமல், ராஜ்ய மன்றம் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஆஜராபவர்கள் முக்கியமாக உள்ளூரில் உள்ள அயலவராகவே இருக்கிறார்கள்.
6 பைபிள் படிப்புகளில் படிப்படியாக அக்கறையை வளருங்கள்: ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருப்பதன் பிரதான நோக்கம் கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தைப் போதிப்பதேயாகும். அது யெகோவாவுடைய அமைப்பின்பேரில் போற்றுதலை மாணாக்கரில் வளர்த்து அதன் பாகமாக ஆகவேண்டும் என்ற இன்றியமையா தேவையை அவர் அறிந்துகொள்ளும்படி செய்வதாகவும் இருக்கவேண்டும். முதல் நூற்றாண்டில் இயேசுவாலும் அவருடைய சீஷராலும் செய்யப்பட்ட மகத்தான வேலை உண்மைமனமுள்ள ஆட்களைக் கவர்ந்து ஒரு மைய நிர்வாக குழுவின்கீழ் செய்யப்படவேண்டிய வேலைக்காக அவர்களை ஒருமுகப்படுத்தியது. நல்ல பிரதிபலிப்பு இருந்த இடங்களில், ஒழுங்கான பயிற்சியையும் போதனையையும் கொடுக்க சபைகள் உருவாக்கப்பட்டன. கூட்டுறவுகொண்டவர்கள் ஆவிக்குரிய ரீதியில் பலமாக்கப்பட்டனர், உபத்திரவ காலங்களில் சகித்து நிலைநிற்க அவர்களுக்கு உதவியது. (எபி. 10:24, 25; 1 பே. 5:8-10) நம்முடைய நாளில், “சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்”பது யெகோவாவின் நோக்கமாயிருக்கிறது. (எபே. 1:9, 10) இதன் பலனாக, நாம் உலகளாவிய “சகோதர கூட்டத்”தை உடையவர்களாயிருக்கிறோம்.—1 பே. 2:17, NW.
7 வாராந்தர பைபிள் படிப்பு, மாணாக்கர்கள் அமைப்பைப் போற்றுவதற்கும், தங்களுடைய இரட்சிப்பிற்காக உள்ள ஏற்பாடுகளை அனுகூலப்படுத்திக்கொள்வதற்கும் உதவிசெய்யும் ஆலோசனையை உள்ளடக்கவேண்டும். அமைப்பைப்பற்றியும் அது எவ்வாறு இயங்குகிறது என்பதைப்பற்றியும் சிறிது விளக்கவோ சொல்லவோ ஒவ்வொரு வாரமும் ஒருசில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நவம்பர் 1, 1984 காவற்கோபுரத்தில் (ஆங்கிலம்) உதவிதரும் குறிப்புகளை நீங்கள் காணலாம். இருபதாம் நூற்றாண்டில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witnesses in the Twentieth Century), யெகோவாவின் சாட்சிகள்—ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் என்ற சிற்றேடுகள் அமைப்பின் பிரதான அம்சங்களையும் அவை எவ்வாறு நமக்கு பிரயோஜனமாயிருக்கிறதென்பதையும் கலந்து பேசுகின்றன. யெகோவாவின் சாட்சிகள்—பெயருக்குப் பின்னாலிருக்கும் அந்த அமைப்பு (Jehovah’s Witnesses—The Organization Behind the Name) என்ற வீடியோவைப் பார்ப்பது அது எதைச் செய்துவருகிறது என்பதைத் தாங்களே காண அவர்களுக்கு உதவும். வருடாந்தர புத்தகத்தில் தெரிந்துகொள்ளப்ட்ட அறிக்கைகளும் அனுபவங்களும் நம்முடையதைத் தவிர மற்ற நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் நடைபெறும் வேலையின் வெற்றியைக் காட்டும். மற்ற பிரசுரங்களையுங்கூட உபயோகிக்கலாம். ஒரு காலப்பகுதிக்கு, படிப்படியாக நாம் ஏன் வீட்டுக்கு வீடு செல்கிறோம், நம்முடைய கூட்டங்களின் நோக்கம், நம்முடைய வேலைக்கு எப்படி பணஉதவி கிடைக்கிறது, மேலும் நம்முடைய ஊழியத்தின் உலகளாவிய நோக்கம் போன்ற காரியங்களை விளக்கிக் காட்டுங்கள்.
8 மற்ற சாட்சிகளோடு பழகுவது புதியவர்கள்மீது உந்துவிக்கும் பாதிப்பைக் கொண்டிருக்கும், சபையைப் பற்றிய எண்ணத்தை விரிவாக்கும். அதுவரை மற்ற பிரஸ்தாபிகளை அவ்வப்போது படிப்பில் உட்காரும்படி சொல்லுங்கள். சபையில் அதே பின்னணியையுடைய அல்லது அதே அக்கறைகளைக் கொண்டிருக்கிற நபர் உங்களுடைய மாணாக்கரின் நோக்குநிலைக்குப் புதிய ஒரு புரிந்துகொள்ளுதலை கூட்டலாம். வெறுமனே அறிந்துவைத்துக்கொள்வதற்காக ஒரு மூப்பர் உங்களோடு ஒருவேளை வரக்கூடும். வட்டார ஊழியரையோ அவருடைய மனைவியையோ அந்தப் படிப்பைச் சந்திக்க அழைத்துக்கொண்டுச்செல்வது உண்மையிலேயே ஓர் ஆசீர்வாதமாயிருக்கும். பைபிள் மாணாக்கர் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் சாட்சிகள் யாராவது இருந்தால், அவருக்கு அவரை அறிமுகப்படுத்தி வைப்பது மாணாக்கர் சபை கூட்டங்களுக்கு ஆஜராக கூடுதலான உற்சாகத்தை அளிக்கும்.
9 கூட்டங்களுக்கு வர புதியவர்களை உற்சாகப்படுத்துங்கள்: கூட்டங்களுக்கு ஆஜராவது எவ்வளவு முக்கியம் என்று புதியவர்கள் உணரவேண்டும். அவர்களுடைய அக்கறையைத் தூண்டிவிட முயற்சி செய்யுங்கள். காவற்கோபுரம் படிப்பில் சிந்திக்கப்படும் கட்டுரைகளைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். கொடுக்கவிருக்கும் பொதுப் பேச்சின் தலைப்புகளைச் சொல்லுங்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளி, சபை புத்தகப் படிப்பு ஆகியவற்றில் சிந்திக்கப்படக்கூடிய விஷயத்தின்பேரில் உள்ள சிறப்புக் குறிப்புகளைச் சொல்லுங்கள். இத்தகைய கூட்டங்களில் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள், நீங்கள் ஏன் ஆஜராகவேண்டுமென்று உணருகிறீர்கள் என்பதைப்பற்றிய உங்களுடைய தனிப்பட்ட உணர்ச்சிகளை அவருக்குக் கூறுங்கள். உங்களால் முடியுமானால் வாகனவசதியை ஏற்பாடு செய்யுங்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன் ஃபோன் செய்வது ஆஜராவதற்கு கூடுதலான உந்துவிப்பை அளிக்கக்கூடியதாயிருக்கும்.
10 பைபிள் மாணாக்கர் கூட்டத்திற்கு வருவாரேயானால், அவருக்கு வரவேற்பு கொடுங்கள். மூப்பர்கள் உட்பட மற்றவர்களிடம் அவரை அறிமுகப்படுத்தி வையுங்கள். அவர் பொதுப் பேச்சிற்கு ஆஜராவாரேயானால் பேச்சாளரிடம் அவரை அறிமுகப்படுத்தி வையுங்கள். ராஜ்ய மன்றத்தைச் சுற்றிலும் அவருக்குக் காட்டுங்கள். புத்தக, பத்திரிகை கவுன்டர்கள், நன்கொடை பெட்டிகள், நூலகம், மேலும் வருடாந்தர வசனம் ஆகியவற்றின் நோக்கத்தை அவருக்கு விளக்கிக் காட்டுங்கள். மன்றம் ஒரு வணக்க இடமாக மட்டுமல்லாமல் உள்ளூரில் பிரசங்க வேலை ஒழுங்கமைக்கப்படுவதற்கான மையமாகவுங்கூட இருக்கிறது என்று அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
11 நம்முடைய கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை விளக்கிக் காட்டுங்கள். நாம் உபயோகிக்கிற பிரசுரங்களை மாணாக்கருக்கு காட்டுங்கள். பைபிளே நம்முடைய பிரதான பாடபுத்தகமாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். இளம் பிள்ளைகள் உட்பட எல்லாருமே பங்குகொள்ளலாம். இசையும் பாடல்களும் நம்முடைய வணக்கத்திற்காக யெகோவாவின் சாட்சிகளால் அமைக்கப்பட்டன என்று விளக்கிக் காட்டுங்கள். ஆஜராகும் ஆட்கள் வித்தியாசமான பின்னணியிலிருந்து வருகிறார்கள் என்பதற்குக் கவனத்தைத் திருப்புங்கள். சிநேகபான்மையான மனப்பான்மையைக் குறித்தும் உபசரிப்பு மனப்பான்மையைக் குறித்தும் சாதகமான குறிப்புகளைக் கொடுங்கள். இந்தத் தயவான, மெய்யான அக்கறை மாணாக்கர் திரும்பவும் வருவதற்கு தூண்டுதலளிக்கும் பலமான அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
12 ஏன் சிலர் பினவாங்குபவர்களாக இருக்கலாம்: அடிக்கடி சிலர் நீங்கள் என்னத்தான் செய்தாலும், அமைப்போடு நெருங்கி வர தயங்குவார்கள். அவசரப்பட்டு நிறுத்திவிடாதீர்கள். அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்க்க முற்படுங்கள். இதுவரை அவர்கள் விசேஷ நிகழ்ச்சிகளுக்குத் தவிர மதப் பிரசங்கிப்புகளுக்கு ஆஜராவதன் அவசியத்தை உண்மையில் உணராமலிருந்திருக்கிறார்கள். குடும்ப அங்கத்தினர்களோ நெருங்கிய நண்பர்களோ அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கலாம். அயலவர் கூறும் மதிப்புக் குறைவான குறிப்புகளின் காரணமாக அவர்கள் பயப்படலாம். மேலும் உண்மையில் அவர்கள் சமுதாய மற்றும் பொழுதுபோக்கு நாட்டங்களோடு தொடர்புள்ள வித்தியாசப்பட்ட கவர்ச்சிகரமான காரியங்களுக்கு ஆளாகியிருக்கலாம். இவற்றை மேற்கொள்ளமுடியாத தடங்கல்களாகக் கருதலாம்; அவர்கள் சரியான நோக்குநிலையில் காரியங்களைக் காணவும் “அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்”ளவும் நீங்கள் அவர்களுக்கு உதவவேண்டும்.—பிலி. 1:10, NW.
13 நிலைத்திருப்பதற்கான வேதப்பூர்வமான காரணங்களைக் கொடுங்கள். ஒன்றுசேர்ந்து கொண்டிருக்கும் கூட்டுறவிலிருந்து கிடைக்கக்கூடிய உற்சாகத்தையும் ஆவிக்குரிய கட்டியெழுப்புதலையும் நாம் பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் காட்டுங்கள். (ரோ. 1:11, 12) குடும்ப எதிர்ப்புப் பின்வாங்குவதற்கான நல்ல காரணமாக இல்லை என்று இயேசு தெளிவாகக் காட்டினார். (மத். 10:34-39) இயேசுவின் சீஷர்களாக நாம் நம்மை வெளியரங்கமாக அடையாளப்படுத்திக்கொள்வதில் வெட்கப்படக்கூடாது என்று பவுல் நம்மைத் துரிதப்படுத்தினார். (2 தீ. 1:8, 12-14) தனிப்பட்ட நாட்டங்களும் கவர்ச்சிகரமான காரியங்களும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும்; அவ்வாறில்லையெனில், கண்ணியாக அவை மாறிவிடுகின்றன. (லூக். 21:34-36) யெகோவாவுடைய ஆசீர்வாதத்திற்கு தகுதியுள்ளவர்கள் முழு ஆத்துமாவோடு செய்யவேண்டும், அரை மனதோடு அல்ல. (கொலோ. 3:23, 24) அப்பேர்ப்பட்ட பைபிள் நியமங்களுக்குப் போற்றுதலைத் தூண்டுவிப்பது அவர்கள் ஆவிக்குரிய பிரகாரம் முன்னேற்றமடைவதற்கு வழியைத் திறந்து வைக்கும்.
14 கதவுகள் திறந்திருக்கின்றன: யெகோவாவின் வீடாகிய மெய் வணக்கம் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உலகமுழுவதும் உள்ள 229 நாடுகளில் இந்த அழைப்பு தொனித்துக்கொண்டே வருகிறது: “நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்; . . . அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.” (ஏசா. 2:3) புதிய ஆட்களின் சாதகமான பிரதிபலிப்பு அவர்களுடைய உயிரைப் பாதுகாக்கும். யெகோவாவின் அமைப்பிடமாக அவர்களுடைய அக்கறையைத் திருப்புவது நாம் அவர்களுக்கு உதவவேண்டிய சிறந்த வழிகளில் ஒன்றாகும்.