முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 8: மாணாக்கர்களை அமைப்பிடம் வழிநடத்துவது
1 மாணாக்கர்களுக்கு பைபிள் கோட்பாடுகளைப் போதிப்பது மட்டுமல்ல, அவர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாய் ஆக உதவுவதும் பைபிள் படிப்பின் இலக்காக இருக்கிறது. (சக. 8:23) யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? என்ற சிற்றேடு இதற்கு உதவி செய்கிறது. புதிய பைபிள் மாணாக்கர்களுக்கு ஒரு பிரதியைக் கொடுத்து இதை வாசித்துப் பார்க்க உற்சாகப்படுத்துங்கள். அதோடு, ஒவ்வொரு வாரமும் படிப்பின்போது யெகோவாவின் அமைப்பைப் பற்றி ஒரு குறிப்பைச் சொல்ல சில நிமிடங்களைச் செலவிடுங்கள்.
2 சபைக் கூட்டங்கள்: பைபிள் மாணாக்கர்கள் கடவுளுடைய அமைப்புக்குப் போற்றுதல் காட்டுவதற்கான முக்கிய வழி, சபைக் கூட்டங்களில் நம்முடன் கூட்டுறவு கொள்வதாகும். (1 கொ. 14:24, 25) எனவே, அவர்கள் ஐந்து வாராந்தரக் கூட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு வாரமும் ஒரு கூட்டத்தைப் பற்றி விளக்க ஆரம்பிக்கலாம். அடுத்த வார பொதுப் பேச்சின் தலைப்பைச் சொல்லுங்கள். காவற்கோபுர படிப்பிலும் சபை புத்தகப் படிப்பிலும் கலந்தாலோசிக்கப்படும் விஷயங்களைக் காட்டுங்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும் ஊழியக் கூட்டத்தையும் பற்றி விவரியுங்கள். பள்ளியில் உங்களுக்குப் பேச்சு நியமிக்கப்படும்போது அதை அவர்களுடன் சேர்ந்து பழகிப் பாருங்கள். கூட்டங்களில் கேட்ட சிறந்த குறிப்புகளைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். நம் பிரசுரங்களில் உள்ள படங்களைக் காட்டி கூட்டங்கள் எப்படி நடக்கின்றன என்பதை அவர்கள் கண்முன் நிறுத்த முயலுங்கள். படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலிருந்தே கூட்டங்களுக்கு வரும்படி அழையுங்கள்.
3 நினைவுநாள் ஆசரிப்பு, மாநாடுகள், வட்டாரக் கண்காணியின் சந்திப்பு போன்றவை வரவிருக்கும்போது அவற்றைப் பற்றி விளக்க சில நிமிடங்களைச் செலவழியுங்கள், இந்த ஏற்பாடுகளிடம் ஆர்வத்தைத் தூண்டுவியுங்கள். மெல்ல மெல்ல பின்வருவதைப் போன்ற கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்: நாம் ஏன் யெகோவாவின் சாட்சிகள் என அழைக்கப்படுகிறோம்? கூட்டம் நடக்கும் இடங்களை நாம் ஏன் ராஜ்ய மன்றங்கள் என்று குறிப்பிடுகிறோம்? மூப்பர்களும் உதவி ஊழியர்களும் என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள்? பிரசங்க வேலையும் பிராந்தியமும் எப்படி ஒழுங்கமைக்கப்படுகின்றன? நம் பிரசுரங்கள் எப்படி தயாரித்து வெளியிடப்படுகின்றன? இந்த அமைப்புக்கு எப்படி பண உதவி கிடைக்கிறது? ஊழியத்தை மேற்பார்வையிடுவதில் கிளை அலுவலகத்தின் பங்கென்ன, ஆளும் குழுவின் பங்கென்ன?
4 போதிக்கும் வீடியோக்கள்: நம் வீடியோக்களின் மூலம் பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவின் அற்புத அமைப்பைக் காணும்படி செய்வது மற்றொரு வழியாகும். பூமியின் கடைக்கோடிகளுக்கு என்ற ஆங்கில வீடியோ நம் உலகளாவிய பிரசங்க ஊழியத்தைக் காட்டுகிறது; நம் சகோதர கூட்டுறவு என்ற ஆங்கில வீடியோ நம் உலகளாவிய சகோதரத்துவத்தைக் காட்டுகிறது; தெய்வீக போதனையால் ஒன்றுபட்டிருத்தல் என்ற ஆங்கில வீடியோ யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலுள்ள ஐக்கியத்தைக் காட்டுகிறது. நம் பத்திரிகைகளையும் வேறு பல பிரசுரங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குப் பெற்று வந்த ஒரு பெண்மணி, யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்கு பின்னுள்ள அமைப்பு என்ற ஆங்கில வீடியோவைப் பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தினார். தன்னை சந்திக்க வந்த சாட்சிகள் மீது அவர் நம்பிக்கையை வளர்த்திருந்தார், ஆனால் அந்த வீடியோவைப் பார்த்த பிறகு அமைப்பின் மீதும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியுமென நினைத்தார். முறைப்படி அவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, மறு வாரமே ராஜ்ய மன்றத்திற்கு வந்து கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்.
5 நம் பைபிள் மாணாக்கருடன் வாரா வாரம் சில நிமிடங்களைச் செலவழிப்பதன் மூலமும், நமக்குக் கிடைக்கும் பைபிள் உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இன்று யெகோவா பயன்படுத்தி வரும் ஒரே அமைப்பிடம் அவர்களை படிப்படியாக வழிநடத்தலாம்.
[கேள்விகள்]
1. ஒவ்வொரு வாரமும் பைபிள் படிப்பின்போது யெகோவாவின் அமைப்பைப் பற்றி ஒரு குறிப்பைச் சொல்வது ஏன் பயனுள்ளது?
2. சபைக் கூட்டங்களுக்கு வரும்படி பைபிள் மாணாக்கர்களை நீங்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம்?
3. அமைப்பின் என்ன அம்சங்களைப் பற்றி நாம் கலந்துபேசலாம்?
4, 5. நம் வீடியோக்கள் எப்படி அமைப்பிடம் போற்றுதலை வளர்க்கும்?