வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்
1 உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு அதிகப் பலன்தரத்தக்கதும் திருப்தியளிப்பதுமான அனுபவங்களில் ஒன்று, வீட்டு பைபிள் படிப்பின்மூலம் ஒருவருக்குச் சத்தியத்தைப் போதிப்பதாகும். என்றாலும், பலன்தரத்தக்கதும் திருப்தியளிப்பதுமான இந்த ஊழிய அம்சத்தில் கலந்துகொள்வதைச் சிலர் மகிழ்ந்து அனுபவிக்காமல் இருக்கலாம்; ஏனென்றால் தங்களால் ஒரு வீட்டு பைபிள் படிப்பை ஆரம்பித்து நடத்த இயலாது என்று அவர்கள் உணருகிறார்கள். தலைசிறந்த அநேக பிரஸ்தாபிகளும் பயனியர்களும் ஒரு காலத்தில் அந்த விதமாகவே உணர்ந்தார்கள். இருப்பினும், யெகோவாவில் நம்பிக்கை வைப்பதன்மூலமும் நம்முடைய ராஜ்ய ஊழியத்தில் வருகிற ஆலோசனைகளைப் பொருத்துவதன்மூலமும், பைபிள் படிப்புகளை எவ்வாறு ஆரம்பித்து நடத்துவது என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள். மேலும் ஊழியத்தில் தங்களுடைய சந்தோஷத்தை அதிகரிக்கச்செய்தார்கள். நீங்கள் அதே இலக்கை வைக்கலாம்.
2 நேரடியான முறையையும் துண்டுப்பிரதிகளையும் பயன்படுத்துதல்: ஒரு படிப்பைத் தொடங்குவதற்கு மிகச் சுலபமான வழிகளில் ஒன்று, நேரடியான முறையின் மூலமாகும். சில மக்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் பைபிளைப் படிப்பதற்கு ஒரு கனிவான அழைப்பாகும். வெறுமனே வீட்டுக்காரரை இவ்வாறு கேட்பதன்மூலம் இது செய்யப்படலாம்: “ஒரு தனிப்பட்ட வீட்டு பைபிள் படிப்பைக் கொண்டிருந்து, உங்களுடைய பைபிள் அறிவையும் இந்தப் பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய அறிவையும் வளர்த்துக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?” அல்லது ஒரு வீட்டு பைபிள் படிப்பு நடத்தப்படுகிற முறையை நடித்துக்காட்ட நீங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பதை வீட்டுக்காரருக்குச் சொல்லலாம். இந்த அளிப்பை அநேகர் மறுக்கிறபோதிலும், அதை ஏற்றுக்கொள்கிற ஒருவரைக் கண்டுபிடிப்பதில் வரும் உங்களுடைய சந்தோஷத்தை எண்ணிப்பாருங்கள்!
3 பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு மற்றொரு வழி, நம்முடைய துண்டுப்பிரதிகளில் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலமாகும். அளவில் சிறியதாய் இருந்தபோதிலும், வலிமைமிக்கதும் நம்பவைக்கக்கூடியதுமான ஒரு செய்தியை அவை அளிக்கின்றன. ஒரு துண்டுப்பிரதியைக்கொண்டு எவ்வாறு ஒரு பைபிள் படிப்பைத் தொடங்கலாம்? வீட்டுக்காரருக்கு அக்கறையூட்டும் என்று நீங்கள் நினைக்கிற ஒரு துண்டுப்பிரதியை அவரிடம் வெறுமனே அளிப்பதன்மூலமாகும். பிறகு, முதற்படியெடுத்து, வீட்டுக்காரர் உங்களோடு முதல் பத்தியை வாசிப்பதற்கு அழையுங்கள். இடக்குறிப்புக் கொடுக்கப்பட்ட வசனங்களை எடுத்துப்பார்த்து, அவை அந்தப் பொருளுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கலந்தாலோசியுங்கள். முதல் சந்திப்பில், நீங்கள் ஒன்றிரண்டு பத்திகளை மட்டுமே சிந்திக்கலாம். பைபிளிலிருந்து அக்கறையூட்டும் காரியங்களைக் கற்றுக்கொண்டுவருவதை வீட்டுக்காரர் மதித்துணர வரும்போது, நீங்கள் ஒருவேளை உங்களுடைய கலந்தாலோசிப்புகளில் செலவழிக்கிற நேரத்தை அதிகரிக்கலாம்.
4 பைபிளை மட்டும் உபயோகித்தல்: சிலசமயங்களில் ஓர் ஆள் பைபிளைக் கலந்துபேசுவதற்கு ஒத்துக்கொள்பவராய் இருக்கிறார், ஆனால் முறைப்படியான படிப்பை அல்லது நம்முடைய பிரசுரங்களில் ஒன்றைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ளத் தயங்குபவராய் தோன்றலாம். அப்பொழுதும் நீங்கள், என்றும் வாழலாம் புத்தகம் அல்லது நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலுள்ள பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட அக்கறையூட்டக்கூடிய வேதப்பூர்வமான கலந்தாலோசிப்புகளைத் தயாரிப்பதன்மூலம் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்து நடத்தமுடியும்; ஆனால் அக்கறையுள்ள நபரைச் சந்திக்கையில் பைபிளை மட்டுமே அப்பொழுது பயன்படுத்துங்கள். இப்படிப்பட்ட கலந்தாலோசிப்புகள், சூழ்நிலைமைகளைப் பொறுத்து 15 அல்லது 20 நிமிடங்களுக்கு, அல்லது அதற்குமேலும் தொடரலாம். பைபிள் சத்தியங்களைப் போதிப்பதற்கு ஒழுங்காகவும் படிப்படியாக முன்னேறுகிற விதத்திலும் செய்யப்பட்டால், நீங்கள் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்துவிட்டீர்கள், அதை நீங்கள் அறிக்கையும் செய்யலாம். பொருத்தமான சமயமாயிருக்கும்போது, என்றும் வாழலாம் புத்தகத்தை அறிமுகப்படுத்தி முறைப்படியான பைபிள் படிப்பு ஒன்றைத் தொடங்குங்கள்.
5 வெளி ஊழியத்தில் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருப்பதோடுகூட, அயலகத்தார், தோழர்கள், அல்லது வீட்டு அங்கத்தினர்களுடன் பைபிள் படிப்புகளைத் தொடங்குவதற்கு நீங்கள் முயற்சித்திருக்கிறீர்களா? அது சில காலத்திற்கு முன்பாகவா? நீங்கள் மறுபடியும் சமீபத்தில் முயற்சித்திருக்கிறீர்களா? ஒரு வழிமுறை பலனளிக்கவில்லையென்றால், மற்றொன்றை முயற்சிப்பதைக்குறித்து நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?
6 கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை பொருத்தி, வெளி ஊழியத்தில் விடாமுயற்சியுடன் செயற்பட்டு, யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக அவரில் நீங்கள் நம்பிக்கையாயிருந்தால், படிப்புகளை ஆரம்பிப்பதில் நீங்கள் வெற்றிபெறுகிறவர்களாய் இருக்கலாம். ஒருபோதும் சத்தியத்தின் வலிமையையும் யெகோவா அளிக்கிற உதவியையும் குறைவாக மதிப்பிடாதிருங்கள். வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பித்து நடத்துவதன்மூலம் ஊழியத்தில் உங்களுடைய சந்தோஷத்தை அதிகரிப்பீர்களாக.