தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம்செலுத்துங்கள்
1 “நன்கு உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை நம்மிடம் இருக்கிறது.” (2 பே. 1:19, NW) பேதுரு ஏன் இதைச் சொன்னார்? எபிரெய வேதாகமங்களிலுள்ள ராஜ்ய தீர்க்கதரிசனங்களும் அதோடு இயேசு கிறிஸ்துவிடமிருந்து தாமே வந்தவைகளும் ஏறக்குறைய 32 வருடங்களுக்கு முன்பாக மறுரூபக் காட்சியில் பேதுருவும் மற்ற இரண்டு சீஷர்களும் பார்த்திருந்ததும் கேட்டிருந்ததுமான காரியத்தினால் நிச்சயப்படுத்தப்பட்டிருந்தன அல்லது ‘நன்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.’ இந்தத் தத்ரூபமான தரிசனம், இயேசு கிறிஸ்து பிரகாசமான மகிமையோடும் தம்முடைய பிதாவின் முழு ஆதரவோடும் ராஜ்ய வல்லமையில் உண்மையிலேயே வருவார் என்பதை அவர்களுக்கு மீண்டும் உறுதியளித்திருந்தது. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள், ‘பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அத்தீர்க்கதரிசன வசனத்தை நன்கு கவனித்திருந்தார்கள்.’ அறிவொளியூட்டுகிற தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம் செலுத்துவது, “விடிவெள்ளி”யாகிய கிறிஸ்து ராஜ்ய மகிமையில் எழும்பி வரும்போது புதிய நாளின் உதயத்திற்கு விழிப்புள்ளவர்களாவும் அறிவொளியூட்டப்பட்டவர்களாகவும் அவர்களைக் காத்துக்கொள்ளும்.—2 பே. 1:16-19, NW; மத். 17:1-9.
2 மகிமையான மறுரூபக் காட்சியை பேதுருவோடுகூட பார்ப்பதற்கு நாம் அங்கு இருக்கவில்லை. என்றாலும், தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம் செலுத்தியிருக்கிற இந்தச் சந்ததியிலுள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தின் முன்காட்சியை அல்ல, ஆனால் மகிமைபொருந்திய ராஜா உண்மையிலேயே ஆட்சிசெய்கிறார் என்ற மலைக்கவைக்கும் அத்தாட்சியைப் பார்ப்பதற்கு அதிக சிலாக்கியம் அளிக்கப்பட்டிருக்கின்றனர்! 1914 முதற்கொண்டு கடந்துசெல்கிற ஒவ்வொரு ஆண்டும், இயேசு தம்முடைய ராஜரீக ‘வந்திருத்தலின்’ சம்பந்தமாக கொடுத்த கவனத்தைக் கவரும் ‘அடையாளத்தினுடைய’ பல்வேறு அம்சங்களின் நிறைவேற்றத்தை நாம் கண்கூடாகப் பார்ப்பதால் தீர்க்கதரிசன வார்த்தை அதிக உறுதியாக்கப்படுகிறது. அந்த அடையாளத்தின் முக்கிய பாகம் என்னவென்றால், அந்த ராஜா இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு முடிவைக் கொண்டுவருவதற்கு முன்பாக அவருடைய அரசாங்கத்தை அல்லது ராஜ்யத்தைப் பற்றிய அறிவிப்பு எல்லா தேசங்களிலும் செய்யப்படும் என்பதாகும். கிறிஸ்துவின் வழிநடத்துதலில், ராஜ்ய பிரசங்க வேலை ஒருபோதும் கற்பனை செய்திராத அளவில் இப்பொழுது 231 தேசங்களில் செய்யப்பட்டு வருகிறது. (மத். 24:3-14, NW) மேலுமாக, ‘மிகுந்த உபத்திரவத்திற்கான’ காலம் நெருங்கி வருகையில், கிரயமாகச் செயல்படும் ‘ஆட்டுக்குட்டியானவரின் ரத்தத்தில்’ விசுவாசம் வைக்க முன்வரும் ‘சகல ஜாதிகளிலிருந்து வந்த திரள் கூட்டத்தினரை’ சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட ராஜா கூட்டிச் சேர்த்துக்கொண்டு வருகிறார்.—வெளி. 7:9, 10, 14.
3 அந்த “விடிவெள்ளி” உதித்துவிட்டதால், அதாவது கிறிஸ்து ராஜ்ய வல்லமையில் வந்துவிட்டதால், இன்னும் தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம் செலுத்துவதற்குக் காரணமிருக்கிறதா? ஆம்! மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து அப்போஸ்தலன் யோவானுக்கு வெளிப்படுத்துதல் புத்தகத்தை உண்டுபண்ணும் தொடர் தரிசனங்களைக் கொடுத்தார். பூர்வ கிறிஸ்தவர்களுக்கு இவை உற்சாகமூட்டுதலாகவும் போதனையாகவும் இருந்தபோதிலும், இப்பொழுது ‘கர்த்தருடைய நாளில்’ வாழ்கிற நமக்கு அவை விசேஷ மதிப்புவாய்ந்தவையாக இருக்கின்றன. (வெளி. 1:10) அதன் காரணமாகவே யெகோவாவின் ஜனங்களுடைய சபைகள் வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தை இப்பொழுது மீண்டும் படிக்கின்றன.
4 “இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளைச் சப்தமாக வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவற்றைக் கைக்கொள்ளுகிறவர்களும் சந்தோஷமுள்ளவர்கள்; ஏனென்றால் குறிக்கப்பட்ட காலம் சமீபித்திருக்கிறது.” (வெளி. 1:3, NW) நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், இந்தத் தீர்க்கதரிசன தரிசனங்களின் கருத்தை, ஆம், உண்மையான புரிந்துகொள்ளுதலைப் பெறவேண்டும். இது எதைத் தேவைப்படுத்துகிறது? வெளிப்படுத்துதல் விவரப்பதிவின் முக்கியத்துவத்தை நம்முடைய இருதயங்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு மறுபடியும் மறுபடியுமாக படிப்பது அவசியம். முதல் நூற்றாண்டு நிர்வாகக் குழுவின் ஓர் அங்கத்தினராகிய அப்போஸ்தலன் பேதுரு, தம்முடைய சகோதரர்களை ஆவிக்குரிய விதமாகத் ‘தூண்டுவதற்கு’ அடிப்படை சத்தியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மதிப்பை உணர்ந்தவராக இருந்தார். (2 பே. 1:12, 13, NW) நவீனநாளைய “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யும் அதைப்போலவே தீர்க்கதரிசன வார்த்தைக்கு நம்முடைய கவனத்தைத் திரும்பத் திரும்ப ஈர்ப்பதன்மூலம் நம் போற்றுதலை உயிர்ப்புள்ளதாக வைத்துக்கொள்வதற்கு உதவிசெய்கிறது.—மத். 24:45-47, NW.
5 எவ்வாறு கவனம்செலுத்துவது: வெளிப்படுத்துதலில் உள்ள தீர்க்கதரிசன வார்த்தை எப்படிப்பட்ட கவனிப்புக்குத் தகுதியானது? கிறிஸ்தவர்களின் காலத்துக்கு முன்பு வாழ்ந்த தம்முடைய ஊழியர்களோடு கடவுள் பேச்சுத்தொடர்பு கொண்டதுபோல தேவதூதர்கள் அல்லது தீர்க்கதரிசிகள் மூலமாக கிறிஸ்தவர்களிடம் கடவுள் பேசினதில்லை என்பதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவுபடுத்துகிறார். மாறாக, யெகோவா தம்முடைய மிக அதிக நேசத்துக்குரிய குமாரன்மூலமாக நம்முடன் பேச்சுத்தொடர்பு கொண்டிருக்கிறார்; அவரையே “சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக” நியமித்தார். (எபி. 1:1, 2) “ஆகையால், நாம் கேட்ட காரியங்களை விட்டு ஒருபோதும் விலகாதபடி, அவற்றிற்கு வழக்கமாக செலுத்துவதைவிட அதிக கவனம் செலுத்தவேண்டும்.” (எபி. 2:1, NW) ஆம், கடவுளுடைய வார்த்தைக்கும், அதைப்போலவே விசேஷமாக இயேசு கிறிஸ்துவின் மூலமாக வருகிற தீர்க்கதரிசன வார்த்தைக்கும் நாம் கவனம்செலுத்த வேண்டும். வெளிப்படுத்துதல் படிப்புக்கு நாம் எவ்வாறு விசேஷ கவனம்செலுத்தலாம்?
6 முதலாவதாக, ஒவ்வொரு வாரமும் சபை புத்தகப் படிப்பில் ஆஜராயிருப்பது மிகவும் முக்கியம். வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தைப் படிப்பது நம்மில் அநேகருக்கு மூன்றாவது தடவையாக இருக்கும் என்பது உண்மைதான். இதனால், புத்தகப் படிப்பு ஒன்றுக்கு ஆஜராக தாங்கள் தவறினாலும்கூட, அந்தப் பொருளை ஏற்கெனவே அறிந்தவர்களாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, அந்தக் கூட்டத்துக்கு ஆஜராவதை சிலர் ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளலாம். என்றாலும், கடந்துசெல்கிற ஒவ்வொரு ஆண்டும், 1989-ல் சபை புத்தகப் படிப்பில் வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தை முதல் முறையாக நாம் கலந்தாலோசிக்க ஆரம்பித்தபோது இருந்ததைவிட, இந்தத் தீர்க்கதரிசன தகவல் அதிகப் பொருத்தமாகவும் காலத்திற்கேற்றதாகவும் ஆகிறது. வெளிப்படுத்துதல் தீர்க்கதரிசன நிறைவேற்றமாக வேகமாய் முன்னேறிக்கொண்டு வருகிற தற்கால சம்பவங்களுக்கு நாமனைவரும் விழிப்புள்ளவர்களாக இருப்பது அவசியம். அப்பொழுது நாம் யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக செயல்படுவதற்கு ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கமுடியும். வெளிப்படுத்துதலின் இந்த முக்கியமான கலந்தாலோசிப்பின்போது, கூடுமானவரை ஒரு புத்தகப் படிப்பையும் தவறவிடாமலிருப்பதை உங்களுடைய தனிப்பட்ட இலக்காக வைத்துக்கொள்ளுங்கள்.
7 இரண்டாவதாக, உங்களுடைய பாடத்தை நன்கு தயார்செய்யுங்கள். இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களை எடுத்துப் பார்த்து, வெளிப்படுத்துதலில் படித்துவருகிற வசனங்களின் விளக்கத்திற்கு எவ்வாறு ஆதரவாயிருக்கிறது என்பதைச் சிந்தியுங்கள். இந்த முறையில் நீங்கள் கேள்விகளுக்கு வெறுமனே பதில்களைப் பெறுவதைவிட அதிகத்தைப் பெறுவீர்கள். வெறுமனே அறிவையல்ல, ஆனால் ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அடைவதற்கு முயலுங்கள். (நீதி. 4:7, NW) மூன்றாவதாக, குறிப்புகள் சொல்வதன்மூலமும் வேதவசனங்களை வாசிப்பதன்மூலமும் ஊக்கமாக பங்குகொள்ளுங்கள். ஒரு பதிலாவது சொல்வதை உங்களுடைய இலக்காக வைத்துக்கொள்ளுங்கள், ஒவ்வொரு படிப்பிலும் அநேக பதில்கள் சொல்வது விரும்பத்தக்கது. அவ்விதமாக செய்வது உங்களுடைய மனதை பாடத்தின்மீது ஒருமுகப்படுத்த உங்களுக்கு உதவிசெய்யும்.
8 தீர்க்கதரிசன வார்த்தைக்கு வழக்கமாக செலுத்துகிற கவனத்தைவிட கூடுதலான கவனம்செலுத்துவது தயாரித்தல், ஆஜராதல், பங்குபெறுதல் ஆகியவற்றைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. படிப்புக்குப் பிறகும்கூட, தொடர்ந்து ‘இவற்றை சிந்தித்துக்கொண்டு, இவற்றில் ஆழ்ந்திருப்பதையும்’ குறிக்கிறது. (1 தீ. 4:15, NW) தீர்க்கதரிசன வார்த்தை நம்முடைய இருதயங்களில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்று இருக்க வேண்டுமாகில், உள்ளான ஆளை—நம் சிந்தைகள், ஆசைகள், உணர்ச்சிகள், உள்ளெண்ணங்கள், இலக்குகள் ஆகியவற்றை—ஆழமாக பாதிக்க அனுமதிக்க வேண்டும். (2 பே. 1:19) இவ்விதமாக, பின்வரும் இப்படிப்பட்ட கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: தனிப்பட்ட விதமாக இந்தத் தகவல் எனக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? யெகோவா மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி என்ன கற்றுக்கொண்டேன்? இந்தப் பொருளில் என்ன நியமங்கள் மறைந்திருக்கின்றன? என்னுடைய இருதயத்தில் படிப்பின் உட்கருத்தைப் புரிந்துகொள்கிறேனா? என்னுடைய வாழ்க்கையில் இந்தச் சத்தியங்களை எவ்வாறு பொருத்த முடியும்? என்னுடைய குடும்பத்தில்? சபையில்? நாம் கற்றுக்கொள்வதை நடைமுறையில் பொருத்தும்போது சங்கீதக்காரன் சொன்ன விதமாக நாம் சொல்ல முடியும்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.”—சங். 119:105; யோபு 29:3, 4.
9 கொடிய காலங்களின்போது விழிப்புடனிருங்கள்: எருசலேமுக்கு வரவிருக்கிற அழிவையும் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு தப்பி ஓடுவதற்கான காலத்தைக் குறித்துக்காட்டுகிற சூழ்நிலைமையையும் குறித்து பொ.ச. 33-ம் ஆண்டில் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எச்சரித்தார். (லூக். 19:41-44; 21:7-21) பின்பு, 30-க்கும் மேலான ஆண்டுகள் கடந்துவிட்டன. சமீப எதிர்காலத்தில் ஒன்றும் மாற்றமிராது என்பதாக யூதேய கிறிஸ்தவர்கள் சிலருக்குத் தோன்றியிருக்கக்கூடும். ‘தீர்க்கதரிசன வசனத்துக்கு கவனம்செலுத்தும்படி’ அன்பான அப்போஸ்தலன் பேதுருவால் ஏறக்குறைய பொ.ச. 64-ல் எழுதப்பட்ட அவருடைய இரண்டாவது கடிதத்திலிருந்து வந்த அறிவுரை எவ்வளவு காலத்திற்கேற்றதாய் இருந்தது! (2 பே. 1:19) சிறிது காலத்திற்குப் பின்பு, பொ.ச. 66-ல், எருசலேம் ரோம சேனைகளால் சூழப்பட்டது. எந்தவொரு தெளிவான காரணமுமில்லாமல் ரோம சேனைகள் திடீரென பின்வாங்கியபோது, விழிப்புடனிருந்த யூதேய கிறிஸ்தவர்கள் இயேசுவின் அறிவுரைகளைப் பின்பற்றி தப்பியோடினர். பின்பு, பொ.ச. 70-ல், ரோம சேனைகள் திரும்பிவந்து எருசலேமை முற்றிலும் அழித்துவிட்டனர். இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கூர்ந்த கவனம்செலுத்தியதற்காக அந்தக் கிறிஸ்தவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்!
10 நவீனகால கிறிஸ்தவர்களாகிய நாம் விழிப்புடனிருப்பது எதற்காக? வெளிப்படுத்துதல் தரிசனங்களில், இப்பொழுது வாழ்கிற கிறிஸ்தவர்களை, கர்த்தருடைய நாளில் நடக்கவிருக்கிற அநேக சம்பவங்களுக்கு இயேசு விழிப்பூட்டினார். கடந்த 80 ஆண்டுகளின்போது, இந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே நிகழ்ந்திருக்கின்றன: ராஜ்யத்தின் பிறப்பு; பரலோகத்தில் யுத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து சாத்தானையும் அவனுடைய பேய்களையும் தோற்கடித்தல், பின்பு பூமிக்கு அருகாமையில் அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்தல்; மகா பாபிலோனின் வீழ்ச்சி; எட்டாவது உலக வல்லரசாகிய சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம் தோன்றுதல். வெளிப்படுத்துதலிலுள்ள தீர்க்கதரிசன வார்த்தையின் இந்த அம்சங்களினுடைய நிறைவேற்றம், நாம் வெகுவிரைவில் இந்தப் பின்வரும் மீதமுள்ள திடீர் திருப்பங்களுடைய சம்பவங்களைக் காண்போம் என்பதை அதிக நிச்சயமாக்குகிறது: 1,44,000 பேரின் கடைசி அங்கத்தினர்களை முத்திரையிடுதல், திரள் கூட்டத்தினரைக் கூட்டிச்சேர்ப்பது முடிவுக்கு வருதல், மகா பாபிலோனின் அழிவு, அர்மகெதோன் யுத்தம், சாத்தானை அபிஸ்ஸுக்குள் தள்ளுதல், கிறிஸ்துவினுடைய ஆயிரவருட அரசாட்சி. இயேசுவினுடைய எச்சரிப்புக்குக் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியமானது: “இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்”!—வெளி. 16:15.
11 நாம் தொடர்ந்து விழிப்புடனிருக்கிறோமா? அந்தத் தீர்க்கதரிசன வார்த்தையை எவ்வளவு பொறுப்புணர்வோடு எடுத்துக்கொள்கிறோம்? நம்முடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு 5 வருடங்களுக்கு முன்போ 50 வருடங்களுக்கு முன்போ ஒப்புக்கொடுத்திருந்தாலும் ரோம கிறிஸ்தவர்களுக்கான பவுலுடைய வார்த்தைகள் நமக்கு சரியாகப் பொருந்துகின்றன: “நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று.” “அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, . . . சீராய் நடக்கக்கடவோம்” என்று கிறிஸ்தவர்களுக்குப் பின்பு பவுல் அறிவுரை கூறுகிறார். (ரோ. 13:11-13) ஒழுக்க ரீதியில் முற்றிலும் இருளில் இருக்கிற ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். வெறும் 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டுவதாக இருந்த நடத்தையானது, இந்த 20-ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டில் உள்ள உலகப்பிரகாரமான வாழ்க்கையில் தோய்ந்திருக்கிற அநேகருக்கு சாதாரணமாயிருக்கிறது. இந்த உலகத்தின் இருளில் கொஞ்சம் கொஞ்சமாக அடித்துச்சென்று ஒழுக்கசம்பந்தமாக அசட்டையாக ஆகிவிடுவதற்கு ஒருபோதும் உங்களை அனுமதிக்காதபடிக்கு, சகோதரர்களே ஜாக்கிரதையாயிருங்கள். இந்த உலகத்தின் இழிவான சிந்தனைக்கும் வாழ்க்கை முறைக்கும் இசைந்துபோகும்படி அல்லது விட்டுக்கொடுக்கும்படி நீங்கள் உங்களை அனுமதிப்பீர்களானால், இன்று நாம் எதிர்ப்படுகிற பெரிய விவாதங்களையும் விரைவில் என்றுமாக தீர்க்கப்படவிருக்கிற யெகோவாவின் பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்தல் மற்றும் அவருடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்துதலைக் கவனிக்காதவர்களாய் ஆகிவிடுவீர்கள். ஆவிக்குரிய மயக்கம் இப்பொழுது வெகு சமீபத்திலிருக்கிற ஒருவருடைய இரட்சிப்பை ஆபத்திற்குள்ளாக்கும்.
12 தீர்க்கதரிசன வார்த்தைக்கான இருதயப்பூர்வமான போற்றுதலில் வளருங்கள்: பூர்வீக எபிரெய தீர்க்கதரிசிகள் மேசியாவைப் பற்றி தாங்கள் ஆவியால் ஏவப்பட்டெழுதிய வார்த்தைகளின் நிறைவேற்றத்தில் கூர்ந்த அக்கறையுடையவர்களாக இருந்தனர். கடவுளுடைய நோக்கம் நிறைவேறிவருவதைக் குறித்துக் “கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்.” (1 பே. 1:10, 11) அதைப்போலவே, வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைக்கு நீங்கள் கவனம் செலுத்துகையில், ஆவிக்குரிய காரியங்களுக்கான போற்றுதலில் நீங்கள் வளருவீர்கள். உங்களுடைய ஆவிக்குரிய பசி தீவிரமடையும், இதனால் “தேவனுடைய ஆழங்களை” தோண்டி ஆராய்வதற்கு நீங்கள் தூண்டப்படுவீர்கள். (1 கொ. 2:10) நீங்கள் உங்களுடைய இருதயத்தைப் போற்றுதலினாலும் தீர்க்கதரிசன வார்த்தைக்கான அன்பினாலும் நிரப்பும்போது, கூட்டங்களுக்கு ஆஜராகும்படி உங்களை எவரும் உந்துவிக்க வேண்டிய அவசியமிருக்காது; ஆஜராவதற்கும் ஒழுங்காகப் பங்குகொள்வதற்கும் நீங்கள் தூண்டப்படுவீர்கள். (லூக். 6:45) அந்த ‘வார்த்தை உங்கள் சொந்த இருதயத்தில்’ இருந்தால், ‘இரட்சிப்புக்காக வெளிப்படையாக அதை அறிவிப்பதற்கு’ நீங்கள் உந்துவிக்கப்படுவீர்கள்.—ரோ. 10:8-10, NW.
13 எந்தளவுக்கு நாம் முடிவின் காலத்திற்குள் செல்கிறோமோ அந்தளவுக்குக் கடவுளுடைய தீர்க்கதரிசன அறிவிப்புகளில் இருக்கிற நம்முடைய விசுவாசத்தில் உறுதியாயிருப்பதற்காக பரிகசிப்பவர்கள் நம்மை ஏளனம் செய்வார்கள். (2 பே. 3:3, 4) என்றாலும், நாம் தொடர்ந்து தீர்க்கதரிசன வார்த்தைக்கு விழிப்புடனிருப்போம். கடவுளுடைய வார்த்தையாகிய விளக்கு, காலத்தின் ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நமக்கு காண்பிக்கிறது. இந்த இருண்ட உலகத்தின் கடைசி நாட்களில் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை அது பிரகாசமாக ஒளிவீசும்படி செய்கிறது. விடிவெள்ளி உதித்துவிட்டது! கிறிஸ்து ராஜ்ய வல்லமையில் இருக்கிறார்! நம் காட்சியில், ஒரு புதிய நாளின் உதயத்தை நாம் ஏற்கெனவே காண்கிறோம். இயேசுவினுடைய மறுரூபக் காட்சியின் அற்புதகரமான தரிசனத்தில் ராஜ்யத்தைப் பற்றிய ஒரு முன்காட்சியை காண்பதற்கு சிலாக்கியமளிக்கப்பட்டிருந்த அந்த மூன்று அப்போஸ்தலருக்கு அந்த ராஜ்யம் மெய்ம்மையானதாக இருந்ததுபோல, கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகம் தொடர்ந்து நமக்கு மெய்ம்மையானதாக இருப்பதாக!