கேள்விப் பெட்டி
◼ செயலற்ற சகோதரனுடன் அல்லது சகோதரியுடன் வீட்டு பைபிள் படிப்பு நடத்தும்படி சபை ஊழியக் குழுவிலிருக்கும் ஒருவர் சொன்னால் நடத்துவது இப்போதும் சரிதானா?
செயலற்றவர்கள் உட்பட, சபையை மேய்க்க வேண்டிய உத்தரவாதம் மூப்பர்களுக்கு இருக்கிறது. அவர்கள் இப்படிப்பட்டவர்களைச் சந்தித்து எத்தகைய தனிப்பட்ட உதவி அளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர். பொருத்தமான சந்தர்ப்பத்தில், தனிப்பட்ட பைபிள் படிப்பின் நன்மைகளை செயலற்றவருக்கு எடுத்துரைப்பது உதவியாய் இருக்கும். இத்தகைய ஏற்பாட்டிலிருந்து யார் பயனடைவர் என்பதை சபை ஊழியக் குழு தீர்மானிக்கும் என நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம், பக்கம் 103-ல் சொல்கிறது.
யாருக்கு உதவியளிக்க வேண்டும், எந்தப் பொருளில் படிப்பு நடத்தப்பட வேண்டும், எந்தப் பிரசுரம் அதிக உதவியாக இருக்கும் ஆகியவற்றை ஊழியக் கண்காணி தீர்மானிக்கிறார். ஆரம்பத்தில் அவரோடு பைபிள் படிப்பு நடத்தியவரோ அவருக்கு அறிமுகமானவராயும் அவர் மதிக்கிறவராயும் இருக்கும் ஒருவரோ அவருக்கு உதவும் நிலையில் இருப்பர். செயலற்ற சகோதரிக்கு உதவும்படி திறமையான முதிர்ந்த சகோதரியைக் கேட்கலாம். பொதுவாக, படிப்பு நடத்த நியமிக்கப்பட்டிருப்பவருடன் இன்னொரு பிரஸ்தாபியும் உடன்செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு நியமிக்கப்படுகையில் படிப்பு நடத்தும் பிரஸ்தாபி மணிநேரத்தையும் மறுசந்திப்புகளையும் வேதப்படிப்பையும் அறிக்கை செய்யலாம்.—நவம்பர் 1987, நம் ராஜ்ய ஊழியம் (ஆங்கிலம்), பக்கங்கள் 1-2-ஐக் காண்க.
மாணாக்கர் முழுக்காட்டுதல் பெற்றவராக இருப்பதால், படிப்பை நீண்ட காலத்திற்கு நடத்த வேண்டிய அவசியமில்லை. செயலற்றவர் மீண்டும் சபைக் கூட்டங்கள் அனைத்திற்கும் வரவேண்டும், நற்செய்தியின் ஒழுங்கான பிரஸ்தாபியாக வேண்டும் என்பதே அவருக்கு உதவியளிப்பதன் நோக்கம். இத்தகைய படிப்புகளின் முன்னேற்றத்தை ஊழியக் கண்காணி மேற்பார்வையிடுவார். இத்தகைய சகோதர சகோதரிகள், யெகோவாவுக்கு முன்பாக தங்கள் பொறுப்புகளின் சுமையை தாங்களே ஏற்றுக்கொண்டு, சத்தியத்திலே உறுதியாக “வேரூன்றி, நிலைபெற்றவர்களா[க]” மாறுவதே இந்த அன்பான உதவியால் விளையும் பலனாக இருக்க வேண்டும்.—எபே. 3:17; கலா. 6:5.