‘வாருங்கள்’ என அவர்களை அழையுங்கள்
1 பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விடுக்கப்பட்ட அதே அழைப்பு இன்று உலக முழுவதிலும் 233 தேசங்களிலும் எதிரொலிக்கிறது: “நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.” (ஏசா. 2:3) ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய மக்களுக்கு உதவுவதற்கான ஒரு மிகச் சிறந்த வழி அவர்களை யெகோவாவுடைய அமைப்பினிடம் வழிநடத்துவதே. இதன் மூலம் அவர்கள் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.
2 பைபிள் மாணாக்கர்கள், வீட்டு பைபிள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பிக்கும் வரை இராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு அவர்களை அழைக்க சில பிரஸ்தாபிகள் தயங்குகின்றனர். ஆனாலும் சில சமயங்களில், அவர்களோடு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சிலர் சபை கூட்டங்களுக்கு வர ஆரம்பிக்கலாம். ஆகவே, கூட்டங்களுக்கு வரும்படி மக்களை அன்போடு அழைக்கவும் உற்சாகப்படுத்தவும் நாம் தாமதிக்க கூடாது.
3 நாம் செய்ய முடிந்தவை: உள்ளூரில் நடக்கும் கூட்டங்களைப் பற்றி மக்களுக்கு தெரிவிக்க கைப்பிரதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கூட்டங்களில் அனுமதி இலவசம் என்றும் உண்டியல் குலுக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறுங்கள். கூட்டங்கள் எப்படி நடக்கின்றன என்பதை விளக்குங்கள். நாம் உண்மையில் பைபிளையே அங்கு படிக்கிறோம் என்பதை தெரிவியுங்கள். எல்லாருக்கும் படிப்புக்கான புத்தகங்கள் அளிக்கப்படுகின்றன என்பதையும் தெரிவிக்க மறக்கவேண்டாம். கூட்டங்களுக்கு வருபவர்கள் பல்வேறு பின்னணிகளையும் வாழ்க்கை தரத்தையும் சேர்ந்தவர்கள் என்பதைக் கூறுங்கள். அவர்கள் எல்லாரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களே என்பதையும் சிறியோர், பெரியோர் என எல்லாரும் தாராளமாக வரலாம் என்பதையும் தெரிவியுங்கள். நம்மோடு படிப்பவர்களை கூட்டங்களுக்கு வரும்படி அழைக்க வேண்டும். அவர்கள் வருவதற்காக நம்மாலான எல்லா உதவிகளையும் செய்ய தயார் என்பதை தெரிவியுங்கள்.
4 பைபிளில் கடைசியாக பதிவு செய்யப்பட்டிருக்கும் காரியங்களுள் ஒன்று, ஜீவனடைவதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும்படியான பின்வரும் கனிவான அழைப்பாகும்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; . . . தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளி. 22:17) நம் கூட்டங்களுக்கு வரும்படி மற்றவர்களை அழைப்பதைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை.
5 கடவுளுடைய மக்களின் சபைகளுக்குள் வரும், கடவுளைத் துதிக்கும் ஆயிரக்கணக்கான புதியவர்கள், “மேகத்தைப் போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப் போலவும் பறந்துவரு”வதாக ஏசாயா 60:8 தீர்க்கதரிசனமாக முன்னுரைத்தது. நாம் எல்லாருமே, புதியவர்களை நம் கூட்டங்களுக்கு வரும்படி அழைத்து அவர்கள் சௌகரியமாக உணரும்படி செய்யலாம். இந்த விதத்தில், கூட்டிச்சேர்க்கும் வேலையின் வேகத்தை யெகோவா அதிகரிக்கையில் நாமும் அவருடன் ஒத்துழைப்போம்.—ஏசா. 60:22.