முஸ்லீம்களை சந்தித்தால் என்ன சொல்வீர்கள்?
1 முஸ்லீம்களுக்கு எப்போதாவது சாட்சி கொடுத்திருக்கிறீர்களா? அப்படியானால், அவர்கள் கடவுள்பக்தி மிக்கவர்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். எனினும், யெகோவாவின் தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த, பூமியில் பரதீஸ் வரப்போவதைப் பற்றி அவர்கள் அவ்வளவாய் அறியாதவர்களாக இருக்கின்றனர். எனவே, அந்த நம்பிக்கையைப் பற்றி நாம் அவர்களுக்கு சொல்ல விரும்புவோம். (1 தீ. 2:3, 4) பின்வரும் தகவல்கள் அவர்களுக்கு நல்லமுறையில் சாட்சி கொடுக்க உங்களுக்கு உதவும்.
2 அல்லா அல்லது கடவுள் ஒருவர் இருக்கிறார் என முஸ்லீம்கள் நம்புகின்றனர். முகமது நபி, கடவுளின் தீர்க்கதரிசி என்றும் நம்புகின்றனர். அவர்களுடைய புனித புத்தகம் குர்ஆன். இஸ்லாம் அவர்கள் மதம். “பணிதல்” என்பதே அதன் அர்த்தம். பொய் சொல்வதும், விக்கிரகங்களை வணங்குவதும் தவறு என குர்ஆன் சொல்கிறது. கடவுள் ஒருவரே, அவர் திரித்துவத்தின் பாகமல்ல என்றும் அது சொல்கிறது. மேலும், அழியாமையுள்ள ஆத்துமா, அக்கினி நரகம், பரலோக பரதீஸ் ஆகியவற்றையும் போதிக்கிறது. பைபிளை கடவுளுடைய வார்த்தையாக முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், காலங்களினூடே அதில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என கருதுகின்றனர். மாறாக குர்ஆனோ, எந்தவித கலப்படமும் இல்லாமல் மூல மொழியில் இப்போதும் புனிதமாக இருக்கிறதென நம்புகின்றனர்.
3 சிநேகப்பான்மையோடும், சாதுரியமாகவும், மதிநுட்பத்தோடும் சாட்சி கொடுத்தல்: முஸ்லீமோடு சம்பாஷிக்கும்போது, சிநேகப்பான்மையும் சாதுரியமும் அவசியம். (நீதி. 25:15) அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் அவர்கள் மனதில் ஆழப் பதிந்து இருக்கின்றன என்பதையும் அவற்றில் பெரும்பாலானவற்றை சிறுவயதிலிருந்தே மனப்பாடமாக கற்றிருக்கின்றனர் என்பதையும் மனதில் வையுங்கள். எனவே, மத போதகங்களைப் பற்றி விவாதித்து, கடவுளுடைய சித்தம் என்ன என்பதை தாங்களாகவே நிச்சயப்படுத்திக் கொள்ளும் ஆவிக்குரிய முன்னேற்றம் என்பது அவர்கள் அறியாத ஒன்று. (ரோ. 12:2) முஸ்லீம்களுக்கு உதவ, பொறுமையும் புரிந்துகொள்ளுதலும் மிக அவசியம்.—1 கொ. 9:19-23.
4 உங்களை கிறிஸ்தவமண்டலத்தோடு சம்பந்தப்படுத்தி காட்டும் வார்த்தைகளை தவிர்த்திடுங்கள். கத்தோலிக்க அல்லது புராட்டஸ்டன்ட் மதத்தோடு உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் அவற்றிலிருந்தெல்லாம் நீங்கள் வித்தியாசமானவர்கள் என்பதையும் தெளிவுபடுத்துங்கள். பைபிளை கடவுளுடைய புத்தகம் என சொல்லுங்கள். “கடவுளுடைய குமாரன்” என்ற பதத்தை முஸ்லீம்கள் வெறுக்கின்றனர். எனவே, அந்த பதத்தை சொல்லாமல் இருப்பதே நல்லது. அல்லது வீட்டுக்காரர் ஓரளவு ஆவிக்குரிய முன்னேற்றம் அடைந்த பிறகு இதைப் பற்றி கலந்துபேசுவது மேல். எனினும், தீர்க்கதரிசி அல்லது தூதுவர் என குறிப்பிட்டு, இயேசுவைப் பற்றி நீங்கள் தாராளமாக பேசலாம். தர்க்கம் பண்ணுவதை தவிர்த்திடுங்கள். வீட்டுக்காரர் கோபப்படுகிறார் என தெரிந்தால், பணிவோடு உடனடியாக அவரிடமிருந்து விடைபெறுங்கள்.
5 நிறைய பேரோடு கூட்டமாக நின்று பேசுவதைவிட, தனிநபரோடு பேசுவதே சிறந்தது. சகோதரிகள் பெண்களோடும், சகோதரர்கள் ஆண்களோடும் பேசுவதே உசிதமானது. என்றபோதிலும், இதற்கு சாதகமாக அமையாத சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால், நல்ல பகுத்தறிவோடு செயல்பட வேண்டும். பெண்களின் ஒருசில உடைகள், தலைவாரும் விதம் அடக்கமற்றவை என பல முஸ்லீம்கள் நினைக்கிறார்கள். இவ்விஷயத்தில் அவர்கள் கெடுபிடியாக இருக்கின்றனர். எனவே, சகோதரிகள் இதை கவனத்தில் வைக்க வேண்டும்.—1 கொ. 10:31-33.
6 பேச வேண்டிய விஷயங்கள்: கடவுளின் மகத்துவத்தைப் பற்றியும் அவருடைய அன்பைப் பற்றியும் வெளிப்படையாக பேசுங்கள். கடவுள் ஒருவரே (திரித்துவம் அல்ல) என்பதையும் விக்கிரக வணக்கம் தவறு என்பதையும் ஏற்றுக்கொள்ளும் உண்மையான விசுவாசி நீங்கள் என்பதை சொல்ல தயங்காதீர்கள். உலகம் முழுவதும் இன்று வியாபித்திருக்கும் துன்மார்க்கத்தைக் குறித்து பேசுங்கள். அதாவது, போர்கள், உள்நாட்டுக் கலவரம், இன பகைமை, மதப்பற்றுள்ளதாக கூறும் அநேக மக்களுக்கிடையே இருக்கும் போலித்தனம் போன்றவற்றை குறிப்பிடுங்கள்.
7 இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி என்ற சிற்றேடு, முஸ்லீம்களோடு சம்பாஷணையை ஆரம்பிக்க உதவும் தலைப்புகளைப் பற்றி கூடுதல் விவரங்களை அளிக்கிறது. தடை ஏதுமின்றி பைபிளை தாராளமாக படிக்கும் சூழ்நிலையில் வாழ்கிற முஸ்லீம்களுக்காகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது.
8 பேச்சை துவக்க இதோ ஒரு முறை:
▪ “குறிப்பா, முஸ்லீம்களோட நா பேசறேன். உங்க மதத்தப் பத்தி ஓரளவு படிச்சிருக்கேன். ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறாருன்னு நீங்க நம்புறீங்கன்னும் தீர்க்கதரிசிகள் எல்லாரையுமே விசுவாசக்கிறீங்கன்னும் நா நெனைக்கறேன். [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இந்த பூமியே பூங்காவனமா மாறப்போவுதுங்கறதப் பத்தி சொல்ற பழைய தீர்க்கதரிசனம் ஒண்ணை உங்களுக்கு சொல்ல ஆசைப்படறேன். அந்த தீர்க்கதரிசி என்ன எழுதி வைச்சிருக்கார்னு வாசித்துக் காட்டட்டுமா? [ஏசாயா 11:6-9-ஐ வாசிக்கவும்.] பூமியே பூங்காவனமா மாறுகிறதப் பத்தி குர்ஆன்ல சொல்லியிருக்கறத இந்த சிற்றேட்டுல குறிப்பிட்டிருக்கிறது இப்ப எனக்கு ஞாபகத்துக்கு வருது.” இறைவன் வழி சிற்றேட்டில் 9-ம் பக்கத்திற்கு திருப்பி, நீதிமான்கள் பூமியில் குடியேறுவார்கள் என்ற தடித்த எழுத்துக்களில் இருக்கும் மேற்கோளை காட்டுங்கள். ஆர்வம் காட்டினால், பக்கம் 8-ல் காணப்படும் 7-9 பாராக்களை கலந்தாலோசித்து உங்களுடைய பேச்சை தொடருங்கள். சிற்றேட்டை வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டு, மறுசந்திப்புக்காக ஏற்பாடு செய்யுங்கள்.—1998, பிப்ரவரி நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 6, பாரா 23-ல் இன்னொரு அணுகுமுறையை காணலாம்.
9 இறைவன் வழி சிற்றேட்டிலுள்ள குறிப்புகளை மேலுமாக ஆராய்வதற்கு ஒருவரை உற்சாகப்படுத்தும்போது, பைபிள் படிப்பு என சொல்வதைவிட, கலந்தாலோசிப்பு என்பதே சாலச்சிறந்தது. அந்த சிற்றேட்டை முடிக்கும்போது, மாணாக்கர் அறிவு புத்தகத்தை அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை படிக்க தயாராக இருக்க வேண்டும். சுவனத்திற்கு செல்லும் பாதையை கண்டடைவது எப்படி என்ற துண்டுப்பிரதியும் கடவுளுக்கு உண்மையாய்க் கீழ்ப்படிவதற்குக் காலம் என்ற ஆங்கில புக்லெட்டும் முஸ்லீம்களுக்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்டவை.
10 இஸ்லாமிய மத நம்பிக்கைகளைப் பற்றியும் அவர்களுடைய விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கும் இந்த அறிவின் அடிப்படையில் முஸ்லீம்களுக்கு நாம் சாட்சி கொடுக்கும் முறையிலும்சரி, எந்தப் பிரசுரங்களை அவர்களுக்கு அளிக்கலாம் என்பதை தேர்ந்தெடுப்பதிலும்சரி நாம் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும். எல்லா மனிதரும் யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொண்டு, இரட்சிக்கப்பட நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அவர் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.—அப். 2:21.