கேள்விப் பெட்டி
◼ ராஜ்ய மன்றம் சுத்தம் செய்யும் பொறுப்பு யாருடையது?
சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும் ராஜ்ய மன்றம், நாம் பிரசங்கிக்கும் செய்திக்கு நல்மதிப்பை கொண்டுவரும். (1 பேதுரு 2:12-ஐ ஒப்பிடுக.) ராஜ்ய மன்றத்தை நேர்த்தியாகவும் தூய்மையாகவும் வைப்பது அவசியம். அதை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்கும் பொறுப்பு எல்லாருக்குமே இருக்கிறது. எல்லா பொறுப்பையும் ஒருசிலர் தலையிலேயே சுமத்தக்கூடாது. பொதுவாக, சபை புத்தக படிப்பு தொகுதிகள் அடிப்படையில் சபையை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. புத்தக படிப்பு நடத்துநர் அல்லது அவரது உதவியாளர் இதில் முன்னின்று செயல்படுவர். ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் கூடும் ராஜ்ய மன்றங்களில், அவற்றின் பராமரிப்பில் எல்லா சபைகளும் பங்குகொள்ளும் விதத்தில் மூப்பர்கள் அதை ஒழுங்கமைப்பார்கள்.
இந்தப் பொறுப்பை சிறந்த முறையில் நாம் எப்படி நிறைவேற்றலாம்? ஒழுங்கான அட்டவணை போட்டு, அதன்படி ராஜ்யமன்றம் சுத்தம் செய்யப்பட வேண்டும். சுத்தம் செய்வதற்கு தேவையான எல்லாப் பொருட்களும் கையிருப்பில் இருக்க வேண்டும். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பட்டியல் போட்டு அதை அறிவிப்பு பலகையில் ஒட்டிடுங்கள். அப்போதுதான், சுத்தம் செய்வதற்காக வருவோர் தேவைப்படும்போதெல்லாம் அதை பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கூட்டத்திற்கும் பிறகு சாதாரணமாக சுத்தம் செய்ய வேண்டியவற்றை குறிப்பிடும் பட்டியல், வாரத்திற்கு ஒரு முறை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டியவற்றையும் குறிப்பிடும் பட்டியல் என இரண்டு வித்தியாசமான பட்டியல்களை தயாரிக்கலாம். சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் சௌகரியப்படும் நாளிலும் நேரத்திலும் முழுமையான சுத்தம் செய்வதற்காக புத்தக படிப்பு நடத்துநர் அட்டவணை போட வேண்டும். செடிகளுக்கும் அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும் பூக்களுக்கும் ஒழுங்கான பராமரிப்பு தேவை. நடைபாதைகளையும் வாகனம் நிறுத்துமிடங்களையும் துப்புரவாக வைக்க வேண்டும். ஞாபகார்த்த தினத்திற்கு முன், வருடத்திற்கு ஒரு முறை ராஜ்ய மன்றம் முற்றும் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும். திரைச்சீலைகளை சலவை செய்து, ஜன்னல்கள், சுவர்கள் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்வதும் இதில் அடங்கும்.
மன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ குப்பை போடாமல் இருப்பதன்மூலம் சுத்தம் செய்யும் வேலை எல்லாருக்கும் குறையும். அடுத்ததாக கழிவறையை உபயோகிக்க வரும் நபர்களுக்கு வசதியாக நாம் கழிவறையை சுத்தமாக வைக்க வேண்டும். மன்றத்தில் உள்ள சாமான்கள் அல்லது சாதனங்கள் எதையும் உடைக்காமல் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலிகள் ஏதும் உடைந்திருந்தால், குழாய்களில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால், பல்புகள் ஏதும் எரியாமல் இருந்தால், அவற்றை ராஜ்ய மன்ற பராமரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கும் சகோதரருக்கு உடனடியாக தெரிவியுங்கள்.
நாம் ஒவ்வொருவருமே நம் பங்கை மனமுவந்து செய்வோமாக. வணக்கத்திற்காக நேர்த்தியான இடத்தைக் கொண்டிருப்பதற்கு இது உதவும். அதோடு, யெகோவா தேவனை கனப்படுத்தும் சுத்தமுள்ள மக்களாக நம்மை இது தனித்துக்காட்டும்.—1 பே. 1:16.