நாத்திகரிடம் எப்படி பேசுவீர்கள்?
1 ஆப்பிரிக்காவிலுள்ள மிஷனரி சகோதரியிடம், “நான் ஒரு நாத்திகவாதி” என்றார் போலாந்தைச் சேர்ந்த பேராசிரியை. அந்தப் பேராசிரியையிடம் உரையாடலைத் துவங்கிய சகோதரி, உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற ஆங்கில புத்தகத்தை கொடுத்தார். அடுத்த வாரம் அந்த சகோதரி அவரை சந்தித்தபோது, அந்த பேராசிரியை சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள்: “இப்போ நான் நாத்திகவாதி இல்ல!” அவர் அந்த படைப்பு புத்தகம் முழுவதையும் படித்துவிட்டதோடு, இப்போது பைபிள் படிப்பிற்கும் ஒப்புக்கொண்டார். தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்களிடம் திறம்பட்ட விதத்தில் சாட்சிகொடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முதலில், மக்கள் இவ்வாறு சொல்வதற்கான வித்தியாசப்பட்ட காரணங்களிடம் நம் கவனத்தைத் திருப்புவோமா.
2 அவநம்பிக்கையை ஊட்டிவளர்க்கும் சில காரணக்கூறுகள்: நாத்திகர்கள் அனைவருமே நாத்திகர்களாக வளர்க்கப்படவில்லை. அவர்களுள் அநேகர் ஒருகாலத்தில் ஏதோ ஒரு மதத்தைப் பின்பற்றினவர்கள், கடவுளையும் நம்பினவர்கள்தான். இருப்பினும், மோசமான உடல்நல கோளாறுகள், குடும்ப பிரச்சினைகள் அல்லது அவர்களுக்கு இழைக்கப்பட்ட சில அநீதிகள், மதத்திடம் அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்னும் சிலருடைய விஷயத்தில், மேற்படிப்பு கல்விக்கூடங்களில் நடத்தப்படும் சில பாடங்கள் கடவுளைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், இவர்களுள் அநேகர் யெகோவா தேவனில் உறுதியான நம்பிக்கை வைத்து அவருடைய சாட்சிகளாக மாறியிருக்கின்றனர். அவர்களில் சிலருடைய உதாரணங்கள் இதோ.
3 பாரிஸில் ஒரு பெண், வலுவிழக்கச் செய்யும் எலும்பு வியாதியுடனேயே பிறந்தார். அவர் கத்தோலிக்கராக ஞானஸ்நானம் பெற்றிருந்தபோதிலும், தன்னை நாத்திகவாதி என்று சொல்லிக்கொண்டார். இப்படிப்பட்ட வியாதியோடு தன்னை ஏன் கடவுள் பிறக்க வைத்தார் என்று கன்னியாஸ்திரீகளிடம் அவர் கேட்டபோது, “ஏன்னா அவருக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், அதனாலதான்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அந்த அர்த்தமற்ற பதிலை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின்லாந்திலுள்ள ஒருவரின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் குணப்படுத்த முடியாத தசை வியாதியில் பீடிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது, அதோடு அவர் சக்கர நாற்காலியே கதியென ஆனார். பிறகு, வியாதிப்பட்டோரை சுகப்படுத்துவதாக சொல்லிக்கொண்ட பெந்தெகொஸ்தே ஆளிடம் அவரை அவருடைய அம்மா கொண்டுசென்றார். ஆனால் அற்புதம் ஏதும் நிகழவில்லை. அதன் விளைவு, அந்த இளைஞருக்கு கடவுள்மீதிருந்த பற்று தணிந்தது; நாத்திகராக மாறினார்.
4 ஹாண்டுராஸில் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்ட ஒருவர் சமதருமவாத தத்துவங்களையும் நாத்திகத்தையும் படித்துவந்தார். பரிணாமத்தின் விளைவாகவே மனிதன் தோன்றினான் என்ற பல்கலைக்கழக போதனையை நம்பினார். இதன் விளைவாக அவர் கடவுளை நம்ப மறுத்துவிட்டார். அதேபோன்று, ஐக்கிய மாகாணங்களில் ஒரு பெண் மெத்தடிஸ்ட்டாக வளர்க்கப்பட்டார். கல்லூரியில், மனோதத்துவம் பயின்றார். இது அவருடைய நம்பிக்கையை எவ்வாறு பாதித்தது? அவர் சொல்கிறார்: “கொஞ்ச நாட்களிலேயே என் மத நம்பிக்கை சுக்குநூறாக உடைத்துவிட்டது.”
5 நேர்மையானவர்களின் இதயத்தை சென்றெட்டுதல்: கடவுள் இல்லை என சொல்லிக்கொள்ளும் அநேகர், மோசமான உடல்நலக் கோளாறு, குடும்பப் பிரச்சினை, அநீதி போன்ற இன்னுமனேக பிரச்சினைகளுக்கும் முடிவு வரும் என்பதை தெரிந்துகொண்டால், கடவுளுக்கு தங்கள் போற்றுதலை தெரிவிப்பர். ‘ஏன் இன்னும் இந்த அவலநிலை?’ ‘நல்ல ஜனங்களுக்கு ஏன் கெட்டது நடக்கிறது?’ ‘வாழ்க்கையின் அர்த்தமென்ன?’ போன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிய அவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் உள்ளது.
6 ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினரை கவனியுங்கள். அவர்கள் இருவருமே நாத்திகவாதிகளாக வளர்க்கப்பட்டனர். அவர்கள் சத்தியத்தை அறிந்தபோது அதனிடம் முதலில் பாராமுகமே காட்டினர். ஆனால் அவர்கள் குடும்பத்தில் பயங்கர பிரச்சினைகள் நிலவிவந்ததால், விவாகரத்துதான் தீர்வு என அவர்கள் நினைத்தனர். ஆனால் சாட்சிகள் அவர்களை மீண்டும் சந்தித்தபோது, அவர்களுடைய பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என பைபிளிலிருந்து சுட்டிக்காட்டினார்கள். அந்த தம்பதியினர் பைபிளிலுள்ள நடைமுறை ஆலோசனைகளைக் கேட்டு அசந்துபோயினர், அதோடு பைபிள் படிப்பிற்கும் ஒப்புக்கொண்டனர். அறுந்துபோகவிருந்த அவர்களுடைய திருமண வாழ்க்கை பலப்படுத்தப்பட்டது, ஆவிக்குரிய விதத்தில் முன்னேறினர், முழுக்காட்டுதலும் பெற்றனர்.
7 நாத்திகரிடம் எப்படி பேசலாம்: தான் நாத்திகன் என்று ஒருவர் உங்களிடம் சொன்னால், முதலில் அவர் அவ்வாறு சொல்வதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு காரணம் அவருடைய படிப்பா? அவர் எதிர்ப்பட்ட பிரச்சினைகளா? அல்லது அவர் பார்த்திருக்கும் மதப் பாசாங்குத்தனமும் பொய் போதகங்களுமா? என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவரிடம் நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “சின்ன வயசிலிருந்தே உங்க நம்பிக்க அதுதானா?” அல்லது “நீங்க இந்த முடிவிற்கு வர காரணம் என்ன?” அவருடைய பதில், நீங்கள் அடுத்து என்ன சொல்லவேண்டும் என்பதை தீர்மானிக்க உதவும். கடுமையான விவாதம் எழும்பும் சமயத்தில் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது உங்கள்மீது அக்கறையுள்ள சிருஷ்டிகர் இருக்கிறாரா? என்ற ஆங்கில புத்தகம்தான்.
8 நாத்திகரிடம் இவ்வாறு நீங்கள் உரையாடலை தொடரலாம்:
◼ “ ‘கடவுள் என்று ஒருவர் இருந்தால், இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு துன்பமும் அநீதியும் தலைவிரித்தாடுகிறது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?’ [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இது சம்பந்தமாக பைபிள் என்ன சொல்கிறது என்று உங்களுக்கு காட்டவா?” எரேமியா 10:23-ஐ வாசியுங்கள். அதை வாசித்த பிறகு, அந்த வசனத்தை குறித்து அவருடைய கருத்தை கேளுங்கள். அதன் பிறகு போரில்லாத உலகம் எப்போதாவது வருமா? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 16, 17-ஐ காட்டுங்கள். அல்லது சிருஷ்டிகர் புத்தகத்தில் அதிகாரம் 10-ஐ காட்டுங்கள். அவர் அந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ளும்படியும் அதிலுள்ளவற்றை வாசிக்கும்படியும் கூறுங்கள்.—கூடுதல் தகவல்களுக்கு, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், 150-1 பக்கங்களைப் பாருங்கள்.
9 எல்லா நாத்திகவாதிகளும் சத்தியத்தை வரவேற்க மாட்டார்கள் என்பது உண்மையே. இருப்பினும் அநேகர் மற்றவர்களின் கருத்துக்களையும் தெரிந்துகொள்ள விருப்பம் காட்டுகின்றனர். அவர்கள் சத்தியத்தை கண்டுணர தர்க்கரீதியாகவும், நம்பவைக்கும் விதத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்தியும் பேசுங்கள்.—அப். 28:23, 24; எபி. 4:12.