அனுபவங்கள்
◼ ஆஸ்திரேலியா: படித்துப் பட்டம் பெற்ற ஜான் சிறுவயதில் சர்ச்சுக்குப் போனார். பிறகு, நாத்திகக் கொள்கையை உறுதியாகப் பிடித்துக்கொண்டார். ஒரு பயனியர் அவருக்கு உயிரின் தோற்றம் சிற்றேட்டை அளித்தார். படைப்பு அல்லது பைபிள் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்ட நம் புதிய பத்திரிகைகளையும் மற்ற பிரசுரங்களையும் அவருக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தார். அவற்றைப் படித்த பிறகு, தன் கொள்கையைச் சிறிது மாற்றிக்கொண்டதாக ஜான் சொன்னார். பிறகு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் காட்டி பக்கம் 20 பாரா 8-ஐயும் பக்கங்கள் 23-24 பாராக்கள் 13-16-ஐயும் சகோதரர் விளக்கினார். அதிலிருந்த வசனங்கள் ஜானை ரொம்பவே கவர்ந்தன. அவர் சொன்னார்: “பைபிளை ஒரு தடவ படிச்சு பாக்கணும்னு நினைக்கிறேன்.”
◼ மெக்சிகோ: பைபிள் கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டதல்ல என்று ஒருவர் ஒரு பிரஸ்தாபியிடம் சொன்னார். அதற்கு ஆதாரங்களைக் காட்டுவதாக பிரஸ்தாபி கூறினார். ஒருசில சந்திப்புகளுக்குப் பிறகு, பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் அவரது மனதைத் தொட்டன. முக்கியமாக, கடவுளுடைய நெறிமுறைகளைப் பற்றிக் கற்றுக்கொண்டபோது நெகிழ்ந்துபோனார். பிரஸ்தாபியிடம் அவர் இப்படிச் சொன்னார்: “ஆரம்பத்தில நீங்க எனக்கு பைபிள சொல்லிக் கொடுக்கும்போது, மத்த புத்தகங்கள்ல இருக்கிற புத்திமதிகளைத்தான் இதிலேயும் படிக்கற மாதிரி தோணுச்சு. என் மனசில எந்தப் பாதிப்பும் ஏற்படல. ஆனா, இப்போ நாம பைபிள படிக்கும்போது, முக்கியமா ஒழுக்க நெறிகளை பத்தி படிக்கும்போது என் மனசு குத்துது.”
◼ அமெரிக்கா: பெருநகரங்களில் செய்யப்படும் விசேஷ ஊழியத்தில் ஒரு தம்பதி தைவானைச் சேர்ந்த பெண்மணியைச் சந்தித்தார்கள். அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனால், பைபிள் மேற்கத்திய நாட்டினருக்கு மட்டுமே சொந்தமானது என நினைத்தார். வசதியான வாழ்க்கை வாழ்ந்தபோதிலும், மனதில் ஒருவித வெறுமை படர்ந்திருந்ததால், இவர்கள் பரப்பி வைத்திருந்த பிரசுரங்களைப் பார்க்க வந்தார். வாழ்க்கையின் நோக்கத்தைத் தெரிந்துகொள்ள பைபிள் உதவும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்தத் தம்பதி அவருக்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்தும் ஒரு சிற்றேட்டிலிருந்தும் படிப்பை ஆரம்பித்தனர். சில விஷயங்களைக் கலந்தாலோசித்த பிறகு, பைபிள் மற்ற மத புத்தகங்களைவிட எந்தளவு சிறப்பானது என்பதை அந்தப் பெண் புரிந்துகொண்டார், ரொம்பவே ஆச்சரியப்பட்டார். நிறைவேறின பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றித் தெரிந்துகொண்டதும், “வேறு எந்தப் புத்தகமும் பைபிள் அளவுக்குத் துல்லியமாக இருக்க முடியாது!” என ஒத்துக்கொண்டார்.
◼ ஜப்பான்: ஒரு வீட்டுக்காரர் கடவுள்மேல் நம்பிக்கை இல்லை என்று சொன்ன பிறகும், ஒரு பிரஸ்தாபி அவரைத் தொடர்ந்து சந்தித்து விழித்தெழு! பத்திரிகையிலுள்ள “யாருடைய கைவண்ணம்?” என்ற கட்டுரையைக் காட்டி சுருக்கமாகப் பேசிவந்தார். படிப்படியாக அந்த நபர் தன் கருத்தை மாற்றிக்கொண்டு, கடவுள் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். இப்போது கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறார். பிரஸ்தாபி அவருக்கு கடவுள் சொல்லும் நற்செய்தி! என்ற சிற்றேட்டிலிருந்து படிப்பு நடத்துகிறார்.
◼ கனடா: ஒரு பெண் வீட்டைவிட்டு காரை எடுப்பதற்காக வெளியே வந்தபோது, ஒரு சகோதரி சமீபத்திய பத்திரிகைகளை அவருக்கு அளித்தார். மறுசந்திப்பின்போது, அந்தப் பெண் தனக்கு இஷ்டமில்லை, கடவுள்மேல் நம்பிக்கை இல்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார். ஆனாலும் சகோதரி, திருப்தியான வாழ்க்கைக்கு வழி சிற்றேட்டைக் கொண்டுவந்து கொடுக்கத் தீர்மானித்தார். அடுத்தமுறை அந்தப் பெண் வீட்டில் இருந்தபோது, அந்தச் சகோதரி அவர்களைச் சந்தித்தார்; அந்தப் பெண்ணுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அவர் ஒற்றைப் பெற்றோராக இருப்பதன் காரணமாக அவர்மேல் உள்ள அக்கறையில் மறுபடியும் சந்திக்க வந்திருப்பதாகச் சொன்னார்; பின்பு, அந்தச் சிற்றேட்டில் பக்கம் 4 பாரா 6-ஐக் காட்டினார். சிறந்த ஆலோசனைகளை எங்கே பெறுவது என்பதைப் பற்றி அதில் இருக்கிறது. பிறகு, பிள்ளை வளர்ப்பைப் பற்றி பாடம் 2-ல் உள்ள ஆலோசனைகளைப் படிக்கும்படி சொன்னார். உடனே அந்தப் பெண் சந்தோஷமாக சிற்றேட்டைப் பெற்றுக்கொண்டார்.