கேள்விப் பெட்டி
◼ சபை கூட்டங்களில் யார் ஜெபம் செய்ய வேண்டும்?
சபையாக கூடிவருகையில் ஜெபம் பண்ணுவது, நம்முடைய வணக்கத்தின் முக்கிய பாகமாகும். யெகோவாவிற்கு முன்பாக மற்றவர்களை பிரதிநிதித்துவம் செய்து ஜெபம் பண்ணுவது மதிப்புமிக்க சிலாக்கியம் ஆகும்; அத்தோடு கவனமாக கையாள வேண்டிய பொறுப்பும்கூட. இது அவ்வளவு முக்கியமாக இருப்பதால், கூட்டங்களில் ஜெபிக்க யார் யார் தகுதியானவர்கள் என்பதை முடிவு செய்கையில் மூப்பர்கள் ஞானமாக செயல்பட வேண்டும். சபையின் சார்பாக ஜெபிக்கும் முழுக்காட்டப்பட்ட சகோதரர்கள் முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவ ஊழியர்களாக மட்டுமல்லாமல், சபையில் மதிக்கப்படுபவர்களாகவும் நல்ல முன்மாதிரிகளாகவும் இருக்க வேண்டும். அவர்களுடைய பயபக்திமிக்க மரியாதையான ஜெபம், யெகோவா தேவனுடனான அவர்கள் உறவை வெளிப்படுத்தும். 1987, ஜூன் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தில் வெளிவந்த “மற்றவர்களுக்கு முன்பாக மனத்தாழ்மையுள்ள இருதயத்துடன் ஜெபம் செய்தல்” என்ற கட்டுரையில், பொது இடங்களில் சபையின் சார்பாக ஜெபிப்போருக்கு உதவும் அநேக முக்கியமான குறிப்புகள் உள்ளன.
நடத்தை சரியில்லாமல், எதையுமே விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் ஒருவரை ஜெபம் பண்ணும்படி மூப்பர்கள் அனுமதிக்கக்கூடாது. மற்றவர்களுடன் ஒத்துப்போகாதவரையோ, மற்றவருடன் தனக்குள்ள பிரச்சினையை வெளியே சொல்வதற்கு ஜெபத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் சகோதரரையோ ஜெபம் செய்ய தெரிந்தெடுக்கக் கூடாது. (1 தீ. 2:8) ஓர் இளம் சாட்சி முழுக்காட்டப்பட்டவராக இருந்தாலும், சபையை பிரதிநிதித்துவம் செய்யுமளவிற்கு அவரிடம் ஆவிக்குரிய தகுதிகள் இருக்கின்றனவா என்பதை மூப்பர்கள் தீர்மானிக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 16:1, 2.
ஒருவேளை வெளி ஊழியத்திற்கான கூட்டங்களில், அந்த தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்து ஜெபிப்பதற்கு தகுதிவாய்ந்த சகோதரர் யாரும் இல்லையென்றால், சில சமயங்களில் முழுக்காட்டப்பட்ட சகோதரி ஜெபிக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் அவர் முக்காடிடுவது அவசியம். வெளி ஊழியத்திற்கான கூட்டத்திற்கு ஒருவேளை எந்த தகுதிவாய்ந்த சகோதரரும் போக முடியாதபட்சத்தில், அந்த தொகுதியை வழிநடத்த தகுதிவாய்ந்த ஒரு சகோதரியை மூப்பர்கள் நியமிக்க வேண்டும்.
வழக்கமாக, பொதுப் பேச்சுக்கு யார் அக்கிராசனராக இருக்கிறாரோ அவர்தான் ஆரம்ப ஜெபத்தை செய்வார். இருப்பினும், மற்ற சபை கூட்டங்களில் அநேக தகுதிவாய்ந்த சகோதரர்கள் இருக்கையில் கூட்டத்தை துவங்குபவர், கூட்டத்தின் கடைசி பாகத்தை கையாளுபவர் ஆகியோரைத் தவிர வேறு யாரையாவது ஆரம்ப அல்லது முடிவு ஜெபத்தை செய்யும்படி அழைக்கலாம். சபை கூட்டத்தில் ஜெபிக்கும் சகோதரர், ஜெபத்தில் தான் என்ன சொல்லப் போகிறார் என்பதை யோசிப்பதற்காக, முன்னதாகவே அவரிடம் அதை அறிவித்துவிட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அன்றைய கூட்டத்திற்கு ஏற்றாற்போல் கோர்வையாகவும் உருக்கமாகவும் அவரால் ஜெபிக்க முடியும்.
இத்தகைய ஜெபங்கள் நீளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பொதுவில் ஒரு சகோதரர் ஜெபம் செய்யும்போது, தான் சொல்ல விரும்புவதை எழுந்து நின்று, போதுமான அளவு சப்தத்துடன் தெளிவாக ஜெபிக்கும்போது அவர் என்ன சொல்கிறார் என்பதை மற்றவர்கள் நன்கு புரிந்துகொள்வர். இது அங்கு கூடிவந்திருக்கும் அனைவரும் ஜெபத்தின் முடிவில் மனப்பூர்வமாக “ஆமென்” என சொல்ல உதவும்.—1 நா. 16:36; 1 கொ. 14:16.