யெகோவாவின் ஆசீர்வாதம் நம்மை செல்வந்தராக்குகிறது
1 ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைப் பொறுத்தே பெரும்பாலும் அவருடைய வெற்றி மதிப்பிடப்படுகிறது. இதன் காரணமாகவே, பணம் படைத்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளவர்கள் என்று அநேகர் நினைக்கிறார்கள். பணத்தால் மகிழ்ச்சி அடையலாம் என்று நினைப்பவர்கள் ஏமாற்றமே அடைவர். (பிர. 5:12) பொருள் சம்பந்தமாக ‘ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்களுக்கு’ நிரந்தரமான சந்தோஷம் கிடையாது. (1 தீ. 6:9) மாறாக, யெகோவாவின் ஊழியர்கள்தான் உண்மையிலேயே சந்தோஷமுள்ளவர்களாகவும் உலகிலேயே அதிக செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள். (நீதி. 10:22; வெளி. 2:9) அது எப்படி?
2 நம் ஐசுவரியத்தின் அத்தாட்சி: கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் பற்றிய புரிந்துகொள்ளுதலும் ஆவிக்குரிய உட்பார்வையும் வேறெந்த செல்வத்தையும்விட மிகச் சிறந்தது. இது நம்மிடம் தாராளமாக இருக்கிறது. யெகோவா, தம்மைப் பற்றியும் தம் மகனைப் பற்றியும் அவருடைய பூமிக்குரிய அமைப்பின் வாயிலாக தொடர்ந்து போதித்து வருகிறார். இதை நம்முடைய நிரந்தர நன்மைக்காக செய்து வருகிறார். யெகோவாவிடம் நெருங்கி வரவும் அவரோடு நெருக்கமான உறவை வைத்துக்கொள்ளவும் திருத்தமான புரிந்துகொள்ளுதல் நமக்கு உதவி செய்கிறது. (யாக். 4:8) நல்லது கெட்டதை பகுத்தறிந்து கடவுளுடைய சட்டதிட்டங்களைப் பின்பற்றுவது நம்மை ஒருசில நோய்களிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கிறது. யெகோவா நம்முடைய தேவைகளை பூர்த்திசெய்வார் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இதனால் கடவுளால் வரும் திருப்தியையும் மன சமாதானத்தையும் அனுபவிப்போம்.—மத். 6:33.
3 நாம் ஆவியின் கனிகளை வளர்த்து, ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் மத்தியில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் மகிழ்ந்து அனுபவிக்கிறோம். அன்பென்னும் பலமான கட்டினால் நாம் இணைக்கப்பட்டிருப்பதால், துன்பம் நம்மை தவிக்கவைக்கும் நேரங்களில் கடவுளோ நம் சகோதரர்களோ கைவிட்டுவிட்டதாக நாம் ஒருபோதும் உணர வேண்டியதில்லை.—கலா. 6:10.
4 நம் வாழ்க்கைக்கு நிஜமான அர்த்தமும் நோக்கமும் இருக்கிறது. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் உலகளாவிய வேலையில் நமக்கும் ஒரு பங்கு இருப்பதை மகத்தான சிலாக்கியமாக நாம் கருதுகிறோம். கடவுளுடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்தி உண்மை வணக்கத்தில் நம்முடன் சேர்ந்து ஒற்றுமையாக சேவிக்க மற்றவர்களுக்கு உதவுவதால் இந்த வேலை நமக்கு நிரந்தரமான சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நம் மதிப்புமிக்க பொக்கிஷமாகிய ஊழியம் யெகோவாவுக்கு கனத்தைக் கொண்டுவருவதோடு, அவருடைய பெயரை மகிமைப்படுத்துவதில் நமக்கும் ஒரு பங்கிருக்கிறது என்ற திருப்தியை கொடுக்கிறது. எதிர்காலத்தைக் குறித்த நம் நம்பிக்கை சீக்கிரமாக நிறைவேறும் என்று அறிந்திருப்பதால், நம்பிக்கையான மனநிலையை நாம் காத்துக்கொள்கிறோம்.
5 நம் போற்றுதலைக் காண்பித்தல்: யெகோவாவின் ஆசீர்வாதங்களுக்கு நாம் எப்போதுமே போற்றுதல் காண்பிப்போமாக. நிஜமாகவே நம்மை பூமியிலுள்ள பெருஞ்செல்வந்தராக ஆக்குவது இவையே. (நீதி. 22:4) யெகோவா தேவன் நமக்கு என்னவெல்லாம் கொடுத்து ஆசிர்வதித்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு நாளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி செய்தால், யெகோவா நம்மீது அன்பைப் பொழிவதற்காக அவருக்கு நன்றி சொல்வோம்; தனிப்பட்ட பக்தியையும் தொடர்ந்து காட்டுவோம்.