மக்களின் உயிர் ஆபத்தில்!
1 ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படுவதே’ யெகோவாவின் சித்தம் என்று பைபிள் தெளிவாகச் சொல்லுகிறது. ஆனாலும், பூமியிலுள்ள கோடிக்கணக்கானோரின் இரட்சிப்பு யெகோவா தேவனிடமும் இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யத்திடமும் அவர்கள் என்ன மனப்பான்மையைக் காண்பிக்கிறார்கள் என்பதைச் சார்ந்திருக்கிறது. அவர்கள் “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை” பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான மனநிலையை வளர்க்கலாம். (1 தீ. 2:3, 4, NW) கடவுளுடைய நீதியான புதிய உலகை ஸ்தாபிப்பதற்காக பூமியிலிருந்து துன்மார்க்கம் சீக்கிரமாக நீக்கப்படும் என்ற எச்சரிப்பின் செய்தியை அறிவிப்பதோடுகூட, ஒரு முக்கியமான உயிர்காக்கும் வேலையைச் செய்யும்படியும் நாம் கட்டளை பெற்றிருக்கிறோம்.—மத். 24:14; 28:19, 20; ரோ. 10:13-15.
2 ஏன் அவ்வளவு அவசரம்? “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம்” பற்றி இயேசு எச்சரித்தார். (மத். 24:21) அந்த உபத்திரவம் அர்மகெதோனில் அதன் உச்சக்கட்டத்தை அடையும். (வெளி. 16:16) நற்செய்தியைக் கேட்டு செயல்பட தவறும் அநேகர் அப்போது அழிக்கப்படுவர். அதில் விசுவாசத்தில் இல்லாத உறவினர், அக்கம்பக்கத்தார், உடன் வேலை செய்கிறவர்கள், பள்ளி சகாக்கள், பழக்கப்பட்டவர்கள் போன்றோரும் அடங்குவர். தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மீட்கும் பொருளாகத் தந்து மனிதவர்க்கம் முழுவதன்மீதும் அன்பு கூர்ந்த கடவுளுடைய மாதிரியைப் பின்பற்றி ‘எல்லா மனுஷரையும்’ சென்றெட்ட வேண்டும் என்பதே நம் அக்கறையாக இருக்க வேண்டும். (யோவா. 3:16) கடவுளுடைய பாதுகாப்பான இடத்திற்கு ஓடி வரும் அழைப்பை எல்லோருக்கும் கொடுப்பதில் நாம் வைராக்கியமாக செயல்பட வேண்டும். பிரசங்க வேலையை முழுமையாகச் செய்வதன்மூலம் நாம் இரத்தப்பழியைத் தவிர்க்கலாம்.—எசே. 33:1-7; 1 கொ. 9:16.
3 நம் நோக்கம் என்ன? பிரசங்க வேலையின் முக்கியத்துவம் கடவுளுடைய வார்த்தை முழுவதும் வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் சொன்னதுபோல, கடவுளுடைய வழிகளுக்கு இசைவாக வாழும்படி நம்மை ‘கிறிஸ்துவின் அன்பு நெருக்கி ஏவுகிறது.’ (2 கொ. 5:14) பிரசங்கிக்க வேண்டும் என்ற நம் கடமையை காவற்கோபுரம் அடிக்கடி வலியுறுத்துகிறது. அத்துடன் பிரசங்க வேலையை எப்படி செய்வது என்பதற்கான வழிநடத்துதலை நம் ராஜ்ய ஊழியம் தொடர்ந்து கொடுத்து வருகிறது. மூப்பர்கள் இந்த வேலையை ஒழுங்கமைத்து, அதில் பங்கெடுக்கும்படி நம்மை உற்சாகப்படுத்துகின்றனர். ஊழியத்தில் தங்களுடன் சேர்ந்து பங்கெடுக்கும்படி உடன் பிரஸ்தாபிகளும் நம்மை அழைக்கிறார்கள். நம் பிரசங்க அளிப்புகளை தயாரித்தல், பத்திரிகைகளையும் இதர பிரசுரங்களையும் அளித்தல், மறு சந்திப்புகள் செய்தல், பைபிள் படிப்புகளை நடத்துதல், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சாட்சி கொடுக்க பயன்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி நிறைய கேட்கிறோம். மக்களின் உயிரைக் காக்கும் நோக்கத்தை நிறைவேற்ற இவை அனைத்தும் நமக்கு உதவுகின்றன.—1 கொ. 9:22, 23; எபே. 1:13.