நன்கு செவிகொடுத்து கேளுங்கள்
1 கவனமாக செவிகொடுத்து கேட்பதற்கு நம் பங்கில் கட்டுப்பாடு தேவை. அதேசமயத்தில் கேட்கும் விஷயங்களிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு அவற்றால் நன்மையடைய வேண்டும் என்ற ஆர்வமும் அவசியம். அதனால்தான், நாம் ‘கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனமாயிருக்க’ வேண்டும் என இயேசு வலியுறுத்தினார்.—லூக். 8:18.
2 முக்கியமாக கிறிஸ்தவ கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இது அவசியம். ஏனென்றால் நாம் கவனமாக செவிகொடுத்து கேட்கவேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்கள் இவை. (எபி. 2:1) இப்படிப்பட்ட கூட்டங்களில் நீங்கள் நன்கு செவிகொடுத்து கேட்பதற்கு உதவும் சில குறிப்புகள் இதோ:
◼ கூட்டங்களை மதிப்புமிக்கவையாக கருதுங்கள். ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ மூலம் நாம் ‘யெகோவாவால் போதிக்கப்படுவதற்கு’ இவைதான் முக்கியமான வழி.—லூக். 12:42; ஏசா. 54:13, NW.
◼ முன்னதாகவே தயாரியுங்கள். கூட்டத்தில் சிந்திக்கப்போகும் பகுதியை எடுத்துப் படியுங்கள். உங்களுடைய பைபிளையும் அங்கு படிக்கப்போகும் புத்தகத்தையும் மறவாமல் கொண்டு செல்லுங்கள்.
◼ கூட்டங்கள் நடக்கும்போது, கவனம் செலுத்த விசேஷ முயற்சி எடுங்கள். அருகில் இருப்பவருடன் பேசுவதையும் அமர்ந்திருப்பவர்களில் யார் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். கவனத்தைச் சிதறவிட்டு, கூட்டம் முடிந்த பின் என்ன செய்யலாம் என்றோ, அதுபோன்ற தனிப்பட்ட விஷயம் எதையாவது நினைத்துக் கொண்டோ இராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
◼ பேசப்படும் குறிப்புகளைக் குறித்து நன்கு சிந்தியுங்கள். ‘இது எனக்கு எப்படி பொருந்துகிறது? இதை நான் எப்போது கடைப்பிடிக்கப் போகிறேன்?’ போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.
◼ முக்கிய குறிப்புகளையும் வசனங்களையும் சுருக்கமாக எழுதிக் கொள்ளுங்கள். பேசப்படும் விஷயங்களின்மீது கவனம் செலுத்தவும், பிற்பாடு தேவையான சமயத்தில் முக்கிய குறிப்புகளை ஞாபகப்படுத்திப் பார்க்கவும் இது உதவும்.
3 செவிகொடுத்து கேட்க பிள்ளைகளை பயிற்றுவியுங்கள்: பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய போதனை அவசியம். (உபா. 31:12) பண்டைய காலங்களில் நியாயப்பிரமாண சட்டங்கள் வாசிக்கப்படும்போது, கடவுளுடைய மக்கள் மத்தியிலிருந்த, “கேட்டு அறியத்தக்க அனைவரு[ம்]” கூர்ந்து கவனம் செலுத்த வேண்டியிருந்தது. (நெ. 8:1-3) கூட்டங்களில் பெற்றோர் கூர்ந்து கவனம் செலுத்தினால், பெரும்பாலும் அவர்களுடைய பிள்ளைகளும் அதேபோன்று கவனம் செலுத்துவர். கூட்டம் நடக்கும்போது பிள்ளைகள் படங்களை வரைய புத்தகங்களையோ விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருட்களையோ கொண்டுவருவது ஞானமான காரியம் அல்ல. தேவையின்றி அடிக்கடி கழிப்பறைக்கு செல்வதும்கூட செவிகொடுத்து கேட்பதற்கு தடையாக இருக்கிறது. “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்பதால், பிள்ளைகள் ஓர் இடத்தில் ஒழுங்காக உட்கார்ந்து நிகழ்ச்சிகளை செவிகொடுத்து கேட்கிறார்களா என்பதை பார்த்துக்கொள்ள பெற்றோர் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.—நீதி. 22:15.
4 நன்கு செவிகொடுத்து கேட்பதன் மூலம், நாம் உண்மையில் ஞானிகள் என்பதையும் ‘அறிவில் தேற’ விரும்புகிறோம் என்பதையும் நிரூபிப்போம்.—நீதி. 1:5.