நாமனைவரும் யெகோவாவையும் அவருடைய குமாரனையும் கௌரவிப்போமாக
ஏப்ரல் 8-ம் தேதி நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ளும் அனைவரும் எப்படி முழுமையாய் பயனடையலாம்
1 இன்று யார் விசேஷமாக கௌரவிக்கப்படுகிறார்கள்? உலகம் போற்றும் சாதனை படைத்தவர்களே. என்றாலும் அவர்களுடைய சாதனைகள் பெரும்பாலும் மக்கள் மனதில் நிலைப்பதில்லை. ஆனால் முழு மனிதகுலமும் பயனடையும் செயல்கள் உண்டா? 2001, ஏப்ரல் 8-ம் தேதி சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கர்த்தருடைய இராப் போஜனத்தை ஆசரிக்கையில் அவை எல்லாவற்றிலும் முக்கியமானதற்கு கூர்ந்த கவனம் செலுத்துவோம்.
2 எல்லாருக்கும் மேலாக உயர்வாய் கௌரவிக்கப்பட தகுதியானவர் யார்? ‘[யெகோவாவே] . . . மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே’ என பைபிள் பதிலளிக்கிறது. (வெளி. 4:11, பொ.மொ.) படைப்பாளராகிய யெகோவாவே இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசர். அவரே என்றென்றும் கௌரவிக்கப்படுவதற்கு தகுதி பெற்றவர்!—1 தீ. 1:17.
3 கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனிதகுலத்திற்கு நித்திய ஆசீர்வாதங்களை தரும் பயனுள்ள செயல்களை செய்தார். அவர் தம் தகப்பனை அப்படியே பின்பற்றினார். (யோவா. 5:19) அவருடைய மாசற்ற கீழ்ப்படிதலும் உண்மை ஊழியமுமே, ‘வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெற அவரை தகுதியுள்ளவராக்கியது.’ (வெளி. 5:12, பொ.மொ.) அவருடைய தகப்பன் அவரை ராஜாவாக முடிசூட்டி கௌரவித்தார். (சங். 2:6-8) 2001, ஏப்ரல் 8-ம் தேதி கர்த்தருடைய இராப் போஜனத்தை ஆசரிப்பதன் மூலம் தகப்பனையும் குமாரனையும் கௌரவிப்பதற்கு நமக்கும் வாய்ப்பிருக்கிறது.
4 மனித சரித்திரத்தில் வெகு சிலரே யெகோவாவையும் அவருடைய குமாரனையும் கௌரவித்திருக்கின்றனர் என்பது வருத்தகரமான விஷயம். சில சமயங்களில், கடவுளுடைய பூர்வ ஜனத்தாராகிய இஸ்ரவேலரே ஏதோ பெயருக்குத்தான் யெகோவாவுக்கு சேவை செய்தனர். இது பகிரங்கமாய் அவமதிப்பைக் காட்டியது. (மல். 1:6) நாம் தகுந்த மரியாதை காட்டுவதற்கு, உண்மையான கீழ்ப்படிதல் அவசியம்; இது அன்பின் அடிப்படையிலும், யெகோவாவும் அவருடைய குமாரனும் நமக்குச் செய்துள்ள எல்லாவற்றிற்கும் காட்டும் போற்றுதலின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். அவ்வாறு மரியாதை காட்டி கௌரவிக்க வேண்டுமானால், நம் வழிகளிலெல்லாம் யெகோவாவையும் இயேசுவையும் நினைத்துக்கொண்டு, கடவுளிடம் பயபக்தியோடு வாழ்ந்துவர வேண்டும். இதை மற்றவர்களும் செய்வதற்கு உதவவே கிறிஸ்தவ சபை முயல்கிறது.
5 கௌரவிப்பதற்கு ஒரு விசேஷ நிகழ்ச்சி: ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் ஜனங்களுடைய கூட்டங்களில் மிக முக்கியமானது இந்த நினைவு ஆசரிப்பு. யெகோவாவுக்கு சேவை செய்யவும் அவரை கௌரவிக்கவும் விரும்பும் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும். (லூக். 22:19) தற்போதுள்ள 60 லட்சம் சாட்சிகளுடன் ஆர்வம் காட்டுபவர்களும் பெருமளவில் கூடிவருகையில் எண்ணிக்கை ஒரு கோடியே நாற்பது லட்சத்தையும் தாண்டும் என எதிர்பார்க்கிறோம். நம்முடைய பரலோக தகப்பனை கௌரவிப்பதற்கு என்னே ஓர் சிறந்த வாய்ப்பு! இந்த ஆசரிப்பு இயேசுவின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினாலும், அவர் செய்தவற்றிற்கு மரியாதை தெரிவித்து கௌரவிப்பது அவரை அனுப்பிய பிதாவுக்கே மகிமையை சேர்க்கிறது.—யோவா. 5:23.
6 இந்த விசேஷ நிகழ்ச்சிக்கு நாம் எவ்வாறு ஆதரவளிக்கலாம்? ஆர்வம் காட்டும் புதியவர்கள் முழுமையாய் பயனடைய நாம் உதவலாம். அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர்களை உற்சாகப்படுத்துங்கள், அவர்கள் அங்கு வந்து சேருவதற்குத் தேவைப்படும் உதவியையும் அன்புடன் அளியுங்கள். அந்நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்குங்கள். அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். நம்மோடு சேர்ந்து யெகோவாவை கௌரவிப்பதற்கு அவர்கள் காண்பவையும் கேட்பவையும் தூண்டுவிக்கலாம்.
7 இந்நிகழ்ச்சி மற்றவர்களை எந்தளவுக்குக் கவரும் என்பதை குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள். “என்னுடைய சர்ச்சில் நான் பலதடவை நற்கருணை கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. பைபிளில் சொன்ன மாதிரியே இருக்கிறது. அதனால் உங்களிடம்தான் சத்தியம் இருக்கிறது” என பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சொன்னார். அவர் தவறாமல் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார், சீக்கிரத்திலேயே முழுக்காட்டுதலையும் பெற்றார்.
8 புதியவர்கள் முன்னேற உதவுங்கள்: நினைவு ஆசரிப்புக்கு வரும் புதியவர்களைக் குறித்துக்கொண்டு, பிற்பாடு சீக்கிரத்திலேயே அவர்களை சந்தியுங்கள்; அவர்கள் புதிதாக கற்றவற்றையும் கவனித்தவற்றையும் மீண்டும் நினைப்பூட்டுங்கள். பைபிள் அறிவை விருத்தி செய்துகொள்வதற்கு உதவும் மற்ற கூட்டங்களைப் பற்றியும் சொல்லுங்கள். அறிவு புத்தகத்தில், “கடவுளுடைய மக்களின் மத்தியில் பாதுகாப்பை கண்டடையுங்கள்” என்ற தலைப்புள்ள 17-ம் அதிகாரத்தை கலந்தாலோசியுங்கள். இது, சபை செய்துள்ள பல்வேறு ஆவிக்குரிய ஏற்பாடுகளை அவர்கள் அறிந்துகொள்ள உதவும். நம் சகோதர கூட்டுறவு என்ற ஆங்கில வீடியோவை அவர்களுக்குக் காண்பியுங்கள். இதன் மூலம் யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் நிலவும் ஐக்கியத்தையும் சந்தோஷத்தையும் வைராக்கியத்தையும் அவர்களே கண்ணாரக் காணட்டும்!
9 ஆர்வம் காட்டுபவர்கள் எவ்வாறு தனிப்பட்ட விதத்தில் யெகோவாவுக்கு கௌரவத்தையும் மரியாதையையும் காட்டலாம் என்பதை கற்றுக்கொள்வது அவசியம். இருதயப்பூர்வமான ஜெபம் யெகோவாவுக்குப் பிரியமானது என்பதையும் அதுவே எப்போதும் ஆவிக்குரிய புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதையும் அவர்களுக்கு விளக்குங்கள். (1 யோ. 5:14) யெகோவாவைக் கௌரவிப்பதற்கு எப்படிப்பட்ட நடத்தை அவசியம் என்பதை தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 8 முதல் 12 வரையுள்ள பாடங்களிலிருந்து விளக்குங்கள். யெகோவாவின் சாட்சிகள் சிற்றேட்டில் பக்கங்கள் 30-1-லுள்ள விஷயங்களை கலந்தாலோசியுங்கள்; அதன் மூலம் பிரசங்க ஊழியத்தில் கலந்துகொண்டு யெகோவாவை கௌரவிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பைக் குறித்து சிந்திக்க புதியவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
10 இயேசுவின் பலிக்குப் போற்றுதல் காட்டுவதும் அவருடைய சீஷர்களாக நாம் ஊழியம் செய்ய கிடைத்த சிலாக்கியமும் பிதாவை கௌரவிக்கிறது, மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களையும் அள்ளி வழங்குகிறது. “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” என இயேசு வாக்குறுதியளித்தார்.—யோவா. 12:26.