தொடர்ந்து ‘நன்மை செய்யுங்கள்’
1 யெகோவாவின் ஊழியரானதே நீங்கள் செய்த நல்ல காரியம். எனினும் இப்போது இந்தக் கடினமான காலத்தில் தொடர்ந்து ‘நன்மை செய்வது’ என்பதுதான் சவால்மிக்கது. (கலா. 6:9) இதற்கு பெரும் முயற்சி தேவையானாலும், உங்களால் முடியும். எப்படி?
2 கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக்கொள்ளுங்கள்: ராஜ்ய நம்பிக்கையில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இயேசுவைப் போலவே நீங்களும் சோதனைகளை சகிக்கலாம். (எபி. 12:2, 3) யெகோவா உங்களை நேசிக்கிறார், நீங்கள் வெற்றியடைய விரும்புகிறார் என்பதை உறுதியாக நம்புங்கள். (2 பே. 3:9) உங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையோடு அவரை முழுமையாக சார்ந்திருங்கள். (1 கொ. 10:13) ஜெபத்தில் உறுதியாய் தரித்திருங்கள், சகித்து நிலைத்திருக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (ரோ. 12:12) உங்கள் சகிப்புத்தன்மை கடவுளின் அங்கீகாரத்தைப் பெற வழிவகுக்கும் என்ற உறுதியில் சந்தோஷப்படுங்கள். (ரோ. 5:3-5, NW) உண்மை மனதோடு ‘கிறிஸ்து இயேசுவின் அதே சிந்தையை’ வளர்த்துக்கொள்ளுகையில் அது உங்களுக்கு திருப்தியை அளிப்பதோடு யெகோவாவின் இதயத்தை சந்தோஷப்படுத்தும்.—ரோ. 15:5, NW; நீதி. 27:11.
3 தொடர்ந்து நன்மை செய்யுங்கள்: தம்முடைய ஜனங்கள் தொடர்ந்து நன்மை செய்வதற்கு உதவும் விதத்தில் யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடவுளுடைய வார்த்தையை வாசித்து, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரின் பைபிள் பிரசுரங்களை படிக்கும் நல்ல பழக்கத்தை தவறாமல் பின்பற்றுங்கள். எல்லா சபை கூட்டங்களுக்கும் தவறாமல் தயாரியுங்கள், கலந்துகொள்ளுங்கள், பதில் சொல்லுங்கள். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் உங்கள் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் நெருங்கிய கூட்டுறவு கொள்ளுங்கள். வெளி ஊழியத்தில் சிறந்த விதத்தில் பங்குகொள்வதற்கும் மற்றவர்களிடம் நற்செய்தியை அறிவிப்பதில் உங்கள் திறமைகளை இன்னும் வளர்ப்பதற்கும் ஊழியத்தில் எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள்.
4 இவ்வாறு, நீங்கள் தொடர்ந்து நன்மை செய்ய முடியும், அதே சமயத்தில் அதிக சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியும். இதன் சம்பந்தமாக இத்தாலியிலுள்ள ஒரு சகோதரர் சொன்னதாவது: “நாள் முழுவதும் யெகோவாவுக்கு சேவை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்புகையில் களைப்பாக இருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறேன், யாரும் என்னிடமிருந்து பறிக்க முடியாத மகிழ்ச்சியை எனக்குத் தந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன்.” எனவே, தொடர்ந்து நன்மை செய்யுங்கள், அப்போது நீங்களும் அதிக சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.