நன்மை செய்வதில் சோர்ந்து போகாதீர்கள்
‘நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்’ என்று அப்போஸ்தலன் பேதுரு புத்திமதி கூறினார். (1 பேதுரு 2:12) “நல்ல” என இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை “அழகிய, சீரிய, உயர்ந்த, மெச்சத்தக்க” ஒன்றைக் குறிக்கிறது. இந்தக் காலத்தில், பொதுவாக மக்களிடம் சீரிய அல்லது உயர்ந்த நடத்தையை எதிர்பார்ப்பது துளிகூட நடைமுறைக்கு ஒத்துவராது என தோன்றலாம். ஆனால் மொத்தத்தில், இன்று யெகோவாவின் சாட்சிகள் பேதுருவின் புத்திமதியைப் பின்பற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், சிறந்த நடத்தைக்கு உலகமுழுவதும் பெயர்பெற்றிருக்கிறார்கள்.
இந்தக் “கொடிய காலங்களில்” நாம் எதிர்ப்படும் கஷ்டங்களையும் கவலைகளையும் பார்க்கையில் நன்மை செய்கிறவர்களாய் இருப்பது மிக மிக முக்கியம். (2 தீமோத்தேயு 3:1) சோதனைகள் நம் வாழ்க்கையின் அங்கமாக விளங்குகின்றன, கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்தால் எங்கும் எதிர்ப்புதான். அதோடு, சில சோதனைகள் குறுகிய காலத்திற்கு இருக்கின்றன, மற்றவையோ நம்மை விட்டுப்போகாமல் ஒட்டிக்கொண்டே இருக்கின்றன, இன்னும் சொல்லப்போனால், தீவிரமாகிக் கொண்டேகூட வருகின்றன. என்றாலும், “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்” என்று அப்போஸ்தலன் பவுல் அறிவுரை வழங்கினார். (கலாத்தியர் 6:9) ஆனால், நெஞ்சைப் பிளக்கும் சோதனைகளும் தீரா பகைகளும் விடாமல் நம்மை தாக்குகையில் எப்படித்தான் நன்மை செய்ய முடியும்—அதுவும் தொடர்ந்து நன்மை செய்ய முடியும்?
நன்மை செய்வதில் உதவி
“உயர்ந்த, சீரிய, மெச்சத்தக்க” என்பது உள்ளான நபரை, இருதயத்தில் மறைந்திருக்கும் பண்பை அர்த்தப்படுத்துகிறது. ஆகவே, சோதனைகள் மற்றும் துன்பங்கள் மத்தியிலும் நல்நடத்தையைக் காத்துக்கொள்வது என்பது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அந்தச் சமயத்தில் மட்டுமே நன்றாக நடப்பது அல்ல, ஆனால் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பைபிள் நியமங்களை அன்றாடம் கடைப்பிடித்ததன் பலனே அது. இதன் சம்பந்தமாக நமக்கு உதவும் சில அம்சங்கள் யாவை? பின்வரும் விஷயங்களைச் சிந்தித்துப் பாருங்கள்.
கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக் கொள்ளுங்கள். அநியாயம் என தோன்றுவதை சகித்திருப்பதற்கு மனத்தாழ்மை தேவை. தன்னை உயர்வாக நினைக்கும் ஒருவர் மோசமாக நடத்தப்படுவதை சகிக்க மாட்டார். ஆனால் இயேசுவோ “மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:5, 8) அவரைப் பின்பற்றுவதன் மூலம் நம்முடைய பரிசுத்த சேவையில் நாம் ‘இளைப்படையவோ தளர்ந்துபோகவோ மாட்டோம்.’ (எபிரெயர் 12:2, 3) உங்கள் சபையில் முன்னின்று வழிநடத்துகிறவர்களுடன் மனப்பூர்வமாக ஒத்துழைப்பதன் மூலம் தாழ்மையோடு கீழ்ப்படியுங்கள். (எபிரெயர் 13:17) மற்றவர்களை உங்களிலும் ‘மேலானவர்களாக’ எண்ணுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள், உங்களுடைய சொந்த நலன்களைவிட அவர்களுடைய நலன்களுக்கு முதலிடம் கொடுங்கள்.—பிலிப்பியர் 2:3, 4.
யெகோவா உங்களை நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யெகோவா “உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்” நாம் உறுதியாக நம்ப வேண்டும். (எபிரெயர் 11:6) அவர் நம்மீது உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுகிறார், நாம் நித்திய ஜீவனைப் பெற வேண்டுமென விரும்புகிறார். (1 தீமோத்தேயு 2:4; 1 பேதுரு 5:7) கடவுள் நம் மீது வைத்திருக்கும் அன்பை எதுவும் தடுக்க முடியாது என்பதை நினைவில் வைப்பது சோதனையின் மத்தியிலும் நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருக்க நமக்கு உதவும்.—ரோமர் 8:38, 39.
யெகோவா மீது முழு நம்பிக்கை வையுங்கள். யெகோவாவை நம்புவது முக்கியம், அதுவும் சோதனைகளுக்கு ஒரு முடிவே இல்லாதது போல் அல்லது உயிரையே அச்சுறுத்துவது போல் தோன்றும்போது யெகோவாவை நம்புவது மிக முக்கியம். ‘நம்முடைய திராணிக்கு மேலாக’ சோதிக்கப்படுவதற்கு யெகோவா அனுமதிக்கவே மாட்டார், சோதனையிலிருந்து ‘தப்பிக்கொள்ளும் போக்கை’ எப்பொழுதும் உண்டாக்குவார் என்பதில் நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:13) உயிரையே அச்சுறுத்தும் சோதனையாக இருந்தாலும் சரி, நாம் யெகோவா மீது நம்பிக்கை வைத்திருந்தால் அதை தைரியமாய் எதிர்ப்பட முடியும்.—2 கொரிந்தியர் 1:8, 9.
ஜெபத்தில் உறுதியாயிருங்கள். இருதயப்பூர்வமாய் ஜெபிப்பது இன்றியமையாதது. (ரோமர் 12:12) யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு உதவும் வழிகளில் ஒன்று உள்ளப்பூர்வமாய் ஜெபம் செய்வதாகும். (யாக்கோபு 4:8) ‘நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்’ என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கிறோம். (1 யோவான் 5:14) நம்முடைய உத்தமத்திற்குப் பரீட்சையாக நமக்கு நேரிடும் சோதனையை யெகோவா தொடர அனுமதித்தால், அதை சகித்திருக்க நாம் அவரிடம் ஜெபிக்கிறோம். (லூக்கா 22:41-43) நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை, யெகோவா நம் பக்கத்தில் இருக்கிறார், நாம் சோதனையிலிருந்து எப்போதும் வெற்றியோடு வெளிவருவோம் என்பதை ஜெபம் நமக்குக் கற்பிக்கிறது.—ரோமர் 8:31, 37.
நற்கிரியைகள்—‘புகழ்ச்சியும் கனமும் உண்டாகும்’
அவ்வப்பொழுது கிறிஸ்தவர்கள் அனைவரும் ‘பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறார்கள்.’ என்றாலும், ‘நன்மை செய்வதில் நாம் சோர்ந்து போகாதிருக்க’ வேண்டும். கடுமையான துன்பத்தில் இருக்கும்போது, உங்களுடைய உண்மைத்தன்மை கடைசியில் ‘உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாக்கும்’ என்பதை அறிவது தெம்பளிக்கும். (1 பேதுரு 1:6, 7) உங்களைப் பலப்படுத்துவதற்கு யெகோவா தரும் எல்லா ஆன்மீக ஏற்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தனிப்பட்ட கவனம் தேவைப்படும்போது, கிறிஸ்தவ சபையில் மேய்ப்பர்களாக, போதகர்களாக, ஆலோசகர்களாக சேவை செய்கிறவர்களிடம் செல்லுங்கள். (அப்போஸ்தலர் 20:28) எல்லா சபை கூட்டங்களுக்கும் தவறாமல் செல்லுங்கள், அது நம்மை ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவுகிறது.’ (எபிரெயர் 10:24) தினமும் பைபிள் வாசிப்பதும் அதை ஆராய்ந்து படிப்பதும், விழிப்புடன் இருப்பதற்கும் ஆன்மீக ரீதியில் பலமாக இருப்பதற்கும் உதவும்; கிறிஸ்தவ ஊழியத்தில் பங்கு கொள்வதும் இதற்கு உதவும்.—சங்கீதம் 1:1-3; மத்தேயு 24:14.
யெகோவாவின் அன்பையும் அக்கறையையும் எந்தளவு நீங்கள் ருசித்துப் பார்க்கிறீர்களோ அந்தளவு ‘நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாக’ இருக்க வேண்டுமென்ற ஆசையும் அதிகமாகும். (தீத்து 2:14) “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என்பதை நினைவில் வையுங்கள். (மத்தேயு 24:13) ஆம், ‘நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருக்க’ தீர்மானமாயிருங்கள்!
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
‘நம்முடைய திராணிக்கு மேலாக’ சோதிக்கப்படுவதற்கு யெகோவா அனுமதிக்கவே மாட்டார், சோதனையிலிருந்து ‘தப்பிக்கொள்ளும் போக்கை’ எப்பொழுதும் உண்டாக்குவார் என்பதில் நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்
[பக்கம் 30-ன் படங்கள்]
தேவராஜ்ய காரியங்களில் சுறுசுறுப்பாக இருப்பது சோதனைகளைச் சமாளிக்க நம்மைத் தயார்படுத்தும்