“எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்”
1 கிறிஸ்தவ வாழ்க்கை முறை என்பது ‘யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுவதை’ அர்த்தப்படுத்துகிறது. (1 தெ. 5:15) நம்முடைய மாவட்ட மாநாடுகளில் கலந்துகொள்ளுகையில் மற்றவர்களுக்கு ஏதாவதொரு விதத்தில் நன்மை செய்ய நமக்கு அநேக வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வருடம் என்றுமில்லாத விதத்தில் பொதுமக்கள் நம்மை கவனிப்பர். குறிப்பாக கொச்சி, சென்னை, மும்பை ஆகிய மாநகரில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரையானோர் ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டைப் பற்றி கேள்விப்படுபவர்கள் அல்லது நேரில் பார்ப்பவர்கள் அனைவருமே, நாம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என எடை போட்டுவிடுவார்கள். யெகோவாவின் சாட்சிகளின் நற்பெயர் மேலும் சிறப்படைய ஓர் அருமையான வாய்ப்பு நமக்குள்ளது. பைபிள் போதனை நம்மை வித்தியாசமான ஜனங்களாக்கியிருப்பதை நம்மோடு கூட்டுறவு கொள்பவர்கள் அனைவருமே புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். நாம் கடைப்பிடிக்கும் ஒழுங்கை, சுத்தத்தை, பழக்கவழக்கங்களை அவர்கள் பாராட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறோம். நாம், ‘நமக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவதையும்,’ தன்னலமற்ற சகோதர அன்பு நிலவுவதையும் அவர்கள் கண்ணார காண விரும்புகிறோம். (பிலி. 2:4) இந்த மாநாடுகளில் இவை நிகழும்படி நாம் எப்படி செய்யலாம் என்பதை கவனியுங்கள்.
2 நீங்கள் ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டீர்களா? (1) முன்கூட்டியே புக் செய்தால், சகோதரர்கள் லாட்ஜ்களை அல்லது சத்திரங்களை நியாயமான வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியும். ஒரு தடவை புக் செய்த பிறகு, அதைவிட வசதியான தங்குமிடம் கிடைத்தாலும் இதை ரத்து செய்யாதிருப்பது அவசியம். “உள்ளதை உள்ளதென்று” சொல்ல வேண்டும். (மத். 5:37) (2) தங்குமிடத்திற்கான உரிய முன்பணத்தை நீங்கள் ஏற்கெனவே அனுப்பியிருந்தால் தவிர உங்களுக்காக ரூமை ஹோட்டல் ஒதுக்கியிருக்கும் என எதிர்பார்க்காதீர்கள். (3) ஹோட்டல் பணியாளர்கள் தங்கள் கடமைகளை தாமதமாக செய்தாலும் அவர்களிடம் பொறுமையோடும் மரியாதையோடும் நடந்துகொள்ளுங்கள். (4) ஹோட்டல் பணியாளர்கள் உங்கள் அறையை சுத்தம் செய்தாலும்கூட, சுத்தம் சம்பந்தப்பட்டதில் யெகோவாவின் தராதரத்தை எடுத்துக்காட்டும் வகையில் எப்போதும் அறையை வைத்திருங்கள். (5) ஹோட்டல் சுற்றுப்புறங்களை உபயோகித்துக்கொள்வது சம்பந்தமான அதன் எல்லா விதிமுறைகளுக்கும் கீழ்ப்படியுங்கள். (6) ஹோட்டல் பணியாளருக்கு பொதுவாக கொடுக்கப்படும் “டிப்ஸ்”ஸை கொடுக்க தவறாதீர்கள்.
3 நன்மை செய்ய பிள்ளைகளுக்குக் கற்பித்தல்: சிறுபிள்ளைகளை ஜனங்கள் நிச்சயம் கவனிப்பார்கள்; அநேக சந்தர்ப்பங்களில், அவர்களே பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்கள். பெற்றோரே, மாநாட்டுக்கு முன்பாக உங்கள் பிள்ளைகளுடன் கொஞ்சம் நேரம் செலவழித்து எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் எப்படிப்பட்ட கிறிஸ்தவ நடத்தை அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை கலந்தாலோசிப்பது உதவியாக இருக்கும். (எபே. 6:4) உதாரணமாக, உண்மை கிறிஸ்தவ அன்பு “இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது” என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள். (1 கொ. 13:5, பொ.மொ.) நாலுபேர் முன்பு பெரியவர்கள் மெச்சத்தக்க விதத்தில் நடந்துகொள்ளுகையில் அது இந்த வார்த்தைகளுக்கு இன்னும் வலிமை சேர்க்கலாம். பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், ஹோட்டல் சொத்தை மதித்து நடப்பதன் மூலமும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை மனதில் வைத்து நடந்துகொள்வதன் மூலமும் நன்மை செய்ய நாடுவீர்களா? (கொலோ. 3:20) எல்லாருக்கும் நன்மை செய்வதில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கடினமாய் முயலுகையில் “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரி”ப்போம்.—தீத். 2:9.
4 பொதுவாக நம்மை கவனிப்பவர்களின்மீது மட்டுமல்ல ஆனால் எப்படியாவது நம்மீது குற்றம் கண்டுபிடித்துவிட வேண்டுமென குறியாக இருப்பவர்கள்மீதும் நம்முடைய நன்னடத்தை நல்லெண்ணத்தை ஏற்படுத்துகிறது. மாநாட்டிலும் மாநாட்டு நகரத்திலும் நாம் செய்யும் அனைத்து காரியங்களும்—தெருவில் நடக்கையில், ரெஸ்டாரண்டில் சாப்பிடுகையில், ஹோட்டலில் ஓய்வெடுக்கையில், அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுகையில்—கிறிஸ்தவர்களாக நம்முடைய பேச்சும் செயல்களும் நன்மை செய்ய நாடுகிறவர்களாக இருப்பதைக் காட்ட வேண்டும்.
[பக்கம் 4-ன் பெட்டி]
தயவுசெய்து நினைவில் வைக்கவும்:
■ நீங்கள் தங்குமிடத்தில் அனைத்து பணியாளர்களிடமும் பொறுமையோடும் மரியாதையோடும் நடந்துகொள்ளுங்கள்.
■ தங்க வந்திருக்கும் அனைவரின் நன்மையை மனதில் வைத்து, ஹோட்டல் அல்லது சத்திர விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.
■ ரூம்களை முடிந்தளவு சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருங்கள்.
■ உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என கவனமாக மேற்பார்வையிடுங்கள்.