நற்செயல்களை செய்வதில் முன்மாதிரி வையுங்கள்
1 மாவட்ட மாநாடுகளில் பெரும் கூட்டமாக கூடிவருகையில் நாம் நடந்துகொள்ளும் விதமும் மற்றவர்களை நடத்தும் விதமும் பார்ப்பவர்கள் கண்ணில் முக்கியமாக படும். எனவே நாம் ஒவ்வொருவரும் பின்வரும் பைபிளின் புத்திமதிக்கு விசேஷித்த கவனம் செலுத்த வேண்டும்: ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் . . . நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி.’ (தீத். 2:6, 7) ‘அவனவன் தனக்கானவைகளை அல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவதற்கு’ பெரும் முயற்சி தேவைப்படலாம். (பிலி. 2:4) வரவிருக்கும் “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாட்டில் இந்த உற்சாகமூட்டுதலை பின்பற்றுவதற்குரிய சில வழிகளைப் பற்றி இப்போது சிந்திப்போம்.
2 அறை வசதி ஏற்பாடுகள்: அறை வசதி ஏற்பாடுகளை செய்கையில் நற்செயல்களை வெளிக்காட்ட நமக்கு அருமையான வாய்ப்பிருக்கிறது. ஹோட்டலில் உங்களுக்குத் தேவையான அறையை மட்டுமே தயவுசெய்து புக் செய்யுங்கள். மறக்காமல் முன்கூட்டியே உரிய தொகையை முன்பணமாக கட்டிவிடுங்கள். அறையை வாடகைக்கு எடுக்கும் போதும் அதை காலி செய்யும் போதும் பிஸியான நேரங்களாக இருப்பதால் முக்கியமாக அப்போது கடவுளுடைய ஆவியின் கனியை வெளிக்காட்டுவது நல்லது.—கலா. 5:22, 23.
3 மாநாட்டு மன்ற வளாகத்தில்: பொதுவாக வாடகைக்கு எடுக்கும் மாநாட்டு மன்றங்கள் பல வருட காலமாகவே முறையாக பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன, நாசவேலைகளுக்கு உள்ளாகி இருக்கின்றன, குப்பைக்கூளங்கள் நிறைந்து காணப்படுகின்றன, வேறு விதங்களிலும் மோசமான நிலையில் இருக்கின்றன. நாம் வணங்கும் பரிசுத்தமான கடவுளின் தராதரத்தை எட்டவே முடியாத அளவுக்கு படுமட்டமான நிலையில் கழிவறைகளும் அதை ஒட்டியுள்ள இடங்களும் காணப்படுகின்றன. இந்நிலையை சரிசெய்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? கழிவறைகளை சுத்தம் செய்யவும், மன்றத்தை பெருக்கவும், இருக்கைகளை கழுவி துடைக்கவும், இன்னும் இதுபோன்ற முக்கிய வேலைகளை செய்யவும் நீங்களாகவே முன்வரலாம். மாநாட்டு மன்ற வளாகத்திலுள்ள மூலை முடுக்குகள்கூட நமது சுத்தமான கடவுளின் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறெல்லாம் செய்தால்தான் மன்றம் பார்ப்பதற்கு பளிச்சென்று அழகாக இருக்கும்; இது யெகோவாவுக்கு ‘புகழையும் கீர்த்தியையும் மகிமையையும்’ சேர்க்கும்.—உபா. 26:19.
4 பெற்றோரும் பிள்ளைகளும்: இன்றைய உலகில் அநேக இளைஞர்கள் நல்லொழுக்கத்தைப் பின்பற்றாதிருக்கையில் நம் பிள்ளைகள் வித்தியாசமானவர்களாக இருப்பது யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் புகழ் சேர்க்கிறது. எனினும் பிள்ளைகளை சரிவர கண்காணிக்காதபோது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. (நீதி. 29:15) நீச்சல் குளம் உட்பட ஹோட்டலின் மற்ற பகுதிகளில் அல்லது மாவட்ட மாநாட்டு வளாகத்தில் பிள்ளைகள் எங்கும் தனியாக போகாதபடி பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.
5 பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய விதத்தை சில பெற்றோர்கள் மாவட்ட மாநாட்டிற்கு வரும் முன்பாக அவர்களுடன் கலந்தாலோசித்து பலனடைந்திருக்கிறார்கள். (எபே. 6:4) உண்மையான கிறிஸ்தவ அன்பு “இழிவானதைச் செய்யாது” அல்லது “தன்னலம் நாடாது” என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைத்திருக்கிறார்கள். (1 கொ. 13:5, பொ.மொ.) மாவட்ட மாநாட்டு நேரம் யெகோவாவால் போதிக்கப்படுவதற்கான நேரம்; மாவட்ட மாநாட்டு வளாகத்திலும் மற்ற இடங்களிலும் தங்கள் நடத்தையின் மூலம் இந்த ஏற்பாட்டிற்கு பிள்ளைகளும் பெரியவர்களும் மரியாதை காட்டலாம்.—ஏசா. 54:13.
6 தப்பெண்ணங்களைத் தவிடுபொடியாக்குவதில் நம் நன்னடத்தை பெருமளவு உதவியாக இருந்து உண்மை வணக்கத்திடம் மக்களை கவர்ந்திழுக்கலாம். (மத். 5:16; 1 பே. 2:12) மாவட்ட மாநாட்டில் நாம் சந்திக்கும் அனைவரும் நாம் நடந்துகொள்ளும் விதத்தையும் மற்றவர்களை நடத்தும் விதத்தையும் பார்த்து சாதகமான சாட்சியைப் பெறுவார்களாக. இந்த விதத்தில் ‘எல்லாவற்றிலும் நம்மை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பிப்போம்.’—தீத். 2:7.
[கேள்விகள்]
1. மாவட்ட மாநாட்டில் முக்கியமாக நம்முடைய நடத்தையைக் குறித்து நாம் ஏன் கவனமாய் இருக்க வேண்டும்?
2. அறை வசதி ஏற்பாடுகளைக் குறித்ததில் எதை நாம் மனதில் வைக்க வேண்டும்?
3. மாநாட்டு மன்ற வளாகத்தில் நாம் எப்படி யெகோவாவுக்கு புகழ் சேர்க்கலாம்?
4, 5. பிள்ளைகள் எப்படி யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கலாம், பெற்றோருக்கு என்ன பொறுப்பிருக்கிறது?
6. நம்முடைய நன்னடத்தை மற்றவர்களை எப்படி பாதிக்கும்?
[பக்கம் 4-ன் பெட்டி]
மற்றவர்களை மனதில் வையுங்கள்
▪ நீங்கள் தங்கப் போகிற அறையை மட்டுமே புக் செய்யுங்கள்
▪ அறையை வாடகைக்கு எடுக்கும் போதும் அதை காலி செய்யும் போதும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள்
▪ மாநாட்டு மன்ற வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஒத்துழையுங்கள்
▪ உங்கள் பிள்ளைகளை சரிவர கண்காணியுங்கள்
▪ நியாயமான டிப்ஸை கொடுத்துவிட்டு வாருங்கள்