புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி
1 நிலையற்ற ஓர் உலகில் விசுவாசத்தில் உறுதியாக நிற்பதற்கு நாம் யெகோவா மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நம் அன்றாட வாழ்க்கையில் எப்படி காட்டலாம்? தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? சாத்தானிய உலகின் செல்வாக்கை எதிர்த்து நிற்க அது நமக்கு எப்படி உதவுகிறது? 2003 ஊழிய ஆண்டுக்குரிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி இந்தக் கேள்விகளுக்கு பதில் தருகிறது. அதன் தலைப்பு, “யெகோவாவை நம்பி நன்மை செய்.”—சங். 37:3, NW.
2 யெகோவாவில் நம்பிக்கை வைப்பது என்பது விசேஷ சந்தர்ப்பங்களில் அல்லது நமது அவசர தேவைக்கு மட்டும் அவரை தேடுவதல்ல. நம் அன்றாட ஜீவியத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. “எப்போதும் யெகோவா மீது நம்பிக்கை வையுங்கள்” என்ற ஆரம்ப பேச்சில் இதுவே வலியுறுத்தப்படுகிறது. (சங். 62:8) வெற்றிகரமான மண வாழ்வை அமைப்பதற்கும், குடும்ப பிரச்சினைகளை கையாளுவதற்கும், பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உதவும் பைபிள் அடிப்படையிலான தகவலை கண்டுபிடித்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பது எப்படியென “யெகோவாவில் நம்பிக்கையை வெளிக்காட்டுதல்” என்ற தலைப்பையுடைய நான்கு பகுதி தொடர்பேச்சு காட்டும்.
3 சரி எது தவறு எது என்ற விஷயத்தில் மாறுபாடான கருத்தை திணிக்க சாத்தானின் உலகம் முயலுகிறது; இதனால் எது முக்கியமானது எது முக்கியமற்றது என்ற குழப்பம் ஏற்படுகிறது. (ஏசா. 5:20) “வாழ்க்கையில் வீணான காரியங்களுக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள்” மற்றும் “தீமையை விட்டு விலகுங்கள்—நன்மை செய்வோராகுங்கள்” என்ற பேச்சுக்கள் யெகோவாவின் உயர்ந்த தராதரங்களை காத்துவருவதைக் குறித்த நம் தீர்மானத்திற்கு வலுவூட்டும்.—ஆமோஸ் 5:14.
4 தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்கு முறைக்கு யெகோவா முடிவுகட்டும்போது, கடவுளுடைய ஊழியர்கள் அவரை முழுமையாய் நம்ப வேண்டியது அவசியம். இதுவே, “உலக இக்கட்டிலிருந்து விடுதலை சமீபம்” என்ற பொதுப் பேச்சில் சிறப்பித்துக் காட்டப்படுகிறது. பிறகு, “கடவுளுடைய ராஜ்யத்திற்கு தகுதியானவர்களாக கருதப்படுவீர்களா?” என்ற பேச்சில் நம்மை நாமே சோதித்தறிய தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுவோம். “யெகோவாவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வையுங்கள்” என்ற உற்சாகமூட்டும் பேச்சுடன் நிகழ்ச்சி முடிவடைகிறது.
5 ஒவ்வொரு மாநாட்டிலும் சிறப்பு அம்சமாக விளங்குவது முழுக்காட்டுதல் பேச்சு. முழுக்காட்டுதல் பெற விரும்புவோர் நடத்தும் கண்காணியிடம் முடிந்தளவு விரைவில் தெரிவிக்க வேண்டும்; அப்போதுதான் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய முடியும்.
6 நிலையற்ற இந்தக் காலங்களில், யெகோவா மட்டுமே நம்பிக்கைக்கும் உறுதிக்கும் உண்மையான ஊற்றுமூலர். (சங். 118:8, 9) வட்டார மாநாட்டு நிகழ்ச்சியில் முழுமையாக கலந்துகொள்வதன் மூலம் நாம் அனைவரும் யெகோவாவில் நம் நம்பிக்கையை பலப்படுத்துவோமாக.