ஏற்ற சமயத்தில் உதவி
1 உடன் விசுவாசிகளை பலப்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்தபோது, அவர்கள் மேலிருந்த அக்கறை காரணமாக அவர்களுக்கு அன்பாக நினைப்பூட்டும்படியும் உற்சாகம் அளிக்கும்படியும் அப்போஸ்தலன் பேதுரு தூண்டப்பட்டார். (2 பே. 1:12, 14; 3:2) ‘யாரெல்லாம் விசுவாசத்தைப் பெற்றிருந்தார்களோ’ அவர்களை எல்லாம் தொடர்ந்து ஆவிக்குரிய விஷயத்தில் முன்னேறும்படியும் அவ்வாறு செய்தால், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்க”மாட்டார்கள் என்றும் உற்சாகப்படுத்தினார். (2 பே. 1:1, 5-8) யெகோவாவால் அவர்கள் அழைக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டதை உறுதிசெய்வதும், அதன் விளைவாக “கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி” அவர்களுக்கு உதவி செய்வதுமே பேதுருவின் நோக்கமாக இருந்தது. (2 பே. 1:10, 11; 3:14) அவருடைய உற்சாகம், அநேக உடன் விசுவாசிகளுக்கு ஏற்ற சமயத்தில் கிடைத்த உதவியாய் இருந்தது.
2 இன்று கிறிஸ்தவ கண்காணிகள், கடவுளுடைய மக்களிடமாக அதேவிதமான அக்கறையை காண்பிக்கிறார்கள். ‘கையாளுவதற்கு கடினமான இந்த கொடியகாலங்களில்’ யெகோவாவின் ஊழியர்கள் அநேக பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. (2 தீ. 3:1, NW) பொருளாதார, குடும்ப அல்லது தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்ந்து இருப்பதன் காரணமாக இன்றும் சிலர் தாவீது உணர்ந்த விதமாகவே உணரலாம்: “எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.” (சங். 40:12) இந்த பிரச்சினைகள் அவ்வளவு அதிக பாரமாகிவிடுவதால் அவர்கள் அதிமுக்கியமான ஆவிக்குரிய சிலாக்கியங்களை புறக்கணித்துவிடலாம், கிறிஸ்தவ ஊழியத்தில் சுறுசுறுப்பாக பங்கெடுப்பதைக்கூட நிறுத்திவிடலாம். ஆனால் இந்த எல்லா பிரச்சினைகளின் மத்தியிலும் அவர்கள் ‘யெகோவாவின் கற்பனைகளை மறக்கவில்லை.’ (சங். 119:176) எனவே, அவர்களுக்குத் தேவையான உதவியை அளிக்க மூப்பர்களுக்கு இதுவே சரியான சமயம்.—ஏசா. 32:1, 2.
3 இதை நிறைவேற்ற, இப்போது ஊழியத்தில் செயலற்று இருப்பவர்களுக்கு தேவையான உதவியை அளிக்க விசேஷ முயற்சி எடுக்கும்படி மூப்பர்களுக்கு உற்சாகம் கொடுக்கப்பட்டது. இதை முழு முயற்சியோடு இப்போதே செய்துவருகிறார்கள், மார்ச் மாதம் முழுவதும் செய்வார்கள். செயலற்ற பிரஸ்தாபிகள் மறுபடியும் சபையோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பிப்பதற்கு தேவையான ஆவிக்குரிய உதவியை அளிக்க புத்தகப் படிப்பு கண்காணிகள் அவர்களை சந்திக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேவைப்பட்டால் தனிப்பட்ட பைபிள் படிப்பிற்கு ஏற்பாடு செய்யலாம். உதவி செய்ய மற்ற பிரஸ்தாபிகளையும் அழைக்கலாம். ஒருவேளை மற்றவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் அழைக்கப்பட்டால், அவர்களை புரிந்துகொண்டு, அன்பான உற்சாகத்தை கொடுத்தால் உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கலாம்.
4 ஒருவர் மறுபடியும் சபையோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பிக்கும்போது அனைவருமே சந்தோஷப்படுவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. (லூக். 15:6) செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு நாம் கொடுக்கும் உற்சாகம், ‘ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தையாக’ நிரூபிக்கலாம்.—நீதி. 25:11.