எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?
1 அநேக மத அமைப்புகள், கல்வி மற்றும் மருத்துவ துறைக்கு பண உதவி செய்வதன் மூலம் அறப்பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் யெகோவாவின் சாட்சிகள், “நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும்” மறவாதிருக்கிற போதிலும் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உதவி செய்வதற்கே முதலிடம் கொடுக்கிறார்கள்.—எபி. 13:16.
2 முதல் நூற்றாண்டு மாதிரி: இயேசு பூமியில் இருந்தபோது அநேக நல்ல காரியங்களை செய்தபோதிலும் சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுப்பதற்கே முதலிடம் கொடுத்தார். (லூக். 4:43; யோவா. 18:37; அப். 10:38) தம்மை பின்பற்றினவர்களிடம், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று கட்டளையிட்டார். (மத். 28:19, 20) இயேசுவை விசுவாசிப்பவர்கள், அவர் ஆரம்பித்து வைத்த வேலையை அவரைக் காட்டிலும் பெரியளவில் செய்வார்கள் என்றும் கூறினார். (யோவா. 14:12) பிரசங்க வேலைக்கே இயேசு முதலிடம் கொடுத்தார்; ஏனென்றால் இரட்சிப்பிற்கான வழியை தெரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவியது.—யோவா. 17:3.
3 அப்போஸ்தலனாகிய பவுல் பிரசங்க வேலையை தன்னால் தவிர்க்க முடியாத, மிக முக்கியமான ‘கடமையாக’ கருதினார். (1 கொ. 9:16, 17) அவர் தன் ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக, தேவைப்பட்டால் தியாகங்களை செய்யவும் சோதனைகளை சகிக்கவும் எப்படிப்பட்ட கஷ்டத்தை சமாளிக்கவும் தயாராக இருந்தார். (அப். 20:22-24) அப்போஸ்தலனாகிய பேதுருவும் அவருடைய நண்பர்களும்கூட அதே மனநிலையை காட்டினார்கள். சிறையில் போடப்பட்டு அடிகள் வாங்கிய போதிலும் “இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.”—அப். 5:40-42.
4 நம்மைப் பற்றி என்ன? ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கவும் சீஷராக்கவும் முதலிடம் கொடுக்கிறோமா? ‘மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தவர்களுக்காக’ இயேசுவைப் போல உண்மையிலேயே மனதுருகுகிறோமா? (மத். 9:36) பைபிள் தீர்க்கதரிசனங்களும் உலகத்தின் தற்போதைய நிலைமைகளும் இந்த பொல்லாத உலகத்தின் முடிவு சமீபித்துவிட்டதை காட்டுகின்றன! பிரசங்க வேலையின் முக்கியத்துவத்தை மனதில் தெளிவாக வைத்திருந்தால் தான் அதைத் தொடர்ந்து வைராக்கியத்துடன் செய்ய நாம் தூண்டப்படுவோம்.
5 உங்கள் சூழ்நிலைகளை பரிசீலியுங்கள்: நம்முடைய சூழ்நிலை அவ்வப்போது மாறுவதால் பிரசங்க வேலையில் முழுமையாக ஈடுபட என்ன சரிப்படுத்துதலை செய்ய வேண்டும் என்று அடிக்கடி பரிசீலித்துப் பார்ப்பது நல்லது. ஒரு சகோதரி, 1950 முதல் 1970 வரை ஒழுங்கான பயனியராக சேவித்தார். ஆனால் உடல்நலம் மோசமடைந்ததால் அதை நிறுத்திவிட முடிவுசெய்தார். காலப்போக்கில் அவருடைய உடல் நிலை தேறியது. சமீபத்தில், அவருடைய சூழ்நிலையை மறுபரிசீலனை செய்து மறுபடியும் பயனியர் ஊழியம் செய்ய தீர்மானித்தார். 90 வயதில் பயனியர் ஊழியப் பள்ளியில் ஆஜரானபோது அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்! உங்களைப் பற்றி என்ன? வேலையிலிருந்து ஓய்வுபெறும் அல்லது பள்ளிப் படிப்பை முடிக்கும் தறுவாயில் இருக்கிறீர்களா? உங்கள் சூழ்நிலை மாறும்போது உங்களால் பயனியர் ஊழியம் செய்ய முடியுமா?
6 மார்த்தாள், “பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்ததை” பார்த்த போது காரியங்களை எளிமையாக்கினால் மிகப்பெரிய ஆசீர்வாதங்களை அவளால் அனுபவிக்க முடியும் என இயேசு கனிவுடன் கூறினார். (லூக். 10:40-42) உங்கள் வாழ்க்கைப் பாணியை எளிமையாக்க முடியுமா? கணவன், மனைவி இருவருமே கட்டாயமாக வேலைக்கு செல்ல வேண்டுமா? ஒருவேளை சரிப்படுத்துதல்களை செய்தால் ஒருவருடைய சம்பாத்தியத்திலேயே குடும்பத்தை சமாளிக்க முடியுமா? ஊழியத்தில் அதிகமாக பங்கெடுக்க சரிப்படுத்துதல்களை செய்ததால் அநேகர் அபரிமிதமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அடைந்திருக்கிறார்கள்.
7 இயேசுவும் அப்போஸ்தலர்களும் வைத்த முன்மாதிரியை நாம் அனைவரும் பின்பற்றுவோமாக! மிக முக்கியமான ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்க நாம் எடுக்கும் ஊக்கமான முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—லூக். 9:57-62.