வேலையிலிருந்து ஓய்வு—அதிகமாய் ஊழியம் செய்ய வழி திறக்கிறதா?
1 கடினமாய் உழைத்துக் கொட்டும் அநேகர் வேலையிலிருந்து எப்படா ஓய்வு பெறலாம் என்று ஏங்குகின்றனர்; தாங்கள் பார்த்து வந்த வேலையிலுள்ள பிக்கல்பிடுங்கலில் இருந்து விடுதலை கிடைப்பதால் அவ்வாறு நினைக்கின்றனர். ஆனால் விஷயம் என்னவெனில், ஓய்வு பெற்றவுடன் கூடவே அசட்டை, சலிப்பு, வயதுக்கு முன்பே மூப்பு ஆகியவையும் தொற்றிக்கொள்கின்றன. திட்டவட்டமான நோக்கமின்றி செயல்படுவதால், தன்னைப் பற்றிய கவலையே மனதை ஆட்டிப்படைக்கலாம். அரசு ஊழியர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ‘திருப்தியின்மை, எரிச்சல், பாதுகாப்பின்மை, லாயக்கற்றவர் என்ற மனப்பான்மை முதல் மனச்சோர்வு, கப்பலே கவிழ்ந்துவிட்டது போன்ற சோகம் வரை’ பல்வேறு பிரச்சினைகளால் அவதியுற்றனர் என பிரேசில் நாட்டு செய்தித்தாள் ஒன்று அறிக்கை செய்தது.
2 இதற்கு நேர்மாறாக, ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்காக இந்தச் சந்தர்ப்பம் ஒரு வழியை திறந்து வைப்பதாகவே அநேக கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். 65 வயதை அடைந்த பிறகு இரண்டு வாரங்கள் கழித்து பயனியர் ஊழியத்தை ஆரம்பித்த ஒரு சகோதரர் சொல்கிறார்: “கடந்த பத்து வருடங்கள் பயனியர் ஊழியம் செய்த காலப்பகுதியின் போதுதானே என் வாழ்க்கை அவ்வளவு செழுமையான ஆசீர்வாதங்களால் நிறைந்திருந்ததே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அல்ல.” ஒரு தம்பதியினர் எழுதினர்: “நாங்கள் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்த போதுதானே உண்மையில் எங்கள் பொன்னான ஆண்டுகள் ஆரம்பமாயின.” வாஸ்தவம்தான், வேலையிலிருந்து ஓய்வு பெறுவது, அதிகமாய் ஊழியம் செய்து யெகோவாவிடமிருந்து அளவிலா ஆசீர்வாதங்களைப் பெற அநேகருக்கு பொன்னான வாய்ப்பை அளிக்கிறது.
3 சுறுசுறுப்பாகவும் பலன் தருபவர்களாகவும் இருத்தல்: தற்போது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பெரும்பாலோர், இன்று சர்வசாதாரணமாக உள்ள வசதியான சூழ்நிலையில் வளராமல் சிறு வயதிலிருந்தே கடினமாய் உழைக்க கற்றுக்கொண்டவர்கள். இளமையில் இருந்த துடிப்பு இல்லாவிட்டாலும் இவர்கள் இன்னும் பலன் தரும் வேலையாட்களாகவே இருக்கிறார்கள். ஒரு கிளை அலுவலக பிராந்தியத்தில், பயனியர்களில் 22 சதவீதத்தினருக்கு—சுமார் 20,000 சகோதர சகோதரிகளுக்கு—குறைந்தபட்சம் 60 வயது. இந்த முதியவர்கள் பிரசங்க வேலைக்கு பெரும் பங்களிக்கின்றனர். அவர்களது அனுபவமும் தெய்வீக குணங்களும் அவர்கள் சேவை செய்யும் சபைகளுக்கு வளமூட்டுகின்றன.—யாக். 3:17, 18.
4 கிறிஸ்தவ ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுவது, நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கவும் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தவும் உதவுகிறது. வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் பயனியர் ஊழியத்தைத் தொடங்கின 84 வயது சகோதரி சொன்னதாவது: “ஆர்வமுள்ளவர்களிடம் வேதப்படிப்புகள் நடத்துவது மனதளவில் என்னை சுறுசுறுப்பாக வைக்கிறது. என்னிடம் கார் இல்லை, எனவே எவ்வளவு தூரமானாலும் நடந்தே செல்கிறேன். அது எனக்கு ஆரோக்கியம் தருகிறது.” பயனியர் செய்யும் முதிர்ந்த தம்பதியினர் இவ்வாறு கூறினர்: “ஊழியம் எங்களை மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக வைக்கிறது. நாங்கள் எப்போதும் சேர்ந்தே இருக்கிறோம். எப்போதும் சிரித்து சந்தோஷமாய் காலம் கழிக்கிறோம்.”
5 தேவை இருக்குமிடத்தில் ஊழியம் செய்தல்: வேலையிலிருந்து ஓய்வு பெற்ற சில கிறிஸ்தவர்கள் ஓரளவு வசதியாக இருக்கும் பட்சத்தில் ராஜ்ய பிரசங்கிகள் அதிகம் தேவைப்படும் இடங்களில் சேவை செய்வதற்கென மாறிச் சென்றிருக்கின்றனர். அப்போஸ்தலன் பவுலைப் போல, வைராக்கியமுள்ள இந்த பிரஸ்தாபிகள் ‘சுவிசேஷத்தில் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கின்றனர்.’—1 கொ. 9:23.
6 ஒரு தம்பதியினர் இரண்டு மகன்களை வளர்த்து ஆளாக்கிய பிறகு பயனியர் செய்ய தொடங்கினர். அநேக வருடங்கள் பயனியர் ஊழியம் செய்த பிறகு சீன மொழியைக் கற்றுக்கொள்ள தொடங்கினர். இப்போது முதிர்ந்தவர்களாய் தங்கள் 70-களில் இருக்கின்றனர். சமீபத்தில் அவர்கள் சேவை செய்து வந்த சீன மொழித் தொகுதி வளர்ச்சியடைந்து ஒரு சபையாக ஆனதைக் காணும் பாக்கியம் பெற்றனர். இவர்களைப் போன்ற தம்பதியினர் எப்பேர்ப்பட்ட வரப்பிரசாதமாய் இருக்கின்றனர்!
7 ஊழியத்திலிருந்து ஓய்வு கிடையாது: தாங்கள் பார்த்துவரும் வேலையிலிருந்து ஜனங்களுக்கு ஒருநாள் ஓய்வு கிடைத்தாலும், எந்தக் கிறிஸ்தவருக்கும் கடவுளுடைய சேவையிலிருந்து ஓய்வு கிடையாது. அனைவரும் ‘முடிவு வரை’ உண்மையுடன் நிலைநிற்க வேண்டும். (மத். 24:13, 14) ஆனால் வயோதிகம் காரணமாக சிலரால் யெகோவாவின் சேவையில் முன்பு செய்துவந்த அளவுக்கு தற்போது செய்ய முடியவில்லை. எனினும் தங்களால் முடிந்தளவு முழு இருதயத்தோடு அவர்கள் செய்து வருவதை காண்பது எவ்வளவு உற்சாகமூட்டுகிறது! அவர்களுடைய கிரியையையும் தம் பெயருக்காக அவர்கள் காட்டிய அன்பையும் யெகோவா மறக்க மாட்டார் என்பதாக அவருடைய வார்த்தை உறுதியளிக்கிறது.—லூக். 21:1-4; எபி. 6:10.
8 நீங்கள் ஓய்வு பெறும் வயதை எட்டுகிறீர்களா? அப்படியானால் மாறிவரும் உங்கள் சூழ்நிலைகளை எவ்வாறெல்லாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஜெபத்தோடு ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? கடவுளுடைய உதவியுடன், அந்த ஓய்வை நீங்கள் அதிகமாய் ஊழியம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம்; அது யெகோவாவுக்கு துதி சேர்க்கும், அதனால் அளவிலா ஆசீர்வாதங்களும் கிடைக்கும்.—சங். 148:12, 13.