குதிரைச் சேனையின் தாக்குதல்—அதில் உங்களுக்கும் பங்குண்டு
1 “ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்.” அதைத் தொடர்ந்து “இருபது கோடி” ‘குதிரைச் சேனை இராணுவங்கள்’ இடிமுழக்கத்துக்கு ஒப்பான ஒலியை எழுப்பி செல்கின்றன. இது சாதாரண சேனை அல்ல. இந்தக் ‘குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருக்கின்றன.’ அவற்றின் வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் வெளிப்படுகின்றன, அவற்றின் ‘வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவையாய் இருக்கின்றன.’ அடையாள அர்த்தமுள்ள இந்தக் குதிரைச் சேனையின் தாக்குதல் அழிவை விளைவிக்கிறது. (வெளி. 9:13-19) இந்த முக்கியமான தீர்க்கதரிசன காட்சியின் நிறைவேற்றத்தில் நீங்கள் எப்படி உட்பட்டிருக்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியுமா?
2 அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரும் அவர்களுடைய கூட்டாளிகளாகிய வேறே ஆடுகளைச் சேர்ந்தோரும் தோளோடு தோள் சேர்ந்து கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கிறார்கள். விளைவு? கிறிஸ்தவமண்டலம் ஆவிக்குரிய பிரகாரமாய் செத்த நிலையில் இருப்பது முழுமையாக அம்பலப்படுத்தப்படுகிறது. கடவுளுடைய ஊழியர்கள் செய்யும் ஊழியம் ஏன் அதிக பலனளிப்பதாய் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் இந்தத் தீர்க்கதரிசன காட்சியின் இரண்டு அம்சங்களை இப்போது நாம் ஆராய்வோம்.
3 கடவுளுடைய செய்தியை அறிவிக்க பயிற்சியையும் சாதனங்களையும் பெற்றிருக்கிறார்கள்: தேவராஜ்ய ஊழியப் பள்ளி மூலமும், பிற சபை கூட்டங்கள் மூலமும் கடவுளுடைய செய்தியை அதிகாரத்தோடு பேசுவதற்கு கடவுளுடைய ஊழியர்கள் பயிற்றுவிப்பை பெற்றிருக்கிறார்கள். இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் போலவே, ஆட்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போய் பிரசங்கித்து, தகுதியானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். (மத். 10:11; மாற். 1:16; லூக். 4:15; அப். 20:18-20) பைபிள் அடிப்படையிலான இந்த பிரசங்கிக்கும் முறை எவ்வளவு திறம்பட்டதாய் நிரூபித்திருக்கிறது!
4 கடவுள் கொடுத்த பிரசங்க வேலையை செய்கையில், பைபிள்கள், புத்தகங்கள், சிற்றேடுகள், பத்திரிகைகள் ஆகியவற்றை கிறிஸ்தவ ஊழியர்கள் கோடிக்கணக்கில் வினியோகித்திருக்கிறார்கள். இந்தப் பிரசுரங்கள் சுமார் 400 மொழிகளில் கிடைக்கின்றன; இவை பல்வேறு விஷயங்களை ஆராய்கின்றன, பலதரப்பட்டவர்களின் மனதைக் கவரும் வழிமுறைகள் இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரசுரங்களை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்துகிறீர்களா?
5 பரலோக வழிநடத்துதலும் ஆதரவும் பெற்றிருக்கிறார்கள்: அடையாள அர்த்தமுள்ள குதிரைச் சேனையின் தாக்குதலைப் பிரதிநிதித்துவம் செய்யும் வேலைக்கு கடவுளுடைய ஆதரவு இருப்பதை தீர்க்கதரிசன காட்சி தெளிவுபடுத்துகிறது. (வெளி. 9:13-15) உலகளாவிய பிரசங்க வேலை மனிதனுடைய ஞானத்திலோ பலத்திலோ அல்ல ஆனால் கடவுளுடைய ஆவியின் மூலமாய் நிறைவேற்றப்படுகிறது. (சக. 4:6) இந்த வேலையை வழிநடத்த யெகோவா தேவதூதர்களைப் பயன்படுத்துகிறார். (வெளி. 14:6) இவ்வாறு, தம்முடைய பூமிக்குரிய சாட்சிகள் முயற்சி எடுக்கையில், பரலோக ஆதரவை அளித்து யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை தம்மிடம் கவர்ந்திழுக்கிறார்.—யோவா. 6:45, 65.
6 கடவுளுடைய செய்தியை அறிவிக்க பயிற்றுவிப்பையும் தகுதியையும் பெற்றவர்களாய், தூதர்களின் வழிநடத்துதலின் கீழ் வேலை செய்கிற யெகோவாவின் ஜனங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தக் கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசன காட்சியின் நிறைவேற்றத்தில் நம்முடைய பங்கை நாம் தொடர்ந்து செய்வோமாக.
[கேள்விகள்]
1, 2. வெளிப்படுத்துதல் 9:13-19-லுள்ள தீர்க்கதரிசன காட்சியின் நிறைவேற்றத்தில் கடவுளுடைய ஜனங்கள் இன்று எப்படி உட்பட்டிருக்கிறார்கள்?
3. கடவுளுடைய செய்தியை திறம்பட்ட விதத்தில் பேசுவதற்கு நீங்கள் என்ன பயிற்றுவிப்பைப் பெற்றிருக்கிறீர்கள்?
4. ஊழியத்தை நன்கு செய்வதற்கு அநேக பிரஸ்தாபிகளிடம் என்ன ஏதுக்கள் இருக்கின்றன?
5, 6. யெகோவாவின் ஜனங்களுக்கு பரலோக ஆதரவு இருப்பதை எது சுட்டிக்காட்டுகிறது?