உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்
1 பரிசுத்த கடவுளாகிய யெகோவாவின் ஊழியர்களாக நம் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருக்க முயலுகிறோம். (1 பே. 1:15, 16) நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் யெகோவாவின் தராதரங்களைக் கடைப்பிடிக்க நாம் முயற்சி செய்வதை இது அர்த்தப்படுத்துகிறது. இந்த வருட மாவட்ட மாநாடு பரிசுத்த நடத்தையை வெளிக்காட்ட நமக்கு விசேஷ வாய்ப்பளிக்கும்.
2 ஹோட்டல்களில்: “யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப அருமையான ஜனங்கள். . . . உங்களைப் போன்றவர்கள்தான் எங்கள் ஹோட்டலில் தங்க வேண்டுமென விரும்புகிறோம்” என கடந்த வருடம் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் தங்கியிருந்த ஒரு ஹோட்டலின் மானேஜர் சொன்னார். பின்வரும் நினைப்பூட்டுதல்களுக்குக் கீழ்ப்படிவது நமது நற்பெயரைக் காத்துக்கொள்ள உதவும்: (1) நீங்கள் தங்கப் போகும் அறைகளுக்கும் அதிகமானவற்றை புக் செய்யாதீர்கள், அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமானோரை உங்கள் அறையில் தங்க வைக்காதீர்கள். (2) புக் செய்த அறையை ரத்து செய்ய வேண்டுமென்றால் உடனடியாக அதை அந்த ஹோட்டலுக்குத் தெரியப்படுத்துங்கள். (3) சமைக்க அனுமதிக்கப்படாத அறைகளில் சமைக்காதீர்கள். (4) ஹௌஸ்கீப்பருக்கும் வெய்ட்டருக்கும் டிப்ஸ் கொடுங்கள். (5) ஹோட்டலில் தங்கும்போது மட்டுமே பயன்படுத்துவதற்கு இலவசமாக அளிக்கப்படும் காலை உணவு, காபி, ஐஸ் போன்ற பொருட்களை தவறாக பயன்படுத்தாதீர்கள். (6) ஹோட்டல் பணியாளர்களுடன் நடந்துகொள்ளும் விதத்தில், முக்கியமாக அதிக பிஸியாகவுள்ள செக்-இன், செக்-அவுட் சமயங்களில், ஆவியின் கனியை வெளிக்காட்டுங்கள்.—கலா. 5:22, 23.
3 நம்முடைய நல்ல பழக்கவழக்கங்களும் பலன்தரும் விதத்தில் சாட்சி கொடுக்கலாம். கடந்த வருடம், ஹோட்டலில் பணிபுரியும் கிளார்க்கிடம் ஏதோ எழுது பொருட்களை பணிவுடன் கேட்டு வாங்கிய ஓர் இளைஞன், பின்னர் அவருக்கு நன்றி தெரிவித்தான். இது அந்த கிளார்க்கின் மனதைத் தொட்டது; “இன்று இளைஞர்களிடத்தில் இதுபோன்ற நல்ல பழக்கவழக்கங்களை பார்ப்பது ரொம்ப அபூர்வம்” என அவர் குறிப்பிட்டார். ஆனாலும் சில சமயங்களில் கவனிக்காமல் விடப்பட்ட பிள்ளைகள் நீச்சலடிப்பதும், எலிவேட்டரில் விளையாடுவதும், சத்தமாக பேசிக்கொள்வதும், ஹாலில் இங்குமங்குமாய் ஓடுவதும் கவனிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் அவர்களுடைய மனம் போன போக்கில் எங்கும் போவதற்கு பெற்றோர் விடக்கூடாது; அவர்களை தங்கள் பார்வையிலேயே பெற்றோர் வைத்துக்கொள்ள வேண்டும்; அப்போது அவர்களுடைய நடத்தை யெகோவாவுக்கு துதிசேர்ப்பதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.—நீதி. 29:15.
4 ரெஸ்டாரன்ட்டுகளில்: மாநாடு நடைபெற்ற ஓர் இடத்திற்கு அருகேயுள்ள ரெஸ்டாரன்ட்டில் பணிபுரியும் ஒரு வெயிட்டர் இவ்வாறு சொன்னார்: “சாட்சிகள் வித்தியாசமானவர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு மரியாதை காட்டுகிறார்கள்.” அங்கு சாப்பிடும் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் சத்தமாக பேசாமலும் சிரிக்காமலும் இருப்பது நன்னடத்தையில் அடங்கும். அளிக்கப்படும் சேவையைப் பொறுத்து 15 முதல் 20 சதவீத டிப்ஸ் அநேக இடங்களில் பொதுவாக தரப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். சாப்பிடுகையில், குடிக்கையில்கூட, நாம் கடவுளுடைய மகிமைக்கென்று எல்லா காரியங்களையும் செய்ய விரும்புகிறோம்.—1 கொ. 10:31.
5 மாநாட்டில்: முக்கியமாக மாநாட்டு வளாகத்தில் நம் நன்னடத்தை தெளிவாக தெரிய வேண்டும். வாகனங்களை நிறுத்துமிடத்திலும் மன்றத்திலும் தயவுசெய்து அட்டென்டண்டுகளுடன் ஒத்துழையுங்கள். (எபி. 13:17) கடந்த வருடம் கேரளாவில் நடைபெற்ற நம் மாநாடுகள் ஒன்றில் சத்தியத்தில் ஆர்வம் காட்டும் ஒருவர் கலந்துகொண்டார்; அவர் இவ்வாறு சொன்னார்: “இங்கு எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மத்தியிலிருக்கத்தான் ஆசைப்படுகிறேன்.” இன்னொருவர் இவ்வாறு சொன்னார்: “இதுபோல் சகல ஏற்பாடுகளுடன் நடக்கும் கூட்டத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை.” உங்கள் பிள்ளைகள், ஏன் டீனேஜர்களாய் இருந்தாலும்கூட மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து உட்கார அனுமதிப்பதற்கு பதிலாக குடும்பம் குடும்பமாக உட்கார முயலுங்கள். எந்த விதமான ரெக்கார்டர்களையும் மன்றத்தின் எலெக்ட்ரிக்கல் அல்லது ஒலிபெருக்கி அமைப்புடன் இணைக்கக் கூடாது; மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத விதத்தில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம். நிகழ்ச்சிகளின்போது ஃபோட்டோ எடுக்க விரும்பினால் ஃபிளாஷை உபயோகிக்காதீர்கள். பேஜர்களையும் செல் ஃபோன்களையும் கவனத்தை சிதறடிக்காதபடிக்கு அட்ஜஸ்ட் செய்து வைக்க வேண்டும். மன்றத்தில் ஏதேனும் விபத்து நிகழ்ந்துவிட்டால் தயவுசெய்து அட்டென்டண்டிடம் சொல்லுங்கள் அல்லது முதல் உதவி இலாகாவில் தெரிவியுங்கள். மன்றத்திலேயே தகுதி வாய்ந்த மருத்துவ உதவியாட்கள் இருக்கிறார்கள்.
6 நம் நடத்தை நம்மை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, நம் கடவுளை மகிமைப்படுத்துகிறது. (1 பே. 2:12) மாநாட்டில் யெகோவாவின் சாட்சிகளது செயல்கள் பளிச்சென வெளிப்படையாய் தெரியும். எனவே உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தராய் இருக்க உறுதியோடிருங்கள்.
[கேள்விகள்]
1. நம் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தராய் இருப்பது ஏன் முக்கியம்?
2. ஹோட்டல்களில் நன்னடத்தையை நாம் எப்படி வெளிக்காட்டலாம்?
3. இளம் சாட்சிகளுடைய நடத்தை மற்றவர்களை எப்படி கவரலாம்?
4. ரெஸ்டாரன்டுகளில் சாப்பிடும்போது நாம் எப்படி மற்றவர்கள் மீது அக்கறை காட்ட முடியும்?
5. மாநாட்டில் நன்னடத்தை எதை உட்படுத்துகிறது?
6. மாநாடுகளில் நம் நடத்தை எப்படி கடவுளை மகிமைப்படுத்துகிறது?
[பக்கம் 5-ன் பெட்டி]
பரிசுத்த நடத்தையை வெளிக்காட்டுங்கள்
◼ ஹோட்டல் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுங்கள்
◼ பிள்ளைகளை எப்போதும் உங்கள் பார்வையிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
◼ மற்றவர்கள் மீது அக்கறை காட்டுங்கள்