கிளை அலுவலகத்திலிருந்து கடிதம்
அன்புள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு:
கடந்த சில ஊழிய ஆண்டுகளில், சபைகளும் வட்டாரங்களும் தொடர்ந்து ஒன்றிணைக்கப்பட்டும் பலப்படுத்தப்பட்டும் வந்திருக்கின்றன. சென்ற ஊழிய ஆண்டில் மட்டும் 14 சபைகள் மூடப்பட்டு, அருகிலுள்ள சபைகளோடு இணைக்கப்பட்டன. கடந்த இரண்டு ஊழிய ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 36 சபைகள் அவ்வாறு மூடப்பட்டன. அநேக சகோதரர்கள், ஊழிய சிலாக்கியத்திற்காகத் தகுதி பெற்றுவருகிறார்கள். ஆகவே, இப்பொழுது சராசரியாக ஒவ்வொரு சபையிலும் மூன்று மூப்பர்களும் நான்கு உதவி ஊழியர்களும் இருக்கிறார்கள்.
சபைகள் பெரிதாகப் பெரிதாக, நல்ல ராஜ்ய மன்றங்களும் தேவைப்படுகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து, கிளை அலுவலகத்திலுள்ள சகோதரர்கள் 10 இடங்களில் நடந்த ராஜ்ய மன்ற பிரதிஷ்டையில் கலந்துகொண்டார்கள் என்பதைச் சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதில் இரண்டு, இரட்டை ராஜ்ய மன்ற கட்டடங்களாகும். இவை எல்லாம், எதிர்கால வளர்ச்சிக்கு பலமான அடித்தளமாக அமைகின்றன.
பெத்தேல் வீடு, அலுவலகம், அச்சகம் ஆகிய அனைத்துமே இப்போது நன்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆர்வத்தோடு எதிர்பார்க்கப்படுகிற பல மடங்கு அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க அவை தயாராக இருக்கின்றன. இந்த வருடம் கிட்டத்தட்ட ஜுன் மாதம்வரை புதிய மெஷின்கள் பொருத்தப்பட்டன. இப்போது இரண்டு புதிய ராப்பிடா பிரஸ்கள் ஒரு மணி நேரத்தில் 12,000 பத்திரிகைகளை அச்சடிக்கின்றன. அதாவது முன்பிருந்த பிரஸ்களைவிட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாக அச்சடிக்கின்றன. புதிதாக பேப்பர் கட்டர்கள், ஃபோல்டர்கள், டிரிம்மர்கள், ஸ்டிச்சிங் மெஷின்கள் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன; ஆகவே, நமக்குத் தேவைப்படும் பிரசுரங்களை இன்னும் பல வருடங்களுக்கு எளிதில் அச்சடிக்க முடியும்.
சர்வதேச குழுவைச் சேர்ந்த ஆறு சகோதரர்களும் அவர்களுடைய மனைவிகளும், நம் நாட்டைச் சேர்ந்த தேர்ச்சிபெற்ற ஐந்து வல்லுநர்களும் புதிய மெஷின்களைப் பொருத்துவதற்கு உதவினார்கள். இந்த வாலண்டியர்களின் அனுபவமும் மனமுவந்த சேவையும் பெத்தேல் அங்கத்தினர்களால் பெரிதும் போற்றப்பட்டது. அவர்கள் அந்த வாலண்டியர்களுக்குக் கண்ணீர் மல்க விடைகொடுத்து அனுப்பினார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நம்முடைய சகோதரர்களுக்கான மீட்புப் பணிகளும் சர்வதேச சகோதரர்களால் அளிக்கப்பட்டன. நாடு முழுவதிலிருந்தும், வெளிநாட்டிலுள்ள இந்தியர்களிடமிருந்தும் நிதிகள் வந்து குவிந்தன. இதனால், பாதிக்கப்பட்ட சகோதரர்களை ஒரே வாரத்தில் சென்று சந்திக்கவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரவும் முடிந்தது; குறிப்பாக, மிக மோசமாய் பாதிக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்தவர்களுக்கு உதவ முடிந்தது. தகுதிபெற்ற வட்டாரக் கண்காணிகளும் கட்டுமான பணியிலுள்ள சகோதரர்களும் அங்கு சென்றார்கள்; பேரழிவில் எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு மீட்பு உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள சகோதர சகோதரிகள், தங்களுக்கு உதவிய அனைவருக்கும் தங்களுடைய உள்ளப்பூர்வ நன்றிகளைத் தெரிவிக்கச் சொன்னார்கள். இத்தகைய அன்புள்ள கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!—1 பே. 2:17, NW.
ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக எடுக்கப்பட்ட வைராக்கியமுள்ள இந்த எல்லா முயற்சிகளும் பாராட்டப்படுகின்றன! உங்களுடைய நிதி உதவிகளும் மனதாரப் போற்றப்படுகின்றன. (நீதி. 3:9, 10) யெகோவாவுடைய “மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,” நாம் ஒன்றுசேர்ந்து எடுக்கும் எல்லா முயற்சிகளையும் அவர் ஆசீர்வதிப்பாராக.—எபே. 1:11.
உங்கள் சகோதரர்கள்,
இந்தியக் கிளை அலுவலகம்