கிளை அலுவலகத்திலிருந்து கடிதம்
அன்புள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளே:
2007-ன் ஊழிய ஆண்டில் இந்திய கிளை அலுவலகப் பிராந்தியத்தில் பிரசங்க வேலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கண்டு பூரித்துப் போகிறோம்! மார்ச் மாதம் 1,628 பேர் ஒழுங்கான பயனியர்களாகவும் ஏப்ரல் மாதம் 4,212 பேர் துணைப் பயனியர்களாகவும் அறிக்கை செய்ததால் இரண்டு புதிய உச்சநிலைகளை எட்டியிருக்கிறோம். பயனியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பிரசங்க வேலையில் நல்ல பலனைத் தந்திருக்கிறது. மார்ச் மாதத்தில் ஊழியத்தை அறிக்கை செய்த 27,153 பிரஸ்தாபிகள், 25,390 பைபிள் படிப்புகளை நடத்தினார்கள். எதிர்ப்பின் மத்தியிலும் சில பிராந்தியங்களில் நம்முடைய சகோதரர்கள் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
இந்திய கிளை அலுவலகப் பிராந்தியத்தில், “மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?” என்ற ராஜ்ய செய்தி எண் 37, சுமார் ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் பிரதிகள் வினியோகிக்கப்பட்டன. விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டின் பிரதிகளைப் பெறுவதற்கும் பைபிள் படிப்பு படிப்பதற்கும் இந்த ராஜ்ய செய்தியின் பின்புறமுள்ள கூப்பனைப் பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் கடிதம் எழுதினார்கள். நினைவுநாள் ஆசரிப்புக்கான அழைப்பிதழை வினியோகித்ததும் சிறந்த பலனைப் பெற்றுத் தந்தது; இந்த வருடம் நினைவுநாள் ஆசரிப்பில் 73,193 பேர் கலந்துகொண்டார்கள்.
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை நல்மனமுள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதே இத்தகைய விசேஷ வினியோகிப்பின் நோக்கமாகும். (மத். 28:19, 20) நீங்கள் பிரசங்கிக்கும்போது ஆர்வம் காட்டுபவர்கள் யாரென குறித்துக்கொண்டு பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் நோக்கத்தோடு மீண்டும் போய் சந்தியுங்கள். இந்த முக்கிய வேலையில் தோளோடு தோள் சேர்ந்து உங்களோடு உழைப்பதில் சந்தோஷப்படுகிறோம். எங்கள் கனிவான கிறிஸ்தவ அன்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் சகோதரர்கள்,
இந்திய கிளை அலுவலகம்