தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—கூர்ந்து கவனிப்பதன் மூலம்
1 ஜனங்களுக்கு குறிப்பாக என்ன தேவையென கண்டறிவதிலும், அவர்களுக்கு உதவி செய்வதிலும் யெகோவா தேவனும் கிறிஸ்து இயேசுவும் தன்னிகரற்று விளங்குகிறார்கள். (2 நா. 16:9; மாற். 6:34) ஊழியத்தில் சந்திப்பவர்களுடைய அக்கறைகளையும் கவலைகளையும் நாம் கண்டறிந்தோமானால் அதற்கேற்ப நம் பிரசங்கத்தை மாற்றியமைத்து நற்செய்தியை அறிவிக்க முடியும்.
2 சிறுசிறு விஷயங்களையும் கவனியுங்கள்: இயேசு கூர்ந்து கவனித்தார். (மாற். 12:41-43; லூக். 19:1-6) அவரைப் போலவே நாமும், ஒரு வீட்டை அணுகும்போது அதன் கதவிலுள்ள மத அலங்காரப் பொருள்களை, வாகனங்களிலுள்ள வாசகங்களை, அல்லது வராந்தாவிலுள்ள பொம்மைகளைக் கவனிக்கையில், நற்செய்தியைப் பலன்தரத்தக்க விதத்தில் அறிவிப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
3 ஒரு நபருடைய முகபாவனைகளும் நடந்துகொள்ளும் விதமும் அவர் என்ன நினைக்கிறார் என்பதைச் சிலசமயங்களில் சொல்லாமலே சொல்லிவிடும். (நீதி. 15:13) அவர் ஒருவேளை அன்பானவரை மரணத்தில் பறிகொடுத்திருந்தாலோ, வேறேதாவது அழுத்தத்தில் இருந்தாலோ, ஆறுதலுக்காக ஏங்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பொருத்தமான வசனங்கள் சிலவற்றை வாசித்துக் காட்டினாலே போதும், அது அவருடைய மனதுக்கு இதமாக இருக்கும். (நீதி. 16:24) வீட்டுக்காரர் அவசர அவசரமாக வெளியே புறப்பட்டுக்கொண்டிருக்கிறாரா, அல்லது அழுகிற குழந்தையைக் கையில் வைத்திருக்கிறாரா? அப்படியென்றால் வேறொரு சமயத்தில் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்துகொள்வது நல்லதாக இருக்கும். இவ்வாறு கரிசனையையும், ஒருவருக்கொருவர் “இரக்க”த்தையும் காட்டும்போது, அடுத்த முறை சந்திக்கையில் நாம் சொல்வதைக் கேட்பதற்கு அவர் விருப்பமுள்ளவராக இருப்பார்.—1 பே. 3:8.
4 உங்கள் குறிப்புகளை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்: அத்தேனே பட்டணத்தில், “அறியப்படாத தேவனுக்கு” அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடத்தை அப்போஸ்தலன் பவுல் கவனித்தார். இது, அவர் நற்செய்தியை பிரசங்கித்த விதத்தை மாற்றியமைத்துக்கொள்ளச் செய்தது; “நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்” என அவர் சொன்னார். பவுலுடைய சாதுரியமான அணுகுமுறையால், அங்கு கூடியிருந்த சிலர் ராஜ்ய செய்திக்குக் கவனம் செலுத்தினார்கள்; பின்னர் விசுவாசிகளாகவும் ஆனார்கள்.—அப். 17:23, 34.
5 அதுபோலவே, நாம் கூர்ந்து கவனிப்பது, ஒரு நபருடைய அக்கறைகளைக் கண்டுணருவதற்கும், அதற்கேற்ப நம் அணுகுமுறையை மாற்றியமைப்பதற்கும் உதவும். வீட்டுக்காரர் மனதிலுள்ளதை வெளிப்படுத்த உதவும் கேள்விகளைக் கேளுங்கள். அவருடைய ஆர்வம் அதிகரிப்பதற்கு எந்த வசனங்களைப் பயன்படுத்தலாமென யோசியுங்கள். (நீதி. 20:5) கூர்ந்து கவனிப்பதும் மற்றவர்களிடம் தனிப்பட்ட அக்கறையை உள்ளப்பூர்வமாகக் காட்டுவதும் திறம்பட்ட விதத்தில் நற்செய்தியைப் பிரசங்கிக்க நமக்கு உதவும்.