கடவுளுடைய வழியில் நடக்க தாழ்மையுள்ளவர்களுக்குக் கற்பியுங்கள்
1 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்துவின் சீஷர்கள் ‘இந்த மார்க்கத்தார்’ என அழைக்கப்பட்டார்கள். (அப். 9:2) மெய்க் கிறிஸ்தவம் என்பது ஒரு நபருடைய முழு வாழ்க்கை முறையையும் உட்படுத்துகிறது. (நீதி. 3:5, 6) எனவே, பைபிள் படிப்புகளை நடத்தும்போது பைபிள் கோட்பாடுகளைப் பற்றி திருத்தமாகக் கற்றுக்கொடுப்பது மட்டுமே போதாது. பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவின் வழியில் நடக்கவும் உதவி செய்ய வேண்டும்.—சங். 25:8, 9.
2 யெகோவாவிடமும் இயேசுவிடமும் அன்பு: அபூரண மனிதர்கள் தங்கள் எண்ணங்களையும் குணங்களையும் பேச்சையும் நடத்தையையும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக மாற்றிக்கொள்வது பெரும் சவாலை முன்வைக்கிறது, அல்லவா? (ரோ. 7:21-23; எபே. 4:22-24) எனினும், கடவுளிடமும் அவருடைய குமாரனிடமும் உள்ள அன்பு இந்தச் சவாலைச் சந்திக்க தாழ்மையுள்ளவர்களைத் தூண்டுவிக்கிறது. (யோவா. 14:15; 1 யோ. 5:3) நம் பைபிள் மாணாக்கர்கள் இந்த அன்பை வளர்த்துக்கொள்ள நாம் எப்படி உதவலாம்?
3 யெகோவா எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பைபிள் மாணாக்கருக்கு உதவுங்கள். ஒரு சகோதரர் இவ்வாறு விளக்கினார்: “முன்பின் தெரியாத ஒருவரிடம் அன்பு காட்ட மக்களால் முடியாது; எனவே படிப்பு நடத்த ஆரம்பித்த சமயத்திலிருந்தே மாணாக்கருக்கு கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து கற்றுக்கொடுக்கிறேன், யெகோவாவின் குணங்களைச் சிறப்பித்துக்காட்டுவதற்கு வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.” இப்படிச் செய்வதற்கு, இயேசுவின் முன்மாதிரியை சிறப்பித்துக் காட்டுவது சிறந்த வழியாகும். (யோவா. 1:14; 14:9) மேலும், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவில் உள்ள மறுபார்வை பெட்டியைப் பயன்படுத்தி, கடவுளிடமும் அவருடைய குமாரனிடமும் காணப்படும் அருமையான குணங்களை சிந்தித்துப் பார்க்க மாணாக்கருக்கு உதவுங்கள்.
4 முன்மாதிரியால் போதியுங்கள்: கடவுளுடைய வழியில் நடப்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை, போதகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் நம் செயல்களில் மற்றவர்களுக்குக் காட்டுகிறோம். (1 கொ. 11:1) உதாரணமாக, பெரும்பாலான பைபிள் மாணாக்கர்களுக்கு, முன்பின் தெரியாதவர்களிடம் போய் தங்கள் நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இருக்காது. எனவே, பிரசங்கித்து, சீஷராக்கும் வேலையில் பங்குகொள்ள அவர்களுக்குத் தேவைப்படும் அன்பு, விசுவாசம், தைரியம் ஆகிய குணங்களை வளர்த்துக்கொள்ள உதவுவதில் நமக்குப் பொறுமையும் திறமையும் வேண்டியிருக்கலாம். (2 கொ. 4:13; 1 தெ. 2:2) பைபிள் மாணாக்கர்களை வழிநடத்த வேண்டும் என்ற ஆவல், கிறிஸ்தவ ஊழியத்தில் அவர்கள் பங்குகொள்ள ஆரம்பிக்கிற சமயத்தில் அவர்களுக்கு உதவி செய்ய நம்மைத் தூண்டும்.
5 உங்கள் முன்மாதிரி, கிறிஸ்தவ வாழ்க்கை முறையில் பிற முக்கிய அம்சங்களையும் மாணாக்கர்களுக்குப் போதிக்கலாம். நீங்கள் வியாதிப்பட்டவரைப் போய் சந்திக்கையிலோ சபைக் கூட்டங்களில் மற்றவர்களுக்குக் கனிவுடன் வணக்கம் சொல்லுகையிலோ அன்பு செயலில் வெளிப்படுவதை அவர்கள் பார்க்கிறார்கள். (யோவா. 15:12) ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வதில் கலந்துகொள்ளும்போதோ மற்றவர்களுக்கு ஒத்தாசையாக காரியங்களைச் செய்யும்போதோ எப்படிச் சேவை செய்ய வேண்டுமென அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (யோவா. 13:12-15) நீங்கள் எளிமையான வாழ்க்கை வாழ்வதை அவர்கள் கவனிக்கும்போது, ‘முதலாவது ராஜ்யத்தை [தொடர்ந்து] தேடுவதன்’ அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.—மத். 6:33.
6 மற்றவர்களுக்கு கடவுளுடைய வார்த்தையிலிருந்து போதித்து, சீஷராக்குவதற்குப் பெரும் முயற்சி தேவைப்படுகிறது. அதேசமயத்தில் அந்தத் தாழ்மையுள்ளவர்கள் ‘சத்தியத்திலே [தொடர்ந்து] நடப்பதை’ பார்க்கும்போது எப்பேர்ப்பட்ட சந்தோஷம் கிடைக்கிறது!—3 யோ. 4.
[கேள்விகள்]
1. சீஷராக்குவதில் என்ன உட்பட்டுள்ளது?
2. கடவுளுடைய கட்டளைகளைப் பின்பற்ற பைபிள் மாணாக்கரை எது தூண்டுவிக்கலாம்?
3. யெகோவாவிடமும் இயேசுவிடமும் மாணாக்கர்கள் அன்பை வளர்த்துக்கொள்ள நாம் எப்படி உதவலாம்?
4. (அ) பிரசங்கிப்பது ஏன் அநேக மாணாக்கர்களுக்கு சவாலாக இருக்கிறது? (ஆ) மாணாக்கர்கள் ஊழியத்தில் பங்குகொள்ள ஆரம்பிக்கிற சமயத்தில் எப்படி உதவலாம்?
5. கடவுளுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதில் என்னென்ன உட்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள, நல்ல முன்மாதிரி வைப்பது மாணாக்கர்களுக்கு எப்படி உதவுகிறது?
6. யெகோவாவை சேவிக்க தாழ்மையுள்ளவர்களுக்கு உதவுகையில் என்ன பலன் கிடைக்கிறது?